வேளாண்மை – இயற்கையும் செயற்கையும்

970225_10204195453764858_160073027844960754_n

 

ஜெ,

தண்டபாணி அவர்களின் விவசாயமுறையைக் கவனித்தேன். அவர் இயற்கை விவசாயத்தையே ஒரு தீஸிஸ் போல ஆக்கிச் சொல்வதுபோலப்படுகிறது. அதாவது இயற்கையான இடுபொருட்களின் ரசாயன உள்ளடக்கத்தைப் பற்றிச் சொல்கிறார். இது இயற்கை விவசாயமா? இல்லை போலி இயற்கைவிவசாயமா?

மனோஜ்

 

அன்புள்ள மனோஜ்,

இயற்கைவேளாண்மை பற்றி இங்குள்ள பல பிழையான, குழப்பமான விஷயங்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அத்தளத்தில் விவாதங்களுக்கே இடமில்லாத மதமூர்க்கம் நிலவுகிறது. அறிவுத்துறைக்குரிய மாற்றுக்கருத்தைக் கவனிக்கும் போக்கே இல்லை.

இயற்கை விவசாயம் என ஃபுகோக்கா அவரது நூலில் [ஒற்றைவைக்கோல்புரட்சி] சொல்வது டிராக்டரால் உழுது, நாற்று நட்டு, களைபறித்து, வயலாக மண்ணை மாற்றியமைத்துச் செய்யப்படும் விவசாயத்தை அல்ல. ஒரு செடி இயற்கையில் எப்படி வளர்கிறதோ அதற்கு கிட்டத்தட்ட நிகரான சூழலை விளைநிலத்தில் உருவாக்கி தானாக வளரவிடும் விவசாயத்தைத்தான். அதை ‘ஒன்றுமே செய்யத்தேவையில்லாத’ விவசாயம் என்கிறார் ஃபுகோக்கோ. அவரது நோக்கில் உழுவதே இயற்கைக்கு மாறானது. அறுவடை அன்றி எதையுமே விவசாயி செய்யவேண்டியதில்லை.

அவரது நூலில் நெல்வயலை ஒரு இயற்கையான சேற்றுநிலமாக அவர் ஆக்குவதைக் காணலாம். நதியோர கோரைப்புல்பரப்பு போல என்று உதாரணமாகச் சொல்லலாம். சீராக நடுவதில்லை. நெல்லுடன் இணைந்துவளரும் அனைத்துக் களைகளுக்கும் இடமளிக்கிறார். அவற்றில் பூச்சிகள் வருகின்றன. அவற்றை உண்ணவரும் பறவைகளே நெல்லையும் காக்கின்றன. நடுவே கோழிகளை மேயவிடுகிறார். வைக்கோலை அறுவடைசெய்வதில்லை. அதை நிலத்திலேயே மட்கவிட்டு நீர்ப்பதுப்புள்ள நிலமாக ஆக்குகிறார். கதிரை மட்டும் அறுவடைசெய்கிறார். மறுபடியும் விதைப்பதுகூட இல்லை. நெல் தானாகவே முளைக்கும்.

அதாவது ஓர் இயற்கையான சதுப்பை அவர் உருவாக்குகிறார். அந்த இயற்கையான ஒட்டுமொத்த சூழியல் அமைப்பே நெல்லை பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. அதுவே இயற்கைவேளாண்மை என்பது. அதில் ஏன் பூச்சிமருந்து தேவையில்லை என்றால் இயற்கையே அதற்குப்பாதுகாப்பு என்பதனால்தான்.

முப்பதாண்டுகளுக்குமுன் கேரளத்தில் விஜயலட்சுமி-கோபாலகிருஷ்ணன் தம்பதியினர் இயற்கையான ஒரு காட்டை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த முயன்றனர். அதை நான் அப்போதே கவனித்து எழுதியிருக்கிறேன். பலவகையான மரங்கள் நிறைந்த ஒருவகை காடு அது. தென்னைமரம் அதிகமாக உள்ள காடு என்றால் மேலும் பொருத்தம். களைகள் புதர்கள் பலவகையான காட்டுக் கொடிகள் ஆகியவை அதிலிருந்தன. ஆகவே பூச்சிகளும் பறவைகளும் மிகுந்திருந்தன. பறவைகளால் பூச்சிக்கட்டுப்பாடு நிகழ்த்தப்பட்டது. ஆகவேதான் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படவில்லை.

அதுவே இயற்கைவேளாண்மை. அதை நான் பார்த்தவரையில் தமிழகத்தில் எவரும் செய்வதில்லை. செய்யவும் முடியாது. ஏனென்றால் ஒரு நிலத்தில் இயற்கையாக எந்தத் தாவரங்கள் உருவாகுமோ அவையே அங்கு இயற்கைவேளாண்மைக்கு ஏற்றவை. அங்கே உருவாக்கவேண்டியது இயற்கையானதுபோன்ற ஒரு காடு, அல்லது சதுப்பு, அல்லது புல்வெளி, அல்லது முள்காடு – நமக்குப் பயன் தரும் தாவரங்கள் அதில் சற்று அதிகமாக இருக்கும். அவ்வளவுதான்

அப்படிப்பார்த்தால் தமிழகத்தின் பெரும்பாலான நிலங்களில் பனை மட்டுமே பயிரிடமுடியும். மழைக்காலங்களில் கம்பு கேழ்வரகு போன்றவை. சிலவகை கிழங்குகள். அந்தவகை விவசாயம் இன்றுள்ள உணவுத்தேவையை எவ்வகையிலும் நிறைவேற்றாது. அது சாத்தியமும் அல்ல. ஆகவே ஃபுகோகா சொல்லும் இயற்கைவேளாண்மைக்கு இங்கே வாய்ப்பே இல்லை

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் செய்யப்படும் வேளாண்மை ‘இயற்கைவேளாண்மை’ அல்ல. அது ‘ரசாயனமறுப்பு வேளாண்மை’. வேண்டுமென்றால் ‘உயிர்மவேளாண்மை’ என்று சொல்லிக்கொள்ளலாம். மண்ணின் சத்துக்களை இயற்கை உரங்களைக்கொண்டு சீரமைப்பது, பூச்சிகளை இயற்கையான பூச்சிவிரட்டிகளால் கட்டுப்படுத்துவது இரண்டும்தான் மற்றவேளாண்மைக்கும் இதற்குமான வேறுபாடு. மற்றபடி செயற்கையாக நிலத்தைப் பண்படுத்துவதும், செயற்கையாக நீர்ப்பாசனம் செய்வதும், கருவிகளைப் பயன்படுத்துவதும், மானுட உழைப்பும் எல்லாம் பொதுதான்

இந்த உயிர்மவிவசாயம் இன்று தேவைப்படுகிறது என்பது உண்மை. ஆனால் அதை முடிந்தவரை அறிவியல்பூர்வமாகச் செய்யவேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன். எப்படியும் இந்தவிவசாயம் செயற்கையானதே. ஒரே பயிர் பலநூறு ஏக்கருக்கு பரந்துகிடப்பதே பூச்சிகள் பெருக உகந்தது. அதைக் கட்டுப்படுத்த இயற்கையை நம்ப முடியாது. அதற்கான ’செயற்கையான’ வழிகளைத்தான் ஆராயவேண்டும். ரசாயனத்தைத் தவிர்க்கலாம். ஆனால் அதில் அறிவியல்நோக்கு இல்லாவிட்டால் அழிவு விவசாயத்துக்குத்தான்

தண்டபாணி செய்வது அதைத்தான். ரசாயனங்கள் இல்லாத, அல்லது குறைந்தபட்ச ரசாயனங்கள் கொண்ட ஒரு வேளாண்முறையை அறிவியல்பூர்வமாக அவர் சோதித்துப்பார்க்கிறார்.வெற்று நம்பிக்கையாக அல்லாமல், புறவயமான ஆய்வுநெறிகளின்படி. நடைமுறை சார்ந்து. அதுவே இன்றைய தேவை.

ஜெ