லோஸா

அன்புள்ள ஜெ

லோஸா,ஜெயமோகன் என்று இணையத்தில் தேடினேன். இந்த இணைப்புகள் சிக்கின.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=604021210&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60401084&format=html

இவற்றில் நீங்கள் லோஸாவின் ஒருபேட்டியை மேற்கோள்காட்டியிருக்கிறீர்கள். அதில் லோஸா அவருக்குக் கிடைத்த வசைகள் மற்றும் அவதூறுகளைப்பற்றிச் சொல்கிறார். ஆச்சரியமாக இருந்தது. லோஸா பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா?

சரவணன்,சென்னை

அன்புள்ள சரவணன்,

மரியோ வர்கா லோஸா இவ்வருடத்துக்கான நோபல்பரிசை பெற்றிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் முக்கியமான படைப்பாளி. எண்பதுகளில் மலையாள இலக்கிய விமர்சகர் எம்.கிருஷ்ணன் நாயர் வழியாக அவரை கேள்விப்பட்டேன். பத்து வருடம் முன்பு இரு நாவல்களை வாசித்திருக்கிறேன். Conversation in the Cathedral. பின்பு காடு எழுதும்நாட்களில் Feast of the Goat இன்று தேடிப்பார்த்தேன் கைக்குச் சிக்கவில்லை.

லோஸா என்னை கவர்ந்த எழுத்தாளர் அல்ல. இரு அம்சங்கள் அவரது எழுத்துக்களில் வாசகனாக என் கவனத்தைக் கவர்ந்தன. கதையை பல கோணங்களில் சொல்லும் விதம். லத்தீன அமெரிக்க வரலாற்றை பல வகையில் ‘திரித்து’ புனைவாக ஆக்கும் விதம். ஆனால் அவரது நாவல்கள் நினைவில் பெரிதாக நீடிக்கவில்லை. மார்க்யூஸ், கார்லோஸ் புயந்தஸ் இருவரில் இருக்கும் கவித்துவம் இவரில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

அடிப்படையில் அரசியல்சாராம்சம் கொண்டவை லோஸாவின் எழுத்துக்களில் நான் வாசித்தவை. அது என் தனிப்பட்ட ரசனைக்கு உவப்பானதல்ல. ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக் கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன்.

சமீப காலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. என் அந்தரங்கமான தேடலுக்கு ஏதேனும் பங்களிப்பாற்றும் படைப்பாளிகளை மட்டுமே வாசிக்கிறேன். தமிழில் அப்படி அல்ல. விமர்சகனாக இருப்பதால் எல்லாவற்றையுமே வாசிக்கிறேன்.

லோஸாவின் அந்தப் பேட்டியை நான் டைம்ஸ் லிட்டரரி சப்ளிமெண்டில் வாசித்தேன் என நினைக்கிறேன். அந்த பேட்டி என்னை அன்று அதிர்ச்சி கொள்ளச் செய்தது. நம்மூர் இலக்கிய பூசல்களை விடக் கொடூரமாக இருந்தது லோஸா அதில் சொல்லியிருந்த விஷயங்கள். போர்ஹே லோஸாவின் மனைவியை பற்றி அவதூறு கிளப்பினார். புயந்தஸும் லோஸாவும் மதுக்கடைகளில் கட்டிப்புரண்டார்கள். அவதூறுகள் வசைகள் துவேஷப்பேச்சுகள் பொறாமைப்புலம்பல்கள் மட்டம் தட்டல்கள். அடிபடும்பெயர்கள் எல்லாமே உலக இலக்கியச்செம்மல்கள்.

பின்னர் சட்டென்று ஒரு நிம்மதியை உணர்ந்தேன். ஆகா தமிழ்நாட்டில் நாம் எவ்வளவு ‘டீஜண்டாக’ இருக்கிறோம்!

ஜெ