இது போன தலைமுறை மனநிலை எனத்தோன்றுகிறது ,
இன்றைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளை வாசிக்கச்சொல்லி கொடுமைப்படுத்துவதைத்தான் பார்க்கிறேன் . ஆனால் அப்படி சுலபமாக இலக்கியம் படிக்கும் சுவை வராது என்பதால் 100 இல் ஒருவரை மட்டுமே படிக்கவைக்க இயல்கிறது .
அடிப்படை வித்தியாசம் நிகழ்ந்திருப்பது ஒன்று கண்ணுக்கு தெரிகிறது . வாசகர்களின் குழந்தைகள் ,குடும்பத்தினர் இலக்கியவாதிகளை வாசிக்காவிட்டாலும் அவர்கள் மீது பெருமதிப்பை அடைகிறார்கள் , வெட்டி ஆட்கள் என்ற ஏளனம் மறைந்துவிட்டது.
தொழில் மனநிலை குறித்து..
நான் விருதுநகர் தொழிலதிபராக இருப்பின் நிச்சயம் தேங்காய் எண்ணையில் 40% கலர் மணம் இல்லாத ரப்பர் ஆயிலை கலக்க மனம் வராது ,இலக்கியம் தரும் அறம்
அரங்கசாமி
2
//வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா// என்ற கேள்விக்கு ஒரு வகையில் ஆமாம் என்று சொல்லலாம். வெற்றியின் அளவுகோல் பொருட்செல்வம், சமூக அந்தஸ்து என ஏனைய உலகம் வகுத்திருக்கும் போது இலக்கியப் பரிச்சயம் வெற்றியின் அளவுகோலை மனம் சொல்லும் கூற்றினை ஒரு கருப்பொருளாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும். புத்திக்கும் மனதுக்கும் விவாதம் தேவையே இல்லாத தருணங்களில் அது அரங்கேறிக்கொண்டிருக்கும்.
என் சொந்த அனுபவத்தில் எப்போதெல்லாம் நான் ஒரு இலக்கினை நோக்கி ஓடுகிறேனோ அந்த ஓட்டத்தின் முடிவில் நான் நிர்ணயித்ததை தவிர பிறிதொன்றுதான் நடந்திருக்கும். காரணம் என் இலக்கில் இல்லாத ஒன்றின் மீது மன இசைவு நடந்திருக்கும். கறாராக பேசி வேலையை வாங்கும் கிளையண்டின் பாக்கெட்டில் இருக்கும் தையல் விட்டுப் போன லேடீஸ் கர்சீப், சக ஊழியன் தனக்கான குழியை வெட்டும் பிரக்ஞை இல்லாமல் அவனிடமே குடும்பக் கஷ்டத்தை பகிரும் எனக்கு ரிப்போர்ட் செய்யும் ஐ.டி பையன் என இலக்கியக் கச்சாப் பொருள் ஏதாவது கண்ணில் சிக்கும், மனம் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடும். தேவை இல்லாத ஒரு பச்சாதாபம், கரிசனை உண்டாகும். புத்தி எடுக்க வேண்டிய முடிவுகளில் மனம் தன் பங்கை ஆற்றுவது எனக்கு நிறைய நடந்துள்ளது. தவிர்க்கவும் முடிந்ததில்லை. இது இலக்கியம் படிக்க ஆரம்பித்துதான் வந்ததா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிக்க ஆரம்பித்தபின் அதன் தாக்கம் அதிகமாகி உள்ளது எனலாம். இலக்கியம் தரும் அறத்தின் தாக்கம் போக மேல் சொன்னவை எனக்கு நடக்கும்.
கிஷோர் ஸ்ரீராம்
3
இலக்கியம் ஐரோப்பா போல நம்நாட்டில் இன்னும் லௌகிக மதிப்பை பெறவில்லை. லௌகிக மதிப்பை பெறாத எந்த விசயமும் பெரும்பான்மை பெண்கள் மனதில் நுழைவது சிரமம்.
இளம் வயதில் இலக்கியத்தை தவறவிடுவதால், நடு வயதியலோ அதை தாண்டியோ, அதன் மதிப்பு தெரிந்தாலும் இணைவது சிரமாகிவிடுகிறது. ஆனால் அறுபதை தாண்டியவர்கள் யாரேனும் அறிமுகப்படுத்தினால் உடனே இலக்கியத்தில் இணைந்து விடுகிறார்கள் ஆனால் அவர்களின் செயல்பாடு வயது போக்குவரத்து சிரமம் ஆகியவையால் வெளியில் தெரிவதில்லை
//வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா// என்ற கேள்விக்கு நிச்சயம் ஆமாம் என்ற பதில்தான் உண்மை. ஏனென்றால் வேகத்தின் விளைவுகளையும் உணர்த்துகிறது.
ஆனால் சீரான முன்னேற்றம், சறுக்கலில் இருந்து மேலேறுதல், போன்ற சமயங்களில் மனோதைரியத்தில் இலக்கியத்தின் பங்கு அதிகம்
பிரகாஷ் நடராஜன்
*
வென்றெடுக்கும் வேகத்தை(அற மீறல் இல்லாத போது) இலக்கியப் பரிச்சயம் கூர்மை கொள்ள வைக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு உயர் இலக்கிய ஆர்வலர்
1. மொழியாளுமை கொள்கிறார். சொற்ப சொற்களில் கூற வந்ததை விளக்கி விடுகிறார். அவரின் சொற்கள் ஆழமும் கூர்மையும் கொள்கின்றன. (Communication ability)
2. எச்சூழலையும் கூர்ந்து அவதானிக்கிறார். மிகச் சுலபமாக பிரச்சனையின் ஊற்று முகத்திற்கு சென்று விடுகிறார். (Critical thinking/problem solving)
3. மிகக் கொந்தளிப்பான சூழ்நிலையிலும் நிலைத் தன்மையுடன் இருக்கிறார்(எம்புட்டு பாத்திருக்கேன் என்ற புன்னகையுடன்)
இரண்டு அடி எடுத்து வைத்து அடிப்பது/killer instinct, அறமீறலோடு கூடும் போது, அவ்வேகத்தைத் தடுப்பதே இலக்கியத்தின் பணியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இலக்கியம் சமுதாயத்தின் conscience keeper.
நம் மக்கள் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்காததன் காரணம்- இலக்கியத்திலுள்ள குறைபாடால் அல்ல. Time management/multi tasking பயிற்றுவிக்கத் தெரியாத்தால். பொருளியல் வெற்றி ஒன்றே வெற்றி என்று நினைப்பதால். மேற்சொன்ன Life skills க்கு முக்கியத்துவம் அளிக்காத்தால். நம் மக்களுக்குத் தேவை ஒரு paradigm shift.
4
செல்வேந்திரன் சொன்ன மூன்று கேள்விகளுமே சுவாரஸ்யமானவைகள். இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில் தீவிர இலக்கியவாதத்திற்கும் சாதாரண இலக்கிய ஆர்வத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லலாம்.
நான் சந்தித்த தீவிர இலக்கியவாதிகள் லெளகீக வாழ்வில் பின் தங்கியவர்களாக அல்லது தோல்வியடைந்தவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அதேவேளையில் தொடர்ந்து தீவிரமாக இலக்கியத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து இலக்கியத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை சேகரித்து அதை விவாதிக்கும் பொருட்டும், தன் தொழிற்சார் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நான் எந்த நிர்வாகப் பதவிகளையும் வாங்க முயற்சித்தது இல்லை. அதுவே என்னை நோக்கி வரும்போதெல்லாம் தவிர்த்து வந்திருக்கிறேன். நிர்வாகத்துறை நம் இலக்கிய வாசிப்பை/நோக்கத்தை கட்டுப்படுத்திவிடும் என்கிற எண்ணத்தால் தான். பழைய அலுவலகத்தில் ஒருவர் இதேபோன்று இருந்தார் அவரும் சொன்ன காரணங்கள் இதுவே.
டிவியை தொடர்ந்து காணும் குழந்தைகளின் அறிவுத்திறன் குறைந்துவிடும் என்கிற பயத்தால் சில பெற்றோர்கள் வாசிப்பை ஊக்குவித்தாலும், பெரும்பாலான மக்கள் வாசிப்பு தேவையற்ற ஒன்றாக, சாமியாராக போக நினைக்கும் ஒருவரைக் கண்டு அவரை சுற்றியுள்ளவர்களும் இந்த சமூகம் பயப்படுவது மாதிரிதான் பயப்படுகிறார்கள்.
ஒரிருவரை தவிர தீவிர இலக்கியவாதிகள் வீட்டினுள் இலக்கியம் வருவதை உவப்போடுதான் ஏற்கிறார்கள். ஆனால் அவரை சுற்றியுள்ளவர்கள் இலக்கியத்தை வெறுக்கும் நிலையில் இருப்பதால் அது பொதுவாக நடப்பதில்லை. பெண்கள் இலக்கிய நிகழ்ச்சிகளை கலந்துக் கொள்ள விரும்புவதில்லை என்பதே முக்கிய காரணம். தண்ணியடிக்கும் ஒருவரது வீட்டில் எப்படி அது குழந்தைகளிடம் மறைக்கப்படுகிறதோ அப்படி மறைக்கப்படுகிறது.
அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது என்பதை ஒவ்வொரு வாசகனுக்கு புரிந்து இருக்கும் போது அது போதைதான்.
மூன்று கேள்விகளுக்கு ஆம் தான் பதில்.
கே ஜே அசோக் குமார்
5
செல்வா ,
இலக்கியம் நாம் சென்றுசேருமிடமோ , அங்கு சென்று சேருவதற்கான வழியோ கூட அல்ல . அது ஒரு அறிதல்முறை.ஏனைய அறிதல்முறைகளைப் போலவே இலக்கியமும் அதற்கே உரிய பலமும் போதாமையும் கொண்டது.
இலக்கியத்தில் எழுத்தின் மூலம் , கற்பனையின் மூலம் நம் inner sensibility திறந்துகொள்கிறது .இது இசையிலும் , கலையிலும் ,தத்துவத்திலும் , அறிவியலிலும் ஆன்மீக சாதகத்திலும் கூட வெவ்வேறு முறைகளில் நிகழக்கூடியதெ .Neutrino க்களை பற்றி பேசும் ஒரு அணு விஞ்ஞானியின் பரவசம் வெண்முரசின் மிகச்சிறந்த வாசகனின் பரவசத்திற்கு ஒத்ததே .எனவே அறிதல் முறைகளை விட அவைகளின் மூலம் நம்முள் நிகழும் மாற்றம் எத்தகையது என்பதே சரியான கேள்வியாக இருக்கக்கூடும்.
இலக்கியம் நம் மனதில் உள்ள வடிவற்ற விஷயங்களை மொழியால் வடிவம் கொள்ள வைக்கிறது ஒரு பெயரை அளிக்கிறது .வடிவம் கொண்ட “ஒன்று” உணர்வுகள் என்ற தளத்திலிருவது வார்த்தைகள் மூலம் சிந்தனை என்ற தளத்திற்கு மாறுகிறது. நமக்கான சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளும் திறமையே நம் அகவளர்ச்சியின் முதல் படி. எனவே இலக்கியத்தின் influence ஆழமானது ஆனால் subtle ஆனது .இவ்வாறு இலக்கியத்தின் மூலம் ஞானத்திற்கு நம்மை திறந்துவைக்கும் பொழுது நம்முள் நிகழும் (நிகழ அனுமதிக்கும் ) மாற்றங்களையே ‘பண்படுதல்’ எனகிறோம்.
எனவே சரியான கேள்வி நம் அகம் பண்படுதல் ( இலக்கியம் மூலம் )லெளகீக வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்ட ஒரு தடையாக இருக்குமா என்பதே.
எளியவிடை – ஆம் , ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதே.
இலக்கியம் மூலம் நம் மனம் அடைய சாத்தியமான விரிவும் பக்குவமும் லெளகீகம் தொழில் போன்ற தளங்களில் மேலும் சிறப்பாக செயல்படவே உதவும்.இன்னும் சொல்லப் போனால் வாழ்வதை கற்க வாழ்க்கையையே பாடமாகக் அணுகும் இலக்கியத்தை விட சிறந்த வழி வெறென்ன இருக்க முடியும் .
குழப்பம் இங்கு “வென்றெடுக்கும் வேகம்” என்று எதைக்கொள்கிறோம் என்பதையே .Success / Achievement / Satisfaction இவை அனைத்திற்கும் இடையே மெல்லிய வேறுபாட்டை உணர உதவுவது இலக்கியமே .ஆம், பண்படுதலின் ஒரு பகுதியாக இலக்கியம் நம்முள் அறத்தை விதைக்கிறது .ஆனால் அந்த பிரக்ஞையே நம் மனதில் ethical / moral dilema க்களையும் நிகழ்த்துகிறது.
அறவுணர்வு வேறு அறச்சிக்கல்களை கையாளும் பக்குவம் வேறு.பிரச்சனை நாம் இவ்வகை அறச்சிக்கல்களை எதிர்கொள்கையில் நேரும் போதாமைகள் தான் என்று ஊகிக்கிறேன்.இவ்வகை அறச்சிக்கல்களை கையாள்வது எளிய விஷயமே அல்ல அது நம் ஒவ்வொரு செயலிலும் எடுக்கும் முடிவிலும் நம் முழு கவனத்தையும், நேர்மையையும், உறுதியையும் கோருவது. இது ஆரம்பத்தில் பெரும் அலைகழிப்பையும் ஊசலாட்டத்தையும் எற்படுத்தும் ஒரு speed breaker ஆகவே தோன்றும்.
எனவே இதை கையாள நாம் எளிய பிளவை நம்முள் உருவாக்கிக்கொள்கிறோம் , இலக்கியம் வேறு நடைமுறை வாழ்க்கைவேறு என்று .
அதே போல லெளகீகத்திலும் , கருப்பு வெள்ளை , சரி தவறு , முடியும் முடியாது என்றெல்லாம் சில எளிய சமன்பாடுகளை,சட்டகங்களையும் உருவாக்கிக்கொள்கிறோம்,
இதில் சிக்கல் என்ன்வென்றால் இந்தப் பிளவு இலக்கியத்தின் மூலம் நம்முள் நிகழும் பண்படுதலையும் கூர்மையையும் நம் அந்தரங்க அகவட்டத்திற்குள்ளேயே முடக்கிவிடுகிறது .இப்படி முடக்கப்பட்ட அறிதல் நம் நடைமுறை ஆளுமையில் குறிப்பிடத்தகுந்த எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.நம் அந்தரங்கத்தின் ஒற்றைச்சாளரத்தை இலக்கியத்திற்கு மட்டுமே திறக்கிறோம். எனவே இலக்கிய என்பது ஒரு ரகசிய hobby என்ற அளவுக்கே ஒடுங்கி விடுகிறது.
இதற்கு ஒரு மாற்று உள்ளது அது இலக்கியத்தின் அறிதலுக்கும் லெளகீக வாழ்க்கைக்கும் இடையே ஒரு இணைவை (integration) உண்டாக்குவது.இலக்கியத்தின் மூலம் அடைந்த பண்படுதலை நடைமுறை அறிவுடன் சேர்த்து நம் திசையை தேர்வது அது குறித்த முடிவுகளை எடுப்பது.
இந்த இணைவுக்கு பழகுவது கடினம்தான் , தொடர் விழிப்புணர்வும் அகவலிமையையும் கோருவது.ஆழமான சுயவிமர்சனத்தையும் அதன் மூலம் நம் போதாமைகளையும் , சிறுமைகளையும் நேர்கொண்டு காணச்செய்வது .உண்மையில் இலக்கியத்தின் மூலம் முதலில் வென்றெடுக்கப்படவேண்டியது நம்மைத்தான் !
இந்த சுய வென்றெடுத்தலுக்குப் பிறகு நம் ஒவ்வொருவரின் நோக்கிலும் வாழ்க்கையில் எதை வென்றெடுப்பது எப்படி வென்றெடுப்பது என்ற எண்ணங்கள் மேலும் துல்லியமும் தெளிவும் கொண்டுவிடும்.
ஜெ இலக்கியவாதிதானே , அவர் வென்றெடுக்கவில்லையா !
ஒரு விளையாட்டு வீரனை அவன் நடையைக்கொண்டே கண்டுபிடித்துவிடலாம் அது போல ஒரு இலக்கிய வாசகனை அவன் புரியும் ஒரு சிறு செயலையோ முடிவையோ கொண்டு கண்டுபிடிக்க முடிய வேண்டும்.
கார்த்திக்
6
இலக்கியத்தின் (வாசிப்பின்) பயன் மதிப்பு என்ன என்பது பற்றி (இந்தத் தலைப்பிலேயே கூட) ஜெ கிட்டத்தட்ட ஒரு 20 கட்டுரைகளாவது எழுதியிருப்பார். வேறு வேறு தலைப்புகளில் சந்தர்ப்பங்களில் எவ்வளவோ பேசியும் எழுதியும் இருக்கிறார். தெளிவத்தை ஜோசப்புக்கு பரிசளித்த விழாவின் ஒரு அமர்வில், இலக்கியத்தால் சமூகத்துக்குப் பயன் உண்டா? என்று கேட்ட ஒருவருக்கு ஜெ விட்ட டோஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனாலும் இந்தக் கேள்வி நம்மிடையே எழுந்து கொண்டுதான் இருக்கிறது.தவறில்லை.சக்கரத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடித்தால்தான் என்ன?
ராதாக்ருஷ்ணனும் கல்பனா ஜெயகாந்த் ராஜுவும் கார்த்திக்கும் சொல்வதில் நான் உடன்படுகிறேன்.தனிப்பட்ட அனுபவத்திலிருந்து ஒன்று சொல்ல முடியும். இலக்கியம் என்றல்ல பரந்துபட்ட வாசிப்பு, நிச்சயமாக சக மனிதர்களை நன்றாகப் புரிந்து கொள்ள, நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்து உணர்ந்துகொள்ள நிச்சயம் உதவுகிறது. மேலும் அலுவலக வாழ்வில், நேர்மைக்கும், கடமை உணர்வுக்கும் சோதனை நேரும்போதெல்லாம் படித்த புத்தகங்கள், அவை எனக்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வாழ்வின் மகத்தான தருணங்கள் என்னை மீட்கின்றன.இவை அநேகமாக என் அன்றாட அனுபவங்கள், இன்று கூட அப்படி ஒரு தருணத்தைத் தாண்டி வந்தேன். .40 வருடங்களுக்கும் மேலாக நான் கிட்டத்தட்ட ஒரு நாள் விடாமல் ஏதேனும், படித்துக் கொண்டேயிருக்கிறேன். என் பதின் பருவத்திலிருந்து சோவின் துக்ளக் வாசகன். நான் எந்தத் தருணத்திலும், லஞ்ச ஊழலில் ஈடுபடாதவனாக இருப்பேன் என்று வகுத்துக் கொள்வதற்கு,அந்நாளைய துக்ளக்குக்கும் சோவுக்கும் பெரிய பங்குண்டு.
கண்ணில் தெரியும் குறைகளைத் தாண்டி மனிதர்களை பரிவோடு புரிந்து கொள்ள ஜானகிராமனும், மனிதர்களின் மனம் செயல்படும் விதங்களைப் புரிந்துகொள்ள ஆதவனும் ஜெயமோகனும்,என்றுதொடங்கி ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டே போக முடியும்.
வீட்டிற்குள் இலக்கியத்தைத் (எதையுமே ஓரளவுக்கு மேல்) திணிக்க இலக்கிய மனம் கொண்டவர்கள் விரும்பாமல் இருக்கும் போக்கே சமயங்களில் அவர்களின் மனைவி/கணவன், மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லாமற் போவதற்கு காரணமாகிறது. என்னை புத்தகம் வாசிக்க வேண்டும் என்று என் பெற்றோர் வற்புறுத்தியதே இல்லை. நானும் அப்படித்தான். ஏனோ நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன் (சமீபத்திய சந்திப்பு ஒன்றில் ஜெ எனக்கு வாசிப்புப் போராளி என்ற பட்டத்தை வழங்கினார் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்). என் மனைவியும்,பெண்களும் வாசிப்பதில்லை. பெண்களுக்கு நான் ஒரு கலையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன்.அதை பேணுவதோ விடுவதோ அவர்கள் பாடு என்றுதான் நினைக்கிறேன்.பெண்களைப் பொறுத்தவரை நம் சூழலில் அவர்களின் வேலைப் பளு அவர்களுக்குக் குறைந்த பட்ச free time ஐ மட்டுமே அளிக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் தீவிரமாகப் படிப்பதற்கு அது ஒரு தடை.
சுரேஷ் கோவை.
7
ஒரு முறை நீயா நானாவில் கவிஞர் விக்ரமாதித்தியன் மகன் பங்கு கொண்டார். அதில், அவர் அம்மா,தன் அப்பாவை உதாரணம் காட்டி, பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இலக்கியத்தில் இருந்து விலக்கி வைத்ததாக கூறினார். ஏதோ ஒரு விதத்தில் இலக்கியம் கவிஞரது லௌகீக முன்னேற்றத்தை தடுத்துவிட்டது என்று அந்த குடும்பம் நினைத்திருக்கலாம்.
ஒருவர் அடைய சாத்தியமான லௌகீக வெற்றியை இலக்கியத்தில்தீவிரமாக ஈடுபடுவதின் மூலமாக இழக்கிறார் என்றே படுகிறது. இது வரையிலான தமிழ் எழுத்தாளர்களில் பொருளாதாரத்தில் வெற்றி அடைந்தவர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ணி விடலாம். அரசாங்க வேலையில் இருந்தவர்கள் பிழைத்தார்கள்.
படைப்பாளியாக இருப்பவர்கள் தங்கள் மன சக்தியின் பெரும் பகுதியை இலக்கியத்திற்காக செலவழித்தே ஆக வேண்டும். இதில் வாசிப்பு, சிந்தனை, எழுத்து என்று படைப்புக்கான கச்சாப் பொருளை நிரப்பும் எல்லாமும் அடங்கும். ஆபிசில் நல்ல பேர் எடுத்து, ப்ரோமோஷன் வாங்கி பின் நாவலாசிரியராகவும் இருப்பதெல்லாம் நடக்காது என்றே நினைக்கிறேன்.
வெறும் வாசகராக நீடிப்பவர்களுக்கு கூட, வாழ்க்கையை சற்று ‘வெளியில்’ இருந்து பார்க்கும் ஒரு மனநிலை கூடி விடுகிறது என்றுபடுகிறது. இது சில விதங்களில் பயனளிப்பதாக இருந்தாலும், அக்மார்க் லௌகீகவாதியின் செயல் மூர்க்கம் இவர்களுக்கு அமைவதில்லை.
மற்றபடி நிர்வாகத்தில் நெகிழ்ந்து போய் முடிவெடுக்க முடியாமல் போய் விடுகிறது என்பதெல்லாம் வெறும் அறக்குழப்பம் தான் என்று ஜெ ஒரு பதிலில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.
பிரபு ஆர்