உயர்சாதிப்பெண்களின் கண்டனம்

kutty-revathi-696x464

 

ஜெ,

சமீபத்தில் சாதியாணவக்கொலைகள் சார்ந்து நிகழ்ந்த ஒரு கேலிக்கூத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஓர் இணையதளம் தமிழில் எழுதிவரும் உயர்சாதியைச்சேர்ந்த பெண் கவிஞர்கள் மற்றும் பெண்ணியர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்தது. [அந்தப்பட்டியலை அந்தப்பெண்களிடம் கேட்காமல் அவர்கள் தயாரித்திருக்கமுடியாதென்பது வெளிப்படை ] அதிலிருப்பவர்கள் ‘நான் உயர்சாதிப்பெண், ஆனாலும் நான் சாதியாணவக்கொலைகளை கண்டிக்கிறேன்’ என்று பேட்டிகொடுத்தார்கள். அவர்களின் வகைவகையான வண்ணப்படங்களுடன் அவை வெளியாயின. கொலையைக் கண்டிப்பதற்கு ஒவ்வொரு பெண்மணியும் அளித்திருக்கும் போஸ்கள் மிக மிக நுணுக்கமானவை. கிட்டத்தட்ட காலண்டர்  மாடல்களின் போஸ்கள் அவை.

அந்தச்செய்தி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானபோது உடனே ‘நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. நாங்கள் சொன்னதே வேறு. நாங்கள் சாதி மதம் இனம் மட்டும் அல்ல பாலினமே அற்றவர்கள்’ என்ற வகையிலே பேட்டிகொடுத்தார்கள். அவர்கள் பேட்டிகொடுக்கவில்லை என அந்த இணையதளம் இன்னும் கூட மறுக்கவில்லை. இதைப்பற்றிய இணைப்புகளை அனுப்பியிருக்கிறேன்.

நீங்கள் முன்பு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதியதை நினைத்துக்கொண்டேன்

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெயராமன்

நம் பெண்கவிஞர்களைப் பற்றிய என் வருத்தம் அவர்கள் கவிதைகள் எழுதுவதில்லை என்பது மட்டும்தான்.

வரலாறு, கலாச்சாரம் சார்ந்த வாசிப்போ இலக்கியவாசிப்போ அற்றவர்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள். ஒர் அறிவுச்சூழலில் செயல்படுவதன் பெரும்பொறுப்பை எளிய மக்கள்தொடர்பு மற்றும் குழுச்செயல்பாடாகப் புரிந்துகொள்பவர்கள். நான் சுட்டிக்காட்டுவது அதையே.

அவர்களிடம் இருப்பதெல்லாம் . மேலோட்டமான ஒரு மொழிப்பயிற்சி, கவிதையின் டெம்ப்ளேட் பற்றிய ஒரு மெல்லிய அறிமுகம், எது அரசியல்சரி எது முற்போக்கு என சூழலில் இருந்து புரிந்துகொண்டிருக்கும் ஒரு நடைமுறைப்புத்தி, தணியாத அடையாள வேட்கை.  இவ்வளவுதான் அவர்கள். நாளை படைப்பூக்கமும் அறிவின் தீவிரமும் கொண்டு எழுந்துவரும் ஒரு பெண்படைப்பாளி இவர்கள் எல்லாம் யார் என எளிதில் காட்டிவிடுவார்

இத்தருணத்தையும் தங்களை காட்டிக்கொள்ளும் ஒன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், அவ்வளவுதான். அதை அவர்களால் செய்யாமலிருக்கமுடியாது.l

ஆனால் இவ்விஷயத்தில் சிலவிஷயங்கள் சொல்லவேண்டும். ஊடகங்களிடம் ஏமாறுவது அனைவருக்கும் நிகழக்கூடியதுதான். ஊடகங்கள் நம்மிடம் கோருவது அவர்கள் விரும்புவதை நம் வாயில் திணிப்பதற்கான ஓர் ஒப்புதலை மட்டுமே. எனக்கு இது பலமுறை பலவகையில் அனுபவமாகியிருக்கிறது. சமீபத்தில் பத்ம விருது மறுப்பு நிகழ்வு வரை. ஆகவே சொல்லெண்ணிப் பேசுவேன். எழுதித்தான் அளிப்பேன். அதையும் மீறி சம்பந்தமில்லாதது எல்லாம் என் பெயரில் வந்திருக்கிறது. ஆகவே பெண் கவிஞர்களின் மறுப்பை உண்மை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

இரண்டாவதாக, ஊடகங்கள் உருவாக்கும் ‘பிரபல அந்தஸ்து’ என்பது அக்காலத்தில் வீட்டில் கோழி வளர்ப்பதுபோலத்தான். நல்லநாளன்று அடித்துச் சாப்பிடுவார்கள். எந்த ஒரு ஊடகப்பிரபலமும் அந்த ஊடகத்தால் ஒருநாள் பொலிபோடப்படுவார். இது ஊடகதர்மங்களில் தலையாயது. ஊடகம் அளிக்கும் வெளிச்சத்திற்குப் பழகியவர்கள் இதற்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும்

மூன்றாவதாக, அரசியல்சரிகளை மட்டுமே சொல்லி சூழலில் சிந்தனையாளராக நிலைகொள்ளும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் மும்முறை கவனம் தேவை. அரசியல்சரிக்கு அப்பால் யோசிக்காத, மேலோட்டமான ஒரு கருத்தியல்பாவலாவை மட்டுமே சிந்தனையாகக் கொண்ட ஒரு வெற்றுக்கும்பலின் ஆதரவுதான் தங்களுக்கு உள்ளது என இவர்கள் அறிந்திருக்கவேண்டும். அரசியல்சரியில் ஒரு சிறிய கீறல் விழும்போது அதுவரை கொண்டாடிய நாக்குகளே வசைபாடத்தொடங்கும்

ஏனென்றால் பிறரது அரசியல்சரிநிலைகளை சரிபார்ப்பது, விமர்சனம் செய்வது வழியாகவே தங்களை முற்போக்காகக் காட்டியாகவேண்டிய நிலையில் நிற்பவர்கள் அவர்கள். இவர்களும் அவர்களுடன் இணைந்து நின்று செயல்பட்டவர்கள்தானே? என் இலக்கியவிமர்சனக் கருத்தைக்கூட அரசியல்சரி பிரச்சினையாக மாற்றித்தானே இவர்கள்  ‘களமாடினார்கள்?”

இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண் எழுத்தாளர்களை வசைபாடி சோர்வடையச் செய்வதை நான் ஒருவகை வன்முறையாகவே பார்க்கிறேன். இது ஓர் ஊடகப்பிழை. அவர்கள் இத்தகைய தாக்குதல்களைக் கடந்து செல்லவேண்டும்

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3
அடுத்த கட்டுரைவேளாண்மை – இயற்கையும் செயற்கையும்