அன்புடன் ஆசிரியருக்கு
வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரின் இல்லத் திறப்பு குறித்த உங்கள் பதிவினை படித்தது முதலே மனம் அமைதியற்றிருந்தது. ஈரட்டிச் சந்திப்பு குறித்த எதிர்வினைகளை படித்தபோதும் எழுத நினைத்தேன். எழுதத் தொடங்கினால் கோபம் தான் வந்தது. சிலர் இணைந்து சிரிப்பதைக் கண்டு இவ்வளவு எரிச்சல் கொள்பவர்களுடன்தான் வாழ்கிறோம் என்று சலிப்பாக இருந்தது. கருத்தொருமித்த அந்த திருநெல்வேலி தம்பதிகள் பற்றி இப்போது சிந்தித்தாலும் முகம் மலர்கிறது.
திரு. செல்வேந்திரன் அவர்களின் கேள்விக்கு காலை முதலே பதிலளிக்க நினைத்து எழுதி எழுதி அழித்துத் கொண்டிருந்தேன்.
http://www.jeyamohan.in/85792#
இதில் கேட்கப்பட்டிருந்த கேள்வி முதிர்ந்த வாசகர்களுக்கு மட்டுமானதா அல்லது அனைவருக்குமானதா எனத் தெரியவில்லை. நிறைய வாசித்திருக்காவிட்டாலும் திரு. செல்வேந்திரன் அவர்கள் எழுப்பும் வினாக்கள் புரியுமளவு வாசிப்பு இருப்பதால் பதில் எழுதுகிறேன். ஏதேனும் அதிகப் பிரசங்கித் தனமோ சிறுபிள்ளைத்தனமோ தெரிந்தால் மன்னிக்கவும்.
1. வென்றெடுக்கும் வேகத்தை வாசிப்பு மட்டுப்படுத்தும் என எனக்குத் தோன்றவில்லை. நான் பெரிதாக இன்னும் எதையும் வென்றெடுத்து விடவில்லை. இருந்தும் என் வேகம் இலக்கியத்தால் குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை. என்னுள் இருந்துவந்த சிறு சிறு குழப்பங்களும் பொன்னிறப் பாதையில் இந்த பதிலினை படித்ததும் தீர்ந்துவிட்டது. http://www.jeyamohan.in/28848 . என்னளவில் இலக்கிய வாசிப்பு சில “மந்தை” ரசனைகளுக்கு “ஆமாம்” போடுவதை நீக்கிவிட்டது. அதனால் சில நண்பர்களை இழக்க நேரிட்டது. அதனால் எனக்கு பெரிதாக வருத்தமோ நஷ்டமோ இல்லை.சிந்திக்கும் முறையையே இலக்கியம் மாற்றுகிறது என நான் நம்புகிறேன். அப்படியிருக்க கருணை சார்ந்த சிக்கல் எழுகையில் (அப்படியொரு சிக்கல் எனக்கு எழுந்ததில்லை) மேலும் கூர்மையான தீர்வுகளை நோக்கியே செல்ல முடியும் என நினைக்கிறேன்.
நல்ல நூல்களை வாசிக்கத் தொடங்கிய பின்புதான் நான் உருவாக்கிக் கொண்ட கற்பனைகளிலிருந்து மீண்டு யதார்த்தமாக மனிதர்களை அணுக என்னால் முடிகிறது. சில நேரங்களில் அவர்களை சில வார்த்தைகளிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. கேள்வி எழுப்பியிருப்பவர் நீண்ட வாசிப்பனுபவம் உடையவர். ஒருவேளை சில வருடங்களில் எனக்கும் இந்த சந்தேகம் வரலாம். ஆனால் இன்று அழுத்தமாகவேச் சொல்கிறேன் வென்றெடுக்கும் வேகத்தை வாசிப்பு மட்டுப்படுத்தாது. ஏனெனில் எனக்கு அப்படி நடக்கவில்லை.
2. கேள்விகள் இருக்கும் வரை வாசிப்பில் விடைகள் இருந்து கொண்டே இருக்குமெனத் தோன்றுகிறது. கேள்விகள் தீர்ந்து போனவர்களே வாசிப்பினை விட்டு விலகுவார்கள் என நினைக்கிறேன். “நம்ம புள்ளைக்கு இதெல்லாம் வேண்டாம் ” என்று நினைப்பவர்கள் இவ்வளவு நாட்கள் வாசித்திருக்கவே வேண்டாமே. நேற்று பேருந்தில் கவியரசு என்பவரைச் சந்தித்தேன். அறநிலையத்துறை அதிகாரி. அவரும் உங்கள் வாசகர் என்ற இரண்டு வார்த்தையே நெருக்கத்தை தந்துவிட்டது. அவர் ” என் மகனிடம் எவ்வளவு முயன்றும் அவனை வாசிக்க வைக்க முடியவில்லை . நீ படிப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். விலகிச் செல்பவர்களும் இருக்கிறார்களே. என் அண்ணனையே என்னால் வாசிக்க வைக்க முடியவில்லை என்பது வருத்தமாகவே இருக்கிறது.
3. இலக்கியம் போதை அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். இன்றிலிருந்து எதையும் நீ வாசிக்கக் கூடாது என்று எனக்குக் கட்டளையிடப்பட்டால் நான் துடித்துப் போய் விடமாட்டேன் என்றே நினைக்கிறேன். ஏனெனில் எந்த கட்டளையும் கட்டுப்படுத்த முடியாத செயல்கள் பார்ப்பதும் சிந்திப்பதும். அதற்கான பயிற்சியை வாசிப்பு ஓரளவு எனக்குக் கொடுத்திருக்கிறது. அதிலும் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் அறிவுத்துறைகளுடன் இலக்கியம் முயங்கும் இடத்தை துல்லியமாக காட்டிவிட்டது. இசைக்கும் கணிதத்திற்கும் உள்ள தூரத்தையும் தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள நெருக்கத்தையும் உணர்ந்த பின் இலக்கியத்தை போதை என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
அன்புடன்
சுரேஷ்
அன்புள்ள ஜெ
1) இலக்கியப் பரிச்சயம் ஒருவனின் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா?
2) அதன் பொருட்டே வெறும் மனப்பழக்கமாகக் கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப் படுகிறதா?
3) இலக்கியமும் ஒரு போதைதானா?
இக்காலத்தில் நம்முடைய உணர்வை ஒருவர் எளிதில் புரிந்து கொள்கிறார் , என்பதும் அதையும் காது கொடுத்து கேட்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய விசியம் . மேலும் நமக்காக அடுத்தவர் நேரம் ஒதுக்குகிறார் என்பது கவனிக்க வேண்டியது . இது , இது , இலக்கியத்தால் மட்டுமே சாத்தியம் .
போராட்டங்களையும் தள்ளி நின்று பார்க்க ,முடிவுவெடுக்க முடிகிறது . ஆன்மீகத்தில் கிடைக்கும் நிறைவும் சந்தோசமும் நிச்சியம் ஒரு இலக்கிய அர்வலருக்கு இலக்கியம் மூலம் கிடைக்கும் .மேலும் எது உண்மையான ஆன்மீகம் என்கிற புரிதல் நிச்சியம் இலக்கிய ஆர்வலருக்கு இருக்கும் .
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
செல்வேந்திரன் எழுப்பிய கேள்விகளுக்கு என் பார்வையில் நேரடி பதில் அளிப்பதற்கு முன்னாள் சில..
பிரான்சிஸ் ஆல் உள்செல்ல முடியாத சினிமா வாழ்க்கை ஆகட்டும், சிவா, அரங்கா, செந்தில், விஜய்சூரியன் ஆகியோரின் ஏறி அடித்து நொறுக்காத தொழில் வழிமுறை ஆகட்டும் இவையனைத்துக்கும் இலக்கியத்திற்கும் எந்த நேரடி தொடர்பும் இருப்பதாக எனக்கு படவில்லை. அதாவது இலக்கியம் படிப்பதால் இப்படி என்று என்னால் கூறமுடியவில்லை.
மாறாக இதற்கெல்லாம் காரணமாக அவர்களை குணநலன்களை சொல்லலாம். உதாரணமாக ‘சிறு பிள்ளைத்தனமாக, சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்த தன் ரசனையை தூக்கி எறிந்து இறங்கி வர’ பிரான்சிஸ் கு இயற்கையான அவர் குணநலனே தடையாக இருக்கலாம். அவ்வாறே ஏறி அடிப்பதே அறம் தவறியதாக என்ன கூடிய குணநலன் அத்தொழில் அதிபர்களுக்கு வாய்த்து இருக்கலாம்.இவர்கள் இலக்கியத்தை படித்தாலும் படிக்காவிட்டாலும் இப்படி தான் இருப்பார்கள். இதுதான் அவர்களாலும் முடியும். ஒருவேளை மீறி நடக்க முற்பட்டால், இவ்வுலகம் வெற்றி என்று நிர்ணயித்ததை அவர்களால் அடையமுடியும். ஆனால் அவர்களின் பின்தொடரும் நிழலின் குரல் அவர்களை நிம்மதி யாக இருக்கா விடாது. எப்படி பார்த்தாலும் நாம் நிம்மதியாக இருப்பதற்கு தான் இதை செய்ய வேண்டியும் உள்ளது, இந்த அறத்த்திர்க்காக நம்மால் பெருமை பட்டு கூட கொள்ள முடியாது.
இலக்கியம் இவர்களை ஒருங்கிணைத்தது என்று கூட சொல்வதும் தவறு என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இதுவும் தற்செயலான ஒன்று தான்.வேணும் என்றால் இப்படி பட்ட குணநலன்களால் நிறைந்தவர்கள் மட்டும் தான் இலக்கியத்திற்குள் வரமுடியும் என்று கூட சொல்லலாம்.அவர்கள் தான் தன் ஆன்ம வெளிப்பாட்டை இலக்கியத்திற்குள் கண்டடைகிறார்கள். இலக்கியத்த்தின் பெருவாரியான பக்கங்களை தன் வாழ்க்கையின் மன அனுபவத்தோடு அவர்களால் ஒப்பிட முடிகிறது. தன் மனம் தூக்கி அலையும் என்னவென்றே அறியமுடியாத பெரிய பாறை போன்ற கனத்த எண்ண அலைகளை ஜெயமோகன் போன்ற இலக்கியவாதியின் இலக்கிய வரியில் காணும் பொழுது மனம் பித்தம் கொள்கிறது.இதனால் தான் 800 பக்க புத்தகத்தில் சில வரிகளில் மனம் நிலைக்கிறது. புத்தகத்தை போட்டுவிட்டு பித்துபிடித்து தெருவில் கத்தி ஓடவேண்டும் என்று தோணுகிறது. பெருவாரியான வாசகர்கள் உங்களை விரும்பி நெருங்கியும் பேசமுடியாமல் மௌனம் கொண்டு விலகுவதும் அதனால்தான்.
என்னுடைய நேரடி பதில்:
1) இலக்கியப் பரிச்சயம் ஒருவனின் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா?
இல்லை. ‘அற வழியில் வெல்வதே தர்மம், இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகி இருப்பதே மறு தர்மம் மாறாக ஏறி அடிப்பது அல்ல ‘ என்ற மனநிலை கொண்டவர்களால் மட்டுமே இலக்கியம் வாசிக்கபடுகிறது. இதே மனநிலை கொண்ட இலக்கிய அறிமுகம் கிட்டாத காரணத்தினால் இலக்கிய வாசிப்பில் ஈடுபடாதவர்கள் கூட பலர் இருக்கலாம். ஆனால் இதற்க்கு எதிரான குணநலன் கொண்டவர்களால் இலக்கியத்தின் மிகச்சிறிய பக்கங்களை கூட புரட்ட முடியாது.
2) அதன் பொருட்டே வெறும் மனப்பழக்கமாகக் கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப் படுகிறதா?
இல்லை. இலக்கியவாதிகள் அனைவரும் ஏதோ பொருட்டு நண்பர்கள், குடும்பம் என்று அனைவருக்கும் இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்து அவர்களை வாசிக்க ஆர்வமூட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஏறி அடித்து நொறுக்கும் மனப்பான்மை இல்லாத காரணத்தினால், கட்டாயபடுத்தி படிக்க சொல்வதை அவன் அறம் தடுத்துவிடும். மனைவி,மக்கள், பெற்றோர், நண்பர் என யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேல் ஒரு இலக்கிய வாதியால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு மேல் இறைவன் விட்ட வழி அது வீட்டின் படிக்கட்டாக இருந்தாலும் சரி அல்லது உலாகின் துருவமாக இருந்தாலும் சரி.
3) இலக்கியமும் ஒரு போதைதானா?
ஆம். மேற்கூறிய குணம் கொண்டவனுக்கு இலக்கியம் ஒரு போதையே. அங்குதான் அவன் கற்பனை தளம் உள்ளது. அது விரிவடைய கூடிய சூழலும் அங்குதான் உள்ளது. அங்குதான் அவனால் அவனை படைக்க முடிகிறது, அவனே அவனை சிறுது கண்டுபிடிப்பதாலே பரவசம் கொள்கிறான், போதைவசப்படுகிறான்.
தங்கள் நலம் விரும்பும்
பாண்டியன் சதிஷ்குமார்