திரு.ஜெ,
உங்கள் வலைதளத்தில் வெளியான ‘கடிதங்கள்’ (8th OCT), பகுதியில் ரமீஸ் பிலாலி என்பவரது blogspot லிங்க்கை பார்த்தேன். முதலில், உங்களைப்போன்ற புகழ் பெற்ற எழுத்தாளருடைய தளத்தில் லிங்க்கை உருவாக்கி சொந்த வாசகர் வட்டம் உருவாக்கும் முயற்சி என்று நினைத்தேன். ஆனால் அவரது வலைப்பூவை படித்தபோது அவரது சிந்தனைகளும், எழுத்து நடையும் மிக impressive ஆக இருந்தது. நீங்கள் அவரது ஏதாவது ஒரு கட்டுரையை விமர்ச்சித்தால் அவரை தரப்படுத்த உதவியாக இருக்கும். He, himself already requested you to comment his articles. அவரது லிங்க். http://www.pirapanjakkudil.blogspot.com/
-தருமி.
அன்புள்ள தருமி,
ஏதேனும் வகையில் கவனத்திற்குரிய இணைப்பையே நான் வழங்குவது. ரமீஸ் பிலாலி பலதளங்களை தொட்டுக்கொண்டு விரிவாக எழுதுகிறார். அத்தகைய ஒரு பேராசிரியர் நம் சூழலில் குறைவாக அகப்படுகிறார். அவரது எழுத்தைப்பற்றி இப்போது அவருக்கே எழுதுவதுதான் நன்றாக இருக்கும். இடைவிடாது நிறைய எழுதி தன் மொழிநடையை துல்லியமாக்கிக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார். எதிர்காலத்தில் முக்கியமாக எழுதக்கூடியவர் என அவரை நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அண்ணனுக்கு,
நலமா? நிறைய வேலைகள் என அறிந்தேன். ஊட்டி சந்திப்பில் கலந்துகொண்டமைக்குப் பின் நான் பெற்ற அனுபவத்திலும், அதனால் ஏற்பட்ட உந்துதலிலும், ஒரு வலைத்தளம் தொடங்கி என் முதல் சிறுகதை மற்றும் சில கவிதைகளை பதிப்பித்தேன். இம்முயற்சி எனக்கு நீங்கள் சொல்வது போன்ற கதை எழுதுவதற்க்கான ஒரு தொழில்நுட்பப் பயிற்சியை அளிக்கும் என நம்புகிறேன். மேலும் சில சிறுகதைக்கான எழுத்தில் இருக்கிறேன். நீங்கள் படித்து விட்டு பிழை களைந்தால் உதவியாய் இருக்கும்.
தம்பி
அபராஜிதன்
http://www.marinapages.blogspot.com/
அன்புள்ள அபராஜிதன்
கதை வாசித்தேன். ஆண்டாளடி சரளமாக எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் முக்கியமான கதைகளை எழுத முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போதைக்கு தொடர்ச்சியாக எழுதுவதும், தேய்வழக்குகளையும் எழுதியவற்றில் பிற எழுத்தாளர்களின் சாயல் கொண்டவையாக உங்களுக்கே படும் வரிகளையும் நீக்கிக் கொண்டே இருப்பதும்தான் தேவை. மெல்ல மெல்ல உங்கள் நடை அமைந்து விடும். வாழ்த்துக்கள்
ஜெ