[விபூதிபூஷன் பந்த்யோபாத்யயா]
[மாணிக் பந்யோபாத்யாய]
தாராசங்கர் பானர்ஜி
கிட்டத்தட்ட பதினைந்துவருடங்களுக்கும் மேலாக ஒரு நாவல் என் நூலகத்தில் இருந்து அவ்வப்போது கைகளில் படும். தாராசங்கர் பானர்ஜியின் ‘கவி’. பாப்பாவிடம் ஆரோக்கியநிகேதனம் நாவலை எடுத்துத் தரச்சொன்னால் ‘தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய இன்னும் ரெண்டு இருக்கு அப்பா’ என்று கொண்டுவந்து தருவாள். அதை குறைந்தது எட்டு முறையாவது மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்திருப்பேன். 1941ல் தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய ஆரம்பகால நாவல்களில் இது ஒன்று. ஆகவே பிறகு வாசிக்கலாமென திரும்பி வைத்துவிடுவேன்.
சமீபத்தில் இன்னொரு கன்னடநாவலை வாசிக்கநேர்ந்தது. பூர்ணசந்திரதேஜஸ்வி எழுதிய ‘சிதமபர ரகசியம்’ பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவரான ப.கிருஷ்ணசாமி மொழியாக்கம் செய்தது.கன்னட தேசியகவி கெ.வி.புட்டப்பாவின் மகனாகிய பூர்ணசந்திர தேஜஸ்வி கன்னடத்தின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய சில நல்ல கதைகளை நான் மலையாளத்தில் சி.ராகவன் மொழியாக்கத்தில் வாசித்திருக்கிறேன். அந்த ஆவலில் வாசிக்க முயன்ற அந்நாவல் பெரும் ஏமாற்றமாக முடிந்தது. சமீபத்தில் இப்படி ஒரு குப்பையை வாசிக்க நேர்ந்ததில்லை. மொண்ணையான மொழியாக்கம் வேறு. இந்நாவலுக்கு சாகித்ய அக்காதமி விருதை வேறு கொடுத்திருக்கிறார்கள். கொடுமை.
எரிச்சலில் புத்தகத்தை கடாசிவிட்டு அமர்ந்திருந்தேன். டீபாயில் சில நூல்கள். ஏதோ குறிப்புக்காக ஆரோக்கியநிகேதனத்தை எடுத்துவைத்த பாப்பா வழக்கம்போல பக்கத்திலேயே கவியை வைத்திருந்தாள். சலிப்புடன் எடுத்து ஓரு கவனமின்மையுடன் வாசிக்க ஆரம்பித்த பத்தாம் வரியிலேயே உள்ளே சென்று வாசித்து முடித்து பின்னிரவில்தான் படுத்துக் கொண்டேன். ஆம், கவி ஒரு அபாரமான நாவல். வாசிக்க வாசிக்க வெவ்வேறு தளங்களில் திறந்து கொண்டே செல்லும் கலைப்படைப்பு.
நித்ய சைதன்ய யதி அடிக்கடி சொல்லும் மேற்கோள் ஒன்றுண்டு. ஒரு சிறந்த எழுத்தாளனை அவனது சிறந்த நூலை மட்டும் வாசித்துவிட்டு தாண்டி வந்துவிடுதலே நல்லது. ஆனால் ஒரு ‘மாஸ்டரை’ பொறுத்தவரை அவர் எழுதிய அனைத்தையுமே வாசிக்கவேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் கடிதங்களையும் டைரிகளையும் நித்யா கண்ணாடி போட்டுக்கொண்டு வாசித்துக்கொண்டே இருந்ததைப் பார்த்து நான் கேட்டபோது அப்படிச் சொன்னார். அதைத்தான் குற்றவுணர்ச்சியுடன் நினைத்துக்கொண்டேன்.
கண்டிப்பாக கவி தாராசங்கர் பந்த்யோபாத்யாயவின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றல்ல. ‘ஆரோக்கியநிகேதன்’ ‘கணதேவதை’ ஆகியவற்றையே அவரது பெரும்படைப்புகளாகச் சொல்லவேண்டும்.ஆனால் மேதையின் கரம்பட்ட ஆக்கம்தான் இதுவும். அதனாலேயே ஒவ்வொரு பக்கங்களிலும் வாழ்க்கையின் முடிவின்மையை தரிசிக்க முடிகிறது. ஆரோக்கிய நிகேதனம் தமிழில் கிடைக்கிறது. த.நா.குமாரசாமி மொழியாக்கம்.
‘நிலத்தின்கீதம்’ [தாத்ரிதேவதா என்று மூலப்பெயர்] என்ற இன்னொரு நாவல் ஆர்.ஷ்ண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் குயிலன்பதிப்பகம் வெளியீடாக 1977ல் வெளிவந்துள்ளது. ஞானபீட விருதுபெற்ற ‘கணதேவதை’ மொழியாக்கம் செய்யப்பட்டதாக சில பின்னட்டைகள் சொல்கின்றன.நான் பார்த்ததில்லை. இந்நூல்களை எவராவது மறுபதிப்பாகக் கொண்டுவந்தால் தமிழுக்கு நல்லது.
தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களை தமிழில் அறிமுகம் செய்தவர் க.நா.சு. அவரது நூல்களை மொழியாக்கம்செய்ய வழிகாட்டியதுடன் தாராசங்கர் பந்த்யோபாத்யாயவிடமிருந்து மொழியாக்க அனுமதியும் பெற்றுத்தந்திருக்கிறார். தாராசங்கர் பந்த்யோபாத்யாவின் நூல்களில் முதலில் தமிழில் வெளிவந்தது ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கம் செய்த நிலத்தின்கீதம் தான். அந்நூலின் பதிப்புரையில் க.நா.சு ஆற்றிய பங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நாவலை வாசிக்கையில் வணிகஎழுத்தில் மூழ்கி மெய்மறந்திருந்த தமிழ்ச்சமூகம் நோக்கி கா.நா.சு நுரையீரல் உடையும்படி எழுப்பிய பெருங்குரலைக் கேட்க முடிகிறது. இன்றும் அவரது பணி பெரிதும் மிச்சமிருக்கிறது என்றும் படுகிறது.
கவி 1941ல் வெளிவந்தது. இந்நாவல் ரவீந்திரநாத் தாகூர் இறந்த வருடத்தில் வெளிவந்தது ஒரு முக்கியமான விஷயம் என்று முன்னுரை எழுதிய சுநீல் கங்கோபாத்யாய சொல்கிறார். தாகூர் மற்றும் சரத் சந்திர சட்டர்ஜி ஆகியோர் உருவாக்கிய கற்பனாவாத மரபில் இருந்து வங்க இலக்கியம் நேரடியாக யதார்த்தம் நோக்கி வர ஆரம்பித்ததன் மிகச்சிறந்த உதாரணம் இந்நாவல் என்கிறார்.
கவி முதலில் சிறுகதையாகவே தாராசங்கர் பந்த்யோபாத்யாயவால் எழுதப்பட்டது. பின்னர் அதை விரிவாக்கி நாவலாக ஆக்கினார் தாராசங்கர் பந்த்யோபாத்யாய.
*
டோம் என்ற சாதியைச்சேர்ந்த நிதாரி என்ற இளைஞனின் கதை இந்நாவல். டோம் சாதியினர் ஒருவகை நாடோடிகள். குற்றம்செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். நெடுங்காலம் அவர்கள் போர்வீரர்களாக தங்கள் அஞ்சாமைக்காக புகழ்பெற்றிருந்தனர். வங்கத்தை ஆண்ட மன்னர்களின் காலம் முடிந்தபோது மெல்லமெல்ல திருடர்களாக ஆனார்கள். சிலதலைமுறைகள் தாண்டியபோது குற்றத்தை எந்தவிதமான கருணையும் அறமும் இல்லாமல் செய்யும் மனநிலையை அடைந்தார்கள்.
பிரிட்டிஷ் அரசு அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரையிட்டு கடுமையான போலீஸ் நடவடிக்கை மூலம் ஒடுக்கிக்கொண்டிருந்ந்து. டோம்களில் சிலருக்கு அவர்களின் வழக்கமான வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேண்டுமென்ற அவா எழுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அது எளிதாக இல்லை.
டோம்களுக்காக உள்ளூர் பரோபகாரி ஒருவர் ஓர் இரவுப்பள்ளிக்கூடத்தை டோம்களின் சேரியில் உருவாக்கியிருந்தார். அதில் ஆரம்பத்தில் பத்துப்பதினைந்து மாணவர்கள் படித்தார்கள். மெல்லமெல்ல அந்த எண்ணிக்கை குறைந்தது. ஆனால் வளர்ந்தபின்னரும் வெட்கம் மானம் பாராமல் அங்கே படிக்கப்போன நிதாரி மட்டும் ஒரே மாணவனாக தங்கினான். எழுதப்படிக்கத்தெரிந்துகொண்டது அவனுடைய அகவாசல் ஒன்றை திறந்தது. நிதாரியை கலைமகள் பார்த்த கணம் அது. அவன் அவளுடைய உபாசகன் ஆனான்.
நிதாரியைச் சொற்கள் பற்றிக்கொண்டன. அதில் இருக்கும் இன்பம் வேறெதிலுமே இல்லை என்று அவன் கண்டுகொண்டான். எழுதப்படிக்க தெரிந்தபின் மேலே கல்விக்குச் செல்ல அங்கே முடியாது. ஆனால் நிதாரி மொழிமேல் வெறிகொண்டான். பல்லாயிரம் வருடங்களாக பற்பல ஆயிரம் அறிஞர்களால் துளித்துளியாக சேர்க்கப்பட்டு பெருகிநின்ற அறிவின்வெள்ளம் அவனைச் சூழ்ந்து மூழ்கடித்தது. சந்தைகள் தோறும் சென்று கிடைக்கும் பணத்துக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கிவந்தான் நிதாரி. எங்கே எந்தத்தாளைப் பார்த்தாலும் நீவி சரிபண்ணி சேகரிப்பான். அவற்றை பலமுறை வாசிப்பான்.
வாசிப்பு தவிர எங்கும் அவன் மனம் நிலைக்கவில்லை. மிகவிரைவிலேயே அவனுக்கு புராணங்களும் இதிகாசங்களும் வங்காள பக்திக்கவிதைகளும் மனப்பாடமாயின. அக்கவிதைகளில் இருந்தே அவன் யாப்பை கற்றுக்கொண்டான். பிறர் அறியாமல் தனக்குள்ளே கனிந்து அவன் ஒரு கவிஞனாக ஆகிக்கொண்டிருந்தான். ஊரில் அவனுடன் அந்த உலகை பங்குவைக்க எவருமே இல்லை.
சொல் வந்து நிதாரியை தொட்டதும் ஒன்று நிகழ்ந்தது. அதில் ஏறி அறமும் கருணையும் அழகுணர்ச்சியும் வந்து அவனை அடைந்தன. அதன் பின் அவனால் கொள்ளைக்குச் செல்ல முடியவில்லை. பொய்பேசவும் ஆபாசச்சொற்களை உச்சரிக்கவும் முடியவில்லை. அனைத்துமனிதர்கள் மேலும் கருணையும் அன்பும் அவனுள் ஊறியது. அவன் அன்றுவரை கவனித்திருக்காத இயற்கை பேரழகுடன் அவன் கண்களுக்கு முன் பெருகிநின்றது. மலர்கள். காலை, மாலை,அந்தி,நிலவு… தென்றலும் இளவெயிலும் என்றாலென்ன என்று அவன் அறிந்தான்.
குலத்தொழிலைச் செய்யமாட்டேன் என்று நிதாரி முடிவெடுக்கும் இடமே தொடக்கம். தந்தையை இழந்த அவனை அவனுடைய மாமாதான் வளர்த்தவர். அவருக்கு நிதாரியின் இந்த மாற்றம் புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை. இதை கோழைத்தனம் பொறுப்பின்மை சோம்பல் என்று அவர் புரிந்துகொள்கிறார். பலமுறை நிதாரியை அடிக்கிறார். மற்றசேரிவாசிகளுக்கு நிதாரி ஒரு கிறுக்கன் மட்டுமே. உள்ளூர் பிராமணன் வீட்டுக்கு எடுபிடியாகச் செல்கிறான் நிதாரி. அந்தபிராமணன் இரவில் டோம்களை வைத்து ஊரார் நெல்லை திருடுவதை கண்டபின் அதற்கு துணை நிற்க முடியாது என்று அவன் விலகிச்செல்கிறான்.
அவனுக்கு ஒரு ரசிகன் கிடைக்கிறான், ரயில்வே கேங்மேனாகிய ராஜா. அவன் பிகாரி. ஓரளவே வங்கமொழி தெரியும். ஆனால் நிதாரியின் கவித்திறனால் முழுக்கவே ஆட்கொள்ளப்பட்டவனாக ஆகிறான். நிதாரி அவனுடன் தங்குகிறான். அந்தப்பகுதியில் ரயில் தண்டவாளம் போடப்பட்டபோது அப்பகுதியில்தான் ஊழியர்கள் தங்கியிருந்தார்கள்.அவர்கள் கைவிட்டுப்போன சிறிய கட்டிடங்களில் ஒன்றில் தங்குகிறான் நிதாரி. ரயிலில் வந்திறங்குபவர்களுக்கு சுமைதூக்குபவனாக ஆகிறான்.
இந்நிலையில் ஊரில் சண்டி கோயில் திருவிழாவில் போட்டி கவிபாடும் நிகழ்ச்சியில் ஒருதரப்பின் கவிராயரின் உதவிப்பாடகனாகிய கவிஞன் பணம்வாங்கி வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறான். நிகழ்ச்சி ரத்து ஆகவேண்டிய நிலை. அப்போது தயங்கியபடி எழுந்து ‘நான் பாடட்டுமா?” என்று நிதாரி கேட்கிறான். ஊராருக்கு ஆச்சரியம் சிரிப்பு. ஆனால் சட்டென்று கோயில் மகந்துக்கு புரிந்துவிடுகிறது, அவனால் பாட முடியும் என்று. அவன் கழுத்தில் மாலையைப்போட்டு ஆசீர்வாதம் செய்துவிடுகிறார். மேடையேறிய நிதாரி நுட்பமாகவும் அழகாகவும் கவிதை பாடுகிறான். அவனுடைய சாதியினருக்கு அது பெரும் ஆச்சரியம்.
அது நம்மூர் லாவணிக்கச்சேரி மாதிரி ஒன்று. மாறிமாறி வசைபாடிக்கொள்வதும் ஏளனம்செய்வதும்தான் அந்த நிகழ்ச்சி. கேட்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்பதனால் அதுதான் அவர்களுக்கு உகக்கிறது. நிதாரியின் உயர்தரக்கவிதை அங்கே எடுபடவில்லை. எதிர்தரப்பினன் அவனை இழிசாதிப்பயலே என்று கூறி நக்கலடித்து வசைபாடுகிறான். ஆனால் பாடியதே பெரும் வெற்றி என எண்ணுகிறான் நிதாரி. அவனை ஊரார் பாராட்டி சில பரிசுகளைக் கொடுக்கிறார்கள். அந்நிமிடமே அவன் தன்னை கவிஞனாக உணர ஆரம்பித்துவிட்டான்.
அதன்பின் நிதாரி எப்படி மெல்லமெல்ல கவிஞனாக ஆகிறான் என்பதே நாவலின் கதை. இரு விஷயங்கள் அவனை கவிஞனாக ஆக்குகின்றன. முதலில் காதல். அவனுடைய முதல் மேடைப்பாட்டைகேட்டதுமே ராஜாவின் மச்சினி அவன் மேல் மையல்கொள்கிறாள். மோர் விற்கும் கருநிற அழகி. அவளுடைய பளபளப்பான கருமையை அழகாகக் காணும் கண் அவனுக்கு வாய்த்தது. அந்த கண்கொண்டவனை அவளாலும் தாண்டிச்செல்ல முடியவில்லை. அவளுக்கு ஏற்கனவே மணமாகியிருந்தது. கணவன் அவள்மேல் காதலுடன் இருந்தான். ஆனால் கவிஞனின் காதலின் ஆழத்தை அந்தக் கணவனால் அளிக்க இயலயில்லை. அந்த எளிய பெண்ணை அவன் பித்தியாக்குகிறான்
இரண்டாவதாக புகழ். அவனைத்தேடி பலர் வந்து கவிமேளாக்களுக்குக் கூட்டிச்செல்கிறார்கள். அங்கேபாராட்டுக்கள் கிடைக்கின்றன. வசைகளைக்கூட ஒருவகை அங்கீகாரமாகவே அவன் காண்கிறான். அவன் தன்பிறப்பால் பிறர்கண்களுக்கே படாதவனாக அல்லவா இருந்தான்? தானே ஒரு மேலாடையையும் செருப்பையும் வாங்கி அணிந்துகொண்டு ஊர் திரும்பும் நிதாரி நான் கவிஞன் என்ற அபாரமான பெருமிதத்தை அடைகிறான். இனி உடலால் உழைத்து வாழமாட்டேன் என முடிவுசெய்கிறான்
கவிஞன் என்ற பொறுப்பின் எடையை அவனால் தாளமுடியவில்லை. அவனுக்கும் ராஜாவின் மச்சினிச்சிக்குமான காதல் அவனை குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது. இச்சமயம் ஜூமூர் என்ற நாடோடிப்பாடகர்க்குழு அங்கே வருகிறது. அவர்கள் நாடோடிகளாக சென்று ஆங்காங்கே சமைத்துண்டு விழாக்களில் ஆடிப்பாடி வாழ்பவர்கள். பெண்கள் அனைவருமே விபச்சாரிகளும் கூட. அக்குழுவில் உள்ள வஸந்தி என்ற பெண் நிதாரியின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். முதலில் அவள் அவனது கருநிறத்துக்காக அவனைச் சீண்டுகிறாள். பின் அவனுடைய உள்ளிருக்கும் கவிஞன் அவளை கவர்கிறான்
ராஜாவின் மச்சினியுடன் இருக்கும் காதல் வெளித்தெரிகிறது. ’தெரிந்தால் என்ன அவளை அறுத்துக்கொண்டு வரச்சொல்கிறேன், நீ அவளைக் கட்டிக்கொள்’ என்கிறான் ராஜா. ஆனால் அது முறையல்ல, ஒரு குடும்பத்தை உடைக்கலாகாது என்று சொல்லி நிதாரி ஜூமூர்குழுவுடன் சென்றுவிடுகிறான். அவன் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் ஆரம்பிக்கிறது.
நிதாரியின் இந்த ஜூமூர் குல வாழ்க்கையை இந்திய நாவல்கள் எதிலும் இல்லாத ஒரு விசித்திரக்கொண்டாட்டதுடன் அமைத்திருக்கிறார் தாராசங்கர். வஸந்தி மிக சிக்கலான, அபூர்வமான குணச்சித்திரம். மாலையானால் சாராயம் குடித்து வாடிக்கையாளர்களுடன் காமக்களியாட்டம் போடுகிறாள். காலைகளில் அந்த சாயங்காலங்களை எண்ணி வருந்துபவளாக இருக்கிறாள்.
அவளுக்கு காசநோய் இருக்கிறது. அந்த நோயை தன்னைத்தானே தண்டிக்கும் வேகத்துடன் அவள் ஏற்றுக்கொண்டிருக்கிறாள். மருந்துகள் சாப்பிடுவதில்லை. தன் வாழ்க்கை மத்தாப்பு போல எரிந்தணைவதை அவள் அறிவாள். மிகக்கொடூரமான மரணம் வரப்போவதை அவள் அறிந்திருந்தாள். நோயுற்று மட்கி கைவிடப்பட்டு சாவதே ஜூமூர் நடனக்காரிகளின் விதி.
ஆனால் இவையனைத்துக்கும் மேலாக அவள் மேடையேறினால் முற்றிலும் இன்னொரு பெண். கலை அவளை அரசியாக ஆக்குகிறது. மேடையில் கர்வமே உருவானவளாக தருக்கி நிற்பவள் அவள். அந்த தோரணைக்காகவே அவள்மேல் காதல்கொள்கிறான் நிதாரி. அது காதல் என்பதைவிட பிரியமென்பதே பொருத்தம். ராஜாவின் மச்சினியிடம் நிதாரி கொண்ட காதலில் இருந்த பரவசம் இங்கே இல்லை. அவன் வசந்திக்காக பரிதாபப்பட்டான். அவளுடன் இருக்க ஆசைப்பட்டான். ஆனால் அச்சமும் அருவருப்பும் கூடவே இருந்தது
நிதாரி ஜூமூர் கலைக்குழுவின் கவிராயனாக ஆகிறான். குடித்துவிட்டு வந்து ஆபாசப்பாடல்களை பாடுகிறான். வசைபாடுகிறான். ஒவ்வொருநாளும் அதில் இருந்து தப்பி ஓட ஆசைப்படுகிறான். ஆனால் வசந்தியுடனான பாசம் தடுக்கிறது. பின் வசந்தி நோயுறுகிறாள். அப்போதும் அதேபோல அலட்சியமும் கர்வமும் கொண்டபெண்ணாகவே இருக்கிறாள். நிதாரி அவளுக்கு பணிவிடைசெய்கிறான். அவன் கைகளில் அவள் இறந்தபின் ஒருநாள் முழுக்க அவன் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான். ஜூமூர் குழு மறுநாளே வசந்தியை மறந்துவிட்டிருந்தது. அவளுடைய பொருட்களுக்காக சண்டைபோட ஆரம்பித்திருந்தது.
ஜூமூர் குழுவில் இருந்து மீண்டு மறுபடியும் தன் கிராமத்துக்கே வருகிறான் நிதாரி. ஜூமூர் வாழ்க்கை ஒரு திருவிழாபோல வண்ணமும் வெளிச்சமுமாக நிகழ்ந்து காலையில் கனவாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு முழு வாழ்க்கையின் சுமையும் அவன் மேல் ஏறிவிட்டது. நிதாரி ஜூமூர் கலைக்குழுவில் பாடிய ஒரு கவிதை ‘தாயே வாழ்க்கை இத்தனை அற்பமானதாக ஆனது ஏன்?’ வசந்திக்கு அந்த வரி அவள் வாழ்க்கையின் சாரமாகவே இருந்தது. நிதாரி அந்த வரியைத்தான் ஜூமூர் கவிராய வாழ்க்கையின் சாரமாக திருப்பிக் கொண்டுவந்தான்.
அந்த வரி ஒரு விதைபோல. அது நிதாரிக்குள் முளைத்தது. பழைய நிதாரியில் இருந்து புதிய நிதாரி மேலெழுந்துவந்தான். கனவுகளைப்பாடிய இளம்கவிஞனாகிய நிதாரி வாழ்க்கையை பாடும் பெருங்கவிஞனாகிறான். அங்கே நாவல் முடிகிறது.
படைப்பூக்கம் கொண்ட வாழ்க்கையின் அனைத்து கொந்தளிப்புகளையும் கட்டற்றதன்மையையும் சித்தரிக்கும் நாவல் என்று கவியைச் சொல்லலாம். ஒரு எளிமனிதந் கவிஞனாகிறான். ஒரு மலரைப்பார்த்தபின் அதனூடாகச்சென்று வேர்களை வேர் பரவிய சேற்றுநிலத்தைக் காணும் அனுபவத்தை அளிக்கிறது கவி. குடியும் விபச்சாரமும் கலையின் களியாட்டமும் ஒருவரை ஒருவர் சாராமல் தங்களை மட்டுமே சார்ந்து வாழும் மனிதர்களும் கொண்ட ஜூமூர் கலைக்குழுவின் வாழ்க்கைச்சித்திரம் மீண்டும் மீண்டும் கலையைப்பற்றிச் சிந்தனைசெய்ய வைக்கிறது. ஏன் கலைகளுடன் விபச்சாரமும் இணைந்தது? கலையில் உள்ள மீறல், போதை இயல்பாகவே அதையும் சாத்தியமாக்குகிறதா என்ன?
நிதாரிக்கு இரு பெண்களுடன் உள்ள உறவும் அவ்விரு பெண்களின் குணச்சித்திரமும் ஆர்வமூட்டுவது. மச்சி என்று நிதாரி அழைக்கும் முதற்காதலி எளிய கிராமத்துப்பெண். அவளுக்கு கலையும் கவிதையும் என்றால் என்ன என்று தெரியாது. அவளுடைய சிறிய உலகு கொள்ளாத ஓர் ஆளுமை நிதாரி. செம்புக்குள் அருவிகொட்டியது போல நிதாரியின் உறவு. அது அவளை அழிக்கிறது. ஆனாலும் அது அவளுக்கு ஒருபேரனுபவம். பிரமிப்பும் பரவசமுமாக அவள் நிதாரியின் காலடியில் விழும் சித்திரம் அழகானது.
ஆனால் வஸன் என்னும் வஸந்தி முற்றிலும் வேறானவள். அவளுடைய குணச்சித்திரம் கட்டற்று கலைந்துகிடப்பதாக தோன்றும். அகங்காரமா சுயஇரக்கமா தனிமையா மூர்க்கமா என்றெல்லாம் சொல்லிவிட முடியாத ஒரு பெண்மைக் குணம். ஒருகட்டத்தில் சட்டென்று என் மனதில் உதித்தது, இது நிதாரி என்ற கலைமனதின் கதைமட்டுமல்ல அதற்கு இணையான கலைமனமான வஸனின் கதையும்கூட என்று. காந்தத்தை எதிர்ப்புலம் ஈர்ப்பது போன்றது மச்சியின் காதல். நேர்ப்புலம் விலக்கிச்சுழல்வது போன்றது வஸனின் காதல்.
வஸந்திக்கு நிதாரி யாரென தெரியும். அந்த உன்னதம்தான் அவளை சிதறடிக்கிறது. ஜூமூர் பெண்கள் விபச்சாரிகள். அதைத்தவிர காதலர்களும் இருப்பார்கள். ஆனால் வசந்தியை எந்த காதலனும் நெருங்கமுடியவில்லை. அவளை நெருங்கியவர்கள் எல்லாம் அவளால் அவமதிக்கப்பட்டார்கள். அவளது முதல் வட்டத்துக்குள் இருந்த திமிரின் உலோகம் எவரையும் நெருங்கவிடவில்லை. ஆனால் சந்தித்த முதல்நாளே அவளை இலவம்பூவுடன் ஒப்பிட்டு எழுதிய கவிதை வழியாக நிதாரி அதை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான்.
அந்த அதிர்ச்சியால்தான் அவள் அவனை அவமதிக்கிறாள். கருப்பன் என்று கிண்டல்செய்கிறாள். ஆனால் மெல்ல மெல்ல அவன் உள்ளே வந்து அமர்கிறான். அவளுக்கு அவன் முன்ன்னால் மட்டுமே தன் கலையகங்காரத்தை கழட்டி வைத்து சரணடைய முடிகிறது. ஆனால் அவனுக்குமுன் அவளுடைய தன்னுணர்வு சீண்டப்படுகிறது. விபச்சாரியாக இருப்பதன் சுயஇழிவு. அதைவெல்ல மேலும் குடித்து மேலும் ஆட்டம்போடவே அவளால் முடிகிறது. கடைசியில் நோயில் மரண முனையில் இரு காந்தமுனைகளும் இணைகின்றன- அவற்றை விட பெரிய இன்னொரு காந்தப்புலத்தின் சன்னிதியில். ஒரு கோணத்தில் இது நிதாரியின் கதை அல்ல வஸனின் கதைதான்.
இருபெண்கள் வழியாக வாழ்க்கையின் இரு முகங்களையும் கண்டுவிட்டான் நிதாரி. அவனை கவிஞனாக்குகிறார்கள் இரு பெண்களும். வங்க ஞானப்புலத்தில் வைத்துப்பார்த்தால் அருளுருவாகிய உமையும் உக்கிரரூபியான காளியும்தான் இருவரும். குருதி வழியும் வாய்கொண்டவள் என்னும் சித்தரிப்பு வழியாக பல கோணங்களில் சொல்லி வஸனில் இருக்கும் காளி என்ற அம்சத்தை அடிக்கோடிட்டுக்கொண்டே இருக்கிறார் தாராசங்கர். உமை ஆத்மனை எழுப்ப முடியும், காளியே தன் வெம்மைமூலம் அவனை கனியச்செய்ய முடியும் என்பதுதானே வங்க சாக்தேயத்தின் அறிதல்.
[கவி தாராசங்கர் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் த.நா.குமாரசாமி. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு ]
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 22, 2010