அன்பின் ஜெ..
நம்மாழ்வார் பற்றிய உங்கள் குறிப்புகளைப் படித்தேன்.
எனது சில கருத்துகள்:
1. 1993 ல் துவங்கி, 1996 வரை ஒரு என்ஃபீல்ட் அக்ரோபேஸ் என்னும் நிறுவனத்தில் நானும் விஜியும் பணி புரிந்தோம்.
2. என்ஃபீல்ட் தலைவர் விஸ்வநாதன் அவர்களால் துவக்கப்பட்டது அது.
3. ஏற்றுமதி நோக்கோடு துவங்கப்பட்ட இயற்கை வேளாண்மை தொழில் அலகு அது.
4. செயல்படுத்த, ஹாலந்து நாட்டில் இருந்து ஒரு ஆலோசகரும், பண்ணையைத் தர ஆய்வு செய்து, சான்றிதழ் தர ஸ்விஸ் நாட்டின் IMO என்னும் ஆய்வுக் கழகமும், பொருட்களை வாங்கிக் கொள்ள ராபுன்ஸல் என்னும் ஜெர்மனியின் இயற்கை வேளாண் அங்காடிக் குழுமமும் என திட்டமிடப்பட்டது.
5. கல்லிடைக் குறிச்சியின் அருகில் உள்ள கங்கணான் குளம் என்னும் இடத்தில் முதல் நிலத் தொகுப்பு வாங்கப் பட்டு பணிகளைத் துவங்கினோம்.
6. அது வெறும் பொட்டல் காடு. பண்ணையின் முதல் வேலை – மண் மாதிரியை பூச்சி மருந்துக் கொல்லியின் traces இருக்கிறதா எனப் பரிசோதிப்பது. அப்பொட்டல்காட்டில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மை எதுவும் இருந்ததில்லை. அதற்கு முன்பும் மானாவாரிப் பயிர்தான். பரிசோதனையின் முடிவுகள் ஆச்சரியமளித்தன. அந்த மண் மாதிரியில், DDT யின் traces இருந்தது.
7. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நடந்த சில முயற்சிகள் தோல்வியிலும், சில முயற்சிகள் வெற்றியிலும் முடிந்தன. வெற்றிகள் ஆச்சரியமளித்தன. வாழை, நெல் போன்ற பயிர்களில், மகசூல் மாறுதலின்றியும், எள் போன்ற பயிர்களில் குறைவாகவும் கிடைத்தன.
8. விச்வநாதன் நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட, அந்தத் தொழில் முயற்சி நின்று போனது.
9. எங்களுக்கு ஆதரவாக, ஆலோசனை சொல்லியவர் – ஜெயகரன் என்னும் இயற்கை தொழில் முனைவோர், அவர், கொடை ரோட்டின் அருகே, குறிஞ்சி ஆர்கானிக் ஃபார்ம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். இன்றும் இருக்கிறார். ARASPVPV என்னும் பெரும் தொழில்குழுமத்தில் பிறந்தவர்.
10. அன்று இன்று போல், நம்மாழ்வார் ஒரு பெரும் ஆளுமையாக ஆகி இருக்கவில்லை. இயற்கை வேளாண்மை பற்றிய அறிதலும் இன்று போல் இல்லை, மிக முக்கியமாக, இன்று போல், 50-60 சிறு விவசாயிகள் முக்கியமான இயற்கை வேளாளர்களாக உருவாகியிருக்கவில்லை.
11. இதுவே நம்மாழ்வார் விட்டுச் சென்ற மிகப் பெரும் நேர்மறைப்பங்களிப்பு. அவரின் வழியில் அவர் பேசியவை – நீங்கள் சொன்னது போல் பாமரத் தனமான, அறிவியக்கத்திற்கு எதிரான பேச்சாகத் தோன்றலாம் – ஆனால், அவரால் உந்தப் பட்டு, இதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டு செயல்படும் அந்த 50 பேர் இந்த நாட்டுக்கு மிக முக்கியம்.
12. இயற்கை வேளாண்மையின் பல போக்குகள் இன்னும் அறிவியல்பூர்வமாக ( நமது மரபான அறிவியல் நோக்கில்) நிரூபிக்கப் படாமல் இருக்கலாம் – ஏனெனில் அதை நிரூபிக்க ஆகும் செலவுகள் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம், மேலும், வேளாண்மையின் பல கூறுகள் உள்ளூர் சூழலைப் பொருத்தது. எனவே, அந்தச் சில உழவர்கள் தமது சாமர்த்தியத்தால், செய்யும் வேளாண்மை மிக முக்கியம். அருகில் சென்றால், அதில் பலர், அவர்களுக்கே உரிய மொழியில் (நமது அறிவியலின் / அறிவியக்கத்தின் பண்படா மொழியில்) அவர்கள் தமது நுட்பங்களைச் சொல்வதைக் காணலாம்.
12. மிக முக்கியமாக, பூச்சி மருந்து இல்லாத வேளாண்மை என்பது ஒரு முக்கியமான திருப்பம். ஏனெனில், பூச்சியைக் கொன்று பயிரைக் காக்கும் தொழில் நுட்பத்தைச் சொல்லுமறிவியல், அது வேளாண்மை நடக்கும் இடத்தின் உயிர்ச்சூழல் சிதைக்கப் படுவதையும் அதனால் வரும் நீண்ட காலப் பிரச்சினைகள் பற்றியும் பேசுவதில்லை. அந்த அளவில், அதுவும் குறை பட்ட அறிவியலே.
13. மிகை நாடி நோக்குங்கால், நம்மாழ்வாரின் நேர்மறைப் பங்களிப்பே வேறெவரையும் விட மிக அதிகம் எனத் தோன்றுகிறது. உங்கள் கட்டுரையில், அந்தப் பார்வை வெளிப்படவில்லை. சூழியலைத் தேங்கவைத்தவர். வசை பாடிச் சித்தர் (வார்த்தைகளுக்கு மிகப் பெரும் சக்தி உண்டு என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்) என்பதே வெளிப்படுகிறது. இது நம்மாழ்வாரின் உண்மையான பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. 90 களில் இருந்ததை இன்று இயற்கை வேளாண்மை பற்றிய அறிதலும், மிக முக்கியமாக அதில் சாதாரண விவசாயிகளின் பங்கும் இன்று பலமடங்கு அதிகம்.
14. நான் அண்ணாமலைக்குச் சென்று, பவாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அங்கே நடப்பது ஒரு முழுமையான இயற்கை வேளாண்மை அல்ல. மரபான வேளான்மை. உரம் பூச்சி மருந்து போடுவதில்லை அவ்வளவே. அதில் லாபம் வந்தால்தான் அதிசயம். சில உண்மையான் இயற்கை விவசாயிகள் இருக்கிறார்கள் –
சத்தியமங்கலத்தில் திருமூர்த்தி, ஏன் நமக்கு அறிமுகமான – இளங்கோ கல்லாணை – அவர்களின் வழிதான் ஓரளவு சரியாகத் தோன்றுகிறது.
15. அவர்கள் பயிர்களின் விலைகளைக் கொண்டு அடுத்த பயிரைத் திட்டமிடுகிறார்கள். இந்த முறை, மஞ்சள் அதிகம் விளைந்தால், நான் மஞ்சள் விளைவிக்க மாட்டேன் என்கிறார் திருமூர்த்தி. நான், இயற்கை முறையில் விளைவிக்கும் எனது நெல்லை அதிக விலைக்குத்தான் விற்பேன், அதை வாங்கும் நுகர்வோர் இருக்கிறார்கள் என்கிறார் இளங்கோ – இது வேளாண்மையில் மிக முக்கியமான புள்ளி. இதை விட்டு விட்டுத் திட்டமிடும் இயற்கை வேளாண்மை நட்டத்தில் தான் முடியும்.
16. இயற்கை வேளாண்மை – தீவிர இலக்கியம் போலத்தான். மிகச் சிலரே செய்ய முடியும். ஆனால், அப்பொறியின் possibility மிக அதிகம். இன்று ஒரு சிறு மாநிலம் முழுதும் இயற்கை வேளாண்மையைப் பேசுகிறது. மிகப் பெரும் சாதனை. 90 களில் இப்படி ஒரு நாள் வரும் என யோசித்ததில்லை. சொல்லப் போனால், இன்று தேங்கியிருப்பது மரபான வேளாண்மைதான்.
17. மீண்டும் வருத்தத்துடன் சொல்ல விரும்புகிறேன். வசை பாடிச் சித்தர் மிக மோசமான சொல். உங்கள் பாஷையில், டீக்கடைத் தரம். சொல்லாமல் இருந்திருக்கலாம்.
பாலா
அன்புள்ள பாலா
உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி
நான் நம்மாழ்வார் அவர்களின் பங்களிப்பை எவ்வகையிலும் மறுக்கவில்லை. அதை இருபதாண்டுக்கலாமாகச் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். இன்னமும் சொல்லவும் செய்வேன். அவரை ஒர் ஆசிரியராகவே எண்ணுகிறேன்.மற்றவர்களின் பிரச்சினையே நான் அவரை மறுக்கவில்லை என்பதே. ஒன்றைச்சொல்லு என்கிறார்கள்.
நான் எழுப்பியது ஓர் ஐயம் மட்டுமே. அச்சொல் அவரை நான் இன்றுகாணும் வடிவம் குறித்த ஒரு வரையறை. நான் இதில் கொண்டுள்ளது ஓரு வலுவான ஐயம்.
ஜெ