அன்புள்ள ஜெ அவர்களுக்கு
வணக்கம்
நெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன் குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் விவசாயியை சோர்வுற செய்கின்றன. தேசிய அளவில் நெல்லின் சராசரி உற்பத்தி திறன், 2600 கிலோ ஒரு ஹெக்டருக்கு. தமிழ் நாடு இந்திய சராசரியைவிட குறைவாக நெல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 2400 கிலோ ஒரு ஹெக்டருக்கு என்பதே சராசரியான உற்பத்தி அளவாக உள்ளது. ஆயினும் தமிழ்நாட்டில் 7.7-9.0 tonnes ஒரு ஹெக்டருக்கு அதிகபட்ச விளைச்சலாக பெற முடியும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒப்பிடும்போது 5.3 tonnes குறைவாக விளைச்சல் குறைவாக கிடைக்கிறது.
நெல் மகசூலை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகளாக தட்பவெட்ப நிலை, உயர் விளைச்சல் ரகங்கள், பூச்சி நோய் தாக்குதல், சாகுபடி முறைகள் போன்றவற்றை கூறலாம். எந்த ஒரு பயிரிலும் உயர் விளைச்சலை அடைய முதலில் கவனமாக, குறைந்த மகசூலின் காரணங்களை கண்டறிதல் வேண்டும். பிறகு தெளிவாக திட்டமிட்டு, தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் உயர் விளைச்சல் அடைவது எளிதான ஒன்றுதான். மொத்த சாகுபடி செலவில் ஒரு பங்கை குறைத்து விளைச்சலை அதிகப் படுத்தினால் நிச்சயமாக நெல் சாகுபடி லாபமான ஒன்றுதான்.
இதனை நிரூபிக்க, ஒரு கள ஆய்வாக பையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு. மாதவன் அவர்களை தேர்வு செய்து குறைவான விளைச்சலுக்கான பிரச்சினைகளை கண்டறிந்து தொழில்நுட்ப குறிப்புகளை பயன்படுத்த முடிவு செய்தேன். அவரிடம் விவாதித்த போது, துத்தநாகச் சத்து குறைபாடு, குறைந்த எண்ணிக்கையிலான தூர்கள், இலைச்சுருட்டு புழு தாக்குதல் , குலை நோய், இலையுறை நோய் தாக்குதல் அழுகல் தாக்குதல், அதிகளவிலான பதர் மணிகள் போன்ற காரணிகளால் விளைச்சல் குறைவது தெரிந்தது. இந்த குறைபாடுகளை போக்க கீழ்க்கண்ட எளிய செலவு குறைந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டன.
விதைநேர்த்தி
பத்து கிலோ நெல் விதைகள் ௦.3 சதவீத பஞ்சகவ்யா மற்றும் உயிர்உரங்கள், உயிர் காரணிகள் 0.1% (அசொஸ்பைரில்லம், சூடோமொனாஸ்) கலந்த கரைசலில் சுமார் பனிரெண்டு மணிநேரம் ஊறவைக்கப்பட்டு பிறகு எடுக்கப்பட்டு மறுநாள் திரும்பவும் ஒரு மணி நேரம் அதே கரைசலில் ஊற வைக்கப்பட்டு நிழலில் வைக்கப்பட்டன. மறு நாள் முளை கட்டியதும் பரவலாக மேட்டுப்பாத்தியில் விதைக்கப்பட்டன. இதனால் நாற்றுகள் வாளிப்பாகவும் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் வேர்கள் நன்றாகவும் முன் தூர்கள் (pre formed tillers) தோன்றியும் காணப்பட்டன.
அடியுரமாக ஊட்டமேற்றிய ஜிங்க் சுல்பேட் இடுதல்
பதினைந்து கிலோ ஜிங்க் சல்பேட் நூற்றைம்பது கிலோ மக்கிய தொழு உரத்துடன் ஊட்டமேற்றப்பட்டு நன்றாக சமப்படுத்திய பிறகு அடியுரமாக இடப்பட்டது. இதனால் பயிர் வளர்ச்சி நன்றாகவும் பயிர்கள் அதிக தூர்களுடனும் இருந்தன.
ஒருங்கிணைந்த பயிர்ச்சத்து நிர்வாகம்
பசுந்தாள் உரம் இடுதல், செயற்கை உரங்களை மக்கிய தொழு உறங்களுடன் கலந்து இடுதல், தழைச் சத்து தரும் யூரியாவினை வேப்பம் புண்ணாக்கு கலந்து இடுதல்; எப்போதும் யூரியாவினை பொட்டாஷுடன் கலந்து இடுதல்; உரத்தை நான்கு பகுதிகளாக பிரித்து இடுதல்; சமச்சீரான உர நிர்வாகம் மண் பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தேவைக்கு அதிகமாக உரமிடுதல் அறவே தவிர்க்கப்பட்டது. இதனால் சாகுபடி செலவு குறைந்தது. பஞ்சகவ்யா 0.3 சதவீதம் மற்றும் ஜிங்க் சல்பேட் 0.5 சதவீதம் இலை வழித் தெளிப்பாக பயிர் நட்ட 10th 25th 45th நாட்களில் தெளிக்கப்பட்டது. பயிர் நன்றாக வளர்ச்சியடைந்து எந்த வித நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல் முதிர்ச்சி அடைந்தது. பையூர்-1 நெல் ரகம் சாயக்கூடியது. துத்தநாகச் சத்து குறைபாட்டிற்கு நடுந்தர தாங்கும் தன்மை கொண்டது. சன்ன ரக நெல்; வைக்கோல் தேவைக்கு ஏற்ற ரகம். ரகத்தேர்வு திரு. மாதவனின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவரால் செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து முப்பது வருடங்களாக இந்த ரகத்தினை பயிர் செய்து வருகிறார்.
செலவு/வரவு விபரங்கள்
சாகுபடி செலவு | அளவு | விலை |
விதை | 10 Kg | Rs. 240 |
நாற்றங்கால் | – | Rs. 400 |
பசுந்தாள் உர விதைகள் | 10 Kg | Rs. 400 |
முதல் உழவு | 4 hours | Rs. 1600 |
இரண்டாம் உழவு | 3 hours | Rs. 1200 |
பயிர் நடவு | Rs. 3000 | |
ZnSO4 அடியுரம் | 10 Kg | Rs. 400 |
DAP அடியுரம் | 15 Kg | Rs. 375 |
பஞ்சகவ்யா தயாரித்தல் | – | Rs. 400 |
களை பறித்தல் | – | Rs. 1300 |
மேலுரமிடுதல் | Urea – 10 Kg,Potash -10 KgNeem cake – 6 Kg | Rs. 440 |
அறுவடை | – | Rs. 11,000 |
மொத்த செலவு | – | Rs. 20,755 |
மகசூல் | 49 bags (75 kg/bag) (3675kg per acre; Rs. 1100 per bag) | Rs. 53,900 |
வைக்கோல் | – | Rs. 30,000 |
மொத்த வருமானம் | – | Rs. 83,900 |
லாபம் | Rs. 83,900- Rs. 20,755 | Rs. 63,145 |
லாப/செலவு விகிதம் | Rs. 63,145/ Rs. 20,755 | 3.04 |
விளைச்சலை தீர்மானிக்கும் பயிர்ப்பண்புகளின் வெளிப்பாடு
தூர்களின் எண்ணிக்கை | 20-25 |
விளைந்த ஒரு கதிரில் மணிகளின் எண்ணிக்கை | 280-350 |
முதிர்ச்சி அடைந்த பயிரின் உயரம் | 1.5 m |
சரியான முறையில் பிரச்சனைகளை கண்டறிந்து, தெளிவாக திட்டமிட்டு தொழில்நுட்ப சாகுபடி முறைகளை பயன்படுத்தியதால் நெல்லின் விளைச்சல் 3675 கிலோவாக இருந்தது. இது தேசிய மற்றும் மாநில சராசரி அளவைவிட அதிகம். ஒரு ஹெக்டருக்கு கணக்கிடும்போது 9.0 டன்கள். சாதரணமாக ஒரு ஏக்கருக்கு ஆகும் 24000-28000 செலவைவிட குறைவு. இன்னும் செலவினை குறைக்க முடியும். நெல்லில் அதிக தூர்களை அடைய நிச்சயமாக தழைச் சத்து தரும் யூரியாவினை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுதல் வேண்டும்.
முழுமையான இயற்கை விவசாயத்தில் அதிக பட்ச விளைச்சலை அடைய நிச்சயமாக முடியாது. தூர்கள் பத்துக்கும் குறைவான அளவிலயே இருக்கும். ஒரு போக சாகுபடி நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் பையூர்-1 நெல் ரகம், அதிக பட்சமாக 2225 கிலோ என்ற அளவில் தரும். சாகுபடி செலவில், செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் Rs. 1215-1500 குறையும். ஆகவே சாகுபடி செலவில் மிகப்பெரிய மாற்றமில்லை. நிச்சயமாக இயற்கை சாகுபடியில் மகசூல் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கிலோ குறையும். ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்துக்கொண்டு நெல் சாகுபடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிடம் நான் ஆயிரம் கிலோ நெல்லை தியாகம் செய்ய விட மாட்டேன்.
அதே நேரத்தில் நெல்லில் இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்கள், இந்த மூன்று ரகங்களைப் பயிரிடலாம். பவானி, வெள்ளைப் பொன்னி மற்றும் பையூர்-1. ஒரு போக சாகுபடி நிலத்தில் இதனைப் பயிரிடுங்கள். பயறு வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்தால் ஒவ்வொரு வருடமாக குறைந்த அளவில் மகசூல் உயரும். ஆனால் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்கும் விளைச்சலை விட நிச்சயமாக அதிக மகசூல் எடுக்க முடியாது. அதே சமயம் இயற்கை சாகுபடி முறையில் லாபத்தின் விகிதம் குறைவுதான். ஆனால் நட்டம் இருக்காது. நீங்கள் உயர் விளைச்சல் குட்டை ரகங்களை இயற்கை சாகுபடிக்குப் பயன்படுத்தினால் விளைச்சல் இன்னும் குறையும். ஆனால் அதே சாகுபடி செலவுதான்.
நான் நிச்சயமாக இயற்கை சாகுபடியை முழுமையாக பரிந்துரைக்க மாட்டேன். சாகுபடி செய்யும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் குறிப்பிட்ட பரப்பளவில் அதிக பட்ச விளைச்சல் அடைவதை என் நோக்கமாக கொண்டிருப்பேன். அதே சமயத்தில் நிலம் நீர் சுற்றுப்புறத்தின் தன்மை மாற்றமடையாமல் நீடித்த பயனுக்கு ஏற்றவகையில் பராமரிக்க வேண்டும் என்பதையும் பரிந்துரைப்பேன். மண்ணின் உப்பு கார நிலை, நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, காற்றோட்டம் போன்ற காரணிகள் செம்மைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்துவேன். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களை நான் குறை கூற மாட்டேன். அது உங்களின் விருப்பம். ஆனால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் ஒன்றையே முழுதொழிலாக வைத்திருப்பவரை தயவு குறைசொல்ல வேண்டாம். அவரின் லாபத்தை குறைக்கவும் வேண்டாம்.
சில பயிர்கள் முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய ஏற்றவை; மஞ்சள் தென்னை வெங்காயம், சில பயறு வகைகள். அவற்றை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம். இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் நண்பர்கள் முதலில் மண் ஆய்வு செய்யுங்கள். பிறகு அதன் பரிந்துரைப்படி இயற்கை உரங்களை அளிக்க திட்டமிடுங்கள். கால்நடைகள் மிக அவசியம். மண் புழு உரதொட்டிகள் அமைத்தலும் அவசியம். எந்த இடுபொருளையும் வெளியே விலை கொடுத்து வாங்காமல் நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். மண்ணின் வளத்தை ஆய்வுகளின் மூலம் வருடந்தோறும் கண்காணியுங்கள். இந்த செயல்முறைகளின் மூலம் நஷ்டத்தை குறைப்பதுடன் சாகுபடி செலவையும் குறைக்கலாம்.
பூக்கொகொவின் செயல் முறைகள் ஜப்பான் நாட்டின் தட்பவெட்ப நிலையினை கருத்தில் கொண்டு நெல் ஆரஞ்சு இரண்டு பயிர்களில் செயல்படுத்தப்பட்டன. அவருக்கும் இயல்பான விளைச்சலை அடைய ஏழு வருடங்கள் தேவைப்பட்டன. பொருளியல் தேவையை விவசாயத்தின் மூலம் நிவர்த்தி செய்பவரிடத்தில் சென்று ஜென் தத்துவத்தை செயல் படுத்தக் கூறமாட்டேன். ஜப்பானில் நெல் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகம், ஜப்பானிகா நெல் ரகங்கள் இயல்பாகவே குட்டையானவை அதே நேரத்தில் உயர விளைச்சல் ரகங்கள். நம் மண்ணின் நிலை வேறு. தட்ப வெட்ப நிலை வேறு. இயற்கை சாகுபடி முறைகள் மூலம் நிச்சயமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது. ஒருங்கிணைந்த முறைகள் மூலமே உயர் விளைச்சலை அடைய முடியும்.
தற்போது திரு மாதவன் இந்த எளிமையான செயல் முறைகளை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துக் கூறும் அளவிற்கு திறமையாக செயல்படுகிறார். விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று பரிந்துரைகளை செய்கிறார். அவரிடம் பரிந்துரையினை கேட்க விரும்புவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலலாம். 9698088459. என்னையும் தொடர்பு கொள்ளலாம். 9600513216