ஈரட்டிச் சந்திப்பு -கடிதங்கள்

DSC_2043

அன்புள்ள ஜெ,

என் வாழ்வில் என்றென்றும் நினைவில் நிற்கும் நாட்களாக ஈரட்டியில் கழித்த இரு நாட்களும் அமையும். மகிழ்வு, அதுவன்றி வேறில்லை. வெள்ளி துவங்கியே ஒழுங்காக உறங்கவில்லை. நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததில் உறக்கம் வரவில்லை. நீண்ட நடை. இவை எதுவும் உற்சாகத்தைக் குறைக்கவில்லை என்பதோடு இரு நாட்களிலும் சுறுசுறுப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது ஆச்சரியமே!! உடலே சிரிக்க இயலும் என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன்!!

 

இத்தனைக்கும் நடுவே தீவிரமான உரையாடல்களும் நடைபெற்றன. முக்கியமாக எப்படி ஒரு இலக்கியத்தை வாசிக்க வேண்டும் என்பதைக் குறித்த உங்களது உரை எங்களுக்கெல்லாம் பெரிய திறப்பு. அதை தனியாகப் பதிவிடுகிறேன். மாலை நடை மிக உற்சாகமானது. அதில் பேசப்பட்ட தீவிரமான மத அமைப்புகள் மற்றும் அவற்றுடனான மனிதரின் பிணைப்பு பற்றிய உரையாடல் நடையை மனதுக்கு உணர்த்தவே இல்லை. நடக்கிறோம், மலை ஏறுகிறோம் என்ற நினைவே உடலில் சோர்வைக் கொண்டு வந்து விடும். அந்த நினைவே எழாததாலும், இதுவரை தான் நடக்க வேண்டும் என்ற எந்த எல்லையும் இல்லாததும் மனதுக்கு ஒரு பெரிய விடுதலையுணர்வை தந்திருந்தது. திரும்பி வருகையில் தமிழக வரலாறைப் பற்றிய ஒரு நீண்ட உரை துவங்கியது. ஒரு வரலாற்று ஆய்வு எவ்வாறு நடை பெற வேண்டும் என்பதில் துவங்கி, தமிழக வரலாறு குறித்த ஒரு பெரும் சித்திரம் எங்கள் முன் வரையப்பட்டது. அதனூடாக விரிந்த கவிமணியின் ‘காந்தளூர் சாலை கல மறுத்தருளி’யதன் உண்மையைக் கண்டறிந்த நிகழ்வு எந்த ஒரு துப்பறியும் கதையை விடவும் சுவாரசியமாக இருந்தது.

 

இரவுணவுக்குப் பின் மீண்டும் முற்றத்தில் இருந்து திருவிதாங்கூரின் பொக்கிஷம் பற்றிய உரையாடல். ஒரு அன்பான தந்தையைச் சுற்றி அமர்ந்து கதை கேட்கும் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம். பின் முற்றத்தின் விளக்கையும் அணைத்து விட்டு இரவு வானின் நட்சத்திரங்களைப் பற்றி க்விஸ் செந்திலிடம் பாடம் கேட்டதும் இனிய நினைவு. மறு நாள் நீண்ட நடையும், அருவிக் குளியலும் தந்த புத்துணர்வு இன்னும் கூடத் தொடர்கிறது. இறுதியில் உங்களைத் தழுவி விடைபெறுகையில் உங்களிடம் கண்ட கனிவு என் தந்தையிடம் மட்டுமே நான் உணர்ந்த ஒன்று. சொல்லி வைத்தாற்போன்று செல்வேந்திரனும் இதையே பகிர்ந்து கொண்டார். மிக்க நன்றி ஜெ. உங்களை என் வாழ்வில் கண்டடைந்தது என் வாழ்வின் நல்லூழ்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

DSC_2148

உங்கள் வலைத்தளத்தில் வரும் படங்களில் உங்களைப் பார்த்து என் பெண் “அங்கிள் சிரிக்க மாட்டாரா? ஏன் இப்படி கோபமாக இருக்கிறார் ?” என்று கேட்டிருக்கிறாள்.  அப்படி எல்லாம் இல்லை என்றேன். உங்கள் “ஈரட்டி சிரிப்பு” இடுகையில் உள்ள  படங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள்  எட்டிப் பார்த்து ” என்ன ஆச்சு இவங்களுக்கு? ” என்று கேட்டாள். உடனே எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரம் கழித்து நாங்களும் காரணமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். நான் படங்களில் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த பெயர்களை சொன்னேன். அப்போது இவர் பெயர் அரங்கசாமி என்று சொன்ன உடன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். “இப்படியெல்லாம் ஏன் பெயர் வைக்க வேண்டும்  ?  இதுக்கெல்லாம் ஒரு சாமி இருக்கா? ” என்றாள். பிறகு தான் எனக்கு புரிந்தது நான் சொன்னது அவளுக்கு அரனைசாமி என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து எனக்குத் தோன்றியது இது தான் “இத்தனை பேர் சிரிப்பதைப் பார்த்து கண் பட்டு விட போகிறது”. அருணா அக்காவிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள். யாருக்காகவும் சிரிப்பதையோ மகிழ்வதையோ நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? இதெல்லாம் உங்களுக்கு புதிதா என்ன? தாண்டிப் போய்க்கொண்டே இருங்கள் மூத்தவரே.
மாலதி
DSC_2111

அன்புள்ள ஜெ.,ஈரோடு கிருஷ்ணன் குறிப்பிட்ட “சிரிப்புக்கு எதிரான மனநிலை” மிகவும் சிந்திக்கவைத்தது.. அதிரவும் வைத்தது.. குடும்பப்புகைப்படங்களை அதிகமாகப் பிறரிடம் காட்டக்கூடாது என்று வீட்டில் சொல்வார்கள்.. குறிப்பாகப் பண்டிகையில் ஒற்றுமையாக உற்சாகமாக இருக்கும் படங்களை வலைப்பதிவேற்றுவதில் ஒரு தயக்கம் பலரிடமும் இருக்கிறது.. “கண்பட்டுவிடும்” என்பார்கள்.. எனக்கே சிலசமயம் “திருஷ்டி” விஷயத்தில் ஒரு பயம் வந்துவிடும்.. இந்த பயம் இந்தியா தவிர பிற நாடுகளில், குறிப்பாக மேலைநாடுகளில், இருப்பதாகத் தெரியவில்லை.. எதுவாயினும், சிரிப்பிலும் நகைச்சுவையிலும் நம் தேசம் பலபடிகள் ஏறவேண்டியிருக்கிறது என்பதே உண்மை..

பிகு: it was all electrifying laugh in that post.. pls post such pics often :)

நன்றி,
ரத்தன்

முந்தைய கட்டுரைஅண்ணாச்சி – 1
அடுத்த கட்டுரைநம்மாழ்வார் – ஒரு மறுப்பு