அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வலைத்தளப்பதிவுகளைக்கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். ஈரட்டி பொதுக்குழு போன்ற. மிக மோசமான பதிவை இதுவரை எதிர்ப்பட்டதில்லை.
அதிலும்….உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்காததால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.உங்களிடம் எனக்குப் பிடித்த அம்சமே கொண்ட கொள்கையில் யாரானாலும் உறுதியாக இருப்பீர்களென்பதுதான்.தொடர்ந்து ஃபேஸ்புக்பதிவுகளை அவற்றால் எழும் வெற்று வம்புப்பேச்சுக்களைத்தாக்கி வரும் நீங்கள் மிக மோசமானதும் அதோடு கூடவே பெண்களைக்கொச்சைப்படுத்துவதுமான கீழ்க்கண்ட பதிவைப்பிரசுரித்தது உங்கள் தகுதிக்குக்கொஞ்சமும் ஏற்பில்லாதது என்றே எனக்குப்படுகிறது.
//அரங்கசாமி நாயக்கருக்கு குஷ்பூவுடன் ஒரு செல்ஃபியும் என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்து புர்ச்சி கவிதா சொர்ணவல்லியையும் கூட்டணிக்குள் இழுத்தால் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் வாக்குகளையும் அள்ள முடியுமே என அறிவாலய வட்டம் ஆலோசிப்பதாக சொல்கிறார்கள்.//
உங்கள் நண்பர்கள் எழுதினால் மட்டும் நகைச்சுவை என்னும் பெயரில் இப்படித் தரக்குறைவாக எழுதலாமா.. அதை நீங்கள் அனுமதித்து அங்கீகரிக்கிறீர்களா?
தங்களை முன்மாதிரியாகக்கொண்டு பல இளம் இலக்கிய ஆர்வலர்கள் தீவிரவாசிப்புக்களில் ஈடுபட்டு வரும் நிலையில் விடலைத்தனமான இந்தப்பதிவை நண்பர்களேஆனாலும் நீங்கள் தவிர்த்திருக்க வேண்டும்.
உங்கள் பாணியில் அதுவே கறாரான அணுகுமுறையாக இருக்கும்.
நான் இதை எழுதுவதும் கூட நீங்கள் சொல்லிக்கொடுத்ததன் தடத்திலேதான் ….
நட்புடன்
கயல்
அன்புள்ள கயல்,
நான் நீங்கள் புனைந்துகொண்டிருக்கும் வகையானவன் அல்ல. எப்போதும் ’சீரியஸாக’ இருக்கக்கூடிய, எதையும் காரியார்த்தமாக மட்டும் அணுகும் ஒருவனாக என்னை நினைக்கிறீர்கள். மன்னிக்கவும் அது நான் அல்ல. என் இயல்பே அதுவல்ல. விளையாட்டும் நக்கலும்தான் என் இயல்புகள், இதுவரை. இன்னும் ஒரு இருபதுவருடம் இப்படி இருக்க உத்தேசம்
என்னுடைய கறாரான, அறிவார்ந்த கட்டுரைகள் அல்லது கதைகளுக்குப்பின் சிலரிடம் அப்படி ஒரு பிம்பம் ஏற்படுமென நான் அறிவேன். ஏனென்றால் நம் சூழல் அப்படிப்பட்டது. இருபத்துநான்கு மணிநேரமும் விடைப்பாக புரட்சிகரமாக இருப்பது, எப்போதும் சமூகக்கவலையுடன் இருப்பது, எப்போதும் ஒழுக்கப்பிரக்ஞையை தராசுத்தட்டாக கையில் வைத்திருப்பது என்பதே இங்கே பெரியமனிதர்களின் இயல்பு. நேர் எதிராக இன்னொரு தரப்பினரிடம் சல்லித்தனம் இருக்கும்.
என்னைப்பற்றி ஒரு ‘சீரியஸ்’ சித்திரம் வந்துவிடக்கூடாதே என்று உடனே விளையாட்டுத்தனமான எழுத்துக்கள் மூலம் அவ்வுருவகங்களை உடைப்பது என் வழக்கம். செல்வேந்திரனின் இக்குறிப்புபோல, அல்லது இதைவிட வேடிக்கையாக நானே நிறையமுறை எழுதியிருக்கிறேன். மேலும் எழுதுவேன்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரி பெண்களை இழிவுபடுத்துவது என நான் நினைக்கவில்லை. பெண்கள் இப்படியெல்லாம் புண்படுவார்கள் என்றால் பெண்கள் இன்னும்கொஞ்சம் சிரிக்கலாமென்பதே என் எண்ணம். நல்லவேளை குஷ்புவும் கவிதாவும் வாய்விட்டு சிரிக்கக்கூடியவர்கள்.
நீங்கள் நினைப்பதுபோல நான் நகைச்சுவையாக எழுதக்கூடாதென்றும், நட்பாகக் கிண்டல் செய்வது பாவம் என்றும் எப்போதும் எண்ணியதில்லை.
சொல்லப்போனால் கிண்டலால் புண்படக்கூடியவரை உடனே நட்புவட்டத்திலிருந்து வெளியே நிறுத்துவதே என் வழக்கம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
உங்கள் பதிவுகள் பலவற்றில் தொடர்ந்துமுகநூல் அரட்டைகளையும் அசட்டுத்தனங்களையும் கடுமையாகச்சாடி வருபவர் நீங்கள்.
எந்த ஒரு துறை பற்றியும் ஓரளவு கூட ஆழமில்லாமல் மேலோட்டமாக – போகிறபோக்கில் எழுதப்பட்டவை அவை என்ற உங்கள் கணிப்பு மிகப்பொருத்தமானதென்றே எனக்கும் தோன்ற நானும் அவற்றைத்தவிர்த்தே வருகிறேன்.
ஆனால் அண்மையில் உங்கள் நண்பர் ஒருவர் எழுதிய முகநூல் குறிப்பை ஈரட்டிசந்திப்பு பற்றிய பதிவில் வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக அரசியல் நையாண்டி செய்திருந்தீர்கள்.
உங்கள் நண்பர் எழுதிய குறிப்பும் கூட சற்றும் ஆழமில்லாத,மிக மிக சராசரித்தனத்தோடு கூடிய வழக்கமான முகநூல் பாணியில் உள்ளதுதானே…? புதிதாக வித்தியாசமாக அவர் என்ன எழுதி விட்டார்? அதை மட்டும் உங்களால் இலகுவாக, நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடிவது ஏன்.. ? அது உங்கள் நடுநிலையின்மீது சந்தேகம் ஏற்படுத்துவதாகாதா.?
எனக்குக்குழப்பமாக இருக்கிறது.
எவராக இருந்தாலும் கறாராக மதிப்பிடும் உங்கள் கொள்கை உறுதிக்காகவே என்போன்ற பல இளைஞர்கள் உங்களையும், உங்கள் எழுத்துக்களை நேசிக்கிறோம்;உங்கள் குழு உங்கள் நண்பர் என்னும்போது மட்டும் ஏன் இந்தச்சாய்வு?
முடிந்தால் சொல்லுங்கள்.
நன்றி
சத்யன்
அன்புள்ள சத்யன்,
என் தளத்தை இப்போதுதான் வாசிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நினைக்கிறேன். வெளியே இருந்து கிடைக்கும் மனச்சித்திரத்துடன் உள்ளே வருபவர்கள் நான் ஒழுக்கப்பிரச்சாரகரான, எப்போதும் முறைத்தபடி இருக்கும், சிரிக்காத ஒருவன் என்று உருவகம் செய்துகொள்வதுண்டு.
உண்மையில் தீவிரமான விஷயங்களைப் பேசுபவன் அப்படித்தான் இருந்தாகவேண்டும் என்று நீங்களே நினைத்துக்கொள்கிறீர்கள். தந்தை, தலைமையாசிரியர் எல்லாம் அப்படி பிறரால் உருவகிக்கப்பட்டு அந்த உருவகத்தில் தாங்கள் சிக்கிக்கொண்டவர்கள்
என் நண்பர்கள், வாசகர்களுக்குத்தெரியும், நான் அவ்வியல்பு கொண்டவன் அல்ல என. சிரிப்பு இல்லாத ஓர் அவையில் நான் இருப்பதில்லை. நக்கலும் கிண்டலும் இல்லாத ஓர் உரையாடலை அதிகநேரம் நீட்டிப்பதுமில்லை. எந்தத் தீவிரமான விஷயத்திற்குப்பின்னும் அதையே தலைகீழாக்கிச் சிரிக்க ஓர் இடமிருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அதை எப்போதும் செய்தும் வருகிறேன். என் தளத்தைவாசித்தால் அது தெரியும்.
என் வாசகர் ,நண்பர்களுக்கான சொல்புதிது வட்டத்தில் எப்போதுமே கிண்டலும் அரட்டையும் இருந்துகொண்டேதான் இருக்கும். நான் அரட்டைக்கோ, கிண்டலுக்கோ எதிரானவன் அல்ல. அவற்றை எப்போதும் ஊக்குவிப்பவன். செல்வேந்திரனின் கிண்டல் எனக்கு மிகமிகப்பிடித்தமானது.
நான் ஃபேஸ்புக்கில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல்செய்யக்கூடாது, நகைச்சுவை எழுதக்கூடாது, அரட்டை அடிக்கக்கூடாது என்று ஒருபோதும் சொல்லவில்லை. அது இல்லாமல் வாழ்க்கையே அமைவதில்லை என்பதே என் எண்ணம்
நான் சொல்லவருவது, வாசிப்புக்கும், தீவிரமான இலக்கிய விவாதத்துக்கும் மாற்றாக அதை மட்டும் செய்துகொண்டிருப்பது பிழை என்று மட்டுமே. அது உலகளாவிய ஒரு வலை என்பதனால் உங்களை உள்ளே இழுத்து அதையன்றி பிறிதைச் செய்யமுடியாதவராக, காலை எழுந்ததுமே அதைநோக்கி ஓடுபவராக ஆக்கிவிடும் என்பதை மட்டுமே. அதில் சிக்கிக்கொண்டால் உங்கள் சிந்தனை, படைப்பூக்கம் ஆகியவற்றுக்கு நேரமோ மனமோ இருக்காது என்பதை மட்டும்தான்
அத்துடன் அம்மனநிலை அப்படியே பெருகி ‘எல்லாவற்றையும் கலாய்ப்பது’ என்னும் நிலைக்குக் கொண்டுசெல்லும். இலட்சியவாதத்தை, நுண்ணிய அழகியலை, கூரிய சமூக அரசியல் பிரச்சினைகளை, சிக்கலான வரலாற்று ஓட்டத்தை அறியும் மனநிலை இல்லாமலாகிவிடும். அதற்கான கவனத்தையும் உழைப்பையும் கொடுக்காமல் சல்லிசான சில ‘கமெண்டுகள்’ வழியாகக் கடந்துசெல்லவைத்துவிடும்.
நான் தவிர்க்கச் சொல்வது அதை மட்டுமே. கிண்டலை, சிரிப்பை, களியாட்டத்தை அல்ல. இந்தவேறுபாட்டை இதைவிடத் தெளிவாக என்னால் விளக்கிவிடமுடியாது.
ஈரட்டி நிகழ்ச்சி பற்றிய அந்தக்குறிப்பு மிகஎளிய சுயகிண்டல். இலட்சியங்களுக்கு எதிராக நிற்கக்கூடிய, சிக்கலான அறிதல்களை கடந்துசெல்லக்கூடிய, அழகியலை மொண்ணையாக மழுப்பக்கூடியவகையான கலாய்ப்பு அல்ல.
ஈரட்டி நிகழ்ச்சிக்கு நான் வெய்யோன் எழுதி முடித்து அந்த வெறுமையைக் கடப்பதற்காகச் சென்றேன். என் நண்பர்களும் அதற்காகவே அங்கே வந்தனர். அந்த மனநிலையே நிறையச் சிரிப்பு , கொஞ்சம் விவாதம் என்பதுதான்
ஆனால் ஈரட்டிச் சிரிப்பு என்னும் பதிவில் அந்தப்புகைப்படங்கள் வந்தபோது ஈரோடு கிருஷ்ணன் சொன்னார். ‘அந்தப் படங்களைப்போட்டிருக்கக் கூடாது சார். திக்குன்னு ஆயிடுச்சு. இவ்வளவுபேர் இப்படிச் சிரிக்கிறதை பொதுவாக மத்தவங்களால தாங்கவே முடியாது. ஏதாவது சொல்லுவாங்க. ஏதாவது வம்பு கிளம்பிவரும். அந்த இருட்டு எங்கியோ எல்லாருக்குள்ளயும் இருக்கு. சென்னை குமரகுருபரன் நிகழ்ச்சியிலே நீங்க சிரிச்சிட்டிருக்கிற ஃபோட்டோக்களைப் பாத்தப்பவே நினைச்சேன், அப்டியே ஆச்சு. இந்த கூட்டத்திலே ஒவ்வொரு பேரிட்டயும் தெரிஞ்சவங்க யாராவது கூப்பிட்டு அந்த சந்தோஷத்தை குறைக்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. வம்பை உருவாக்குவாங்க. கோள்சொல்வாங்க. வேணும்னேகூட செய்றதில்லை. அவங்களே அறியாம செய்வாங்க. ஏன்னா நம்ம சூழல்ல சந்தோஷம் ரொம்ப ரொம்ப கம்மி. இங்க வந்த சிலபேர் கசப்பு அடைஞ்சு பிரிஞ்சுபோனாக்கூட ஆச்சரியப்படமாட்டேன்”
கிருஷ்ணனை ஓர் இருட்டுநோக்கி என்று நினைப்பவன் நான். இப்போது குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு கடிதம்கூட அந்தச்சிரிப்புகளைக் கண்டு தானும் மகிழ்ந்து வரவில்லை. வந்த எல்லா கடிதங்களிலும் எரிச்சல்தான். உண்மையில் எரிச்சலுடன் எழுதுபவர்கள் வெள்ளந்தியானவர்கள். மற்றவர்கள் எழுதுவதில்லை, அவ்வளவுதான்.
ஜெ