«

»


Print this Post

தூக்கம்


1

திரு ஜெயமோகன்

நான் வெகு வழக்கமான வாழ்க்கை வாழ்பவன், 9-6 அலுவலக வேலை, 10-6 தூக்கம், தினசரிகள் (வணிக) வாசிப்பது, உங்கள் தளம் வாசிப்பது, சில சமயங்களில் புத்தகம் படிப்பது என்று.

சொல்லுமளவிலான எந்த கற்பனையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன். இருந்தும் என் நினைவில் கனவுகளின்றி நான் தூங்கியதாய் ஒரு நாளும் நினைவில் இல்லை, ஒவ்வொருநாளும் சரியாக தூங்காத அதிருப்தியுடன் தான் எழுகிறேன். மூளை அணையாத தூக்கம். இந்த அரைகுறை தூக்கத்தால் என் பகல் பொழுதின் செயல்திறன் வெகுவாக குறைவதாக உணருகிறேன். நிஜத்தில் நடப்பது போலவே இந்த கனவுகள் இரவெல்லாம் என்னில் மகிழ்ச்சியையும், துயரையும், பதட்டத்தையும் நிறைக்கிறது

இப்படியிருக்க, மிக பெரிய, செறிவான புனைவுகளை எழுதும் நீங்கள், நிறைய பயணம் செய்யும் நீங்கள், நிறைய புதியவர்களை நேரிலும், கடிதங்கள் வழியாகவும் சந்திக்கும் நீங்கள் எப்படி நல்ல தூக்கத்தை அடைகிறீர்கள்?!(கனவுகளற்ற), எப்படி தூங்கும் முன் மூளையை அணைக்கிறீர்கள்?! எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எனக்கு உதவும் வகையில் விரிவாக சொல்ல முடியுமா?  உங்கள் பணியின் காரணமாக உங்கள் மனதை கனவுகள் நிறைக்க வாய்ப்பதிகமென்பதால் உங்களிடம் கேட்கிறேன்.

பா சதீஷ்

அன்புள்ள சதீஷ்,

நான் இரவு ஒருமணி அல்லது இரண்டுமணிக்குத் தூங்குவேன். காலை ஏழுமணிக்கு எழுவேன். மதியம் படுத்து இரண்டு மணிநேரம் தூங்குவேன். எப்படியும் எட்டு மணிநேரம்.

நல்ல தூக்கம் படைப்பூக்கத்தன்மைக்கு, சிந்திப்பதற்கு அவசியமானது. தூக்கமின்மை என்பது சோர்வை, எரிச்சலை உருவாக்கும். செயலில் ஒருமை கூடாமலிருக்கும். வேலைகளை ஒப்பேற்றலாமே ஒழிய சிறப்பாகப் பணியாற்றமுடியாது. புனைவு எழுத்து என்பது உச்சகட்ட மூளைக்கூர்மை தேவையாக இருப்பது. அதற்கு தூக்கம் தேவை.

ஆகவே தூக்கத்தை சிறப்பாக அமைக்க என்ன செய்யவேண்டுமென்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இப்போதெல்லாம் மாலைக்குப்பின் டீ, காபி அருந்துவதில்லை.  இரவில் பழங்கள் மட்டுமே உணவு. கண்டிப்பாக ஒரு மாலைநடை. அப்போது நண்பர்களுடன் உற்சாகமான உரையாடல். முக்கியமாக, குடல் எப்போதுமே சுத்தமாக இருக்கவேண்டும் என்பது என் அறிதல். ஆகவே பழங்கள்.மது அருந்துவது, பலவகை மாத்திரைகள் போன்றவை தூக்கத்தை அழிப்பவை.

எழுதுவது தூக்கத்தை இல்லாமலாக்குவதே. புதிய எண்ணங்கள் வருவதும் சரி, பழைய எண்ணங்களின் நீட்சிகளும் சரி தூக்கத்தை கெடுப்பவை.  ஆகவே முடிந்தவரை தூங்குவதற்குமுன் அவற்றை ரத்துசெய்வேன். இசைகேட்பதும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் எனக்குப்பிடித்த சில நகைச்சுவை எழுத்தாளர்களை வாசிப்பதும் வழக்கம். நகைச்சுவையின் நூறாண்டுகள் என்னும் பெரிய தலைகாணி நூல் ஒன்று வைத்திருக்கிறேன். தொகுப்பு பி. ஜி .வோட்ஹவுஸ்]  நான் பைபிள் போல வாசிப்பது அது.சிரிப்பு நல்ல தூக்கமருந்து.

அதன்பின்னரும் அவ்வப்போதும் துயில்நீப்பு உண்டு. அது இந்த ஆட்டத்தில் ஒரு பகுதி. அந்தநாட்களெல்லாம் மிகமிகப் படைப்பூக்கம் கொண்டவை. இரவெல்லாம் பாட்டு கேட்பது, வாசிப்பது, அலைவது.

உளவியல் ரீதியாக மட்டும் துயிலிழப்பு வருவதில்லை. பெரும்பாலான தருணங்களில் அது உடல் சார்ந்தது. எளிய ‘மெக்கானிக்கல்’ பிரச்சினையாகக்கூட இருக்கலாம்.

பெரும்பாலும் மூச்சுவழியில் தசை தளர்ந்து மூடி குறட்டை வருவதனால் நாம் இரவில் ஆழ்துயிலை அடைவதில்லை. எட்டுமணிநேரம் படுத்திருப்போம். ஆழ்துயில் ஒருமணிநேரம் கூட இருப்பதில்லை. இதுவே கணிசமானவர்களின் பிரச்சினை

என் நண்பருக்கு ஒருமுறை அதற்கான சிகிழ்ச்சை எடுக்கவேண்டியிருந்தது. ஆர்வமாக நானும் சென்று சோதித்துக்கொண்டேன். திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவக்கல்லூரியில். எங்களை இரவில் படுக்கவைத்து நம் உடலில் வெவ்வேறு எலக்ட்ரோடுகளைப்பொருத்தி புகைப்படங்கள் எடுத்துச் சோதித்தார்கள்.

எனக்கு நூறுசதவீதம் சிறந்த தூக்கம் என்று சொல்லிவிட்டார்கள். நண்பருக்கு  சுவாசம் அடைபட்டு துயில் கலைந்தபடியே இருந்தது. மூச்சுப்பயிற்சிகள் அளித்தார்கள். சரியாகிவிட்டது.சிலருக்கு வாய்க்குள் பொருத்தும் கருவிகள் அளிக்கிறார்கள்.

1சிலருக்கு குறட்டையை நிறுத்தி மூச்சை முழுமையாக இழுக்க உதவும் இயந்திரம் அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அது மேலதிக மூச்சை உள்ளே தள்ளுகிறது. தளர்ந்த தசையாலோ வேறுகாரணங்களாலோ மூச்சு தடைபட்டு குறட்டை எழுந்து துயில் சீராக அமையாது போகுமென்றால் சரியாக்கிவிடுகிறது. அதைப்பொருத்திக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று பெரும்பரவசத்துடன் சொல்வதைக்கேட்டிருக்கிறேன். அந்தப்பரவசத்தைக் கேட்டுத்தான் நான் சோதிக்கச் சென்றேன்
காலையில் படுக்கையிலிருந்து எழும்போது புத்துணர்வுடன் குழந்தைபோல துள்ளி எழுந்தால் நல்ல தூக்கம். உடல்சோர்ந்து புரண்டு படுத்து மெல்ல எழுந்தால் நல்ல தூக்கம் அல்ல. பகலில் அவ்வப்போது சிறு தூக்கங்கள் வந்தால், எப்போதுமே தூக்கக்கலக்கம் இருந்தால் நல்ல தூக்கம் அல்ல. அந்தப் பயிற்சி நிலையம் தூக்கம் பற்றி பல தெளிவுகளை எனக்களித்ததுதேவை என்றால் நீங்கள் ஒரு தூக்கசிகிழ்ச்சை நிபுணரைத்தான் அணுகவேண்டும்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/85644

1 ping

  1. தூக்கம் குறித்து மேலும்…

    […] உங்களோட இன்னையோட தூக்கம் பத்தின பதிவ… நானும் இந்த தூக்கம் இல்லாம கடந்த சில வருடங்களா அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க சித்ரா மருத்துவ கல்லூரியில் எடுத்த ஸ்லீப் டெஸ்ட் போல நானும் இங்க சென்னையில் ஒரு மருத்துவமனயில் அந்த டெஸ்ட் எடுத்திருக்கேன். எனக்கு  OSA – Obstructive Sleep Apnea சோக்கேடுன்னு சொல்லிட்டாவோ. CPAP ன்னு ஒரு மெசினு , தெனம் ராத்திரி உறங்கும் போது மாட்டிக்கிட்டு தூங்க சொல்லிருக்காங்க. இன்னும் அந்த மெசினு வாங்கல. சரியான முடிவு எடுக்க தெரியல. அந்த OSA காரணமா எனக்கு ரத்த அழுத்தம் நோயும் இருக்கு, அதுக்கும் தெனம் ரெண்டு மாத்திரை முழுங்கிட்டு இருக்கேன். இன்னைக்கு உங்க பதிவு படிச்சா பெறவு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு உங்க அட்வைஸ் வேணும் சார். இந்த நோய்க்கு சித்ரா மருத்துவ கல்லூரியில் நல்ல சிகிச்சை கிடைக்குமா? எந்த மருத்துவர பாக்கணும்? அறுவை சிகிச்சை செய்யணுமா ? இல்ல மூச்சு பயிற்சியில் சரி ஆயிடுமா ? தயவு செய்து எனக்கு நல்ல பதில் கொடுத்தால் தேவலாம் சார். முடிந்தால் உங்க போன் நெம்பர் கொடுத்தால் கூப்பிட்டு பேசறேன். எனக்கும் நாகர்கோயில் தான் சொந்த ஊரு, இப்போ சென்னையில் வசிக்கிறேன். தனியார் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேலாளர் பணியில் இருக்கேன்.மனைவி, இரண்டு குழந்தைகள். நாலரை வயது மித்ரா , ஒன்னரை வயசு தேவ் கதிர். தொந்தரவுக்கு மன்னிக்கணும்! பின் குறிப்பு: உங்களோட எல்லா வாசகர் சந்திப்புக்கும் வரணும்னு நெறைய ஆசை உண்டு. ஆனா என்னோட குறட்டை சத்தம் ஊட்டி, ஈரட்டி  காட்டு விலங்குகளையும் நம்ம  வாசக நண்பர்களையும் தூங்க விடாது. இந்த நோயிலிருந்து ஒரு விடிவு காலம் கெடச்சுதுன்னா கண்டிப்பாக அடுத்த பெண்கள் இல்லாத ஒரு சந்திப்பில் சந்திக்கவேணும். நெறைய சிரிக்கணும் சார்! நன்றி. முத்து வளவன். அன்புள்ள முத்துவளவன், ஒரு நிபுணன் என்று அல்லாமல் சொந்த அனுபவம் சார்ந்து சாதாரணமாக எழுதப்பட்ட அக்குறிப்பை வாசித்துவிட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆச்சரியப்படச்செய்கின்றன. பலருக்கு அவர்களின் பிரச்சினை என்ன என்றே தெரியவில்லை. அதீதத் தூக்கம் என நினைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இரவில் சரியான தூக்கம் இல்லாமலிருப்பதனால் பகல் முழுக்க தூக்கக் கலக்கம் இருந்துகொண்டிருக்கிறது. உண்மையில் அது ஆழ்ந்த தூக்கமில்லாமல் இரவை அரைத்தூக்கத்திலேயே கழிப்பதன் விளைவு. எட்டுமணிநேரம் தூங்கியதுபோலத் தோன்றும். ஆனால் தூங்கியிருக்கமாட்டோம். அரைமயக்கத்தில் கனவும் நினைவுகளுமாக ஓடிக்கொண்டிருக்கும். எழுந்ததும் அனைத்தும் மறந்துவிடுவதனால் தூங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டிருப்போம் பகலில் எழும்போது  உடல் கனமாகவும்  சோர்வாகவும்  இருந்தால், இமைகள் கனத்து மேலும் தூங்கவேண்டும் என்று தோன்றினால், எங்கு அமர்ந்தாலும் படுக்கவேண்டும் என்று தோன்றினால், அமர்ந்த இடத்திலெயே எப்போதுவேண்டுமென்றாலும் ஐந்து நிமிடங்கள் தூங்குகிறீர்கள் என்றால், பேச்சுநடுவிலேகூட சிலநிமிடத் தூக்கம் வந்து குரட்டை எழுகிறது என்றால், உங்களுக்கு இரவில் ஆழ்துயில் இல்லை என்று பொருள். நீங்கள் தூக்கநோயாளி. தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம்  தூங்கும்போது கழுத்துக்குள் தசைகள் தளர்ந்து மூச்சுப்பாதையை அடைத்துக்கொள்வதுதான். குட்டையான கனத்த கழுத்துகொண்டவர்களிடம் இப்பிரச்சினை அதிகம் இதில் பலவகைகள் உள்ளன. முதல்நிலையில் எளியபயிற்சிகள் போதும். இரண்டாம்நிலையில் வாய்க்குள் வைக்கும் கிளிப் போன்ற கருவிகள் தேவை. மூன்றாம்நிலையில்தான் இயந்திரம். இயந்திரம் தேவை என்றால் அதை பொருத்தித்தான் ஆகவேண்டும். அதை மருத்துவர்கள் போதிய பரிசோதனைக்குப்பின்னர்தான் சொல்லவேண்டும் பொதுவாக காதுமூக்கு தொண்டை நிபுணர்கள் இதற்கு சிகிழ்ச்சை அளிக்கிறார்கள் என்றாலும் இதற்கான சிறப்புச் சிகிழ்ச்சை அளிக்கும் இடங்களை அணுகுவதே நல்லது. திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரா மருத்துவக்கல்லூரியில் மிகக்குறைவான செலவில் சிகிழ்ச்சை அளிக்கிறார்கள். ஆனால் ஒரு சிக்கல். வழக்கமாக குடிப்பவர்களுக்கு இப்பிரச்சினை உண்டா என்பதைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம். அவர்கள் தூங்கும்போது மதுமயக்கம் ஒருவகை ஆழ்துயிலை கொஞ்சநேரத்துக்கு அளிக்கிறது நேற்று கூப்பிட்ட ஒரு நண்பர் அக்கருவியை வைத்துக்கொண்டால் அதுவே பழகிவிடும் என்று பயந்து அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்றார். அது மருந்து அல்ல, அடிமைப்படுத்துவதற்கு. அதைப் பயன்படுத்தாமலிருந்தால் வரும் ஏராளமான  உடல்நிலைக் கோளாறுகளுடன் ஒப்பிடுகையில் அதைப்பயன்படுத்துவது மிகபெரிய விடுதலை நான் தூக்கப்பிரச்சினை இல்லாதவன் என்று தெரிந்தாலும் அங்கு சென்றது எனக்கு ஒரு விழிப்புணர்வை அளித்தது. அக்கருவியைப் பல சினிமா பிரபலங்களுக்கு நான் பரிந்துரைத்திருக்கிறேன். தங்கள் நாட்களே பிரகாசமாகிவிட்டன என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் ஜெ […]

Comments have been disabled.