இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3

2015-09-08

 

திரு ஜெயமோகன்

“இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி” பதிவில் நீங்கள் கேட்டதற்கான என் பதில்

என்னளவில், இலக்கியம் என் வென்றெடுக்கும் வேகத்தை நிச்சயம் மட்டுப்படுத்துவதாகவே உணருகிறேன், சில நேரங்களில் தேவைக்கு மிக அதிகமான உயர் விழுமியங்களை உருவாக்கிக்கொள்ள செய்கிறது, சில சமயம் மீறல்களை ஞாயப்படுத்த செய்கிறது. அது என்னில் ஏற்படுத்தும் ஆணவமும், கருணையையும், நிமிர்வும், காதலும், நெறிகளும் பிற விழுமியங்களும், உணர்வுகளும் இந்த உலக வாழ்க்கைக்கு பொருந்தாததாகவே உணர்கிறேன். ஒரு சுயசிந்தனை உடையவன் அதனால் ஆணவமும், நிமிர்வும் கொண்டவன் ஒரு நிறுவனத்தில் நிச்சயம் வெற்றிகரமாக பணிபுரியமுடியாது என்றே நான் நினைக்கிறேன் ஆனால் இலக்கியம் ஒருவனுக்கு அந்த குணங்களை தான் அளிக்கும். எளியவர்களிடம் அதிகமாக பணிவதும், வலியவர்களிடம் அதிகமாக நிமிர்வதும் எனக்கு இலக்கியத்தால் வந்த குணமென நான் நினைப்பது சரியென்றால், இலக்கியம் என் உலகியல் வெற்றியை எவ்வளவு மட்டுப்படுத்துகிறது!!! எனக்கு தெரிந்து பதவியில் நம்மிலும் மேல் உள்ளவர்களிடம் பணியாமல் நாம் வெல்லமுடியாது. நீங்களே எழுதியதாக நியாபகம், “வாள் இல்லாமல் அறத்தை காப்பாற்ற முடியாது” என்று. ஒரு எளியவனால் இலக்கியம் தரும் பெரும் விழுமியங்களை ஏற்றுக்கொண்டு சுமக்கவும் முடியாது, எளிதாக தவிர்க்கவும் முடியாது, அதை சுமக்க ஆசைப்பட்டு முடியாமல் உடைவான்.

 நான் எனக்கே எழுதிகொண்டது. ஒரு கடைமட்ட அரசு ஊழியரிடம் கூட பணிந்து போகாவிட்டால் ஞாயமாக நடக்க வேண்டிய உங்கள் காரியம் நடக்காது, இதில் ஒரு சாதாரணனைவிட ஒரு இலக்கியவாதி அல்லது வாசகனின் ஆணவம் அதிகம் சீண்டப்படும், அவன் பணியமறுத்து அதனால் பாதிக்கப்பட்டு முன்பைவிட அதிகமாக பணியும் நிலைக்கு தள்ளப்பட்டு, அவன் ஆணவம் மேலும் மேலும் புண்படும்.

இலக்கியம் தரும்/அதனால் அடைவதாய் நான் நினைத்துக்கொளளும் விழுமியங்கள், உணர்வுகள் குருவிதலையில் பனங்காய்.

இலக்கியம் ஒருவனை நுண் உணர்வு கொண்டவனாக செய்கிறது, நடைமுறை வாழ்விலிருந்து வெகுதொலைவுக்கு தள்ளுகிறது, நடைமுறை வாழ்க்கையின் விதிமுறைகளை, அளவுகோள்களை பொருட்படுத்தாதவனாக செய்கிறது, அவன் நிகர் வாழ்க்கையின் அளவுகோள்களை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தி தோற்றுபோகிறான்.

 நிஜவாழ்வின் விதிகள் வேறு அதற்கு அந்த அளவு அறம் தேவையில்லை, அந்த அளவு கருணை தேவையில்லை, அந்த அளவு நேர்மை தேவையில்லை, அந்த அளவு நெறிகள் தேவையில்லை.

 இதில் மேலும் பலகோணங்கள் உள்ளது, என்னால் ஒருங்கமைத்து எழுதமுடியவில்லை, மேற்கொண்டு இதைபற்றி நீங்கள் எழுதுவதை பொறுத்து, தேவையென்றால் அடுத்த கடிததில் எழுதிகிறேன்.

 பா-சதீஷ்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்

வணக்கம். இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் விவாதத்தில் இலக்கியம் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் தோன்றுகிறது.

அறம் சார்ந்த விழுமியம் சார்ந்த நோக்கில் மட்டுப்படுத்துவதை உணர்ந்திருக்கிறேன். அதே நேரம் பண்படுதல், அன்பு செலுத்துதல், சுய பரிசோதனை ஆகியவற்றில் வெல்லும் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

லௌகீக நோக்கில் அலுவலகத்தில் வேகத்தையும், கண்டிப்புடன் நடப்பதில் தளர்வையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக நான் உணர்ந்த/உணரும் ஒரு விஷயம் பங்குச்சந்தை வியாபாரம். அதில் ஈடுபட்ட போதெல்லாம் நான் இந்தப் பணத்திற்கு தகுதியானவனா? இதில் வரும் வருவாய் அது எப்படி சட்டப்பூர்வமானது என்றாலும் சரிதானா? இன்னொருவரின் நட்டம் நம் லாபம் எனில் இதன் பொருளென்ன என்ற morality debate மனதை அலைக்கழிக்கும். அதனால் அதில் ஈடுபட 100% ஆர்வம், முயற்சி வராததால் அதில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி பார்க்கும் போது வரலாற்றில் எத்தொழிலும் வளர வாய்ப்பு இருந்திருக்காது. லாபம் மேலும் லாபம், பிறரை கடுமையாக பாதிக்கும் முடிவுகள் எடுத்தல் ஆகியவற்றை அறம் சார்ந்த மனத்தால் எடுக்க முடிவதில்லை என நினைக்கிறேன். சற்றேனும் இது போன்ற சில விஷயங்களை கண்டு கொள்ளாதவர்களால் தான் வென்றெடுக்க இயலும். அதை இலக்கியம் தருவதில்லை.

இல்லற வாழ்வில் அன்பை உருவாக்குவதில், பண்படுதலில் இலக்கியம் வெல்லும் வேகத்தை உயர்த்தியுள்ளது. நான் இயல்பில் முன்கோபி என்பதால் திருமணம் ஆன புதிதில் தன்முனைப்பு காரணமாக என் மனைவியிடம் சின்ன விஷயங்களுக்கு கூட சிடுசிடுப்பேன். அந்தக் கோபம் ஒருமுறை கடுமையாக அவளை தாக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. கோபம் தணிந்த பின் அவள் கண்ணீர் கண்டு மனம் கலங்கியது. புத்தக அடுக்கினை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன். இதற்குத்தானா இத்தனை நூல்கள் படித்தோம், உலக வரலாறு, மனித உளவியல், இதிகாசங்கள், சு.ரா., க.நா.சு. ஜெயமோகன், தால்ஸ்தோய், தஸ்தாயேவ்ஸ்கி, செகாவ் இன்னும் எல்லோரையும் படித்தது துவங்கிய இடத்திலேயே நிற்பதற்கா?

அன்பிற்கும் உண்டோ…அன்பே சிவம்…அன்புடையார் எல்லாம்… இப்படி சிந்தனை ஓடும். இது எதுவும் அறியாத என் தந்தைக்கும் இலக்கியம் பற்றி சிறிதேனும் தெரிந்த எனக்கும் என்ன வேறுபாடு…சிறிய மனக்கட்டுப்பாடு, சிறிய அன்பு செலுத்துதல் கூட என் மனதில் உருவாக்கிக் கொள்ள முடியாத நான் லட்சம் நூல்கள் படித்து என்ன பயன் என்று மனம் கலங்கினேன். எந்த மாற்றமும், எவ்வித பண்படுதலும் உருவாக்கி கொள்ள முடியாத நான் இலக்கியம் படிப்பதும் அதை பற்றி சித்திப்பதும் யாரை ஏமாற்ற? மனைவியின் எளிய அன்பையும் மனதையும் புரிந்து கொள்ளாத நான் மனித மன சிக்கல்களை, நெருக்கடிகளை மிக நுண்மையாக விவாதிக்கும் பேரிலக்கியங்களை சிலாகிப்பது எதன் பொருட்டு? மனைவியின் கண்ணீர் என்னுள் பெருகியது.

அன்பைத் தருவதே அன்பை வென்றெடுக்க வழி….தன்முனைப்பைத் தவிர்த்தலே பண்படுதலுக்கு வழி…என்பது போன்ற எளிய வாசகங்கள் அனுபவத்தால் உணர வைத்தன. அதன் பின்னர் கோபம் பின்தங்கி அன்பின் வேகம் உயர்ந்தது. ஆக, இலக்கியம் வென்றெடுக்கும் வேகத்தை அன்பில், பண்படுதலில் அதிகமாக்கி உள்ளது.

இலக்கியம் உள்நோக்கி, தன்னை நோக்கி பேச வைக்கிறது. தன்னை அறிய வாசல் திறக்கிறது. தன்னை அறிய முற்படுபவனால் லளகீக பணவியல் வாழ்வில் கறாராக செயல்பட முடியாது. தன்னை நோக்கி பேசுபவன் மானுடம் நோக்கியே பேசுகிறான். தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் நிலைக்கு  இலக்கியம் தள்ளுவதால்  லௌகீக, வணிகவியல் வாழ்வில் ஒருவரின் வேகம் மட்டுப்படவே செய்யும்.

நன்றி

க.ரகுநாதன்
ஊத்துக்குளி.

மாடன்மோட்சமும் கண்ணீரும்

ஜெ,

கேட்கப்பட்ட கேள்விக்கான என் புரிதல்களை இங்கே கூறியிருக்கிறேன்.

 

அகிலன்

11) இலக்கியப் பரிச்சயம் ஒருவனின் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா?

எதை வென்றெடுப்பது? எதை அடைவதை வெற்றி என நினைப்போமோ அதையா? எனில் யாரின் பார்வையில்? வென்றெடுப்பவரின் பார்வையிலா அல்லது மற்றவர்களின் பார்வையிலா? ‘மற்றவர்களின்’ பார்வையில் கேட்கப் பட்டிருக்குமானால், அதைப் பொருட்படுத்தத் தேவை இல்லை.

இலக்கியப் பரிச்சயம், ஒருவர் தன்னுடைய இயல்பை கண்டறிய உதவுகிறது. ஒரு புனைவு கூறும் வாழ்க்கையை நிகர் வாழ்க்கையாக வாழ்பவர் அந்த நிகர்வாழ்க்கையின் மூலம் சுய வாழ்க்கையின் சிலபல போதாமைகளையும் உன்னதங்களையும், பிறழல்களையும், ஒத்திசைவுகளையும் அறியலாம். அதன் மூலம் போதாமைகளை உன்னதங்களாகவும் பிறழல்களை ஒத்திசைவுகளாகவும் மாற்ற முயலலாம். இந்த மாற்றத்திற்கான முயற்சி ஒருவேளை அதுவரை சென்ற பாதையில் விலக்கத்தை ஏற்படுத்துவது போலத் தோன்றலாம். என் பார்வையில், இந்த விலக்கமே ‘வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது’ என்று கூறுவதாகப் படுகிறது.

இலக்கியப் பரிச்சயம் உள்ள ஒருவர் இந்த உணர்வில் இருந்தால், தன்னுடைய அகம் இலக்கியத்தால் மறுகட்டமைப்பு செய்வதை\செய்யப்பட்டிருப்பதை அவர் உணரவில்லை என்றே அர்த்தம். அவர் தன் முந்தைய இயல்புடன், தன் தற்போதைய இயல்பை ஒப்பிட்டு நோக்கி, முன்பு போல் வீரியத்துடன் இயங்க முடியவில்லை எனலாம். அனைத்தையும் ஒப்பிட்டுப் பழகிய நமக்கு, நம் கடந்தகாலத்துடன் நிகழ்காலத்தை ஒப்பிடுவதும், நம்மை அறியாமல் மிக இயல்பாகவே நிகழலாம். அந்த ஒப்பிடல், இயல்பாகவே தன் வேகம் குறைந்து விட்டதான மனப்பிரமையை உருவாக்கலாம். காரணம், இந்த ஒப்பிடல் தன் இயல்பில் இலக்கியம் ஏற்படுத்திய மாறுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், இலக்கியப்பரிச்சயம் உள்ள ஒருவர், ஒருகட்டத்தில் இந்த அகமாற்றத்தை உணர்ந்தாக வேண்டும். தன் இயல்பு மாற்றியமைக்கப்பட்டதை உணர்ந்தாக வேண்டும். அவர் வாசிக்கும் இலக்கியம் அந்த உணர்வை அளிக்கவில்லையெனில், அது வென்றெடுக்கும் வேகத்தை உண்மையிலேயே அழித்தது ஆகும் என்றே கூறுவேன். ஏனெனில் இலக்கியம் அவர் அறிந்த அவரை, அவர் அறியாத வேறொன்றாக மாற்றி விட்டது. அதாவது இலக்கியம் நிகர்வாழ்க்கையின் மூலம் தன்னை அறிவதை விடுத்துவிட்டு, நிகர்வாழ்க்கையின் மூலம் தனக்கான ஒரு பிம்பத்தை உருவாக்கி, அந்த பிம்பத்தை வளர்ப்பதற்கான செயல்களில் தன்னை ஈடுபடுத்தக்கூடும். தன் பிம்பத்தை வளர்ப்பதற்கான செயல்களின் மூலம் சுயத்திற்குத் தேவையான செயல்களை விட்டுவிடக் கூடும். அதன்மூலம் வாழ்க்கையில் முழுத் தோல்வியை அடையவும் நேரிடலாம்.

2) அதன் பொருட்டே வெறும் மனப்பழக்கமாகக் கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப் படுகிறதா?

இலக்கியம் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படுகிறது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தால், அது இலக்கியப்பரிச்சயம், சுயத்தை அறிவதற்குப் பதிலாக பிம்பத்தை கட்டமைத்து வெளிப்படுத்த முயற்சித்து, அந்த முயற்சி தோல்வியடைந்தவர்களால் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கும். எனில் அத்தகையவர்களை இலக்கியப்பரிச்சயம் உள்ளவர்கள் என்றும் கூறமுடியாது. ஏனெனில் இலக்கியத்தின் நோக்கத்தையை அறியாமல் இருக்கிறார்கள்.

ஒருவர் ஏதேனும் ஒரு துறையில் ஆர்வமாக இருப்பார்கள் என்பதற்காக அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அந்த ஆர்வம் இயல்பாக வர வேண்டும் என்பது இல்லை. ஆனால் அந்த ஆர்வம் இயல்பாகவே குடும்பத்தினரிடம் (மறைந்து) இருந்தால், அவரின் இலக்கிய ஆர்வம் குடும்பத்தினரிடமும் வெளிப்படும். அந்த சாத்தியம் மிகமிகக் குறைவாகவே இருக்கும். எனவே சிறந்த இலக்கியவாதிகளின் குடும்பத்தில் யாருக்கும் வாசிப்பு கூட இல்லையே, என்னும் அங்கலாய்த்தல் தேவை இல்லை. அவர்கள் குடும்பத்தினரின் இயல்பில் வாசிப்பு இல்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அதிகமாக இலக்கியத்தில் இல்லை என்பதற்குக் காரணம், அவர்களுக்கு ஈடுபாடு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைகள் அதற்குத் தோதானதாக இல்லாமல் இருக்கலாம். அதாவது பெண்களுக்கு இலக்கிய ஆர்வம் இருந்தாலும், அவர்கள் சார்ந்து இருப்பவர்களுக்கு அந்த ஆர்வம் இல்லையெனில் பெண்கள் உள்ளே வருவது மிக அரிதாகவே இருக்கும்.

நம் ஒவ்வொருவரின் இயல்பிலும் ஆண்மையும் பெண்மையும் கலந்தே இருக்கும். முழுவதும் ஆணாக இருப்பவர்களும், முழுவதும் பெண்ணாக இருப்பவர்களும் என யாரும் இருக்க முடியாது. இரண்டும் ஒன்றை ஒன்று சமன் செய்திருப்பவர்களே முழுமையானவர்கள். அர்த்தநாரீஸ்வரர்கள். மொத்த மக்கள்திரளில் தோராயமாக 30% பேர் முழுமையாக சமன் செய்யப்பட்டவர்களாக இல்லையெனிலும் ஓரளவு சமன்நிலையில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (இதற்கான தரவுகள் என்னிடம் இல்லை). அதாவது 30% பேருக்கு குடும்ப வாழ்க்கைத் தேவையில்லை. அவர்களின் பாலியல் ஈர்ப்பும் குறைந்தபட்ச அளவுதான் இருக்கும் என்றும் கேளவிப்பட்டிருக்கிறேன். அந்தக் குறைந்தப்பட்ச பாலியல் ஈர்ப்பை தாண்டி வர முடிந்தால், அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருப்பதை விட தனித்திருக்கும் வாழ்வில்தான் மகிழ்வாக இருப்பார்கள். இன்று நம்மைச்சுற்றி நிகழும் வாழ்க்கைகளில் பரஸ்பர புரிதலின்றி எனவே நிம்மதியின்றி, சமூக\பொருளாதாரக் கட்டாயங்களுக்காக சேர்ந்து வாழ்பவர்களைப் பார்த்தால் அது உண்மை என்றே தோன்றுகிறது.

குடும்ப அமைப்பின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று, குடும்பம் என்னும் அலகாக ஆண்மையும் பெண்மையும் (ஆண்களும் பெண்களும் அல்ல) ஒன்றை ஒன்று சமன் செய்து, எனவே முழுமையை அடைய  வேண்டும் என்பதும் ஒன்று.  பல பெண்கள் ஆண்மை இயல்புகளுடன் இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ‘இவளோட யாரு குடும்பம் நடத்த முடியும்?’ என்னும் கேள்வியை சிலரைப் பார்த்தாவது நமக்குள் கேட்டிருப்போம். அவர்களில் பெரும்பாலானவர்களும், மகிழ்வில் மற்றவர்களுக்கு சற்றும் குறைவில்லாத குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அத்தகையவர்களின் கணவன்கள் அடிபணிந்து, சுயத்தை இழந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. மாறாக, அந்தக் குடும்பம் என்னும் அலகில் ஆண்மையும் பெண்மையும் சமன் செய்யப்பட்டிருக்கும்.

பொதுவாக ஆண்களுக்கு ஆண்மை இயல்பு அதிகமாக இருப்பது போல பெண்களுக்கு பெண்மை இயல்பு அதிகமாக இருக்கும். ஒருவேளை பெண்கள் இலக்கிய ஆர்வம் உடையவர்களாக இருந்து, கணவன் ஆர்வமற்றவனாக இருந்தால், பெண்மை இயல்பு, மிக இயல்பாக அந்த ஆர்வத்தை விட்டுக் கொடுக்கலாம். ஒருவேளை அந்தப்பெண்களிடம் ஆண்மை இயல்பு அதிகமாக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும் – கணவன் சமன் செய்ய போதிய அளவு பெண்மை இயல்புடன் இல்லாமல் இருந்தால்.

ஆனால் ஆண் என்றால் தன்னிடம் இருக்கும் பெண்மை இயல்பையும் மறைத்து விட்டு ஆண்மையை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஒரு சமூக நிர்ப்பந்தம் இருக்கலாம். இந்த நிர்ப்பந்தத்தை எதிர்த்தே நாம் போரிட வேண்டும்.

இந்தப் போலி நிர்ப்பந்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கே நாம் ஆதரவளிக்க வேண்டும். மாறாக தங்கள் இயல்பால், தங்கள் ஆர்வத்தை விட்டுவிட்டு இருக்கும் பெண்களை பெண்ணியம் என்னும் நிர்ப்பந்தத்தால்  வெளியே இழுப்பது, அவர்கள் இயல்பை வலுக்கட்டாயமாக மாற்ற முயல்வதாகும். இது பெண்களின் ஆர்வத்தை, போலி சமூக நிர்ப்பந்தங்களால் அழிப்பது எவ்வளவு பெரிய வன்முறையோ அதே அளவுக்கு வன்முறையானதாகும். எனவே இலக்கியம் மட்டும் அல்ல எந்த ஆர்வங்களுக்கும் பெண்கள் வெளியே வராமல் இருப்பதற்கு, இந்த ஆண்மை பெண்மை இயல்புகளின் ஒத்திசைவே காரணமாக இருக்கும் என்பது என் எண்ணம். ஆண்கள் ஆர்வமாக இருக்கும் துறைகளில், அதே இயல்புகளின் காரணமாக எளிதில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இதில் ‘பெண்ணியம்’ கருத்துக்களுக்கு எதிராக ஏதேனும் கூறிவிட்டேனா என்று தெரியவில்லை.

3) இலக்கியமும் ஒரு போதைதானா?

போதை என்பதை ஏன் எதிர்மறை அர்த்தத்தில் கவனிக்க வேண்டும்? ‘உற்று நோக்கும் பறவைகள்’ சிறுகதையில் ‘டோபமைன்’ என்னும் வேதிப்பொருள் அல்லது மனித மூளையில் சுரக்கும் பொருள் எவ்வாறு வேலை செய்து ‘த்வாத்மர்கள்’ என்பவர்களை எப்படி ஆக்கியது என்பதை ஒரு புனைவாக படித்திருக்கிறோம். போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது மூளையில் சுரக்கும் டோபமைன்தான் அப்போது உணரும் மகிழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. போதைபொருட்கள் இல்லாமல் மகிழ்வாக இருக்கும்போதும் மூளையில் டோபமைன் சுரப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது மகிழ்வுடன் எனவே  நிறைவுடன் இருக்கும் எல்லா தருணங்களும் போதையின் தருணங்களே. எனவே இலக்கியம் சில அறிதல்களை அளிப்பதன் மூலம் மகிழ்வை அளிக்கிறது என்பதால் அதை மதுப்போதையுடன் ஒப்பிடத்தேவையில்லை. இயல்பான போதையாகவே எடுத்துக் கொள்ளலாம்.

இவை என் அனுபவத்தின், எண்ணங்களின் எல்லைக்குட்பட்டு வைக்கப்பட்ட கேள்விக்கான என் பதில்கள்!

அகிலன்

 

முந்தைய கட்டுரைதினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைஉயர்சாதிப்பெண்களின் கண்டனம்