இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்

adhav-2404

இலக்கியமானாலும் சொந்தவாழ்க்கையானாலும் தொழிலில் இருந்து அதைப் பிரித்துக்கொள்ளும் compartmentalization மிகமிக முக்கியம். அதிலுள்ள பிரச்சினையை இலக்கியத்துடன் கலந்துகொள்ளவேண்டியதில்லை. குடியை, கேளிக்கையை தொழிலுடன் கலந்துகொள்வதனால் தொழில்வீழ்ச்சி அடைந்தவர்கள் நம் சூழலில் மிகமிக அதிகம். அரசியலை கலந்துகொள்வதனால் வீழ்ச்சியடையும் சிறிய தொழில்செய்பவர்கள் ஏராளம். ஒப்புநோக்க இலக்கியம் அந்த அளவுக்கு ஆபத்தானது அல்ல
இன்னொன்று, இன்னமும் முக்கியமானது. குடும்பவாழ்க்கை. அதை தொழிலில் இருந்து பிரித்தாகவேண்டும். மனைவியுடன் பூசல், மகன் சரியாகப் படிக்கதது மாமியாருக்கு நோய் என்னும் ஆயிரம் பிரச்சினைகளை தொழிலில் இருந்து முழுமையாகப் பிரித்துக்கொள்ளாமல் தொழில் செய்யமுடியாது. தொழில்சார்ந்த அமைப்புகளை, பணத்தை, சொந்த வாழ்க்கையில் கலக்கக் கூடது. மனநிலையை கலக்கக்கூடாது.

அதேபோல தொழிலை இலக்கியத்திலிருந்து விலக்கியாகவேண்டும். தொழிலுக்கான நேரம், மனநிலை ஆகியவற்றை பிரித்து தனியாகவே வைக்கவேண்டும். எனக்குத் தொழில் சினிமா. வெண்முரசு எழுதும் அதேநேரத்தில்தான் வணிகசினிமாவுக்கும் எழுதுகிறேன். அதுவேறு இது வேறு.
பொதுவாக aggressiveness , will to win ஆகியவற்றை இலக்கியம் அழிக்கிறது என்பது சரியான புரிதல் அல்ல. பெரிய வணிகர்கள் கூட நல்ல வாசகர்களாகவே இருக்கிறார்கள். மேலைநாட்டில் நல்ல வாசகர் அல்லாத வணிகர்களே குறைவு. அவர்கள் இலக்கியத்தால் தோற்பதில்லை
இலக்கியம்

1. வாழ்க்கையை கொஞ்சம் விலகி நின்று முழுமையாகப்பார்க்க உதவுகிறது. ஆகவே ஒரு உணர்வுபூர்வமான சமநிலை கைகூடும்.
2 மனிதர்களைப்புரிந்துகொள்ளும் கலையை அளிக்கிறது. அது கண்டிப்பாக வணிகத்தில் கைகொடுக்கும்

3 இலக்கியவாசிப்பு அனைத்தையும் வாசிக்க உதவும். நிர்வாக நூல்கள், சட்டநூல்களைக்கூட வாசிக்க முடியும்
4 அபூர்வமாக இலக்கியமே நல்ல வணிக உறவுகளை அளிக்கும்.

என்ன பிழை நிகழும் என்றால்
1. அதீதமாகச் சென்று வணிகத்துக்கான நேரத்தை இலக்கியம் எடுத்துக்கொள்ளலாம்

2. இலக்கியத்தின் உணர்வுநிலைகள் வணிகத்தில் நீடிப்பதன் குழப்பங்கள் நிகழலாம்

3. தேவையில்லாத மெல்லுணர்ச்சிகள் உருவாகி வணிகத்துக்குத் தடையாகலாம்
ஆனால் இலக்கியவாசிப்பு
1அறவுணர்ச்சியை உருவாக்குகிறது
2 சட்டம் பற்றிய அச்சத்தை அதிகரிக்கிறது
3 இரக்கம், மானுட நேயம் ஆகியவற்றை உருவாக்குகிறது

ஆகவே சட்டவிரோதமான, அறமீறலான, ஈவிரக்கமற்ற, நிழல்தொழிலைச் செய்ய இலக்கியம் தடையே. அதையும் இலக்கியம் செய்யக்கூடாது என்றால் இலக்கியம் என்பதன் தேவையே இல்லையே.
முக்கியமாக ஒன்றுண்டு. இதை என்னிடம் பல தொழிலதிபர்கள் சொல்லியிருக்கிறார்கள். சின்னத்தொழிலில் தொடக்கநிலைகளில் வேண்டுமென்றால் ஈவிரக்கமற்ற தன்மை, சுயநல நோக்கு உதவலாம். தொழில் நீண்ட அளவில் வளரவேண்டுமென்றால் நட்புகள் தேவை. ஊழியர்கள்தேவை. அவை மனிதநேய- அற நிலைகளால்தான் உருவாகும். நீங்கள் தந்திரமானவர், ஈவிரக்கமற்றவர் என்று பிறர் நினைக்க நேர்ந்தால் அதன்பின் அத்தனைபேருமே எச்சரிக்கை ஆகிவிடுவார்கள். அதன்பின் எதுவும் செய்யமுடியாது. எந்தப்பெரிய தந்திரசாலியும் எல்லா நேரமும் தொடர்ச்சியாக தந்திரமாக இருக்கவோ ஏராளமான தந்திரசாலிகளை சமாளிக்கவோ முடியாது
ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
அடுத்த கட்டுரைதினமலர் – 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்? கடிதங்கள்-1