‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3

[  2    ]

அமைச்சர்களும் நிமித்திகர்களும் திகைத்து நிற்க சபரர் “அரசர்களை எடுத்துச்சென்று அரண்மனை மஞ்சங்களில் கிடத்துங்கள்” என்று ஆணையிட்டார். ஒற்றையுடலாக அதுவரை அவர்களைப்பார்த்திருந்த ஏவலர் கைநடுங்கினர். வெட்டுண்டு துடிக்கும் உடலைப்பார்க்கும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டது. “தூக்குங்கள்!” என்று சபரர் மீண்டும் கூவ தலைமை ஏவலன் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு ரம்பனின் எடைமிக்க உடலை தூக்கினான். அது உயிருள்ள உடலுக்குரிய நிகர்நிலை இல்லாமல் பல பக்கங்களிலும் அசைந்து சரிந்தது. உள்ளமென்பது உடலில் கூடிய நிகர்நிலையே என ஏவலன் உணர்ந்தான். உள்ளமிழந்த உடல் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு தசைத்துண்டுகளின் பொருளற்ற திரள். பன்னிரு ஏவலர்களின் கைகளில் ரம்பன் ததும்பினான். இரு ஏவலர் கரம்பனை தூக்கிக்கொண்டுவந்து ரம்பன் அருகே படுக்கச்செய்தனர். ரம்பன் உடல் தன் மேல் பட்டதும் கரம்பன் “ஆ!” என விலங்குபோல ஊளையிட்டபடி துடித்து கைகளை நிலத்தில் அறைந்து உந்தி விலகினான். ரம்பன் “யார் அது? யார் அது?” என்று கூச்சலிட்டான்.

மூங்கில்கட்டிலில் ரம்பனைத் தூக்கி படுக்கச்செய்தனர். புரண்டுபுரண்டு தவித்தபடி “யாரது? இங்கே யார்?” என்று எச்சில்வழிய கூவிக்கொண்டிருந்தான். அவன் அருகே கரம்பனை படுக்கச்செய்ய ஏவலர் முயன்றபோது சபரர் “வேண்டாம்” என்று கைநீட்டி தடுத்தார். அவர்களை தனித்தனியாக அரண்மனைக்குள் கொண்டுசென்றனர். முதல்முறையாக அவர்கள் தனித்தனியான மஞ்சங்களில் படுக்கவைக்கப்பட்டனர். அகன்ற மஞ்சத்தின் வலது மூலையில் ஒதுங்கிக்கொண்ட ரம்பன் எஞ்சிய இடத்தை கையால் துழாவியும் அறைந்தும் “எங்கே? எங்கே?” என்று அரைமயக்கில் என அரற்றினான். தன் மஞ்சத்தின் இடது மூலையில் ஒடுங்கிய கரம்பன் எஞ்சிய இடத்தை நோக்கி பதைத்து மேலும் மேலும் ஒடுங்க முயன்று “அமைச்சரே! அமைச்சரே!” என்று அழுதான். “அகிபீனா கொண்டுவருக! அகிபீனா!” என்று சபரர் ஆணையிட்டார்.

அகிபீனா உண்டு சிவமூலிப்புகையும் அளிக்கப்பட்டதும் அவர்களின் நரம்புகள் அவிழ்ந்தன. தசைகள் தளர்ந்தன. நீண்ட மூச்சு வரத்தொடங்கியது. தாடை விழுந்து வாய் திறந்தது. துயிலில் ரம்பன் புன்னகைத்து “நான்!” என்றான். கையை மஞ்சத்தின் எஞ்சிய இடத்தில் ஓங்கி அறைந்து “நான்!” என்றான். கரம்பன் ஒடுங்கி உடல் சுருக்கி மெல்ல அதிர்ந்தபடியே இருந்தான். பின்னர் “இந்த இடம்!” என்று முனகினான். இதழ்கோண புன்னகைசெய்து “இடம்!” என்றான். அவர்கள் தூங்கும்போதுகூட அந்த எஞ்சிய இடம் மஞ்சத்தில் அப்படியேதான் இருந்தது என்பதை சபரர் கண்டார். நிமித்திகர் சூரர் “என்ன செய்வது ஆசிரியரே?” என்று மெல்ல கேட்டார். “நீறும் நெருப்பு அடுத்தகணம் எடுக்கப்போகும் வடிவமென்ன என்று தெய்வங்களாலேயே சொல்லமுடியாது… அவர்கள் விழித்தெழட்டும். காத்திருப்போம்” என்றார் சபரர்.

இரவெல்லாம் மஞ்சத்தறை வாயிலிலேயே அமைச்சர்கள் அமர்ந்து துயின்றனர். காலையில் ரம்பனின் பெருங்குரல் அலறலை கேட்டுத்தான் அவர்கள் விழித்தெழுந்தனர். உள்ளே கைகால்களை அறைந்து வாய்திறந்து தொண்டைநரம்புகள் புடைக்க ரம்பன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். “விடு… என்னை விடு…” அறியாச்சரடுகளை அவிழ்க்க விழைபவன்போல் அவன் திமிறி எழுந்து மீண்டும் விழுந்தான். அப்பால் கரம்பன் விழித்துக்கொண்டு ரம்பனை நோக்கி இளித்துக்கொண்டிருந்தான். ரம்பன் “கட்டுக்கள்! கட்டுக்கள்!” என்று கூவியபடி மஞ்சத்திலிருந்து எழமுயன்று மறுபக்கம் சரிந்து விழுந்தான். அவ்வொலி கேட்டு உடல் அதிர்ந்த கரம்பன் தன் மஞ்சத்திலிருந்து புழுபோல தவழ்ந்து அப்பால் இறங்கினான். இருவரும் அறையின் இருமூலைகளை நோக்கி சென்றனர்.

“அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு கொண்டுசெல்லுங்கள். ஒருவரை ஒருவர் நினைவூட்டும் எதுவும் அங்கிருக்கலாகாது. அவர்களின் உள்ளம் இவ்வுலக விழைவுகளை நோக்கி செல்லட்டும்” என்று சபரர் ஆணையிட்டார். “அவர்கள் இருவரையும் தனித்த ஆளுமைகள் என்றே எண்ணி பேசுங்கள். மூத்தவரே என்றும் இளையவரே என்றும்கூட அழைக்கவேண்டியதில்லை. ஒருவர் உலகில் இன்னொருவர் இல்லாதவரே ஆகுக! இவர் ரம்பர். தானவத்தின் ஒரே அரசர். அசுரசக்ரவர்த்தி தனுவின் ஒரே மைந்தர். அவர் கரம்பர். தானவத்தின் ஒரே அரசர். அசுரசக்ரவர்த்தி தனுவின் ஒரே மைந்தர். இவ்வெண்ணம் நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் உறைக! நம் சொல்லில் மட்டும் அல்ல, கண்களிலும் உடலசைவுகளிலும் அதுவே எழுக!”

அவரது ஆணையின்படி ரம்பனும் கரம்பனும் வெவ்வேறு அரண்மனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பன்னிருநாட்கள் அவர்கள் அகிபீனாவும் சிவமூலியும் அளித்த களிமயக்கிலேயே இருந்தனர். அவ்விரவு விடியத்தொடங்கியபோது அவர்களின் உலகில் இன்னொருவர் முற்றிலும் இல்லாமலாகியிருந்தனர். வியப்பளிக்கும்வகையில் ரம்பனும் கரம்பனும் அந்த தனியாளுமையை தங்களுக்கென எளிதில் சூடிக்கொண்டனர். ரம்பன் உணவிலும் கதைப்போரிலும் ஈடுபட்டான். அவனுக்கென உணவுவகைகளை சமைத்துப் பரிமாறும் அடுதிறனர் வரவழைக்கப்பட்டனர். அவனுடன் தோள்நின்று கதையாடும் மல்லர்கள் வந்துகொண்டிருந்தனர்.

கரம்பன் நூல்களில் மூழ்கினான். அறநூலும் கவிநூலும் கற்ற புலவர்கள் அவை கூடிக்கொண்டே இருக்க அவர்கள் நடுவே அவன் மகிழ்ந்திருந்தான். “இத்தனை விரைவில் இவர்கள் தகவமைந்துவிடுவார்கள் என்று எண்ணவே இல்லை ஆசிரியரே” என்றார் சூரர். அருகே நின்று அவையமர்ந்து சொல்லாடிக்கொண்டிருந்த கரம்பனை நோக்கிய சபரர் நெடுமூச்செறிந்து “இல்லை நிமித்திகரே, அத்தனை எளிதாக இரண்டு ஒன்றாகாது” என்றார். “தனித்திருப்பதன் பெருவலியை அவர்கள் அடைந்துவிட்டனர். அதை வெல்லும்பொருட்டு முழுமூச்சாக முயல்கிறார்கள். விழிப்புள்ளத்தைப் பழக்கி எடுக்க முயன்று வென்றுவிட்டார்கள். ஆனால் விழிப்புள்ளம் வலுப்பெறும்தோறும் அதன் பேரெடையால் கனவுள்ளம் அழுத்திச் சுருக்கப்படுகிறது. அது நுண்ணுள்ளத்தை அடைந்து அங்கு ஒரு அணுவென மாறி புதைந்திருக்கிறது. ஆலமரம் குடிகொள்ளும் விதை கடுகளவே.”

சூரர் “நீங்கள் தீது சூழ்ந்து கவலைகொள்கிறீர்கள் ஆசிரியரே. மீளவும் வாழவும்தான் வாழ்பவர் உள்ளம் என்றும் விழைகிறது. புண்களை ஆற்றிக்கொள்ள உடல் விழைவதனால்தான் நாம் மீண்டுஎழுகிறோம்” என்றார். சபரர் ஐயம்நிறைந்த விழிகளுடன் திரும்பி நோக்கி “ஆம்” என்றார். தாடியைத் தடவியபடி “ஆனால் உடல் போல கள்ளமற்றதல்ல உள்ளம். அது அழியவும் விரும்பக்கூடும்” என்றார். “ஆசிரியரே, அது இயற்கையின்நெறிக்கு எதிரானதல்லவா?” என்றார் சூரர்.

“இயற்கையின் நெறிதான் என்ன? அத்தனை எளிதாக அதை சொல்லிவிடமுடியுமா? கூட்டம்கூட்டமாக மீன்களும் பறவைகளும் இறப்பை நாடிச்செல்வதை தற்கொலை செய்வதை நானே கண்டிருக்கிறேன். இங்குள்ள உயிர்கள் அனைத்திலும் செயல்படும் உள்ளமும் அத்தனை உயிர்களாகவும் நின்று தொழில்படும் பேருள்ளமும் ஒன்றுதானா? கடலும் துளியுமா அவை? எதன் விழைவை ஒட்டி வாழ்க்கை அமைகிறது இங்கு? எவரால் சொல்லிவிடமுடியும்?” சபரர் மிகைப்படுத்துகிறார் என்றே சூரர் எண்ணினார். ஒவ்வொன்றும் எளிதாக ஒன்றுடன் ஒன்று அமைந்து எழுந்துகொண்டிருந்தது. எப்பிழையும் கண்ணுக்குப்படவில்லை. “நான் எதையும் காண்கிலேன் ஆசிரியரே” என்றார் சூரர். “அவர்களின் உடலை பாரும். உள்ளம் உடலுக்குள் ஒளிந்திருக்கிறது. ஆனால் முழுதும் ஒளிய அது விழைவதில்லை. தன்னை வெளிக்காட்ட அது விழைகிறது. உடலில் எங்கோ தன்னை கரந்துவெளிப்படுத்துகிறது உள்ளம்… நோக்கும்.”

சூரர் கரம்பனையும் ரம்பனையும் மறைந்து நின்று நுணுக்கமாக நோக்கினார். சிலநாட்களுக்குப்பின் ரம்பன் தன் இடத்தொடையை கையால் எப்போதும் வருடிக்கொண்டே இருப்பதை கண்டார். அந்தப் பழக்கம் முன்பு இருந்ததா என்று உசாவி இல்லை என்று அறிந்தார். உண்ணும்போதும் போரிடும்போதும்கூட அவன் அறியாத பிறிதொரு தெய்வத்தால் இயக்கப்படுவதுபோல கை அதை செய்துகொண்டிருந்தது. துளைத்து உட்புகத் தவிக்கும் பாம்பு போல. இரவில் துயில்கையிலும் அக்கை அதை செய்துகொண்டிருப்பதைக் கண்ட சூரர் சபரரிடம் அதை சொன்னார். “கரம்பனிடமும் அவ்வகையில் ஏதேனும் உடற்பழக்கம் இருக்கிறதா?” என்றார் சபரர். நுண்ணிதின் நோக்கியும் கரம்பனிடம் அப்படி எந்த அசைவும் தெரியவில்லை.

சிலநாட்கள் நோக்கியபின் இயல்பாகவே தான் கரம்பனின் வலப்பக்கத்தை மட்டும் நுணுகியதை உணர்ந்த சூரர் கரம்பனின் முழுதுடலையும் சிலநாட்கள் நோக்கினார். “இல்லை, ஆசிரியரே. அவரிடம் ஏதும் அவ்வகையில் தெரியவில்லை” என்றார். “இருக்கும்… இல்லாமலிருக்காது” என்றார் சபரர். மீண்டும் அவையமர்ந்து பலநாட்கள் கரம்பனின் செயல்களை நோக்கியபின் அப்படி ஏதுமில்லை என்னும் முடிவை அடைந்தபின் அம்முயற்சியை நிறுத்திக்கொண்டார். ஆனால் அந்த நுண்ணோக்கு அவரது கனவுள்ளத்திற்குச் சென்றது. அங்கே அது தவித்து தேடிக்கொண்டே இருந்தது. ஒருநாள் புலவர் அவையில் பேசிக்கொண்டிருந்த கரம்பன் ஒரு பேச்சுக்கு நடுவே வெறுமனே வாயசைப்பதை சூரர் கண்டார்.

ஒருகணம் நெஞ்சு துடிப்புதவறியது. மீண்டும் கூர்ந்துநோக்கியபோது அது ஒரு சொல் என தெரிந்தது. ஒலியாக ஆகாது உதடுகளில் மட்டும் நிகழ்ந்து மறைந்தது அச்சொல். அதைக் கண்டபின் விழிகள் அதையே கண்டன. ஒவ்வொரு சொற்றொடர் நடுவிலும் அச்சொல் நிகழ்ந்து மறைந்தது. ஒலிகொண்ட சொற்களுக்கு நடுவே அச்சொல் அசைந்து அழிவதை சொல்பவனும் சொல்முன் அமர்ந்திருப்பவர்களும் அறியவேயில்லை. சூரர் அச்சொல்லை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். அது அவரிடம் மட்டுமென சொல்லப்பட்டதாக ஆகியது. நாலைந்து சொற்களுக்கொருமுறை அக்கேளாச்சொல் வந்து சென்றது. பின்னர் அச்சொல்லின் விரிபரப்பின்மேல்தான் கேட்கும்மொழியின் அத்தனை சொற்களும் ஒலிக்கின்றன என்று தெரிந்தது. சொல்லிடைவெளி விழும்போதெல்லாம் அந்த ஒலியிலாச் சொல் எழுந்தது.

சூரர் அச்சொல்லை அனைத்து இதழ்களிலும் நோக்கத் தொடங்கினார். பேச்சுகளில் குவிந்து விரிந்து இழுபட்டு மடிந்து அசையும் இதழ்களில் நினைத்திராத கணத்தில் அச்சொல் நிகழ்ந்து மறைகையில் அவர் உள்ளம் திடுக்கிட்டது. பின்பு ஒருநாள் விடியலில் துயில்மறையத் தொடங்கும் தருணம் தன் உதடுகள் அச்சொற்களை சொல்லிக்கொண்டிருப்பதை அவரே உணர்ந்து உடலதிர எழுந்தமர்ந்தார். என்ன சொல் அது என உசாவிக்கொண்டார். ஏதும் நெஞ்சுள் தோன்றவில்லை. விழிக்கையில் எழுந்த கனவில் அவர் தன் மைந்தனிடம் பூசலிட்டுக்கொண்டிருந்தார். “நீ என் மகனே அல்ல. மகன் என்றால் நான் சொல்வன உனக்கு ஆணையென்றிருக்கும்” என்றார். மைந்தன் சொன்னவை காதில் விழவில்லை. அவனை தெளிவாக நோக்கவும் முடியவில்லை. “நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை…” என்றபடி விழித்துக்கொண்டார்.

சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டு எழுந்தபோது தலையை ஏதோ முட்டியதுபோல அச்சொல் தெளிந்தது. ”நீ!” படபடப்புடன் முகம்கழுவி இன்னீர்கூட அருந்தாமல் கரம்பனின் அவைக்குச் சென்றார். முதற்புலரியில் எழுந்து நூல்நோக்கும் பழக்கம் கரம்பனுக்கு இருந்தது. தூவிமஞ்சத்தில் மெலிந்த கால்களை இயல்பற்ற முறையில் மடித்து ஒடுங்கி அமர்ந்து மடியில் விரிப்பலகை வைத்து அதில் பரப்பிய ஓலையில் எழுத்தாணியால் எழுதிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் “நீ, நீ, நீ” என உச்சரித்துக்கொண்டே இருந்தன. தீயதெய்வமொன்றை எதிரில்கண்டவர் போல சூரர் அங்கேயே உடல்சிலிர்த்து நின்றுவிட்டார்.

திரும்பி ஓடி சபரரின் தவக்குடிலை அடைந்து “ஆசிரியரே! அவர் சொல்லும் சொல் என்ன என்று கண்டேன். நீ” என்றார். “அச்சொல்லைத்தான் அவர் உதடுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.” சபரர் பெருமூச்சுடன் “ஆம், நான் சிலநாட்களுக்கு முன்னரே அதை கண்டறிந்தேன்” என்றார். “அவன் ஒருபோதும் அச்சொல்லை உரையாடல்களில் சொல்வதில்லை என்பதை கண்டேன்.” சூரரும் அதை அப்போது உணர்ந்து “ஆம்” என்றார். அதன்பின் கரம்பனின் அனைத்து உரையாடல்களையும் கூர்ந்து நோக்கினார். அவனுடைய உரையாடல்களில் இயல்பாகவே அச்சொல் இல்லாமலாகிவிட்டிருந்தது. அவன் அதை தவிர்க்கவில்லை, அது தானாகவே மூழ்கி மறைந்திருந்தது.

சூரரும் சபரரும் அச்சத்துடன் காத்திருந்தனர். ஆனால் அனைத்தும் இயல்பாகவே நிகழ்ந்தன. பிறிதொருவர் இருப்பதையே அறியாதவர்களாக ரம்பனும் கரம்பனும் தங்கள் மாளிகைகளில் வாழ்ந்தனர். தனித்தனியாக அவைகூட்டி தனித்தனியாக நாடாண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக இளவரசிகளை மணம்புரிந்துவைக்கவேண்டும் என்று அமைச்சர்கள் சொன்னார்கள். சபரர் “அதுவும் நல்லதே. நன்மைநிகழ நாம் தெய்வங்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்” என்றார். நிமித்திகர் சூரர் “ஆனால் அவர்களின் பிறவிநூல்குறிகள் நன்று எதையும் சுட்டவில்லை ஆசிரியரே” என்றார். “நன்று நோக்கி செயலாற்றுவதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார் சபரர். “நன்றும் தீதும் தெய்வங்கள் முடிவெடுப்பவை.”

ஒவ்வொன்றும் நன்றென்றே சென்றுகொண்டிருக்கையில் அதுவரை இருந்த கூர்திட்டங்கள் அவிழத்தொடங்கின. மங்கலசண்டியின் ஆலயத்தில் காலைபூசனைக்கு முதல்முரசு ஒலிக்கையில் கரம்பன் சென்றுவழிபடுவதே வழக்கம். அவனை மறுபக்கமிருந்த பாதைவழியாக அரண்மனைக்கு கொண்டுசெல்லும்போது இரண்டாவது முரசு முழங்கும். ரம்பன் அன்னையை வணங்க அழைத்துவரப்படுவான். ஒருநாள் முதல்முரசு முழங்கியதை இரண்டாம்முரசு என்று எண்ணி ஏவலர் ரம்பனை அன்னைமுன் கொண்டுவந்து நிறுத்தினர். அவ்வேளையில் கரம்பனும் ஆலயமுகப்புக்கு வந்தான். அவர்களிருவம் எதிரெதிர் நின்றபின்னரே நிகழ்ந்தது என்ன என்று ஏவலரும் அமைச்சர்களும் அறிந்தனர். சிற்றமைச்சர் மெல்லியகுரலில் “அரசரை பின்னால்கொண்டுசெல்… பின்னால்” என்று கரம்பனின் பல்லக்கைத் தூக்கியவர்களிடம் ஆணையிட அவர்கள் அதை சரிவர உணராமல் பல்லக்கை தரையில் வைத்துவிட்டனர்.

“தூக்கு! தூக்கு!” என்று அமைச்சர் பதற அவர்கள் “அடியார் என்ன செய்யவேண்டும் அமைச்சரே?” என்றனர். அதற்குள் பல்லக்கிலிருந்து நீள்மூச்சு எழுந்தது. “அது யார்?” என்று கரம்பன் கேட்டான். அமைச்சர் விடையிறுப்பதற்குள்ளாகவே “மூத்தவர்!” என்று கூவியபடி பல்லக்கிலிருந்து தவழ்ந்திறங்க முற்பட்டான். “மூத்தவரே! மூத்தவரே” என்று கூவியபடி தவித்தான். ரம்பன் “யார்?” என்று கூவினான். “யாரது? யாரது?” என்று கைகளை விரித்து தலையை உருட்டியபடி அலறினான். “மூத்தவரே, இது நான்… உங்கள் இளையோன். என்பெயர் கரம்பன்” என்றான் கரம்பன்.

“நீயா? நீயா? இளையோனே, நீயா?” என்று கூவி கைகளை விரித்தான் ரம்பன். “என்னை மூத்தவரிடம் கொண்டுசெல்லுங்கள்… கொண்டுசெல்லுங்கள்” என்று கரம்பன் கூவினான். போகிகள் அமைச்சரை நோக்க அவர் தவித்தார். “கொண்டுசெல்லுங்கள்… கொண்டுசெல்லுங்கள்” என கண்ணீருடன் கூவியபடி கரம்பன் தரையில் தவழ்ந்தான். அமைச்சர்களால் ஆணையிடமுடியவில்லை. எதிரே கரியபேருருவாக நின்ற ரம்பனைக்கண்டு அவர்கள் அச்சத்தில் செயலற்றிருந்தனர்.

ரம்பன் “இளையோனே… இளையோனே…” என்று கைகளை காற்றில் வீசினான். பின்பு காலடிகள் ஓசையிட ஓடிவந்து குனிந்து கரம்பனை தரையில் இருந்து தூக்கிச் சுழற்றி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இளையோனே! நான் எப்படி உன்னை மறந்தேன்! எப்படி நீ இல்லாமல் இருந்தேன்!” என கண்ணீர்விட்டபடி மாறி மாறி முத்தமிட்டான். “மூத்தவரே, தனியனாகிவிட்டேன் மூத்தவரே” என்று கரம்பன் அழுதான். அவர்கள் விடாய்தீராது மீண்டும் மீண்டும் கட்டிக்கொண்டார்கள். கண்ணீர் முகமெங்கும் வழிய சிரித்தார்கள். அமைச்சர்களும் கண்ணீருடன் வந்து அவர்களின் கால்களைத் தொட்டு தலையில் சூடிக்கொண்டார்கள்.

சூரர் ஆடை நெகிழ பாய்ந்துசென்று சபரரின் தவக்குடிலை அடைந்து “அனைத்தும் சீரடைந்துவிட்டன ஆசிரியரே. அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர்” என்றார். “அது கண்டடைதல் மட்டுமே. இணைப்பு அல்ல. இரட்டைநிலை நீடிக்கவேண்டும் என்றால் ஒருமைநிலை சற்று தேவையாகிறது” என்றார் சபரர். “என்ன சொல்கிறீர்கள் ஆசிரியரே?” என்றார் சூரர். “எழுந்தாலன்றி வீழமுடியாது” என்றார் சபரர். “வளர்வதிலிருக்கும் இன்பத்துக்கு நிகரான இன்பம் சிதைவதிலும் உண்டு என்பதை உடல் அறியாது, உள்ளம் அறியும்.” சூரர் தளர்ந்து பீடத்தில் அமர்ந்து “அனைத்தும் சீரமையும் என்ற நம்பிக்கையே என்னை இதுவரை கொண்டுவந்தது ஆசிரியரே” என்றார். “சீரமையவும்கூடும்” என்றார் சபரர்.

சிலநாட்கள் ரம்பனும் கரம்பனும் ஒருவரோடொருவர் தழுவி ஒட்டிக்கொண்டே இருந்தனர். ஒவ்வொருகணமும் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் உச்சிகளில் உலவினர். இருவரும் இணைந்து வாழ்ந்த அரண்மனையில் அவர்களின் பெருஞ்சிரிப்பொலி ஓயாது ஒலித்தது. குலைந்த அனைத்தையும் சீரமைத்துவிடவேண்டும் என்றும் மூவுலகையும் வென்று அடக்கிவிடவேண்டும் என்றும் வெறிகொண்டனர். இரவும் பகலும் துயிலாதிருந்தனர். அரண்மனையின் ஏவலரும் அமைச்சர்களும் அவர்களின் உளவிரைவுக்கு நிகர்நிற்கவியலாமல் தவித்தனர். தூண்மூலைகளில் நின்றபடி துயின்றும் ஒளிந்தமர்ந்து ஓய்வெடுத்தும் உடன் விரைந்தனர். அமைச்சர்கள் எச்சம் வைத்த ஓராண்டுகால அரசுப்பணிகள் அனைத்தும் ஒரிரு வாரங்களில் முடிவடைந்தன. மேலும் பணிகள் தேவை என்றுணர்ந்து கருவூலத்தையும் ஆட்சியோலைப் பதிவகத்தையும் துழாவி புதிய திட்டங்களை கண்டடைந்தனர்.

அரண்மனையில் ஒவ்வொருவரிலும் வெறி எழுந்தது. அத்தனை விழிகளிலும் காய்ச்சல் படிந்திருந்தது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் சொல்லெடுப்பதே குறைந்தது. அனைவரிடமும் அரசர்களே பேசிக்கொண்டிருந்தனர். ரம்பகரம்பர் கருக்கிருட்டில் கதையேந்தி களம்புகுந்தனர். புரவியேறி மலைச்சரிவுகளில் விரைந்தனர். நான்குபேருக்கான உணவை ஒருவரே உண்டனர். அவையமர்ந்து ஏழு அமைச்சர் வாசித்துக்காட்டிய ஓலைகளை ஒரேசமயம் கேட்டு முடிவுகள் சொன்னார்கள். வணிகர்களை சந்தித்தபடியே அமைச்சர்களுக்கு ஆணையிட்டனர். நிலவுமுதிர்ந்த இரவுவரை கலைகளில் ஈடுபட்டனர். அவர்கள் எப்போது துயில்கிறார்கள் என்பதை எவரும் அறியவில்லை.

என்று என்று என சூரரும் சபரரும் காத்திருந்த தருணம் ஒருநாள் காலையில் வந்தது. மஞ்சத்தறையில் கரம்பனின் அலறலோசை கேட்டு ஏவலர் உள்ளே புகுந்து நோக்க ரம்பன் தன் ஒருவயிற்றனை நிலத்தோடு அழுத்தி ஏறியமர்ந்து வலக்கையால் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தான். அவன் இடக்கையில் இருந்த கட்டாரியுடன் அதை கரம்பனின் வலக்கை இறுகப்பற்றியிருந்தது. இடக்கையால் ரம்பனின் தோளை ஓங்கி அறைந்து கரம்பன் கூச்சலிட்டான். உள்ளே சென்ற ஏவலர் திகைத்து நிற்க பின்னால் வந்த சூரர் அருகே இருந்த பெரிய பீடத்தை எடுத்து ஓங்கி ரம்பனின் தலையில் அடித்தார். அலறியபடி அவன் சரிய அந்த சிறிய தருணத்தை பயன்படுத்திக்கொண்டு தன்னை மீட்ட கரம்பன் உருண்டுகிடந்த பித்தளை உமிழ்கலத்தை எடுத்து ரம்பன் தலைமேல் மீண்டும் அறைந்தான். விலங்கென அலறியபடி புரண்ட ரம்பன் எழுவதற்குள் கைகளை ஊன்றி தவழ்ந்து அறைமூலைக்குச் சென்ற கரம்பன் “என் ஆணை! கொல்லுங்கள் இந்த விலங்கை… இக்கணமே கொல்லுங்கள்!” என்று கூச்சலிட்டான். ரம்பன் “அவனை என்னிடம் பிடித்துக்கொடுங்கள்… புழு… இழிந்த புழு…” என்று பற்கள் கிட்டிக்க கூவினான்.

சூரர் ஆணையிட ஏவலர் கரம்பன் மேல் பாய்ந்து பற்றி இறுக்கி பட்டுத்துணிகளால் கைகால்களை சேர்த்துக்கட்டினர். ரம்பனை கட்டச்சென்ற இருவர் தூக்கிவீசப்பட பன்னிருவர் ஒரே சமயம் அவன் மேல் பாய்ந்து இறுக்கினர். சூரர் பீடத்தின் உடைந்த கால்களால் அவன் தலையை அறைந்துகொண்டே இருந்தார். தலையுடைந்து குருதி வழிய மெல்ல அவன் தளர்ந்தபோது ஏவலர் அவனையும் துணிகளால் இறுக்கிக் கட்டினர். அவன் மூக்கின்கீழே சிவமூலிப்புகை காட்டி மயங்கச்செய்து தூக்கிச் சென்றனர். இருவரையும் அவர்களின் பழைய தனியரண்மனைகளுக்கே கொண்டுசென்று படுக்கச்செய்தனர்.

அவர்கள் விழித்தெழுகையில் தோள்வலுத்த ஏவலரும் மருத்துவரும் உடனிருக்கவேண்டும் என சபரர் ஆணையிட்டிருந்தார். அவர்கள் காலையில் மஞ்சத்தருகே காத்திருந்தனர். முதலில் விழித்தெழுந்த ரம்பன் எங்கிருக்கிறோம் என்றறியாமல் திகைத்து கைகளை மெத்தைமேல் அடித்தபடி ஓலமிட்டான். “ஆ! ஆ!” என்று அலறியபடி எழுந்தான். “யார்? யாரது? யார்?” என்று திகைப்புடன் சுற்றுமுற்றும் தலைதிருப்பி செவிகூர்ந்து கூவினான். “அரசே, நாங்கள்தான்…” என்று சூரர் சொன்னார். “யார்? யார்?” என்றான் ரம்பன். உடனே தன் நெஞ்சில் ஓங்கியறைந்தபடி எழுந்தோடி மஞ்சத்தறையின் சாளரம் வழியாக வெளியே குதிக்கப்பாய்ந்தான். அவனை பாய்ந்து பற்றி இழுத்துச் சுழற்றி தரையோடு அழுத்தினர். அவன் “நான்! நான்!” என்று கூவியபடி தரையில் மண்டையை அறைந்தான். நெற்றி உடைந்து குருதி வழிந்து தரையில் சிதறியது.

அவனைப் பற்றி இழுத்துச்சென்று தனியறையில் அடைத்தனர். நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “நான்! நான்!” என்று கூவினான். தரையையும் சுவர்களையும் ஓங்கி ஓங்கி மிதித்தான். அறைந்து வெறிக்கூச்சலிட்டான். தலையை கதவுகளிலும் சாளரங்களிலும் மாறி மாறிமுட்டினான். தன் உடலை தானே நகங்களால் கிழித்தான். உதடுகள் கடிபட்டு குருதி பெருகியது. அலறி அலறி தொண்டை கமறி ஒலியழிந்தபோது மல்லாந்து தரையில்படுத்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்தான். கட்டுண்டவன் சிறைச்சரடுகளை அறுக்கமுனைவதுபோல தவித்து துடித்தான். வெறிகொண்டு மீண்டும் எழுந்து கதவுகள் மேல் பாய்ந்தான்.

உச்சிவேளையில்தான் கரம்பன் விழித்தெழுந்தான். உடலைச் சுருக்கியபடி கண்களை விழித்து மச்சுப்பரப்பை நோக்கி சற்றுநேரம் படுத்திருந்தான். பின்பு தன்னிரக்கம் கொண்டு விசும்பி அழத்தொடங்கினான். அவனருகே குனிந்த சூரர் “அரசே, நான் நிமித்திகன் சூரன்” என்றார். அவர் சொற்கள் அவனை சென்றடையவில்லை என்பதுபோல நோக்கினான். சிந்தனைகளுக்கு நடுவே இருந்த தொடர்பு அறுபட்டுவிட்டதுபோல விழிகள் மட்டும் உருள உடல் சோர்ந்து மஞ்சத்திலேயே இருந்தான். அவனை தூக்கிச்சென்று நீராட்டினர். உணவூட்டப்பட்டதும் உண்டான். பேசப்பட்ட எதையும் உள்வாங்கவில்லை. அவன் விழிகளுக்குப்பின்னால் ஆன்மா இல்லையோ என்ற ஐயத்தை சூரர் அடைந்தார்.

கரம்பன் அறைக்குள் புகுந்த கருவண்டு ஒன்று அவனைச் சுற்றிச்சுற்றி வந்ததைக் கண்டு அவன் அசையாமல் அமர்ந்திருப்பதை சூரர் கண்டார். அவன் விழிகள் அதை தொடர்ந்தன. உடல் பதறிக்கொண்டிருந்தது. ஆனால் கையைத் தூக்கி அந்த வண்டைத் துரத்த அவனால் முடியவில்லை. குரல்கொடுக்கவும் இயலவில்லை. கைகள் சோர்ந்தவை போல இருபக்கமும் கிடக்க நோக்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு ஏவலன் ஓடிவந்து வண்டைத் துரத்தியபோது அவன் உடல் ஆறுதல்கொண்டு நெகிழ்ந்தது. தொண்டை ஒரு சொல்லுக்கென அசைந்தது. ஆனால் ஒலி எழவில்லை.

ரம்பன் தனியறையிலேயே கிடந்தான். அவனுக்களிக்கப்பட்ட உணவை அருந்தவில்லை. விடாய்கொண்டு அவன் நீர் கேட்கும்போது வெல்லம் சேர்த்த பால் அளிக்கும்படி சபரர் ஆணையிட்டிருந்தார். அதைமட்டுமே உண்டு அவன் உடல் உயிர்த்தது. ஒருமாதகாலம் கடந்து மெலிந்து எலும்புருவான ரம்பன் வெளியே கொண்டுவரப்பட்டான். அவனை கண்காணித்தபடி எப்போதும் ஏவலர் உடனிருந்தனர். தன் தலையின் வலப்பக்கத்தை காதுக்குமேல் வலக்கையால் தட்டிக்கொண்டே இருந்தான். காதுக்குள் நீர் சிக்கிக்கொண்டதுபோல தலையை உதறினான். நிலையற்று அறைக்குள் சுற்றிச்சுற்றிவந்தான். திடீரென்று நின்று “ஆ!ஆ!” என்று அலறினான். காதை கையால் தட்டிக்கொண்டு “யார்? யாரது? யார்?” என்று கூச்சலிட்டான். மூக்கைச் சுளித்து ஏதோ மணத்தை முகர்ந்தான். ஐயத்துடன் அறைமூலைகளை நோக்கி திரும்பி “யாரது? யாரது?” என்றான்.

அவன் படுப்பதே இல்லை. மஞ்சத்திலோ தரையிலோ சற்றுநேரம் அமர்ந்தால்கூட உடனே எழுந்தான். தலையை சுழற்றிக்கொண்டு நடந்துகொண்டே இருந்த நிலையில் உடல்விதிர்க்க விரைத்து நின்று கழுத்துத் தசைகள் இழுபட கைகள் உதறியசைய “ஆஆஆ” என்று ஓசையிட்டான். மெல்லிய காலடியோசைக்கும் அவன் உடல் அதிர்ந்தபடியே இருந்தது. “யார்? யாரது?” என்று கூவியபடி அருகே இருந்த எப்பொருளையும் தூக்கிக்கொண்டு பாய்ந்தெழுந்து தாக்கப்போனான். அவனைச்சுற்றி மெல்லிய பஞ்சணைவுகள் மட்டுமே இருக்கும்படி செய்தனர். அவனை அறிந்த ஏவலர் மட்டுமே அவன் அறைக்குள் செல்லத்துணிந்தனர். அவன் முழுமையாகவே துயிலிழந்திருந்தான். கண்கள் மூடி சற்றுநேரம் அமர்ந்திருக்கையிலும் கைகளால் வலதுகாதுக்குமேல் தட்டிக்கொண்டே இருந்தான்.

கரம்பன் எப்போதுமே படுக்கையில் இருந்தான். அவன் உடலில் இருந்து முழு உயிராற்றலும் விலகிச்சென்றதுபோலிருந்தது. கைகளும் கால்களும் எப்போதும் வியர்த்துக் குளிர்ந்திருந்தன. நூல்களை அவன் முன் கொண்டுசென்றனர். அவனால் அவற்றை எழுத்துசேர்த்து வாசிக்கமுடியவில்லை. எதையும் நிலையாக நோக்கவே இயலவில்லை. ஆனால் அவன் பசி கூடிக்கூடி வந்தது. உணவுவேண்டும் என்பதை அவன் கேட்பதில்லை. உறுமியபடி தலையை அசைப்பான். விழிகளிலிருந்து நீர் வழியும். உணவு அருகே வந்ததும். நடுங்கும் உடலுடன் அதை அணுகி விலங்கு போல குனிந்து உதறும் கைகளால் அள்ளி மெல்ல உண்பான். நாளெல்லாம் அவன் உண்டுகொண்டிருந்தான். அவன் உடல் உப்பிப்பெருத்து வெளிறியது.

ஏதோ ஒருகணத்தில் ஒவ்வொருவரும் அவர்களின் இறப்பை எதிர்நோக்கத் தொடங்கினர். முதலில் அவ்வெண்ணத்துடன் அவர்கள் எதிர்பொருதினர். பின்னர் அதுவே அவர்களுக்கு நல்லது என்று சொல்சூழத் தலைப்பட்டனர். பின்னர் அதற்காக விழைந்தனர். பின்னர் பொறுமையிழந்து காத்திருந்தனர். அவர்களின் விழிகளுக்கு முன்னால் இருவரும் மெல்ல அழிந்துகொண்டிருந்தனர்.

முந்தைய கட்டுரைதினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி