அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம் , நலம் தங்களின் நலம் விழைகிறேன் .
ஒருவர் தன்னிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பது என்பது ஓர் தவம் என அறிகிறேன் . அது புத்தியில் ,மனத்தில் நிலைகொண்டுள்ளதாக இருக்கிறது . பல விவகாரங்களில் தங்களின் கருத்தாக சொல்லிவருவதை ஆழ்ந்து படித்து வருகிறேன் . பல சமயம் அது என் கருத்தாகவும் ஆகிவிடுகிறது .அதற்கு ஆதாரம் தாங்கள் கூறியிருப்பது , ஆம் எப்பேற்பட்ட உண்மை , தான் ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாடு வீழ்ச்சிக்கு வழிகோலுகிறது . நம்மை விட நம் கருத்தே முன்னிறுத்தப்படவேண்டும் கூச்சலுக்கு முன் கருத்துக்கள் சில காலம் எடுபடாது .
||பலசமயம் இத்தகைய பேச்சுக்களை அரங்குகள்தான் தீர்மானிக்கின்றன. ஓர் அவையில் நமது பேச்சு சோடைபோகக்கூடாது என்று நினைக்கும்போதே நாம் விழ ஆரம்பிக்கிறோம்.|| உண்மை
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
ஜெ,
“பயணம்” என்ற tag ல் உள்ள அனைத்து கட்டுரைகளையும் படித்துவிட்டு எழுதுகிறேன். பயணங்களின் நோக்கம் என்பது அனுபவங்களும் அவதானிப்புகளும் தான் என்று நானும் நினைத்திருந்ததை உங்கள் கட்டுரைகளின் மூலமே கண்டுகொண்டேன். உங்கள் பயணங்கள் அனைத்தும் இயற்கையும் பண்பாட்டுத்தேடலும் கொண்டவையாகவே உள்ளன. அதுவே உங்கள் எழுத்தும் நீங்களுமே என்றுணருகிறேன். பொதுவாகவே நானும் இயற்கையை ரசிப்பவனனாலும் நவீன மாயைகளான தொலைக்காட்சி, சினிமா மற்றும் நுகர்வு என பல்வேறு கரங்கள்கொண்டு அதை அடையவிடாமல் தடுத்துவந்துள்ளதை நான் இப்பொழுது உணருகிறேன்.
இதை அனைத்தையம் விட்டு விலகி மேற்கொள்ளும் சிறு பயணமும் கூட ஒரு குட்டித் துறவறமே (குடும்பத்துடனாலும்) என்று படுகிறது. தேர்ந்தெடுத்தே நான் சினிமா படங்களை பார்த்து வருவதாக எண்ணிய எனக்கு ஒரு நாள் அகர வரிசையில் தமிழ் படங்களின் பட்டியலைப் பார்தால் நான் அனேகமாக அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். எத்தனை மணிநேரங்கள் என எண்ணும் போது திகிலாக உள்ளது.
கவி சூழுலாவில் குழந்தைகள் தீம் பார்க் போன்ற செயற்கை கொண்டாட்டங்களை மட்டும் பெற்றோர்கள் பழக்குவதாகவும் காடு மற்றும் இயற்கையை அறிமுகப்படுத்துவதில்லை என்ற அந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று. இதனையொட்டி “Sharing nature with children” போன்ற புத்தகங்களே வந்துள்ளதை கன்டேன்.
கவி சூழுலாவை முதற்கட்டுரையாகவும் பயண விதிகள் கட்டுரையை கடைசி கட்டுரையாகவும் கொண்டு உங்களது அனைத்து இந்தியப் பயணங்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கோருகிறேன். புத்தகத்தைவிடவும் வெகுஜன பத்திரிக்கையில் வருவதும் அவசியமெனப்படுகிறது இயற்கையைபற்றி புனைவில் வரும் வர்ணனையை விட நேரில் பார்க்கும் இயற்கை காட்சிகளின் வர்ணனை சற்று குறைவாகத் தெரிகிறது. முன்னது மெய்யறிதலினாலும் பின்னது மெய் மறப்பதினாலுமோ?
ஒரு கட்டுரையில் இப்படி சொல்லியிருப்பீர்கள்.. “ஆனைமலையில் சாப்பிட்ட ஓட்டலில் ஒரு கரிய பெண்ணைப்பார்த்தேன். பிளாஸ்டிக் கருமை! கோயில் சிலை போன்ற முகம். பெரிய மூக்குத்திகள். பதினாறு பதினெட்டு இருக்கும். மிக மிக ஏழை என்பது தெரிந்தது. அனேகமாக அவளது முதல் வெளியூர் பயணமாக இருக்கும். அப்படியே பூரித்து பொங்கி உடம்பே சிரிப்பாக அமர்ந்திருந்தாள். எல்லாவற்றுக்குமே வாயைப்பொத்தி குலுங்கினாள். அவளது வாழ்க்கையின் பொற்கணங்கள் அவை என்பதை அவளே அறிந்திருப்பாளா என்று தெரியவில்லை”
அதுபோல உங்களது பயணக்கட்டுரைகளை படிக்கையில் உங்களது பயணங்களிலும் ஆயிரம் ஆயிரம் பொற்கணங்கள் நிறைந்ததாக தெரிகிறது. அனேகமாக உங்களது அனைத்து பயணங்களிலும் பங்கேற்று, ஒருங்கிணைத்து செல்லும் நண்பர் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கவும்.
பொற்கணங்கள்தொடரட்டும்…
நன்றி
வி கார்த்திகேயன்