இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2

 

Picture+593

 

அன்புள்ள செல்வா மற்றும் நண்பர்களுக்கு,
1. இலக்கியம் அற உணர்வை கூர்மைப்படுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதைப் பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். நேர்மையும் கருணையும் வஞ்சமும் கோபமும் காமமும் – படைப்பாளியின் எல்லா குணங்களும், அவரவர் ஆளுமைக்கேற்ப, விழைவுகளுக்கு ஏற்ப, கூர்மைகொள்ள வாய்பிருக்கிறது. இலக்கியவாதி/ வாசகன் தன் நிலைப்பாட்டை காத்துகொள்ளும் தர்க்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
2. மேற்சொன்ன காரணத்தினாலே – வென்றெடுக்கும் வேகம் கொண்ட ஒருவர் தனக்கான ஆற்றலை இலக்கியத்திலிருந்து பெற முடியும்.
3. வாசிப்பு, பொதுவாக கலைகளே, வேகத்திற்கு எதிரான மனநிலை கொண்டவை. பெரும்பாலும் வாழ்வின் வேகத்திலிருந்து இளைப்பாறவும் அதைக் கண்டு மிரட்சி அடைபவர்களும் கலைகளை நாடுகிறார்கள். கொந்தளிக்கும், ஆற்றல் கொப்பளிக்கும் இடங்களும் உண்டு என்றாலும் அதற்கும் ஒரு நிதானம் உண்டு.
4. ஜெ ஓரிடத்தில் சொல்லியிருப்பார் – மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கத்தை நோக்குவான் இலக்கியவாதி. கிஷோர் ஸ்ரீராமின் கடிதம் எனக்கு அதை நினைவுபடுத்தியது.ஓரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவன் நிகழ்வுகளின் மறுபக்கங்கள் என்னவாக இருக்கும் என ஆராய துவங்குவான். அறிதல் தரும் கிளர்ச்சி மிகுந்தவன் அவன். அவ்வகையான அறிதல்கள் எல்லாமும் உலகியல் தளத்தில் பயனுள்ளதாக இருக்குமா என சொல்வதற்கில்லை. ஆனால் அது எங்கோ எதற்கோ பயன்படவும் கூடும். ஆனால் இதை நிறுவ முடியாது. பெரும்பாலான நாவல்களின் பிரதான கதை மாந்தர்களை எண்ணி பார்க்கிறேன். அவர்கள் மிக கூர்மையாக சிந்திக்க கூடியவர்கள், தெளிவுள்ளவர்கள் ஆனால் சட்டென கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மேலேறி சென்றவர்கள் அரிது. extrovert களை மையமாக கொண்ட நாவல்கள் எத்தனை? தெரியவில்லை. இப்படியான ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. இலக்கிய வாசகனும் இந்த டெம்ப்ளேட்டில் தான் பெரும்பாலும் இருக்கிறான்.

5. உலகியல் ரீதியாக பயனளிக்காத ஒன்றை வீட்டிற்குள் கொண்டு வருவது கடினம். நாடறிந்த உண்மை.
6. இலக்கியம் போதையா? ஆம். ஆனால் அனைவருக்கும் அல்ல.
7. நாம் எல்லாவற்றிற்கும் நோக்கமும் பொருளும் உண்டென நம்புகிறோம். எல்லாவற்றையும் புறவயமாக பயன்படுத்தி அதன் முக்கியத்துவத்தை நிறுவியாக வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் பெரும்பாலும் அப்படியேதும் இல்லை. இதெல்லாம் ஒரு அந்தரங்கமான கிறுக்குத்தனம். விளைவுகள் என்னவாகவும் இருக்கலாம்.

8. அபுனைவுகளை கூட அனுமதிக்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடும், ஆனால் புனைவு வாசிப்பு வெறும் கேளிக்கை என்பதே பரவலான மனநிலை.

9. கதைகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. நம்மை கதைகளே ஆண்டு கொண்டிருக்கின்றன. முருகனுக்கு வள்ளி போதாதா? தெய்வானை வருகிறாள். அத்துடன் ஒரு சமூகமும் முருகனை ஏற்கிறது. வேதகாலத்தில் பெரும் கடவுளான இந்திரன் பக்தி காலத்து புராணங்களில் பிசகுகள் செய்து பதவியாசையால் மூன்று தேவர்களிடம் மன்றாடியபடியே இருக்கிறான். காலமும் அதிகாரமும் மாறி இருக்கிறது. அநீ அவருடைய உடையும் இந்தியாவில் எப்படி பைபிளின் நோவாவும் அவரது மகன்களும் பற்றிய கதை காலனியத்தை நியாயபடுத்த பயன்பட்டது என கூறி இருப்பார். கதைகள் உருவாக்குவதன் வழியாகவே மேலாதிக்கத்தின் நியாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அதை உடைத்து கிளர்ந்தெழ சமூகம் கதைகளையே சார்ந்து இருக்கிறது. எத்தகைய தர்க்கமும் உதவாது.

10. ஒட்டுமொத்தமாக இலக்கியம் வாசகனுக்கு நுண்ணுணர்வை அளிக்கிறது அல்லது வலுப்படுத்துகிறது. அதைவைத்துக்கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பது அவன் ஆளுமை சார்ந்ததே.

சுநீல் கிருஷ்ணன்
2
அன்பு சுனீல் ,
நிதர்சனமான அவதானிப்பு , பெரும்பாலும் நீங்கள் முன்வைப்பதை ஏற்றுக்கொள்கிறேன். கீழே குறிப்பிட்ட ஒன்றைத் தவிர
//இலக்கியம் அற உணர்வை கூர்மைப்படுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். நேர்மையும் கருணையும் வஞ்சமும் கோபமும் காமமும் – படைப்பாளியின் எல்லா குணங்களும், அவரவர் ஆளுமைக்கேற்ப, விழைவுகளுக்கு ஏற்ப, கூர்மைகொள்ள வாய்பிருக்கிறது. இலக்கியவாதி/ வாசகன் தன் நிலைபாடை காத்துகொள்ளும் தர்க்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.//
கணிப்பொறி வடிவமைப்பியலில் use cases என்று ஒரு பதம் அடிக்கடி புழங்கிவரும் , அதாவது ஒரு பொருளை அல்லது அமைப்பை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் / பயன்படுத்தவியலும் என்பதாக , மிக அதிக use cases ஜ உள்ளடக்கிய வடிவமைப்பே சிறந்த வடிவமைப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்.அதே போல அந்த வடிவமைப்பின் ஆகச்சிறந்த சாத்தியங்களை வெளிக்கொண்டு வரும் பயன்பாடே சிறந்த application ஆக கொள்ளப்படும்.

சம்மட்டி ஒரு ஆகச்சிறந்த design அதைக்கொண்டு நாம் எதை உடைக்கிறோம் என்பதிலேயே அந்த வடிவமைப்பில் பொதிந்துள்ள ஆகச்சிறந்த possibility வெளிப்படுகிறது .
இலக்கியத்திற்கு எண்ணிலடங்கா use cases உண்டு ஆனால் கேள்வி நாம் ஒரு வாசகனாக அதன் அகச்சிறந்த சாத்தியத்தை தொட விழைகிறோமா என்பதே.
நமது limtation ஜ இலக்கியத்தின் limitation ஆக பார்க்கக்கூடாது . ஆம் , கண்டிப்பாக நம் அணைவருக்கும் போதாமைகள் / எல்லைகள் உண்டுதான் ஆனால் அந்த போதாமைகளின் எல்லைக்குள் நாம் இலக்கியத்தின் சாத்தியங்களை சுருக்க முயலக்கூடாது என்றே நினைக்கிறேன் ,அது நல்லதோர் வீணை :)
ஆம் இந்த ஆகக்சிறந்த சாத்தியம் என்பது லட்சியவாத நோக்குதான் , ஆனால்
பேரிலக்கியங்கள் அதுவன்றி தோன்றிவரமுடியாது.
நமக்குள்ளும் / நம்மைச் சுற்றியும் நிலவும் நிலைப்பாட்டை (statusquo )
தக்கவைத்துக்கொள்ள அதை தற்காக்கும் தர்க்கங்களை வளர்த்துகொள்ள இலக்கிய அறிதலை கையிலெடுப்பது சுள்ளாணி அடிக்க சம்மட்டி கையிலெடுப்பது போலதான்.

சரி , அதுவும் சம்மட்டியின் ஒரு பயன் தான் மறுக்கமுடியாது ஆனால் சுள்ளாணி அடிப்பதால் சம்மட்டி சுத்தியலாகிவிடாது :)

கார்த்தி
3

 


ஆதியிலிருந்தே மக்களை அறம் ( சமூக வாழ்நெறி ) சார்ந்து இயங்க , மக்களை பயிற்றுவிக்க கதைகளை ( இலக்கியம் ) பயன்படுத்தியிருக்கிறார்கள் . உதாரணம் ராமன் ( அறமூர்த்தி ) .

ஆழ்நதியை தேடி எனும் நூல் இதையே முன்வைக்கிறது .

ஆனால் நவீன இலக்கியம் இதிலிருந்து விலகி நடந்தது , இதன் பிரதான நோக்கு மனித செயல்பாடுகளின் பின்னுள்ள மனநிலைகளை ஆராய்வதில் இருந்தது . இது சரிதவறுகளை மீறிய ஒன்று . மிகசிறந்த உதாரணம் கோபி கிருஷ்ணனின் தூயோன் எனும் சிறுகதை .
கதைகள் நம்மை மாற்றுமா என்றால் மாற்றும் , ஆனால் அதற்கான அடிப்படை மனநிலை கொண்டவன் இடத்தில் மட்டுமே அது நிகழும் . கதைகள் அந்த விழுமியம் நோக்கி நடக்க நம்பிக்கையும் உந்துதலையும் தரலாம் .

கார்த்திக் ( ஆஸ் ) சொன்னது போலதான் . கதைகளை நம்முள் எவ்வளவு அனுமடிக்கின்றோமோ அந்தளவு நம்மை மாற்றும் .
ஆனால் நிதர்சனம் கதைகளின் விழுமியத்தையும் , நம் வாழ்வின் செயல்தளத்தையும் நாம் இணைப்பதில்லை , ஒரு எல்லை வரை அதுவே சரியான வாசிப்பும் கூட .
( கதைகளை அதன் உணர்வுகளுக்குள் போய் வாசிக்காமல் வெளியில் நின்று கவனிக்கும் தன்மையில் வாசிப்பது ) .

ராதாகிருஷ்ணன்

4

 

index
சுரேஷ் அவர்கள் சொன்னது போல் இந்த தலைப்பில் தளத்தில் ஏகப்பட்ட கட்டுரைகள் இருக்கும் (ஆமாம், எந்தத் தலைப்பில்தான் இருக்காது?! தெரு முழுக்க புள்ளிகள் முன்னரே வைத்தாயிற்று. எப்போது எந்த மாதிரி கோலம் வேண்டுமோ அப்படிப் போட்டுக்கொள்ளலாம்! எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும் “தம்பி, அங்கன போப்பா, பத்து லிங்க் இருக்கும் முதல்ல அத்தனையும் படி; அப்புறமும் பேசறதுக்கு ஏதாவது இருக்குன்னா இங்கன வா!”)

இருந்தும், பொதுவாக ஒரு துறையிலுள்ள SOPs (Standard Operating Procedures) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் (உதா: குறைந்தது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை) பரிசீலனை செய்யப்பட்டு, ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு மேம்படுத்தப்படுத்துவது போல் (review and revised, if required) இது போன்ற கேள்விகள் அவ்வப்போது கேட்கப்பட வேண்டும்.

ராதாவும் சுனிலும் குறிப்பிட்ட தொகுத்தலே எனதும்:
// உண்மையில் நம் அடிப்படை இயல்பு மாறாது , அதில் நுட்பமானவர்களாக வேண்டுமானால் இலக்கியம் நம்மை மாற்றியிருக்கும் .//
//இலக்கியம் அற உணர்வை கூர்மைபடுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன்.//
இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய இடம். நீங்கள் அடிப்படையில் யாரோ, அதை இன்னும் நுட்பமாக, செறிவாக ஆக்கிவிடும். எனவே be careful what you wish for!

மற்றபடி இலக்கியம் அறவுணர்வை தருகிறதா, ஏற்றிவிடுகிறதா இல்லையா என்பதை அசாமியின் கடந்த ஏழு ஆண்டு வருமான வரி அறிக்கையை வைத்தே சற்று புரிந்து கொள்ள முடியும், நான் அவசரமாக எந்த முடிவிற்கும் வந்து விடுவதாக இல்லை. இலக்கியத்தின் மீது அந்த “பழியைப்” போடுவதாக இல்லை.

வென்றெடுக்கும் வேகம்: வென்றெடுப்பது என்பது புற உலக(!) வெற்றிகளான பணம், புகழ், பதவி என்ற முப்புள்ளிகளைத்தான் திரு.செல்வேந்திரன் குறிப்பிடுகிறார் என்று என்று எடுத்துக்கொள்கிறேன்.
இலக்கியம் வாசிக்கும் நேரத்தில், அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலும் அலுவல வேலைகள்/ ஷேர் மார்க்கெட் நிலவரம் போன்ற “உருப்படியான” வேலைகளைச் செய்தால் மேலே குறிப்பிட்ட முப்புள்ளிகளை அடையலாமே என்று கேட்கிறார்.

வெல், நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பது நம்மிடம்தான் இருக்கிறது. முப்புள்ளிகளை அடைவதற்கான மேம்படுத்துதலை உங்கள் வாசிப்பு செய்யும் என்றே தோன்றுகிறது. நேரத்தை நீங்கள்தான் ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.

இலக்கியம் வீட்டுற்கு வருவதைப் பற்றி:
தடாலடியாக இருந்தாலும்…ஏன் வரவேண்டும்? வீட்டுத்தலைவன் வாசிப்பதால் வீட்டிலுள்ள அனைவருக்கும் அந்த “தணியாத” தாகம் வந்துவிடவேண்டுமா?
பள்ளி, கல்லூரி நாட்களில் இலக்கியம் இயல்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் வீட்டிலும் (குறைந்தது பள்ளி வயதில்). இவற்றைத்தாண்டி உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு மேல் ஆர்வம் இருக்குமானால் மிக்க சந்தோஷம். இல்லை, அவர்களுக்கு வேறு ஒன்றில் பற்று இருக்குமானால் அதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் அதில் தொடரட்டும் என்பது என் நிலைப்பாடு.

சிவா கிருஷ்ணமூர்த்தி

 

5
அன்பு சிவா ,

நான் application என்பதை வினைச்சொல்லாகவே குறிப்பிட்டுள்ளேன்.சுத்தியல் சம்மட்டி உதாரணமே இதற்குத்தான் முன்வைத்தேன் . தேவையை பூர்த்தி செய்யும்தான் ஆனால் வைக்கப்புல் லோடு அடிக்க Porsche எதற்கு :))

ஆனால் இந்தக் கோணம் (தேவைகளை பூர்த்தி செய்வது ) திரும்ப திரும்ப முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது, .அதாவது இது எனக்கு எப்படி ஒத்துவரும் , எனக்கு எப்படி பயனாகும் , என் நம்பிக்கைகளுக்கு இயைந்து வருமா என்னை நோக்கி வரும் விஷயங்களில் நான் எதை கண்டடைகிறேன் எதைத் தேர்கிறேன் என்பதாக.இவ்வகை நோக்கின் பலம் அது வெகு ஆழமாக நடைமுறையில் கால் ஊன்றி நிற்பதே.இது ஓரளவு இயல்பானதே , இதை நான் முற்றும் குறைகூறவும் இல்லை .நமது சுயத்தை மையமாக்கி நம்மைச்சுற்றி எழுப்பப்படும் அரண் எப்படி ஒரு தருணத்தில் கண்ணாடிச்சுவராக , நமக்கே ஒரு limitation ஆகிவிடுகிறது என்பதையே முன்வைக்கிறேன்.

இந்த சுயநிர்ணய எல்லைகளைத்தாண்டி இலக்கியத்தின் மூலம் தொடக்கூடிய ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்கிறேன் .இதை நான் moral high ground ஆக வைக்கவில்லை அப்படியான் இடத்திலிருந்து சொல்வதாகவும் நினைத்துக்கொள்ளவில்லை. அறம் என்பதைக்கூட விட்டுவிடுவோம் , பேரில்க்கியங்கள் முன் வைக்கும் ஆகச்சிறந்த மானுட சாத்தியங்களுக்கு இன்னும் கொஞ்சம் கதவைத்திறந்து வைப்போம் என்றே சொல்கிறேன்.

எழுத்தாளர்களை விட்டுவிடுவோம் ஒரு இலக்கிய வாசகன் ஒரு வெகுஜன வாசகனிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறான் ? அவனும் இப்படித்தானே சொல்லுவான் என்ன இலக்கியவாசகன் தன்னை கொஞ்சம் elitist ஆக முன்வைக்கலாம் ஆனால் அதே குதிரையை வெவ்வெறு குண்டுச்சட்டிக்குள் ஓட்டி என்ன பயன் ?நமக்கு நாமே உருவாக்கி இருக்கும் comfort zone ஜ விட்டு அவ்வப்போதாவது எட்டிப் பார்க்கலாம் என்கிறேன்.

நமது குழும விவாதங்களையே எடுத்துக்கொள்வோம் , எவ்வளவு விவாதங்களை , முரண்படல்கள் இதில் எவ்வளவு முறை நாம் நம்பும் , புழங்கும் comfort zone விட்டு வெளியெ வந்து மாற்று கோணத்தில் இருந்து பார்க்கவோ விவாதிக்கவோ செய்திருக்கிறோம் , அல்லது அவ்வகை கருத்துக்களை பரீசீலித்திருக்கிறோம் ?

படைத்தல் படித்தல் இவற்றோடு பண்படுதலையும் சேர்த்தே நான் இலக்கியச் செயல்பாடாகக் கொள்வேன்.இலக்கியச் செயல்பாடே அது இயங்கும் சமுதாயத்தின் நர்சரி இங்கு விதைக்காத நாற்று வேறெங்கும் முளைக்காது .
இதை எழுதும்போதே நம் சூழலில் பொதுவாக புழங்கிவரும் லட்சியத்துவ அவநம்பிக்கையையும் கருத்தில் கொண்டே எழுதிகிறேன் . அந்த மனநிலையே ஒருவகையான self fulfilling prophecy தான்
இருந்தாலும் இது சொல்லப்பட வேண்டும் , சொல்லிவிட்டேன் :)
கார்த்திக்

முந்தைய கட்டுரை‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு
அடுத்த கட்டுரைஎழுதுவதன் ரகசியம்:ஒரு கேள்விபதில்