ஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்

 

Dalit-Tamil-Nadu-300x225

 

செய்தி அறிந்தபோது வெளியூரிலிருந்தேன். இடைவெளியில் கொந்தளிப்பாக ஒரு பதிவுஎழுதினேன். அதை நீக்கி மிதமாக எழுதப்புகுந்த இன்னொரு பதிவு மேலும் கொந்தளிப்பாக இருந்தது. கடைசியாக இது. இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஏற்கனவே சொல்லிவருவனவற்றை மீண்டும் தொகுப்பதைத் தவிர.

கலப்புமணம் சரியா தவறா, இச்சம்பவத்தின் சமூகப்பின்னணி என்னென்ன என்று இத்தருணத்தில் பேசும் ஒவ்வொருவரும் ஒருவகையில் சாதிவெறியையே பேசுகிறார்கள். மிக அடிப்படையாகப் பார்த்தால் இருவருக்கு வாழும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சமூகத்தின் பகுதியாக நின்றிருக்கும் ஓர் அமைப்பால், திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது. அது ஜனநாயகத்துக்கு மட்டுமல்லாமல் இத்தேசத்தின் சட்ட ஒழுங்கு அமைப்புக்கே விடப்பட்ட சவால்.

மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அந்தத் தனிநபரின் தரப்பை அன்றி வேறெதையும் சிந்திக்கமுடியாது. அந்த கொடிய அமைப்பை அரசும் சட்டமும் வேரோடு பிடுங்கி வீசவேண்டும். அது மட்டுமே அறம். அதுவே உண்மையான ஜனநாயகம். நம் சம்பிரதாயமான நீதியமைப்பு மிகச்சிலநாட்களிலேயே கொலையாளிகளை விட்டுவிடும். அதுவே எப்போதும் நடக்கிறது. அதிகபட்சம் ஒரிரு வருடச் சிறைத்தண்டனை, அவ்வளவுதான். அது தெரிந்தே அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால் வலுவான சமூகக் கண்டனம் உருவானால் நீதியமைப்பின் உளநிலைகளை மாற்றமுடியும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் சென்ற பத்தாண்டுகளில் அந்த மனநிலை நீதியமைப்பிடம் இருப்பதைக் காணமுடிகிறது. அந்தவகையான சமூகக்கூட்டு உள்ளத்தின் அழுத்தம் இவ்விஷயத்திலும் உருவாகியாகவேண்டும்.

ஆனால் இந்தக்கொலையை நாமறிந்த இடைநிலைச்சாதியினர் பெரும்பாலும் கொண்டாடிக் கொண்டிருப்பதை காண்கிறோம். இதுவே நடைமுறை உண்மை.மேலோட்டமான  ஃபேஸ்புக் கண்டனங்கள் அல்ல. அக்கண்டனங்கள் கூட மிக மிகக்குறைவே. அலட்சியமாகச் சிரித்து எழுந்து செல்லும் ராமதாஸின் அந்தக் கொலைப்புன்னகை , அதுவே நிஜம். அவரும் பெரியாரியராக சொல்லிக்கொண்டவரே. அவ்வமைப்பை உருவாக்கியபோது என்றும் பெரியார் ஓர் அடையாளமாக இருந்தார். படித்தவர்கள் கூட இத்தருணத்தில் அப்பட்ட்மான சாதிவெறியுடன் வெளிப்படுகிறார்கள் என்றால் நமக்கும் பிகாருக்கும் என்ன வேறுபாடு? இங்கே என்னதான் சமூகசீர்திருத்தம் நடந்தது?

பெரியதாக ஒன்றும் நடக்கவில்லை. எது நோயோ அது அடையாளம் காணப்படவே இல்லை. அந்த மனநோய்களை பேணிக்கொள்ள உதவியாக அந்தப்பழியை வேறெங்காவது சுமத்தும் ஒரு மனநாடகமே இங்கே பெரியாரால் அறிமுகம்செய்யப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது சுயபரிசோதனைக்கும் மாற்றத்துக்கும் தயாராக இல்லாத ஒரு  சாதிவெறி-பழமைவாதக்கூட்டத்தின் பாவலா மட்டுமே. இந்த அப்பட்டமான உண்மையை எப்போது நாம் அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ அங்கே தொடங்குகிறோம்

இனிமேலாவது நம் சமூகத்தை பீடித்திருக்கும் உண்மையான நோயை நோக்கிப்பேசுவோம். அதாவது நம்மை நோக்கி. நம் சாதிவெறியை நோக்கி. போலி எதிரிகளை நோக்கி கைசுட்டுவதை விடுவோம். நாம் இன்னும் பழங்குடிமனம் கொண்டவர்கள். இன்னும் நாகரீகமடையாத அரைமனிதர்கள். அதை ஒப்புக்கொள்வோம்.

 

முந்தைய கட்டுரைபுதுயுக நாவல்
அடுத்த கட்டுரைதேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்