தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2

Tamil_News_large_1481446

இன்றைய நிதர்சனம் பற்றி சொல்லி விட்டு அந்த காலத்திலே இங்கிலுசுகாரன் அப்படி கதைப்பவர்களுக்கு சவுக்கடி அந்த கடிதம்.எனக்கு எப்போதுமே நேரு வேஷம் இல்லா தலைவர். இன்றைக்கு அந்த module தோல்வி என்று சொல்வதே fashion. அன்று அது ஒரு சிறந்த வழி.சுயநலம் இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கி தேசத்தின் பட்டினி போக்கியது. பரதேசி படத்தை குளிரக் குளிர சொகுசாக பார்த்த போதுதான் சுதந்திரம் ,அதன் மகத்துவம் புரிந்தது .

நடராஜன்.

***

அன்புள்ள ஜே எம்

வெள்ளைக்காரன் ஆட்சி மேல் என்று நம் நாட்டில் பலர் பிதற்றுவதற்கு நம் பள்ளி கல்வி முறையும் ஒரு காரணம் அல்லவா? பள்ளிகளில் வரலாறு என்ற ஒரு பாடம். இந்திய வரலாறு கற்கும் வகுப்புகளில் ஆசிரியர்களும் சரி, புத்தகங்களும் சரி, வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடந்த சுரண்டல்களையோ, பொருளாதாரக் கொள்ளை பற்றியோ, பெரும் பஞ்சங்கள் பற்றியோ கற்பிக்கப்படுவதில்லை.

பள்ளி கல்வி முறையும், பாடத் திட்டங்களும் மாற வேண்டும்.

சிவா சக்திவேல்

***

அன்பு ஜெமோ,

புதியவர்களுடன் சந்திப்புகள், வெண்முரசுக்கு சிறிய இளைப்பாறல், அழைக்கப்பட்ட கூட்டங்களில் நிறைவான உரைகள் என உற்சாகமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்! நண்பர்கள் சிரித்தபடி இருக்கும் புகைப்படங்கள் அழகு. அது பற்றி வந்த ஒரு அபத்தக் கேள்விக்கு பதில் சொல்லும் முன் அரங்காவின் அட்டகாச சிரிப்பை போட்டிருந்தது மிகச்சிறப்பு!

அமெரிக்க தேர்தல் குறித்து- தொடர்ச்சி:

அமெரிக்காவைப் புரிந்துகொள்ள ஒரு அருமையான புத்தகம் ஜெப்ரி ஸாக்ஸ் எழுதிய The price of civilization. ஜெப்ரி ஸாக்ஸ் ஒரு பொருளாதார நிபுணர், முன்னாள், இன்னாள் ஐநா சபை பொதுச் செயலாளர்களுக்கு ஆலோசகர். பெரும் வரவேற்பு பெற்ற அவரது புத்தகங்களின் ஆய்வுமுறை, எண்ணங்கள் எல்லாம் எண்களில் தெரியும் என்பதே.

சிறிய அரசாங்கத்தை முன்வைக்கும் குடியரசுக்கட்சி பழமைவாதிகள், ஏழை சிறுபான்மையினரை, ஒட்டுண்ணிகள் என்றும், அவர்கள் சலுகை பெறுவதால்தான் பொருளாதாரம் சறுக்குகிறது என்றும் சொல்வது உண்டு. அதனால் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு உதவி, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை குறைக்கச்சொல்லி எல்லா மேடைகளிலும் முழங்குவார்கள். அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகவே இருந்தது. ஜெப்ரி ஸாக்ஸ் இதை ஆராய்ந்து எழுதும் வரை.

2011-ல் ஜெப்ரி ஸாக்ஸ் வெவ்வேறு மாநிலங்களின் பொருளாதாரத்தை ஆய்ந்து ஒரு வியப்பூட்டும் உண்மையை எழுதினார். எந்தெந்த மாநிலங்கள் சிறிய அரசாங்கத்தை விரும்பும் குடியரசுக்கட்சியால் ஆளப்படுகின்றனவோ அவையே மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகமான பொருளுதவி பெறுகின்றன! அதாவது யார் குறை சொல்கிறார்களோ அவர்களே குற்றவாளிகள்! அந்தக்குற்ற உணர்வை மறைக்கவே கூச்சலிடுகிரர்களோ என்னவோ!

இந்தத் தேர்தலிலிலும் ஒரு தூரத்து நம்பிக்கை நட்சத்திரம் இருக்கிறார். ஜான் கேசிக் என்று பெயர். ட்ரம்ப் இருக்கும் அதே குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்.கண்ணியமான பேச்சு, ஒஹையோவின் ஆளுனராக சிறப்பாகவே செயல்பட்டவர், வலதுசாரியாக இருந்தாலும் இருதரப்பையும் அரவணைத்து செல்பவர். ஆனால் துருவங்களாகி நிற்கும் மக்களை வைத்துப் பார்த்தால், ஜான் கேசிக் எட்டாக்கனியாகவே தெரிகிறார்.

அன்புடன்

ராஜன் சோமசுந்தரம்

பெரு மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

‘தினமலரில்’ நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளை இப்பொழுதுதான் படித்தேன்.ஒவ்வொரு நாளும் இதுவரை அறியாத புதிய விசயங்களாக நமது நாட்டைப்பற்றி பெருமிதம் கொள்ளும்படி (பல விதங்களில்) எழுதி வருகிறீர்கள். தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறவர்களுக்கு சில விசயங்கள் ஏற்கனவே அறிந்ததுதான், இருந்தபோதிலும் ஒரு வெகு ஜன தொடர்பு செய்திதாளில் தங்கள் கட்டுரைகள் வருவது பலரையும் சென்றடையும். அவர்களுக்கு இது ஒரு ‘கண் திறப்பாக’ இருக்கும்,அந்தவகையில் உங்களின் வாசகனான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

 ‘உப்புவேலி’ கட்டுரையின் மூலம்தான் உங்களை கண்டடைந்தேன். இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் என்று அப்போது நினைத்தேன். இன்று வந்த கட்டுரையில் அது பற்றி சற்று ‘கோடி’காண்பித்து இருக்கிறீர்கள். என்னுடைய வேண்டுகோள், இது போன்று கட்டுரைகளை தொடர்ந்து வெகு ஜன தொடர்பு ஊடகங்களில் எழுதுங்கள். நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல மாற்றம் வரும் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி,

அன்புடன்,

அ .சேஷகிரி.

தினமலர் கட்டுரை இணைப்புக்கள்

4 ஜனநாயகம் எதற்காக?

3 குற்றவாளிகள் யார்?

2 தனிமனிதனின் அடையாளக்கொடி

1 ஜனநாயக ஒழுக்கம்