ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி

970225_10204195453764858_160073027844960754_n

அன்புள்ள ஜெ,

வணக்கம்

கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே விதைத்து (self sown-shattering) முதிர்ச்சி அடைந்த பயிர்களில் இருந்து தானியங்களை சேகரித்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி பகிர்ந்து உண்பதாக ஒரு குறிப்பு இருக்கும். நெல் வறண்ட நிலத்தில் தோன்றி பிறகு காலப்போக்கில் நீர் தேங்கிய சதுப்பு நிலங்களில் பயிரிடப்பட்டதன் ஒரு குறிப்பு.

கொற்றவையில் கோவலன் வடக்கு வணிகன் ஒருவனுடன் பேசும்போது அடிமை வியாபாரம் மூலமாக பரவியதாக இருக்கிறது. நெல் தோற்றம் குறித்த மரபியல் ஆய்வுகளில் அது தென் தமிழகத்தில் தோன்றி வங்காளம் அஸ்ஸாம் வழியாக சீனா கொரியா ஜப்பான் சென்றடைந்தது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அது புத்த துறவிகளின் மூலமாக என்பது ஒரு இலக்கிய ரீதியான குறிப்பு. மரபியல் ரீதியாகவும் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு அமினோ அமிலம் மரபணு திடீர் மாற்றத்தால் மாறியதால் நெல் மணிகள் உதிராமல் (non-shattering) அறுவடை செய்து தாளடித்தால் மட்டுமே உதிரும் வகைகளாக ஜப்பானில் மாறியது. நெல் ரகங்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்தன ஜப்பானிகா மற்றும் இண்டிகா. இன்டிகாவிளிருந்து மேலும் ஒரு பிரிவாக ஜவாநிகா ரகங்கள் தாய்லாந்து ஜாவா மலேசியா போன்ற நாடுகளில் தோன்றின.

புகொகாவின் செயல்முறைகள், தென் தமிழகத்தில் பாலை குறிஞ்சி நிலங்களில் தானே விதைத்து முதிர்ச்சி அடையும் நெல்பயிர்களின் தன்மை பயன்படுத்தப்படிருப்பதை அறியலாம். உழவு செய்யாமல் வைக்கோல்களை மட்க வைத்து அதன் மேலயே விதைத்து மழை நீரில் மொத்த சாகுபடியும் செய்தல். அதே ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த நெல் அறிஞர் யோஷிடா (Shoichi Yoshida ,1977) நெல் முளைப்பதில் இருந்து முதிர்ச்சி அடையும் பருவம் வரையில் எல்லா காரணிகளையும் அறிவியல் ரீதியாக விளக்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் சென்று சேரும் புள்ளியாக என்னை நான் ஜெயமோகனின் கொற்றவை வழியாக அறிந்தேன். தானாக முளைத்து முதிர்ச்சி அடையும் நெல் ரகங்கள், சதுப்பு நிலங்களில் பயிரிட்டபோது காலப்போக்கில் (குறிப்பாக சொல்ல முடியாத காலக் கணக்கு) இயற்கையான மரபணு மாற்றங்களால் (natural hybridization; mutation, natural selection) ஏற்பட்ட மாறுதல்களை குறித்தே என் ஆராய்ச்சியின் வடிவங்கள். முக்கியமாக தனக்கு தேவையான சத்துக்களை பெறும் தன்மையையும் வறட்சியை தாங்கும் தன்மையையும் இழந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே நெல் வயல்களில் தழை/எரு உரங்களை பயன்படுத்தியதன் அவசியத்தை அறியலாம்.

நெல் இரு போகம்/ மூன்று போகமாக சாகுபடி செய்யப்பட்ட போது மண்ணில் சத்துக்களின் அளவுகள் மாறுதல் அடைந்திருக்கும். நவீன குட்டை ரகங்கள் நிறைய தூர் வருவதற்காக தழைச்சத்து (nitrogen responsive) செயற்கை உரங்களின் மூலம் பெரும் வகையில் உருவாக்கப்பட்டன. என் வழிமுறைகள், இந்த மூன்று வகையான நெல் ரகங்களின் மரபியல் பண்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு செய்து நிருபிக்கப் பட்டவை. எனக்கு நிச்சயமாக விவாதங்களில் அதிக ஈடுபாடில்லை. அதே நேரத்தில் வழிமுறைகளை நிரூபிக்க முடியும். அஜிதன் என் விவசாயிகளை சந்தித்து ஒரு சிறிய விவரணப் படமாகவும் எடுத்தான். உங்களிடம் காட்டினானா என்று தெரியவில்லை.

நண்பர் பாலா அவர்களுக்கு, நிலத்தின் மதிப்பு சார்ந்த லாபமும், விவசாயிக்கு என்று ஒரு ஊதிய விகிதமும் வருவதற்கு வாய்ப்பு இருந்தால் மிக நல்லது. ஆனால் சாத்தியம் இல்லை என்று தான் கூறமுடியும். நான் எப்போதுமே சந்தையில் நிலையான விலை பெறக்கூடிய ரகங்களை பயிரிட பரிந்துரைக்கிறேன். வெள்ளைப் பொன்னி, சோனா மஷுரி (BPT-5204), Paiyur-1, பவானி, IR-20, ADT-39. இந்த ரகங்கள் நிலையான மகசூளையும் அதே நேரத்தில் சந்தையில் நல்ல விலையும் தரக்கூடிய ரகங்கள். BPT-5204 ரகம் பயிரிடும்போது மிகக் கவனமாக திட்டமிட்டு செய்ய வேண்டும். பூச்சி நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் ரகம். ஆனால் ஒருங்கிணைந்த முறைகளை கையாளும் போது பூச்சி நோய் தாக்குதலை அறவே தவிர்த்திடலாம். உயிர் உரங்களின் பயன்பாடு அதிகரித்ததன் காரணம் மாவட்டம் தோறும் உற்பத்தி செய்யும் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான். விதை முளைக்கும் போதுதான் அனைத்து உயிர் உரங்களும் பயிர்களுடன் கூட்டமைத்து அதன் செயல்களை செய்யும் (colonization; rhizosphere; Plant growth promoting activity; nutrients mobilization, Systemic acquired resistance). நான் படித்த வேளாண் நுண் அறிவியலில் இருக்கும் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள்தான். பூகொக்கொவும் யோஷிடாவும் இணையும் புள்ளியில் என் செயல்பாடுகள் இருக்கின்றன.

நன்றி

தண்டபாணி

***

References

1) One straw revolution ( Masanobu Fukuoka (1913-2008)

2) Fundamentals of rice crop science ( Yoshida, 1977)

3) கொற்றவை- ஜெயமோகன்

4) Konishi et al. (2006) An SNP Caused Loss of Seed Shattering During Rice Domestication. 2 JUNE 2006 VOL 312 SCIENCE

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3
அடுத்த கட்டுரைஅந்த மாபெரும் வெள்ளம்…