யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’- அஸ்வத்
இந்த எழுத்தாளரின் படைப்பை இப்போது தான் முதன் முதலாகப் படிக்கிறேன். இதற்காக ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.அவருடைய நெருங்கிய நண்பர். யுவனின் குணாதிசயக் கூறுகளை விவரித்து அல்லது நகையாடி ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் படித்ததில் ஓரளவுக்கு முன் அபிப்ராயத்துடன் தான் யுவனை நான் அணுகினேன். இது எந்த அளவில் என் விமர்சனத்தை பாதிக்கப் போகிறது என்பதை இக்கட்டுரையை படிப்பவர்கள் தான் அனுமானிக்க இயலும்.
பல ஊர்கள். பல மனிதர்கள். பல தரப்பு. எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஊரை விட்டு ஓடுகிறார்கள் அல்லது வெளியேறுகிறார்கள்.
முதலில் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் போக்குகள் விவரிக்கப் படுகின்றன. கூட்டுக் குடும்பம், யானைத்தீ பசிகொண்ட ஒருவர், கோபத்தில் கையை வெட்டுபவர், விலை மாதுக்குப் பிறந்தவர், வறுமையில் வீட்டை விட்டு ஓடுகிறவர் என்று ஏகப்பட்ட பேர்களின் விவரணைகள்; அவர்களின் விரக்திகள் அல்லது வாழ்க்கைப் போராட்டங்கள். எல்லோரும் வேதமூர்த்தி என்னும் சாமியாருக்கு சிஷ்யர் ஆகி விடுகிறார்கள்.இதை முதலில் சொல்லிவிட்டுப் பின்னர் சிவராமன் என்கிற கதா பாத்திரம் இவர்கள் எல்லோரையும் சந்திப்பதின் மூலமாக அவரவர்கள் வாழ்க்கையை எப்படி சாமியார் மாற்றினார் என்று சொல்லுகிறார். யுத்தி என்று பார்த்தால் புதுமை ஒன்றும் இல்லை. எல்லாம் அலங்கோலம்; பின்னர் ஒரு கதா பாத்திரம் நுழைந்தவுடன் எல்லாம் கோலாகலம் என்பது எதற்கும் பொருந்தக் கூடிய பழைய யுக்தி.
கொஞ்சம் திஜா, கொஞ்சம் லாசரா, கொஞ்சம் அசோகமித்ரன் கொஞ்சம் சுந்தர ராமசாமி என்று கலந்து கட்டியான எழுத்து வகை யுவனுடையது. குறிப்பாக கதையில் வரும் சாமியார் அசோகமித்ரனின் மானசரோவரில் வரும் சாமியாரை நினைவு படுத்துகிறார். அசோகமித்ரனின் நாவல் அவரின் வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அதில் வரும் ‘ஹீரோ’ திலிப் குமார் என்கிறார்கள் சிலபேர். இதே போல் லாசராவும் சாமியார் ஒருவரைப் பற்றி நாவல் எழுதி இருக்கிறார்.(நாவல் முடிவில் அவர் போலீஸ் கேசில் மாட்டிக்கொள்வார்.) இவை போலவே யுவனின் நாவலுக்குப் பின்னணியில் அவர் பெற்ற அனுபவப் பதிவுகள் காரணமாக இருக்கலாம். இந்த உத்தி -இந்த நாவலின் பாணி- நனவோடை உத்தி என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.
எழுத ஆரம்பித்து விட்டு போகிற போக்கில் எழுதி விட்டுத் தொடர்பைப் பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பதாகத் தோன்றுகிறது . இதைக் கொஞ்சம் லேட்டாக உணர்ந்த இவர் எல்லாவற்றையும் கோத்து ஒரு மாலையாகக் கட்ட முயன்றிருக்கிறார். தொடர்பில்லாத பல்வேறு குணசித்திரங்கள் என்பதால் மீண்டும் ஒவ்வொரு கதா பாத்திரமும் இவன் யார் இவன் முதலில் எங்கே வந்தான் என்கிற ஆயாசம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. படிப்பவர்களுக்குப் பெரிய சோர்வை இது ஏற்படுத்துகிறது.
ஒரு கதை முடிந்த கையுடன் சம்பந்தமில்லாத வேறு ஒருவன் வருவதால் கிட்டத்தட்ட ஒரு பிலிமை எடுத்துவிட்டு மறு பிலிமைப் போட்டுப் பார்க்கிற பயாஸ்கோப்பின் நிலை . தொடர்ச்சியாக ஒரு படம் பார்ப்பது போலில்லை. (நான் கூட நல்லூர் மனிதர்களை அப்படித்தான் எழுதினேன்; அனால் அதில் ஒரே ஊரைச் சேர்ந்த பலரைப் பற்றி விவரித்ததால் அது சூழலுடன் பொருந்திப் போயிற்று தற்செயலாக!)சாமியார்களைப் பற்றி நிறைய பேர் எழுதி ஓய்ந்து விட்டார்கள். இந்த வரிசையில் யுவனும்.
அமானுஷ்யங்களை எழுத வரும் இவர்கள் விவரிக்கும் சம்பவங்கள் உண்மையில் அவற்றைப் பிரதிபலிக்கின்றனவா என்கிற சந்தேகம் எழுவது நம் போன்ற சாதாரணர்களுக்கு இயற்கை தான் என்னதான் இவர்கள் சுய அனுபவங்கள் மூலமாய் இவற்றை எழுதும்போதும். காரணம் பூடகத்தன்மையிலும் உலக .வழக்கத்துக்கு மாறாக உள்ள அவர்களின் விவரணைகளிலும் இவர்கள் சொல்ல வருகிற அமானுஷ்யத்தையும் ஆன்மிகத்தையும் நிறுவுவதற்கு பதிலாக ஒரு புரியாத் தன்மையை உண்டாக்கி விடுகிறார்கள். புரிந்த உண்மை சுட்டும் புரியாத புதிர் என்பதற்கு பதிலாக புரிந்த புதிர் புரியாத உண்மை என்றாகி விடுகிறது.
இதற்கு பதிலாக ஞானிகளின் உண்மை வரலாற்றைப் படித்துவிட்டுப் போகலாமே என்று யோசிக்கத் தோன்றுகிறது. எப்போது நினைத்தாலும் ‘கூப்டீங்களா நைனா?’ என்று ஆஜராகி விடுவாராம் பாடகச்சேரி ஸ்வாமிகள். மேகா என்கிற அணுக்கத் தொண்டன் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதாராம் ஷீர்டி சாய்பாபா . இதே போல் ரமணரும் ஒரு சிறுமி இறந்த போது கண்ணீர் விட்டு அழுதாராம். காவ்ய கண்ட கணபதி இறந்த செய்தி வந்த போது ‘நாய்னா போயிட்டாராம் ; எங்கே போய்ட்டார்?’ என்றாராம் ரமணர். அன்னை இறந்தவுடன் ‘வாருங்கள் சாப்பிடலாம்; நாமெல்லாம் சன்யாசிகள்; நமக்கு துக்கம் கிடையாது’ என்றாராம் அதே ரமணர்! அவர்கள் சாதாரண மனிதர்கள் போலவே இருந்திருக்கிறார்கள்; அசாதாரண ஞான ஒளியையும் பார்த்து அதைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்கள் சுட்டிக் காடும் திசையை நோக்காது அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறது உலகம். யுவன் நாவலைப் படிக்கும்போது எனக்கு இப்படித்தான் தோன்றியது.
சாமியார்களைச் சர்வரோக நிவாரணியாகக் கொள்ள முடியுமா? ஜே கிருஷ்ணமுர்த்தி ‘அது வழியில்லா நிலம்’ என்றார். அவரே ஒரு முறை சித்து ஒன்றைச் செய்து குணப்படுத்திய ஒருவன் பின்னர் லண்டனில் ஒரு வீ திச் சண்டையில் மாட்டிக் கொண்டானாம். நம் சுமைகளை யார் மீதாவது இறக்கி விட்டால் தேவலைதான். அது அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுமா என்ன? அதற்கு நாம் முதலில் மழை நீர் நிரம்பும் மண் பாத்திரமாக உருவெடுக்க வேண்டாமா?
ஜெயகாந்தன் ‘விழுதுகளை’ எழுதும்போது இவ்வளவு விவரணைகளைச் சொல்லவில்லை. ‘அழுக்குன்னா என்னா சாமி?’ என்று சாமியார் கேட்பதாக எழுதும் ஒரே விவரிப்பில் சொல்ல வந்ததைத் தீர்மானமாகச் சொல்லி விட்டார். இது வரை அந்த குறுநாவலை நூறு முறை படித்திருப்பேன். இப்போதும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆனந்தமாகப் படிப்பேன். இதே போல் இன்னொரு வாய்ப்பில் ‘வெளியேற்றத்தை’ மீண்டும் படிப்பதற்கான உந்துதல் எனக்கு இல்லை என்று குறிப்பிட வேண்டி இருக்கிறது.. இது ஏன் என்று யுவன் யோசிப்பது அவரின் அடுத்த நாவல் எழுதும் போது உபயோகமாக இருக்கும்.
அஸ்வத்
அன்புள்ள அஸ்வத்,
உங்கள் விமர்சனம் கண்டேன். உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன. நான் ஒரு வாதத்திற்காக என் மறுதரப்பை முன்வைக்கிறேன்.
உங்கள் வாசிப்பிலுள்ள முக்கியமான அம்சம், ஆற்றொழுக்கானதும் ஒன்றுடனொன்று சரியாக இணைந்துகொள்வதுமான புனைவை ஒரு நிபந்தனையாக வைப்பதுதான். வாசகர் அவரது வாசிப்பு வரலாற்றிலிருந்து எது இலக்கியம், எது புனைவுச்சிறப்பு என்பது குறித்த சில புரிதல்களை அடைந்திருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான நல்ல படைப்புகள் அவற்றை ஒருவகையான அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. வாசகனின் முன்னனுபவங்களை ரத்துசெய்கின்றன .ஆகவேதான் பல படைப்புகள் அவை வெளிவந்த காலம் கடந்தே சரியாக உள்வாங்கப்படுகின்றன.
எனவே ஒருபடைப்பை அப்படைப்பு உருவாக்கும் அழகியல் என்ன என்ற கோணத்தில் அணுகுவதே நல்லது. நான் கொண்டிருக்கும் அழகியலுக்கு அது பொருந்துகிறதா என்ற நோக்கில் அணுகுவது படைப்பை விலக்கும். நம் எளிய ஆணவம் மட்டுமே எஞ்சும்.
யுவன் சந்திரசேகரின் நாவல்கள் புனைவுகள் அல்ல, புனைவாடல்கள். அவை வாசகனுடைய தர்க்கபுத்தி, கற்பனை ஆகியவற்றுடன் விளையாடவே விரும்புகின்றன. சொல்வதற்காக அல்ல சொல்லாமல் மறையவே முயல்கின்றன. ஒத்திசைவின்மை என்பதும் முன்பின் சரியாகப்பொருந்தாமலிருக்கும் இயல்பும் அவனால் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை
ஜெ