தினமலர் – 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்? கடிதங்கள்-1

Tamil_News_large_1481446

இன்றைய தினமலர் தேர்தல் களம் மேற்கண்ட தங்கள் கட்டுரை  வாழ்வின்மீது அக்கறை கொண்டவர்கள், அமைதி மற்றும் உலக சமுதாய முன்னேற்றத்தின் மீது பொதுவாக மனித குல அமைதியின்மீது அக்கறையுள்ளோரின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. தங்கள் கட்டுரையில் ஒரு வார்த்தை கூட அதிகமில்லை. அவ்வளவு கச்சிதமாக இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுவதற்கான காரணம் கூர்மையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் விரிவான ஆய்வாக ஒரு புத்தகம் வெளியிடலாம்.

இக்கட்டுரை இந்திய நிலையைக் குறித்து எழுதியதாக இருப்பினும் எல்லா நாடுகளும் இந்த ஆயுதவியாபாரிகளின் கோரப்பிடியில் உள்ளனர் என்பதே உண்மை. இவர்களுக்கு கலகம் செய்தால்தான் காசு. அந்த காசினால் சிலபல உலகத்தலைவர்களுக்கு பிச்சைகொடுத்து வன்முறை தூண்டல் நடைபெறுகிறது. உயர்பொறுப்பில் உள்ளோர் இதனை அறியமாட்டார்களா என்ன? ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் அவர்களுக்குச் சாதகமான தீவிரவாதத்தை வளர்ப்பதால் ஏற்படும் நன்மையை அவர்களது சுயநலம் காரணமாக ஊக்கப்படுத்துவதும் பின்னர் அதுவே பூமராங்காக அவர்களையே தாக்கும்போது நசுங்கிப்போவதும் மாறிடுமா? உலகத்தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை ஒரு நொடியில் நசுக்கமுடியாதா? முயலமாட்டார்கள். பொதுவாக அழிவு சக்திகளிடமிருக்கும் ஒரு அமைப்பு மற்றும் உணர்ச்சி பூர்வமான ஒற்றுமை, சாமான்யர்களிடம் இருப்பதில்லை. இதுவே பயங்கர தீவிரவாதங்களை ஒழிக்க இயலாமைக்குக் காரணம். ஒரு அரசாங்கத்தின் இராணுவத்தால் மட்டுமே இதை அகற்ற முடியாது. அரசும் ஆயுதவியாபாரிகளின் கைப்பாவைதானே! எனவே உலகமக்களிடம் இது குறித்த ஒருமைப்பாட்டுடன் விழிப்புணர்ச்சி ஏற்பட்டால்தான் உலகமக்களின் வியர்வையும் ரத்தமும் வியர்த்தமாவது நிற்கும்.

மேலும் தங்களைப் போன்ற வெகுமக்கள் அறிமுகம் மற்றும் உலக எழுத்தாளர்கள் அறிமுகமுடைய மிக்க கவனமீர்க்கக்கூடிய எழுத்தாளர்கள் இணைந்து விரைவில் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவினைத் தடுக்க தக்க மக்கள் கருத்து உருவாக்கலாம். எல்லைகள் கடந்து மனித இன முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லலாம். தங்களுடன் கைகோர்த்துச் செயலாற்றிட வாசக அன்பர்களும் நல்லிதயம் கொண்டோரும் துணையிருப்பர்.

அன்புடன்,

கிரிதரன் பிரான்,

மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை,

சென்னை-91

***

மதிப்பிற்குரிய ஜெமோ,

தங்களின் இன்றைய தினமலர் கட்டுரை தமிழக அரசியல் வழமைகளின் ஒரு முக்கிய பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஹிட்லரின் பேச்சுகள் அடங்கிய காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன். வெகு ஆவேசமாக மூக்கு விடைத்து, கன்னங்கள் துடிதுடிக்க, முன்னம்மயிர் நெற்றியில் விழுந்து புரள (நம் நாட்டுத்தலைவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை) சன்னதம் வந்த சாமி போல் அவருடைய உரை இருக்கும்.

ஆனால் தமிழக தலைவர்களுக்கும், ஹிட்லருக்கும் உள்ள மிகப்பெரும் வேறுபாடு, அவன் நிஜமாகவே போர்க்களத்தில் போரிட்ட வீரன். நம் திராவிட கட்சிகள் முதலாளித்துவத்தையும், பிராமண எதிர்ப்பையும் எதிர்த்துப் போரிடுவதை.. மன்னிக்கவும்.. மேடைகளிலும் சினிமா அரங்கங்களிலும் முழங்குவதை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தன. ஜெர்மனியில் அப்போது செல்வ செழிப்புடன் விளங்கிய யூதர்களின் மேல் விரோதம் பூண்டு, அவர்களைக் கொன்று குவித்து ஆட்சியைப் பிடித்தவன் ஹிட்லர்.

ஆனால் இன்று ஜெர்மனி அடைந்திருக்கும் பொருளாதார உச்ச நிலைக்கு முக்கிய காரணம் ஹிட்லர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இங்கு தொழிலாளர்களுக்காக முழங்கி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திராவிட கட்சிகளால் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அத்தகைய பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலவில்லை என்பதன் அடிப்படை உண்மையைத் தமிழன் என்று புரிந்துகொள்வான் என்று தெரியவில்லை.

உங்கள் தினமலர் கட்டுரைகளின் சாராம்சம், மிக நிச்சயமாக அரசியல் விழிப்புணர்வை நம் மக்களுக்கு அளிக்கும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகமில்லை. உங்கள் கட்டுரைகளில் நீங்கள் எடுத்திருக்கும் நடுநிலைப்பாடு உண்மையில் ஒவ்வொரு அரசியல் பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு முன்னெடுப்பு. சமஸ் கட்டுரைகளுக்கும் உங்கள் கட்டுரைகளுக்கும் உள்ள மிகப்பெரும் வேறுபாடு, அன்றைய பிரச்சினைகளை மட்டும் பேசாமல், அடிப்படைப் புரிதலைக் கொண்டு வருவதில், விவாதிப்பதில் இருக்கிறது.

இன்றைய இளந்தமிழனைத் தங்கள் வலைக்குள் போட்டுக்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தற்போது சினிமாவை விட்டுவிட்டு, சமூக வலைதளங்களுக்கு வந்திருக்கின்றன. ஆயினும் அதே பழைய சட்டியில் புது சோறு. ஆயினும் இளந்தமிழன் தற்போது “கலாய்த்தல்” மூடில் இருப்பதால் எந்த ஒரு சமூக நிகழ்ச்சியின் முக்கியத்துவமும், அடுத்த சர்ச்சை வந்தவுடன் மறைந்து விடுகிறது. உடுமலை படுகொலைக்குப் பொங்கியெழுந்த இணையதமிழன், இந்தியா அணி தத்தித் தடுமாறி வெற்றிபெற்றதன் குதூகலத்திற்குள் நுழைந்துவிட்டான்.

இணைய தகவல் வெளி டாஸ்மாக்கிற்கு இணையாக நம்மனைவரையும் தகவல்களின் போதையில்  நிரந்தரமாக வைத்திருக்கிறது. இதை அறுவடை செய்ய அரசியல்வாதிகளும் தயாராகிவிட்டார்கள்.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்??

சங்கர் கிருஷ்ணன்

ஃப்ரான்ஸ்.

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்
அடுத்த கட்டுரைதினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்