இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5

ve

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு நீண்ட பதிவு.. அனேகமாக அனைத்தும் நீங்களும், நண்பர்கள் விவரித்த புள்ளிகள் தான் என்றாலும், சொந்த அனுபவத்தில், அனைத்தையும் எண்ணித்தொகுக்க முயன்றிருக்கிறேன்.. ஏதேனும் தவறிருந்தால் கூறவும்..

2009 ல் நான் இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். அதன் முன்னரும் விகடனில், எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் ஆகியோரை படித்திருந்தேன்.. ஆனால் இது ஒரு தனி வகையான எழுத்து (Genre) என்பது உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்ததும்தான் அறிந்தேன். என்னளவில் இலக்கிய வாசிப்பு என்னை பெரிதும் சாந்தப் படுத்தியுள்ளது. 45 வயது வரை வாழ்க்கை சீராக போய் கொண்டுதான் இருந்தது… பொருளாதாரம், குடும்பம், உறவுகள் எல்லாவற்றிலும் பிரச்சினைகள் இல்லாத ஓட்டம்.

இலக்கிய வாசிப்பு இந்த வாழ்க்கை அனுபவத்தை கண்டிப்பாக விரிவாக்கியது என்று கூறுவேன். வாசித்த இலக்கியங்களின் கதா பாத்திரங்களின் அனுபவங்களை என் அனுபவங்களாக பார்க்கும் வாசிப்பை இலக்கிய வாசிப்பு என்னில் கூர் படுத்தியது. ரப்பர் நாவலின் பிரான்ஸிஸோ, லாரன்சோ அல்லது திரேஸ், தங்கம் ஆகியோரது வாழ்க்கை பாதை என் நிஜ உலகில் வாழும் 90 சதவிதம் பேர் அனுபவித்திருக்கப் போவது இல்லை, அல்லது அனுபவித்தவர்களோடு தொடர்புறுவதற்கும் சாத்தியங்கள் மிக குறைவு. ஆனால் இந்த கதைகளையும், கதை மாந்தர்களின் எண்ணங்களையும் படிக்கும் போது, இப்படிப்பட்ட வாழ்க்கையும் இந்த உலகத்தில் உண்டு என்பதும், இப்படியான எண்ண ஓட்டங்கள் சாத்தியம் என்றோ, மற்றவர்களும் இப்படி என்னை போல் எண்ண ஓட்டம் உள்ளவர்கள் தான் என்று படிக்கும் போது ஏற்படும் மன விரிவு, புரிதல் அபாரம். அந்த புரிதலுக்கு பிறகு என் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் நபர்களுடனான ஆன என் உறவு, எதிர் நிலை , பங்களிப்பு ஆகியவைகளில் ஒரு மிதப்படுதல் ஏற்பட்டது என்பது உண்மை. சுவாமி பரமார்த்தானந்தாவின் கீதை உரையில் ஆன்மீக வளர்ச்சியை அளப்பதற்கு ஒரு எளிய உத்தி கூறுவார்.. FIR – Frequency , Intensity and Recovery from emotional outbursts – ஆகிய மூன்றும் குறைய வேண்டும் என்பார். என் அளவில் இது இலக்கிய வாசிப்புக்கு பின் கண்டிப்பாக நிகழ்ந்தது. வீட்டில் எரிச்சல் அடைவது குறைந்தது, அலுவலகத்தில் தேவைக்கு மேலே விவாதம் தவிர்ப்பது, என் தவறுகள் சுட்டி காட்டப்படும் போது உணர்ச்சி வசப்படாமல் உண்மையை ஆராய்ந்த்து என்னை நானே மாற்ற முயல்வது, வெளியுலகத்தில் ஏற்ப்படும் சங்கடங்களினால் கொந்தளிக்காமல் இருப்பது என்று பல மாற்றங்கள்.. இன்னும் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகமேயாயினும், இதுவரை ஏற்பட்ட மாற்றங்களும் அதிகமே…இவை அனைத்தும் இலக்கிய ஆக்கங்கள் வாசிப்பு எனக்கு தந்த, என் நிஜ அனுபவங்கள் மீறிய புனைவு அனுபவங்களால் தான் சாத்தியமாயிற்று….

என் அன்றாட வாழ்வில், நான் உயர்ந்தவை என்றெண்ணும் பண்புகள், வெளி உலகால் முக்கியமற்றது என்று கழிக்கப்படுவதையும், உதாசீனப்படுத்தப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இலக்கியம், இவை அனைத்தையும் கொண்டாடியதையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிறுத்தியதையும் கண்டதே என்னை இலக்கிய வாசிப்பிற்க்கு மேலும் கொண்டு சென்றது.

தொழில் சார்ந்த உலகில் இலக்கியத்தின் பாதிப்பு, மனித உறவுகளில் மிதப்படுதல் தாண்டி, ஒருவரின் வெற்றி, உயர்வு போன்றவைக்கு உதவும் அதே நேரத்தில் இவற்றை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது. ஆனால் இலக்கியம் தான் தொழில் இட வெற்றிக்கு முட்டுகட்டை என்பதை சரி என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை. தொழில் சார்ந்த ஞானம், தன்முனைப்பு, வேலையில் நாட்டம், உழைப்பு, மேலும் சில நேர்மை, அறம் போன்ற பண்புகள் தான் பணி இட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.

அற உணர்வு, செய்யும் வேலைகளில் உண்மையாய், நேர்மையாய் இருப்பது, வேலை, சமூகம் , சூழல் எல்லாவற்றிலும் வகுக்கப்பட்டிருக்கும் விதிகளை மீறாமல் இருப்பது, எடுக்கும் வேலையை முழுமையாக முடிக்க தேவையான உழைப்பை தருவது போன்ற பண்புகள், மேலும் முக்கியமாக பணிக்கு தேவையான தொழில் ஞானம் ஆகியவை ஒருவரிடம் அடிப்படையாக இருந்தால், தொழில் இடத்தில் வெற்றி கொள்வது கடினமாக இருக்காது. இப்படியான பண்புகள் இருப்பதால் தான் ஒருவர் இலக்கியத்திற்குள் எளிதாக நுழைய முடிகிறதோ என்றும் தோன்றுகிறது. இந்த பண்புகள் ஒருவரிடம், இலக்கியத்திற்குள் வருவதற்கு முன்பே இருந்திருக்கலாம். இலக்கியம் இவற்றை மேலும் கூர் படுத்துகிறது, இவற்றின் மீதான நம்பிக்கை, பற்றை மேலும் பலப்படுத்துகிறது. தொழில் சார்ந்த இடங்களில் ஒருவர் பெறும் வெற்றிக்கு, தொழில் ஞானம் அளித்த பங்கு போக, கணிசமான பங்கு இந்த பண்புகளுக்கும் உண்டு. இந்த பண்புகள் பலவும் இல்லாமல், ஒருவர் மேம்போக்காக, சுலபமான ( குறுக்கு?) வழியில் சில வெற்றிகள் ஈட்டலாம் ஆனால், அதை தொடர்ச்சியாக செய்து காட்ட முடியுமா என்பது சந்தேகம் தான்..

தொழில் இடத்தில் ஒன்றை என்னால் கவனிக்க முடிந்தது. வேலை சேர்ந்து சுமார் 10, 15 வருடங்கள் தொழில் ஞானம், அர்பணிப்பு , நேர்மை ஆகியவை ஒருவரை மேலும் மேலும் சிறப்புற செய்யும். அந்த துறையில் அவருக்கு அடிப்படை ஈடுபாடு இல்லா விட்டாலும், அந்த துறை அவருக்கு அளிக்கும் அறிதல் (பணி சார்ந்த அல்லது தொழில் சார்ந்த) சாத்தியங்கள், சவால்கள் அவரை முதலில் மனமார்ந்து அந்த துறையில் தன்னை அர்பணிக்கத் தூண்டும். இது அவர் அவர் அடிப்படை பண்புகள், கற்றலில் அவருக்கு இருக்கும் மன எழுச்சி, அந்த துறை அளிக்கும், அவரால் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் ஆகியவற்றின் விளைவாக இருக்கும். பணி உயர்வு, நற்பெயர் என வரலாம். ஆனால், ஒரு இடத்திற்கு மேல், அவரது அடிப்படை பண்புகள், தொழில் வளர்ச்சியில் தடைகளாக ஆக வாய்ப்புண்டு. நிறுவன உலகில், ஒரு கட்டத்திற்கு மேல், இந்த கற்றல் சாத்தியங்கள், சவால்கள் முடிவுறும் போது, இலக்கிய வாசிப்பு அதிகமாக உள்ள ஒருவர், அவர் எடுக்கும் வேலைகளில், எதிர்பார்க்கும்/அர்பணிக்க நினைக்கும் பங்கீடு சாத்தியப்படாது. வெவ்வேறு காரணங்களாக இருக்கலாம்.. ஒரு மேம்போக்கான வேலை செய்து, வெளிதோற்றத்தை மட்டும் நன்றாக காட்டி செல்ல, பெரும் கூட்டம் இருக்கலாம், நிறுவனத்தின் அந்த குறிகோளே கூட அப்படியான perfection தேவை இல்லாத ஒன்றாக இருக்கலாம், அந்த வேலையை செய்ய இருக்கபடும் வளங்கள் (உழைப்பு, நேரம், மற்ற வளங்கள்..) போதாது என்ற நிலை இருக்கலாம், நிறுவனத்தில் பங்களிக்கும் ஏனையோர், வேறு புள்ளிகளுக்கு முன்னுரிமை தரும் நிலையில் இருக்கலாம்.. மேலும் பல காரணங்கள் இருக்கலாம்…

இந்த முரண்பாட்டு கட்டத்தை அடையும் இலக்கிய வாசகர் தொழில் இடத்தில் தேக்கம் அடைகிறார். அந்த மன நிலையில், தொழிலுக்கு அவர் பொருத்தமற்றவராக ஆகிறார்.. இதற்கு காரணம் தன் இலக்கிய பற்று தான் என்று முடிவுக்கு வந்து ஒன்று, தொழில் மாற்றம் செய்கிறார் அல்லது இலக்கியத்திற்கு ஒதுக்கும் நேரத்தை குறைக்கிறார்.

தொழில் மாற்றம், நிலைமையை மாற்றப்போவது இல்லை. அடுத்து அவர் செய்யும் வேலையில், அவன் மனம் நாடும், அர்ப்பணிப்பு, நேர்மை ஆகியவற்றை அவர் முழுதாக பங்களிக்க முடிந்தால் தான் அடுத்த தொழில் அவருக்கு உகந்தாக இருக்கும். என் நிறுவனத்தில் பார்க்கிறேன், ‘எனக்கு பணி உயர்வு வேண்டாம்’ என்று கூறி முழுக்க முழுக்க தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும் செய்பவர் உள்ளனர். 15 வருட அனுபவம் உள்ளவர், 5 வருடம் அனுபவம் உள்ளவர் இருவரும் ஒரே நிலையில் இருப்பார்கள்.. ஆனால் அந்த 15 வருட அனுபவம் உள்ளவர், விரும்பி செய்யும் வேலை அதுதான்.. அதனால், அந்த வேலை அவருக்கு மகிழ்வூட்டுவதாகவும், திருப்தி அளிப்பதாகவும் இருக்கும். இது அறியாது, தொழில் மாற்றம் என்று இன்னோர் இடத்தில், அதே முரண்பாடு இருக்கும் வேலைக்கு சென்றால், மேலும் வெறுப்பே மிஞ்சும்…

மேலே சொன்ன முரண்பாட்டு கட்டத்தில் இருந்து, தொழிலில் இருந்து விலகாமல், இலக்கியத்தில் இருந்து விலகும் ஒருவரின் நிலை இன்னும் மோசம்.. தொழிலில் ஏற்படும் முரண்பாடு அவரது அடிப்படை பண்புகளாலும், அவரது வேலையில் அவர் பிடித்தம் இல்லாமல் இருப்பதாலும் தானே தவிர இலக்கியத்தால் அல்ல. அவரது அடிப்படை பண்புகளால் அவர் இலக்கியத்திற்க்குள் வந்தவர். ஆகவே, இலக்கியத்தில் இருந்த்து விலகினால், அவரது முரண் விலகப்போவது இல்லை. முரண்பாடு இலக்கியத்திற்க்கும், தொழிலுக்கும் இல்லை, அதுவரை அவர் வளர்த்து வந்த பண்புகளுக்கும் தொழிலுக்கும் தான்.

இதை கடந்து செல்ல ஒரே வழி, நீங்கள் சொல்வது போல் இரண்டையும் தனி தனியாக பிரித்து அனுகுவது தான் என்றாலும், எனக்கு ஒரு பெரிய கேள்வி இப்படி பிரித்து அணுகுவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தான். இலக்கியம் கோரும் விழுமியங்களும், தொழில் கோரும் விழுமியங்களும் முரணாகும் போது, ஒன்றின் தாக்கம் மற்றதில் தானாகவே ஏற்படாதா? ஒருவர் தனது மனதுக்கு முழுவதும் பிடித்த தொழிலில் இருந்தால், இப்படி பிரிப்பது பெருமளவிற்கு சாத்தியமாகும்.. ஆனால் மனதுக்கு பிடித்த தொழில் என்பது அனேகம் பேருக்கு வாய்ப்பதில்லை. இன்று பெருமளவில், மனதுக்கு பிடித்த தொழிலில் இல்லாமல், ஆனால் அந்த தொழிலில், மனதுக்கு பிடித்த வேலையை (அன்றாட பணி ) செய்ய விரும்பும் மக்களே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானே பலமுறை சில மணி நேரத்தில் முடிக்கக்கூடிய வேலையை நாள் கணக்கில், வாரக்கணக்கில் தள்ளி போட்டிருக்கிறேன். மனதுக்கு , திறமைக்கு சவாலான வேலை இல்லை என்பதாலோ..

அப்படி மனதுக்கு பிடித்த தொழிலில் இல்லாத பட்சத்தில், ஒரு நிலைக்கு மேல் ஏதாவது ஒரு இடத்தில், சமரசம் செய்தாக வேண்டிய நிலை உருவாகாதா?

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள ஜெயமோகன் ,

வெற்றியின் வேகம் குறைகிறதா என்றால் ,என்  பதில் இல்லை ?. எது வெற்றியின் அடையாளம் என்பது முக்கியம் .என்னுடைய பதவி உயர்வு பற்றி மேனேஜரிடம் பேசிய பொழுது “Visibility” மிகவும் முக்கியம் என்றர்

.தெளிவாக சொன்னால் விளம்பரம் ,பைசாவிற்கு தகுதி இல்லாத வேலையையும் அற்புதம் என்று சொல்லவேண்டும். நான் இருக்கிறேன் என்பதை வருடம் முழுவதும் “Higher management” க்கு  தெரிவித்து கொண்டே இருக்க வேண்டும்.நாம் நம்மை அறிவது அல்ல ,அடுத்தவருக்கு நாம் இருக்கிறோம் என்று காட்டுவது .Existentialism என்பதின் corporate வடிவம் . தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்புகள் உண்டு ,பதவி உயர்வு,சம்பள உயர்வு இரண்டுமே ,ஆனால் இவை இரண்டும் என்னுடைய நிம்மதியை ஒரு பொழுதும் பாதித்ததில்லை.ஏனென்றால் இது எனக்கு வெற்றி அல்ல , பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் ஒரு வேளை “பணம் ,பதவி ,manager”என்பவை முக்கியத்துவம் பெற்றிருக்கும் ,ஆனால் இன்று இல்லை.

இந்த பத்து ஆண்டுகளில் வேலை தேடி சுற்றியது ,படித்தது ,பார்த்தது (வேடிக்கை ),இயற்கையை பார்த்தது (மற்றுமொருவேடிக்கை ),கேட்டது (தெரியாத இசை ), சினிமா  (மொழி தெரிந்த,தெரியாத sub-titleசினிமா ),மனிதர்கள் ,நாய்கள் ,பூனைகள் என அனைத்தும் பல மாற்றங்களுக்கு காரணமாய் உள்ளன .இதில் ரசனை  என்பது  அனைத்தையும் இணைக்கும் மெல்லிய சரடாக இருந்தது . ரசனை இல்லாமல் எனக்கான இந்த அற்புத தருணங்கள் இல்லை

இந்த ரசனையை மேலும் மேலும் வளர்த்தெடுக்க உதவியது புத்தகம். புதுமைப்பித்தனின் பகடியையும் ,அசோகமித்ரனின் எளிமையும் ,பஷிரின் தோழமையான எழுத்தும் ,வங்க நாவல்களின் தீராத விவாதமும் அற்புதமானவை.பொருளியல் வெற்றிகள் தேவை ,மறுக்க முடியாது – ஆனால் எனக்கு போதும் என்று ஒரு வரையறை வந்துவிட்டது .வீண் விளம்பரம் உடம்புக்கு ஆகாது மனதுக்கு ஆகவே ஆகாது.

என்னுடைய மகனுக்கு நல்ல ரசனை என்ன என்பதை அடையாளம் காட்ட முடிந்தால் ,அது ஒரு பெரும் வெற்றி என்பேன். அதே நேரத்தில் திணிப்பாக இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் .

அதுவே என்னை நான் கண்டுகொள்ள உதவும். நல்ல ரசனையை தேடுபவன் இலக்கியத்தை நிச்சியம் அடைவான்.

அறம் சார்ந்து செயல்களை பார்கிறேன் ,அதனால் என்னுடைய வேகம் மட்டுபடுகிறது ,என்பதை என்னால் ஏற்கமுடியாது .இலக்கியம் படித்ததால் என்னுள் அறம் வளர்ந்து விட்டது என்றால்  அதற்கு முன்பு என்னுள் அறம்

இல்லை என்று அர்த்தமா ? இல்லை ஏற்கனவே இருந்த அந்த அற உணர்வை செம்மை செய்தது என்று அர்த்தமா ? .

அறம் சார்ர்து ஒருவர் முடிவு எடுக்கும் பொழுது ,அதில் ஒரு தனித்தன்மை இருக்கும்.அதில் வேகம் உள்ளதா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை ,முடிவு என்ன என்பது தான் முக்கியம் .அந்த முடிவு தான் மன எழுச்சியை தரும் ,நம்பிக்கையை கொடுக்கும் .இதில் வேகம் இல்லை என்னுடைய வளர்ச்சி மட்டுபடுகிறது என்ற வாதம் ,குறுக்கு வழி இல்லயா ? என்று கேட்பது போல உள்ளது.

இவ்வளவு குழப்பம் ஏன் என்பது தான் கேள்வியே ?. மணிக்கணக்கில் மொண்ணையான சொற்களை கேட்டுவிட்டு, வேலையில் அமர்ந்து கொண்டு மாத இறுதியில் சம்பளம் வாங்கிய பின் ,உலகத்தில் யாருமே செய்யாதவேலையை செய்ததை போல ஒரு பாவனை செய்யும் சூழலில்  எனக்கு இலக்கியமும் ,ரசனையும் கற்பனையும் முக்கியம். வெறுமையை நிரப்பும் அற்புதம் அதற்கு உண்டு . ஆம் இலக்கியம் ஒரு போதை என் சுயத்தை அழியசெய்யாத போதை.

முரளி சித்தன்

அன்பு ஜெயமோகன்,

செல்வேந்திரன் எழுப்பி இருக்கும் கேள்வி முக்கியமானது என்றாலும் அசுரப்பழையது. பல நூற்றாண்டுகளாக பற்பல வடிவங்களில் அக்கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தால் ஒருவன் தன்னைத் திருத்திக் கொள்வான், அறத்திலிருந்து பிறழ யோசிப்பான் போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அக்கேள்வி எழுப்பப்பட்டிருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். அப்படியான மனநிலையில் இருந்துகொண்டே, என் கருத்துக்களைச் சொல்லவும் விரும்புகிறேன். ’இலக்கு + இயம் = இலக்கியம்’ என்பதான வடிவை ஒட்டி இலக்கியத்தை நாம் அணுகாவிட்டாலும், ஆழ்மனதில் அவ்வடிவே ஆழமாகப் பதிந்திருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது; அதுவே செல்வேந்திரனின் கேள்வியாகவும் வெளிப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

இலக்கியம் இலக்கு கொண்டதுதான். அவ் இலக்கு நாம் நினைப்பது போன்று கறாராய் வரையறுக்கப்பட்டது அன்று. அப்படி வரையறுக்கப்பட்டு இருப்பின் இலக்கியங்கள் நீதிபோதனைக் கதைகளாகத்தான் இன்றுவரை இருந்திருக்க வேண்டும். ஒருபோதும் இலக்கியம் ஒருவனை இப்படி இரு, அப்படி இரு என வற்புறுத்துவதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் முன் சமூகத்தின் பலதளங்களில் நிகழும் வாழ்க்கைச் சம்பவங்களை காட்சிக்கு வைக்கிறது. அச்சம்பவங்களை சில இலக்கியவாதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கையின் சாயலோடு வெளிப்படுத்துவர். அவற்றை விடுத்து, ஒரு சம்பவத்தை அல்லது சம்பவங்களை எவ்விதச் சார்புத்தன்மையும் அற்று நம்முன் வைக்கும் இலக்கியங்களையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். அச்சம்பவங்களின் வழி நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் நிச்சயம் மையச்சமூகம் குறிப்பிடும் வரையறைக்குப் பொருந்தாததாகக் கூட இருக்கலாம். அவ்வனுபவங்கள் நம்மைத் திகைக்க வைக்கவும் கூடும். இப்படியும் வாழ்க்கை இருக்கிறதா என ஆதங்கப்பட வைக்கவும் கூடும் அல்லது ஆனந்தப்படவும் செய்யலாம். எப்படியோ, வறட்டுத்தனமான நம் ’மையவாழ்க்கை’யை நோக்கிக் கற்களை எறிவதினூடாக நம் அகங்காரத்தை(ஆறாவது அறிவில் வரையறை அலட்டலை) நேரடியாகத் தாக்குகின்றன இலக்கியங்கள். சுரணை உள்ளவனை அவை சிந்திக்கவும் தூண்டுகின்றன; அவனே அவற்றுக்கு வாசகனாகிறான். அப்படி வாசகனாகும் ஒருவன், ’நான் யார்’ மற்றும் ‘எனக்கும் சமூகத்துக்குமான உறவு’ போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தானே கண்டடைந்து கொள்வான்; ஒருபோதும் சமகாலப் பெளதீகச் சிக்கல்களைக் கண்டு அஞ்ச மாட்டான். கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பறவையின் மனநிலைக்கு நெருக்கமாய் அமர்ந்திருப்பான். ’பொதுவழி என்றில்லாமல், பலவழிகளைக் கொண்ட பாதையே வாழ்க்கை. அதில் நாம் நினைத்ததே சரி என்பது ஓரளவுக்கே சரி’ என்பதான கருத்தும் அவனுள் அவனையரியாமலே வேர்விட்டிருக்கும். ஆக, அவன் மனம் இறுக்கமாய் இருக்காது. எதிர்பாராச் சம்பவங்களால் அவன் துணுக்குற்றாலும், சிறிது நேரத்திலேயே மீண்டுவிடுவான்.

இலக்கிய வாசிப்பு ஒருவனுக்கு எதற்காக அவசியம் என்பதான கேள்வியே இலக்கிய வாசிப்பை ஒரு சிமிழுக்குள் அடைத்து விடுகிறது எனக்கருதுகிறேன். ஒரு இலக்கியப்படைப்பை வாசிப்பதால் இன்ன பெளதீகப்பயன் கிட்டும் அல்லது பெளதீக வாழ்வு சீர்பெறும் என நம்புபவன் நிச்சயம் வாசகனாக இருக்க மாட்டான் என்பது என் கருத்து. நல்ல இலக்கியப்படைப்பு என்பது பெளதீக வாழ்வின் பல்லுயிர்ச்சூழலையும், வாழ்வையும் அவன் விளங்கிக்கொள்ளச் தூண்டுவதே. அது அவனுக்கு எவ்விதப் பொதுச்செய்தியையும் ஒருவனுக்கு வழங்குவதில்லை, மாறாக, அணுகும் ஒவ்வொருவருக்குமான செய்தியையும் கண்டடையத் தூண்டுகிறது. எளிமையாகச் சொல்வதாயின், ஒரு இலக்கியப்படைப்பு நதியை எதிர்த்து நீந்தக் கற்றுத்தருவதில்லை; நதியின் போக்கோடு மிதப்பது குறித்த யோசனையை முன்வைக்கிறது ( ’மிதப்பது’ என்கிற வார்த்தையை நுட்பமான பொருளில் குறிப்பிட்டிருக்கிறேன்). அதனால் அதை வெகுதீவிரமாக அணுகினால் வெறுப்பும் வேதனையும் சலிப்புமே மிஞ்சும். அப்படியான சலிப்புதான் பிரான்சிஸ் கிருபா உள்ளிட்டோரிடம் வெளிப்பட்டிருப்பதாய் நினைக்கிறேன்.

இலக்கியப்படைப்பு ஒருபோதும் சமூகம் கடந்திருக்கும் செய்திகளைப் பேசுவதே இல்லை; அத்தோடு, சமூகச்சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் அது எவ்வித நீதியையும் நேரடியாக வழங்கவும் முயற்சிப்பதில்லை. சமூகவாழ்வு ஒரு வரையறைக்குட்பட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அது எவ்வித வரையறைக்கும் உட்பட்டதன்று; அது மனிதனின் உச்சகட்டக் கற்பிதமாகவே பல சமயங்களில் எனக்குத் தோன்றுகிறது. வரையறையை விரும்பும் நாம், அதை மீறவும் விரும்புகிறோம் என்பதைத் தயைகூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். ஓரிடத்தில் நிலைத்து வாழத்துவங்கிய காலத்திலிருந்து நம்மைத் தொடரும் சிக்கல் இது. ஆக, ’குறிப்பிட்ட பொது வரையறை’யை ஒருபோதும் இலக்கியம் வலியுறுத்துவதில்லை; ‘கலைந்துகிடக்கும் பன்முக வரையறைக’ளை அது நம் காட்சிக்கு வைக்கிறது. அவற்றைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் பொறுப்பு. அதற்கு எவ்விதத்திலும் இலக்கியமோ, இலக்கியவாதியோ பொறுப்பன்று.

 

முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 1
அடுத்த கட்டுரைகுருவை ஆராய்தல் -கடிதங்கள்