குருவை ஆராய்தல் -கடிதங்கள்

Nithya-Chaithanya-Yathi_Vyg
அன்புள்ள ஜெயமோகன் 
 அந்த அற்புதமான கேள்விக்கு உங்கள் அதி நேர்மையான கடிதம் என்னை புளங்காகிதப் படுத்தியது. பாழும் மனசு ஒரு புது கேள்வியை எழுப்புகிறது. (இது என் மனத்தில் ரொம்ப நாளாக இருக்கும் ஒரு விஷயம் – “தூண்டப்பட்டது” என்று தான் சொல்ல வேண்டும்)
 நீங்கள் சொல்லும் நேரடியான தொடர்பு நிஜமாகவே நமக்கு அந்த மனிதரைப் பற்றிய (குருவோ மனைவியோ அடுத்த வீட்டுக்காரரோ )  பரிபூரண அறிவை (ஞானம் என்று சொல்லலாமா ?) தந்து விடுமா….? நாம் தரிசிப்பது அவரது விஸ்வரூபத்தில் ஒரு பகுதிதானே ?
 நமது பரம எதிரிகளுக்கு – நான் சீர்தூக்கி ஆராய்ந்து தெளிந்த மனத்தோடு நிராகரித்தவர்கள் – ஆத்மார்த்தமான தோழர்கள் உண்டு என்பது நமக்கு தெரிகிறதே  ?நாம் வேண்டுமானால் அந்த துரதிஷ்டசாலிகளையும் சேர்த்து ஒதுக்கித் தள்ளலாம். அது வேறு விஷயம்
 மனப்பூர்வமாக சொல்கிறேன்.  படித்தவுடன் எழுதப்படும் இந்த  மடல் எவ்வகையிலும் குறுக்கு கேள்வி கேட்டு புளகாங்கிதப்பட அல்ல.
 உங்கள் பதிலை நன்கு உள்வாங்கி இருப்பதாகவே நம்புகிறேன். அபத்தமாக இருந்தால் நீங்கள் புறக்கணித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையும் விவேகமும் எனக்கு இருக்கிறது.
 
நான் சில வருடங்களுக்கு முன்னால் ஆன்மிகத் துறையில் ஏற்பட்ட ஓரிரு சில களங்க காலங்களில் அன்னாரின் பக்தர்களை நினைத்து கண்ணீர் மல்கியவன் . ஒரு வகையில் ஷிர்டி சாய் பாபாவோ அல்லது இராகவேந்திர சுவாமி போல – காலம் கடந்த ஞானிகளின் பிம்பத்துடன் அந்தரங்க சுத்தியோடு வாழும் பெருங்கூட்டம் தான் சரியோ என்று கருதியவன்.
 
உண்மையில் – இந்த இரு கூறுகளின் தெளிவான இடைவெளி எனக்கும் புரியவில்லை. இந்த கேள்வி பதில் என் ஆவலைத் இன்னமும் தூண்டி விட்டு விட்டது.
நான் உங்கள் எண்ணற்ற கட்டுரைகள் முழுவதும் இன்னமும் படிக்காதவன். முக்கியமாக ஆன்மிகம் சார்ந்தவை . ஒருவேளை இந்த விஷயம் பற்றி எழுதி இருக்கிறீர்களோ என்னவோ…மன்னிக்கவும்
உங்கள் நேரம் என் நேரத்தை விட மதிப்பானது என்பதை “ஓரளவு” நேரடியாக அறிந்து வைத்து இருப்பவன் :-)
அன்புடன்
சுரேந்திரன் , சென்னை 
அன்புள்ள சுரேந்திரன்

நீங்கள் அன்னார் என்று சொல்வது நித்யானந்தாவை என நினைக்கிறேன். நான் குறிப்பிடுவது நித்ய சைதன்ய யதியை. அவர் படம் அந்தக்கட்டுரையிலேயே உள்ளது. நான் நித்யா, நித்ய சைதன்ய யதி மற்றும் ஆன்மீகம் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏராளமாக என் இணையதளத்தில் இருக்கின்றன. நீங்கள் வாசிக்கலாம்

நான் குருவை நேரடி அனுபவத்தில் அறிந்துகொண்டேன் என்று சொல்லும்போது எல்லாரும் எல்லாரையும் நேரில் சந்தித்தால் அறிந்துகொள்ளலாம் என்று பொருள் இல்லை. குருவையோ நண்பனையோ காதலியையோ அறிந்துகொள்ள ஓர் அர்ப்பணிப்பு தேவையாகிறது. தன்னை ரத்துசெய்யும் பயணம் தேவையாகிறது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன்

ஜெ

அன்பு ஜெயமோகன்,

குருவைக் குறித்தான உங்களின் பதில் நேரடியாகப் புரிந்து கொள்ளக்கூடியதன்று; நீங்கள் சொல்லியிருக்கும் புள்ளியியிலிருந்தும் புரிந்து கொள்ள முடியாதது. அப்படி எதிர்பார்த்து ஏமாந்து போவதுதான் பொதுப்புத்தியின் சிக்கல் எனக் கருதுகிறேன். எதுவாயினும் அது தொடர்பான பொதுக்கருத்து ஒன்றைச் சமைத்துக் கொள்கிறது நம் சமூகம். அக்கருத்திலிருந்து முரண்படுபவர்களைக் கோமாளிகள் போன்று பார்க்கவும் செய்கிறது. எது குறித்தும் திட்டவட்டமான ஒற்றைத்தன்மையுடனான கருத்தை வரையறுத்து விடலாம் என சமூகம் தீவிரமாக நம்புகிறது. அதுதான் ஆகப்பெரிய சிக்கல் என நினைக்கிறேன்.

எப்பொருளாயினும் மெய்ப்பொருள் கண்டாக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. எது மெய்ப்பொருள் என்பதில்தான் இங்கு சிக்கல் துவங்குகிறது. உங்களுக்கான மெய்ப்பொருள், எனக்கான மெய்ப்பொருள் என மெய்ப்பொருள் தொடர்பான அனுபவங்கள் ஆளாளுக்கு மாறுபட்டே தீரும். நித்யாவை நீங்கள் அணுகுவது போல் என்னால் அணுக முடியாது. அதேபோன்று, அவர் உங்களை எப்படி அணுகினார் என்பதை உங்களால் கண்டுகொள்ளவே முடியாது. இப்படியாக இருக்க முடியும் என யூகிக்க மட்டுமே முடியும். இதை ஒப்புக்கொள்ளாத ஒருவரால் நிச்சயம் குருவிடம் சரணடைய முடியாது. சரணடைதல் என்பதை ’குறிப்பிட்ட கருத்துக்கு அடிமையாதல்’ என்று புரிந்து கொள்வதே பிரச்சினை. ‘கருத்தின்றி இருத்தல்’ அல்லது ‘பன்முகக் கருத்துக்களையும் அலசத் தயாரய் இருத்தல்’ என்பதாகவே சரணடைதலைக் கருத வேண்டும்.

நித்யா முதலில் உங்களுக்குக் கருத்தாக இருக்கிறார்; பிறகு ஒரு குறியீடாக, படிமமாக மாறுகிறார். கருத்தாக அவரைக் கருதியவரை ஆராய்ச்சி செய்தீர்கள்; முரண்பட்டீர்கள். பிறகு, படிமமாக அவர் உங்களுக்குள் வேர்கொண்டபின் அமைதியானீர்கள். இது ஒன்றும் முரணானதாக எனக்குத் தோன்றவில்லை. கருத்தாக இருக்கும்போது அக்கருத்தின் ஒற்றைத்தன்மையைக் கொண்டே அவரை அணுகுகிறோம். படிமமாக மாறியபின் கருத்தைக் கடந்திருக்கும் அவர் சிந்தனையின் பன்முகத்தன்மைகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. கருத்து என்பது வரையறுக்கப்பட்ட எல்லை; கிட்டத்தட்ட ஒரு குட்டையைப் போன்றது. அதில் நிச்சயம் பாசி படரவே செய்யும். அப்பாசி நம்மை அலைக்கழிக்கவே செய்யும். படிமம் என்பது நில்லாமல் ஓடும் நதி. அங்கு நீருக்கு வரையறைக்குள் இயங்க வேண்டிய வற்புறுத்தல் இல்லை. அது சுதந்திரமாக நகர்கிறது. சுதந்திரம் ஒருவரை காரணமின்றி மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.

உங்கள் ஒரு கருத்தில் நான் மாறுபடுகிறேன். நமக்களிக்கப்பட்ட சில பிம்பங்களை நம்மால் கட்டுடைக்க முடியும் என நீங்கள் சொல்வது ஒரு எல்லை வரைக்கும்தான். அப்பிம்பத்தின் வழியாக நீங்கள் பெறும் அனுபவம் ஒருவேளை உங்களைக் கட்டுடைத்திருக்குமானால், அப்பிம்பமும் உங்களுக்குக் குருவாகி விடுகிறது. அவ்வகையில் நேரடி உறவுள்ள குரு ஒருவரை மட்டும் என்றில்லை. நம்மைக் கட்டுடைக்கும் சில பிம்பங்களையும் ஒருகட்டத்துக்கு மேல் நம்மால் ஆராய்ச்சியில் அமிழ்த்த முடியாது. எப்பிம்பத்தைக் கட்டுடைக்கக் கிளம்புகிறோமோ அப்பிம்பம் நம்மைக் கட்டுடைத்தால் அதுவே நம் குரு எனச்சொல்லலாம். கட்டுடைத்தலின் வழியாக ஒருவனின் அகங்காரமும், ஆண்வமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவ்வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவம் இருக்கவே செய்யும் என நான் நினைக்கிறேன். ஆக, குரு-சீடன் உறவை மனிதன் – மனிதன் கோணத்திலிருந்து நகர்த்தி பிம்பம் – மனிதன் என்பதாகவும் நம்மால் பார்க்க முடியும் என்பது என் புரிதல். இதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என நான் வற்புறுத்தப் போவதில்லை.

பழனிமுருகனைக் கட்டுடைக்கும் ஆய்வில் இறங்குவேன் என்றோ, அவ்வாய்வே என்னைக் கட்டுடைக்கும் என்றோ எனக்குத் துவக்கத்தில் தெரியாது. “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” எனும் அருணகிரிநாதரின் வரிகளைத் துவக்கதில் எள்ளி நகையாடி இருக்கிறேன். அப்போது முருகனைப் பற்றி நான் ஒரு தீர்மானமான கருத்தை வைத்திருந்தேன். அதுதான் என் ஆகப்பெரிய சிக்கல் என்பதை பின்புதான் புரிந்து கொண்டேன். “வேல் மயில் சேவல் பாம்போடு முருகன் நேரில் வந்து என் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து அருள் புரிவான்” எனும் பொதுப்புத்தி அளவிலான கருத்தைப் பொய் என்று நிரூபிக்கவே நான் பழனிமுருகனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பழனிமுருகனை யார் என்று கட்டுடைத்துவிட வேண்டும் எனும் ஆய்வில் நான் கட்டுடைக்கப்பட்டேன்; திணறிப்போனேன்.

இத்தனைக்கும் அவனை ஒட்டிய தரவுகளை ஓரளவே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டான் அவன். சிதறிக்கிடந்த பல தரவுகளைக் கொஞ்சம் உள்ளுக்குள் தொகுத்துக் கொண்டபோது என்னையும் அறியாமல் அவன் என் குருவாகி விட்டான். பகுத்தறிவாளர்களும், நவீனச்சிந்தனையாளர்களும் கேலி பேசக்கூடும். அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. ’மனிதன்’ என்று அகங்காரம் கொண்டிருந்த என்னை ’உயிர்’ என உணரச் செய்தவன் முருகனே. இன்றைக்கு நான் அதிகம் உற்சாகத்துடனும், மகிழ்வுடனும் இருப்பதற்கு அவனே தூண்டுதல். ஒருபோதும் அவன் கண்முன் தோன்றப்போவதில்லை என்பதை இப்போது என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். ஆனால், என் அகத்தைவிட்டு அவனை விலக்கி வைத்திடவே முடியாது. ஆதி இனக்குழுவின் அடையாளமாய், தமிழ்மொழியின் குறியீடாய், சித்தர்களின் தலைவனாய், தவிர்க்கவே இயலாத தமிழ்க்கடவுளாய், மலைவாழ்வை நினைவூட்டுபவனாய், கொற்றவையை அறிமுகம் செய்பவனாய், திணைவாழ்வைத் தாங்கி நிற்பவனாய், குழந்தையாய் இனத்தில் கருவாகி வரலாற்றைத் தொடரச் செய்யும் பாலகனாய், எப்போதும் வேண்டுபவர்க்கு நம்பிக்கைத் துணையாய், பலதரப்பட்ட தமிழ்மக்களின் மனதில் இயல்பாகவே முகிழ்க்கும் பேராய்.. இன்னும், இன்னும் என அவனால் நான் விளங்கிக்கொண்ட புறப்பரிமாணங்கள் பல. ”உயிர்களில் நான் மனிதன்”(அகம்) என்றும் ”மனிதரில் நான் தமிழன்”(புறம்) என்றும் தெளிவாக எடுத்துரைத்தவன் அவனே. ’அறிவொன்றற நின்றறியும்’ அறிவைக் கற்பித்தவன் அவனே.

“யாமோதிய கல்வியும் எம்மறிவும் / தாமே பெற வேலவர் தந்த்தினால்” எனும் அருணகிரிநாதரின் வரிகள் இப்போது வேடிக்கையாகத் தோன்றவில்லை. சீடன் என்றாலே அடிமை என்று கருதும் பொதுப்புத்தி மனோபாவத்திலான சீடன் அல்ல நான்; ‘அடிமைப்பட்டு’க் கிடப்பதாக புலம்பிக்கொண்டிருந்த என்னை ‘விடுவித்து விசாலப்படுத்திய’மைக்காக முருகனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சீடன். இவ்வுறவு தருக்கங்கள் கடந்து உணர்வுபூர்வமானது. பலநேரங்களில் தருக்கங்களே நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன. பழனி அடிவார முருகன் குழந்தை வடிவினன். நிச்சயம், அவன் தருக்கங்களைக் கொண்டாட மாட்டான் அல்லது தருக்கங்களுக்குள் நுழைய விரும்பாதவன் அவன். பழனிமலை முருகன் ஆண்டி வடிவினன்; தருக்கங்களைக் கடந்தவன். மனிதர்களான நம்மால் தருக்கங்களை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை; விட்டுத்தரவும் முடியவில்லை. ஆறாவது அறிவாகிய காவடியைச் சுமந்து கொண்டு மேலும் கீழும் அல்லாடுகிறோம். என்னிலிருந்து என்னைத் தள்ளி நிற்க வைத்து ‘என்னைக்’ கவனிக்க வைத்த பழனிமுருகன் எனும் படிமத்தின் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பணிகிறேன்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிப்பாளையம்.

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2