மணி-1

33

கலாபவன் மணியை நான் முதலில் கண்டது ஒரு தங்கும்விடுதியின் மின்தூக்கிக்குள். அதன் கதவுகள் மூடப்போகும்கணத்தில் உள்ளே நெடுக்குவாட்டில் கால்பங்கு தெரிந்த லோகிததாஸ் என்னிடம் “வா வா, கேறு” என்றார். நான் காலைவைத்து அது மூடுவதைத் தடுத்து உள்ளே சென்றேன். லோகி என் தோளைத் தொட்டு “மெலிந்துவிட்டாயே” என்றார். அது அவர் எப்போதும் சொல்வது. குண்டாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என நம்புபவர் அவர் .குண்டாக ஆவதற்காக வாழ்க்கைமுழுக்க முயன்றவர்.. அருகே நின்றவர் கலாபவன் மணி.

நான் ஓரிரு நிமிடங்கள் கழித்தே அவரைக் கண்டேன். “இது ஜெயமோகன்” என்றார் லோகி. கலாபவன் மணி என்னை நோக்கி கைநீட்டி “பார்த்தால் ஒரு இலக்கியவாதி என்று சொல்லமுடியாது. காஸ்டிங் தப்பு” என்றார். “ஏன்?” என்றேன் சிரித்தபடி. “கண்ணுக்குக் கீழே குடிகாரனுக்குரிய பை இல்லை. தோளிலும் பை இல்லை” அக்கணமே அவர் எனக்கு நண்பரானார். “என்ன படம்?” என்றேன்.”தெரியவில்லை… என்ன ரோல் என்றும் தெரியவில்லை” என்றார் மணி “என்னைக் கூப்பிட்டார். வந்தேன். நடிக்கப்போகிறேன். லோகிஅண்ணன்மேல் உள்ள நம்பிக்கையில் செல்கிறேன்”

வெளியே வந்து காருக்காக நிற்கையில் லோகி “இவன் நேற்றே வந்துவிட்டான். நேற்று நல்ல ஜமா. இவன் ஒரு பாட்டு பாடினான்…என்ன பாட்டுடா அது?” கலாபவன் மணி உடனே மணிக்குரலில் பாட ஆரம்பித்தார். அந்த இடத்தில் நின்றிருந்த அத்தனை சுற்றுலாப்பயணிகளும் திரும்பிப்பார்த்தனர்.வெள்ளைக்காரர்களுக்கு அவர் எவரெனத் தெரியவில்லை. கார் வருவதுவரை மணி அந்தப்பாட்டை நின்றபடியே கதவில் தாளமிட்டுப் பாடினார்.

காரில் ஹனீஃபாக்கா இருந்தார் [வி.எம்.சி.ஹனீஃபா] “இவன் பாட்டு ஏன் எப்போதுமே இணைக்கு ஏங்கும் வெள்ளாட்டின் ஒலி மாதிரி இருக்கிறது?” என்று கேட்டார்.முகத்தை மிகமிகத் தீவிரமாக வைத்துக்கொண்டு வேடிக்கைசெய்வது அவரது பாணி. எளிதில் அவர் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளமுடியாது. நாமும் ஏதாவது சொல்லிவிடுவோம். நான் மணியைத் திரும்பிப்பார்க்க மணி முஸ்லீம்களைப்பற்றி எழுதமுடியாத ஒரு பாடலைப்பாட ஆரம்பித்தார். ஹனீஃபாக்கா வெடித்துச்சிரித்து “இது அசல் பாட்டு!” என மகிழ்ந்தார்.

லோகியுடனும் ஹனீஃபாக்காவுடனும் இணைந்தவராகவே கலாபவன் மணி எனக்கு ஆழ்மனதுக்கு அறிமுகமாகியிருக்கிறார். ஒருவர் நினைவு இன்னொருவரை அருகே கொண்டுவருகிறது. ஒருவகையில் கலாபவன் மணி லோகியின் கண்டுபிடிப்பு. லோகி வழக்கமாக திருவிழாக்களை விரும்புபவர். வேட்டியை மடித்துக்கட்டி தலையில் ஒரு முண்டாசுடன் கிராமியத்திருவிழாக்களில் பங்குகொள்வது அவரது வழக்கம். அப்படி ஒரு விழாவில்தான் அவர் கலாஃபவன் மணியைக் கண்டுகொண்டார்.

மணி அப்போது கலாபவனின் முக்கியமான குரல்போலிக் கலைஞர். மாதச்சம்பளம் பெற்றுவந்தார். லோகி அவரை சிபி மலையிலுக்கு அறிமுகம் செய்தார். சிபி மலையில் இயக்கிய ‘அக்‌ஷரம் ‘என்னும் படத்தில் மணி திரைப்படநடிகராக அறிமுகமானார். அதற்கு முன் கடும்முயற்சியில் சமுதாயம் என்ற படத்தில் தலைகாட்டியிருந்தார்.
சாலக்குடி அருகே சேனத்துநாடு என்னும் சிற்றூரில் குன்னச்சேரி ராமனுக்கும் அம்மிணி அம்மாளுக்கும் ஏழாவது மகனாகப்பிறந்தவர் மணி. 1971 ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தார். அப்பா கூலிவேலைசெய்துவந்தார். படகோட்டுவதும் உண்டு. கடும் வறுமையில் வளர்ந்த மணி பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. பள்ளியில் படிக்கும்போது குரல்போலிக் கலையில் திறமையானவராக அறியப்பட்டார்.

1987ல் கொல்லத்தில் நடந்த பள்ளிமாணவர்களுக்கான இளைஞர் கலைப்போட்டியில் தனிநபர் நடிப்பில் முதற்பரிசு பெற்றார். அதை தன் எதிர்காலமாகக் கொள்ளும் எண்ணம் அப்போது வந்தது. வறுமை காரணமாக இளமையில் ஆட்டோ ஓட்டும் வேலைக்குச் சென்றார். கூடவே தனிநபர்நடிப்பு மற்றும் குரல்போலிக் கலையை பல்வேறு குழுக்களுக்காகச் செய்துவந்தார். மணி நாட்டுப்புறப்பாடல்களை பாடுவதிலும் வல்லவர். அவர் வெளியிட்ட நாட்டுப்புறப்பாடல்கள் ஒலிநாடாக்களாகப் புகழ்பெற்றிருந்தன.

கொச்சின் கலாபவன் அமைப்பு மணியை கண்டடைந்து தங்கள் முழுநேர ஊழியராக ஆக்கிக்கொண்டது. கலாபவன் அமைப்பு திருவிழாக்களில் நாடகம் மற்றும் குரல்போலிக்கலைகளை நிகழ்த்துவதில் புகழ்பெற்று விளங்கியது அப்போது. அவர்களின் ‘மிமிக்ரி பரேட்’ என்னும் நிகழ்ச்சியின்மூலம் மணி பிரபலமானார். வினோதசாலா என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்த மணி அதன்பின் திரையில் நடிக்க முயற்சிசெய்யலானார்.

லோகியின் பார்வை மணிக்கு வரமாகியது. அக்ஷரத்திற்குப் பின்னர் லோகி எழுதி சுந்தர்தாஸ் இயக்கிய ஸல்லாபம் என்னும் படத்தில் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அதில் அவர் நாட்டுப்பாடல்களையும் பாடியிருந்தார். அந்தப்படம் மணியை நடிகராக நிலைநிறுத்தியது. தொடர்ந்து லோகி எழுதிய பல படங்களில் பலவகையான கதாபாத்திரங்களை நடித்தார். லோகியின் உத்யானபாலகன், பூதக்கண்ணாடி போன்ற படங்களில் நகைச்சுவையம்சம் இல்லாத கதாபாத்திரங்களை நடித்தார்.

வினயன் இயக்கிய வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்னும் படம் மணியின் திரைவாழ்க்கையில் இன்னொரு தாவல். அதில் கண் தெரியாத பாடகனாக நாயகவேடத்தில் நடித்தார். பெரும் வெற்றிபெற்ற அந்தப்படம் தமிழில் விக்ரம் நடிக்க ‘காசி’ என்றபேரில் வெளிவந்தது. அதன்பின் மணி ஒரு நகைச்சுவைநடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக அடையாளம் காணப்பட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் எதிர்நாயகனாக நடித்தார். தமிழில் அவரது சிறந்த ரசிகர் சங்கர். பெரும்பாலான சங்கர் படங்களில் மணியும் ஹனீஃபாக்காவும் இருப்பார்கள்.

ஆனால் அவரது மிகச்சிறந்த படங்களெல்லாம் மலையாளத்தில்தான்.வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் படத்திற்காக தேசிய விருதில் மூன்றாமிடம் வந்து ஸ்பெஷல் ஜூரி விருதைப்பெற்றார்.சிறந்த நடிப்புக்கான மாநிலவிருதையும் பெற்றார், கருமாடிக்குட்டன் என்னும் படத்துக்காக.

லோகிக்கு மணி மிகச்சிறந்த நடிகர் அல்ல என்ற எண்ணமிருந்தது. சரியாகக் கட்டுப்படுத்தி நடிக்கவைக்கவேண்டிய நடிகர் என்றும், எக்கணமும் மிகையாக ஆகக்கூடிய பாவனைகள் கொண்டவர் என்றும் எண்ணினார். ஆனால் திரையில் எதையும் செய்துகாட்டக்கூடியவர் என்றும், குரலை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர் என்றும் மதிப்பிட்டிருந்தார்.

நடிகர் என்பதைவிட மணியை மலையாள  சினிமா கொண்டாடியது அவரது குணத்துக்காகத்தான். தயாரிப்பாளர், இயக்குநர்களின் செல்லம் அவர். ஒரு சினிமா சிறப்பாக வருவதற்காக எதையும் செய்யத் தயாராக எப்போதுமிருப்பார். அவர் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று தோன்றும். தேவை என்றால் உதவி இயக்குநர் போல இறங்கி வேலைசெய்யவும் தயங்கமாட்டார்.

1

சந்தித்த முதல்நாள் முதல் என்னையும் ‘சேட்டா’ என்றே மணி அழைத்துவந்தார். எனக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு அமையவில்லை. நான் அவர் பணியாற்றிய படங்களில் இல்லை. கடைசியாக அவர் பாபநாசத்தில் நடித்தபோதுதான் ‘ரொம்ப நாளாக ஆசைப்பட்டது. இப்ப நடந்திருக்கு. சேட்டன் கூட ஒரு படம்’ என்றார்

மணியைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த உதாரணம், பாபநாசத்தில் அவரது பங்களிப்பு. மணிதான் திருஷ்யம் மூலம் செய்வதாக இருந்தது. ஆனால் ஈரல்நோயால் அவர் சிகிழ்ச்சைக்குச் சென்றதனால் அவர் அதில் நடிக்கவில்லை. அவரே சிபாரிசு செய்த அவரது இளவல் கலாஃபவன் ஷிஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் மணியே நடிக்கவிரும்பினார்

மிக இயல்பாக அந்த வேடத்தை நடித்த மணி தன்னால் நெல்லை மொழியில் டப்பிங் செய்ய முடியாது என்னும் எண்ணம் கொண்டிருந்தார். சுகா பல குரல்களை அவருக்காக சோதனைசெய்தார். ஒன்று, அவரது முகம் மற்றும் பாவனைகளுக்குக் குரல்கள் இணைந்து வரவில்லை. இன்னொன்று, அவர் குரல் ஏற்கனவே தமிழில் நன்கு அறிமுகமாகியிருந்தது

ஆகவே அவரே பேசட்டும் என சுகா முடிவுசெய்தார். நான்குநாட்கள் அவருக்காக ஒலிச்சேர்ப்பு அரங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. முதல்நாள் சுகா உச்சரிப்பை திருத்தத் திருத்த மணி பொறுமையிழந்தார். அவரால் அந்தத் திருத்தங்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

சுகா ஒன்று செய்தார். மொத்த வசனத்தையும் தன் நெல்லைத்தமிழில் அவரே பேசிப்பதிவுசெய்தார். அதை அவர் மணிக்குக் கொடுத்தார். ஒரேநாளில் மணி அவற்றை அப்படியே குரல்போலி செய்துவிட்டார். காதுக்கும் மனதுக்குமிடையே அத்தனை தொடர்பு

சுகாவும் மணியும் கட்டிப்பிடித்துக் குலவும் நண்பர்களாக ஆனார்கள். சென்ற ஆகஸ்டில் நான் மணியிடம் ஃபோனில் பேசினேன். “சுகா எப்ப படம் பண்றார்?” என்றார் மணி. “யோசிக்கிறோம்” என்றேன். “அதிலே நான் ஒரு நல்ல ரோல் பண்றேன்” என்றார் மணி. “இல்லை மணி, இது ரொம்ப சின்ன படமாத்தான் இருக்கும்” என்றேன்

“கார்ச்செலவுக்கு பணம் தரமுடியுமில்லை? அதுபோதும். அடுத்த படத்திலே பேரம்பேசி வாங்கிக்கறேன். நான் சுகா சார் படத்திலே உண்டு” என்றார் மணி. அவர் இயல்பே அதுதான்

[மேலும்]

 

முந்தைய கட்டுரைவெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானதியும் வல்லபியும் – ஒரு கனவின் ஈடேற்றம்