தினமலர் – 1: ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-2

Tamil_News_large_1481446

ஆசிரியருக்கு

ஜனநாயக ஓழுக்கம் பற்றிய கட்டுரை பார்த்தேன். மிக தேவையான கட்டுரை.

சுதந்திரப்போராட்டத்தில் வாக்குரிமையை கோரி பெறுவதறுக்கும், ஓவ்வொரு இந்திய குடிமகனும் வாக்குரிமையை பெற்று உய்ப்பதற்கும், இந்த வாக்குரிமை சூழலை நிர்வகிப்பதற்கும் உள்ள முப்பரிமாண சூழலை சொல்கிறீர்கள்.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.

வள்ளுவன் சொன்னது ஜனநாயக அறவியல் சமூகத்துக்கும் அடிப்படை. ஜனநாயக குடியரசும் அதன் ஓழுக்கத்தின் பெயரிலேயே நிற்கின்றது.

தமிழ் குடும்பத்தின் உரவோர் பெண்கள். தமிழ் ஜனநாயக குடிமை சமூகத்தின் உரவோராகவும் முன்னகர அவர்களிடமே கோரிக்கையுடன் நிற்க முடியும். எத்தனையோ கடின சூழல்களில் குடும்பங்களின் கட்டமைப்பை நிறுத்துவதில் பெண்களே முதன்மையாக உள்ளனர். எங்கள் கிராம சூழலிலேயே அதை கண்டிருக்கின்றேன். என் அன்றாட வாழ்விலும் அதையே காண்கின்றேன்.

ஜனநாயகத்தின் ஓழுக்கம் குறையும் பொழுது அதன் பளு சாமான்ய குடும்பங்களின் மீதே விழுகின்றது.

டாஸ்மாக் கலாச்சாரம் போன்ற போதாமைகள் நிறைக்கும் குடும்ப சூழ்நிலைகளில் சுதந்திர போராட்ட காலத்தினை தொடர்ந்து கல்வி, தொழில் போன்ற இடங்களை கைப்பற்றி வரும் மகளிரே வாக்குரிமை போன்ற குடிமை உரிமைகளையும் வலியுறுத்த முடியும். “ஆம்பிளை பிள்ளையாக பிறப்பதே” பெரும் சாதனையாக கருதப்படும் காலகட்டத்தில் போராடி அடைந்த உரிமைகளை பற்றி பெண்களுக்கே அதிக புரிதல் உள்ள வாய்ப்புண்டு.

ஜனநாயக குடியரசு என்பது அதன் நெறிமுறைகளின் மீதும், நெறிமுறைகளை மதிக்கும் சமூக உறுப்பினர் மீதுமே நிற்கின்றது. சுதந்திர உலகம் நெறியும், நெறிசார் அறமும் சார்ந்த சமூகத்திலேயே உயிர் பெறும்.

இன்றைய காந்தி தொடர்ந்து தமிழில் ஜனநாயகம் பற்றி நல்லதொரு தொடர் எழுதுவது மகிழ்வளிக்கின்றது

பின்குறிப்பு: ஓழுக்கமென்பதை பாலியல் ஓழுக்கமாக புரிந்து கொண்டு சிலர் கொந்தளிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே வலையுலகில் சில நண்பர்கள் கொந்தளித்து கொண்டுள்ளார்கள். எல்லா வகை சமூக நிறுவனத்துக்கும் ஒழுக்க நெறிகள் உண்டென்பதை நம்ப அவர்கள் முடியவில்லை. சுதந்திரம் என்றால் என்னவேண்டுமானாலும் செய்வது என்றே நினைக்கின்றார்கள். சுதந்திரம் என்பதும் நெறிசார் நிறுவனம் என்பதே புரிந்து கொள்வதில் சிக்கல்கள் உள்ளது.

அன்புடன்

நிர்மல்

***

அன்புள்ள நிர்மல்

மிக வற்புறுத்தப்பட்டேன். எழுதலாமென்று தோன்றியது. நாளொன்றுக்கு ஒரு கட்டுரை. இருபது கட்டுரை எழுதிவிட்டேன். பொதுவாக ஜனநாயகம் பற்றி மட்டும்

ஜெ

***

அன்புள்ள ஜெ

இன்றைய வாக்காளனின் எண்ணம் இதுதான். ஊழலில் அரசியல்வாதிகள் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். அதைத்தடுக்க முடியாது. அதில் ஒருபகுதியை நாம் பெற்றால் என்ன? பணம் பெற்றுக்கொண்டு அந்த வாக்காளருக்கு வாக்களிப்பதுதான் தவறு. பணத்தைப் பெற்றுக்கொண்டு நல்ல வாக்காளருக்கு வாக்களிப்பதில் என்ன பிழை இருக்கமுடியும்? எனக்கும் இது சரி என்றே படுகிறது

சந்தோஷ்

***

அன்புள்ள சந்தோஷ்

நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது.

முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள்.

இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?

ஜெ

முந்தைய கட்டுரைதினமலர் – 1 ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைஆணவக்கொலைகள் -கடிதங்கள்