மரபை மறுஆக்கம்செய்தல்

8bc98adfb6559580a26938c2b02bc605

திரைப்படங்களில் பணியாற்றுபவன் என்ற வகையில் எனக்கு ஓர் அவதானிப்பு உள்ளது. தொண்ணூறுகளில் வரைகலை [graphics] முறை சினிமாவின் முக்கியமான கவர்ச்சியாக ஆனபோது திரையில் எதையும் காட்டலாமென்ற நிலை வந்தது. அதுவரை நாடகத்தனமாக செட் போட்டு எடுக்கப்பட்டுவந்த பல காட்சிகளை திரையில் உருவாக்க முடிந்தது

விளைவாக மிகைக்கற்பனை [fantasy] சினிமாவில் பெருகியது. அறிவியல்புனைகதைகள் ,காமிக்ஸ்கதைகள் போன்ற புதிய புராணங்கள் அதிகமாகச் சொல்லப்பட்டன. சமூகக்கதைகளுக்கு ஒருவகை பண்பாட்டு எல்லை உள்ளது. மிகு கற்பனைக்கதைகளின் கனவுத்தன்மை மானுடகுலத்துடன் உரையாடுவது. மேலும் சினிமா என்பது எப்போதுமே இளவயதினரின் சிறுவர்களின் ஊடகம். அவர்களுக்கு மிகுகற்பனைகள் மிகப்பிடித்தமானவை.

அதன் இன்னொருபக்கமாக பழைய தொன்மங்களை மறு ஆக்கம் செய்யும் படங்கள் வரத்தொடங்கின. கிரேக்கத் தொன்மங்கள், கோதிக் காலகட்டத்து பேய்கள் சினிமாக்களில் பெருகின. புகழ்மிக்க தொன்மங்கள் நேரடியாகவும் மறுஆக்கம் செய்யப்பட்டும் திரையில் வெளிவந்து பெருத்த வரவேற்பைப்பெற்றன. அறிவியல்சார்ந்த புதிய புராணங்கள் உருவாக்கப்பட்டன, அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பு பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

மேலைநாட்டு மிகுகற்பனைச் சினிமாக்களின் தாக்கத்தால்தான் இந்தியாவில் புராணகாலத்தை மறு ஆக்கம் செய்யும் டிவி சீரியல்கள் பெருகின. அவற்றின் பெருக்கத்திற்கு இருகாரணங்கள். ஒன்று, தொழில்நுட்பம் அதற்கான சாத்தியங்களை அளிக்கிறது. இன்னொன்று அவற்றை இந்தியா முழுக்க கொண்டுசெல்லமுடியும். வட்டாரப்பண்பாட்டுவேறுபாடுகளின் தடை இல்லை. இந்திய சினிமா ஒப்புநோக்க மிகுகற்பனையையும் வரலாற்றையும் கையாளவில்லை. அதற்கான செலவினம் முக்கியமான காரணம். அவ்வகையில் இந்திய சினிமாவுக்கே தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி ஒரு பெரிய முன்னுதாரணம்

டிவி தொடர்கள் வழியாக இந்தியப்புராணங்கள் இளவயதினரிடம் அறிமுகமாகத்தொடங்கியது தொண்ணூறுகளில். இருபதாண்டுகளுக்குப்பின் அந்தத்தலைமுறையினர் வாசிப்பதற்காக புராணங்களை ஒட்டிய வணிக எழுத்துக்கள் உருவாயின. அவ்வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கிலக்கல்வி பெறுபவர்கள் என்பதனால் இந்திய ஆங்கில இலக்கியத்தில் புராணங்களுக்கான இடம் உருவானது என நினைக்கிறேன்.

இந்திய ஆங்கில இலக்கியத்தின் மிகப்பெரிய வாய்ப்பு என்பது அவர்களின் வாசகர்கள் இந்தியா முழுக்கப்பரவியிருக்கிறார்கள் என்னும் அம்சம். ஆனால் அவர்கள் பல்வேறு மொழி, வட்டாரப்பண்பாட்டுச் சூழலில் இருந்து வருபவர்கள் என்பது அதன் சிக்கல்.ஆகவே இந்திய ஆங்கில எழுத்தாளர்களால் வட்டாரத்தன்மையை வணிகரீதியாகக் கையாளமுடியாது. அவர்களால் நகர்சார்ந்த உயர்நடுத்தர வாழ்க்கையை மட்டுமே எழுதமுடியும். அதில் கற்பனைக்கு எல்லை மிகமிகக்குறைவு. காமம் மட்டுமே முக்கியமான பேசுபொருளாக இருக்கமுடியும்.

அதற்கு ஒரு பெரிய மாற்று என்பது புராணக்கற்பனை. அது இந்தியா முழுக்க செல்லக்கூடியது. வட்டார ரீதியாக எல்லை வகுக்கப்படாதது. ஆகவே அதைக் கையாளத்தொடங்கினர். இந்திய ஆங்கில எழுத்தின் புராணக்கற்பனை என்பது உண்மையில் இந்திய உயர்நடுத்தரவர்க்கத்தின் மேலோட்டமான ரசனைக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்யப்பட்ட மிகைக்கற்பனைக் கதைதான்.

இன்று புகழ்பெற்றிருக்கும் இந்திய புராணநாவல் எழுத்தாளார்களின் எழுத்தின் உள்ளடக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை 1. எளிய நேரடியான கதைகூறல்முறை கொண்டிருக்கும் .2 நவீனகாலகட்டத்தைச்சேர்ந்த ,செய்திகளை மட்டுமே வாசிக்கும் பழக்கம் கொண்ட ,பொது வாசகனுக்குரிய மொழிநடையில் இருக்கும் 3 மதம் சார்ந்தும் வரலாறு சார்ந்தும் அவனை ஈர்க்கக்கூடிய சில தர்க்கநோக்கு அவற்றில் இருக்கும் 4 ஆனால் அவனைச் சிந்திக்க வைக்க அல்லது குழம்பச்செய்யக்கூடிய சிக்கலான ஊடுபாவுகள் இருக்காது.

புராணங்கள் மறு ஆக்கம் செய்யப்படுவது இரண்டு காரணங்களுக்காகத்தான் இலக்கியமாகிறது. அவற்றில் உள்ளுறைந்துள்ள வரலாற்று நுண்குறிப்புகளை விரித்தெடுத்து நம் அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புவது. இரண்டு, அவை உருவாக்கும் குறியீடுகளையும் ஆழ்படிமங்களையும்கொண்டு வாழ்க்கையை தத்துவார்த்தமாக அணுகுவது. இரண்டையும் இந்த ஆங்கிலப்புராண மறுஆக்கங்கள் செய்வதில்லை. அவை புராணங்களில் உள்ள விந்தையை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன

இந்தியாவின் வட்டார இலக்கியத்தில் தொடர்ச்சியான ஒரு புராண மரபு இருந்துகொண்டிருக்கிறது. தலைமுறைதலைமுறையாக புராணங்கள் மறுபடியும் சொல்லப்படுகின்றன. வட்டார இலக்கியம் அந்த தொடர்ச்சியில் அமைகிறது. அதன் வாசகர்கள் அந்த தொடர்ச்சியில் வருபவர்கள் என்பதனால் அவ்வெழுத்து முழுக்கமுழுக்க ஆழ்மனம்சார்ந்த ஒரு பண்பாட்டு உரையாடலாக அமைகிறது

புராணங்களை திருப்பி எழுதும் வட்டாரமொழி எழுத்து என்பது இரண்டு உள்ளுறைகள் கொண்டது. ஒன்று, அது இந்தியாவின் பொதுப்போக்கில் தன் இடத்தை தேடிக்கண்டடைகிறது. இரண்டு, கலாச்சாரத்தின் ஆழ்படிமங்கள் [archetypes] வழியாக சமகாலத்தை விளக்கிக் கொள்கிறது.

தமிழில் நான் வெண்முரசை எழுதும்போது அது ஒரு பொழுதுபோக்குக் கற்பனையாக இல்லை. அது தமிழ் அடையாளம் என்பதை இந்தியப் பொதுப்பண்பாட்டிலிருந்து உருவாக்கி எடுக்கும் முயற்சி. புராணக்குறியீடுகள் வழியாக தமிழகத்தின் இன்றைய வாழ்க்கையை ஆழமாகப்புரிந்துகொள்ளும் முயற்சி. என் வெண்முரசு தொடர்நாவல்களை அவ்வகையில் நவீன இலக்கியப்படைப்புகளாகவே அடையாளம் காட்டுவேன். அவை மரபிலிருந்து தொடங்கி மரபை மீறிச்செல்கின்றன

என் நோக்கில் இலக்கியம் புராணங்களை ஏன் கவனிக்கவேண்டும்? அவை ஆழ்படிமவெளிகள், படிமத்தொகைகள் என்பதனால்தான். அவற்றின் கதைமாந்தரை மாற்றியமைத்து பார்ப்பது, இன்றைய அரசியலை அதன் மேல் போட்டுப்பார்ப்பது போன்றவை எவ்வகையிலும் பொருளற்றவை. அவை எளிய விளையாட்டுக்கள் மட்டுமே. அவற்றை எப்படி ஆழ்மனத்தை வெளிக்கொண்டுவர, தத்துவவிவாதங்களை நிகழ்த்த, பண்பாட்டை மறுஆக்கம் செய்ய நாம் கையாள்கிறோம் என்பதே முக்கியமான கேள்வி

 

முந்தைய கட்டுரைகனவில் படுத்திருப்பவன்
அடுத்த கட்டுரைதினமலர் – 1 ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-1