பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்

IMG_1206

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் கொல்லிமலை சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். தங்களின் அறிவிப்பு வெளியான தினத்தன்றே மீனாம்பிகை அவர்களி்டம் தொடர்பு கொண்டேன் பெண்களுக்கு சாத்தியப்படுமாவென்று. அவர்களிடமிருந்து பதில் வருவதற்குள் இன்று பதிவு முடிந்து விட்டது என்று செய்திதான் கிடைக்கப் பெற்றேன்.

உண்மையாகவே வருத்தம்தான். பெண்களுக்கு இலக்கிய ஆர்வம் என்பது அத்தனை தவறானதா..? சமுதாயத்தை மீறி.. குடும்பத்தை பராமரித்து.. அலுவலகத்தை ஈடுக்கட்டி, தொடர் சோதனைதான்.

தங்களின் இணையதளம் உண்மையிலுமே ஒரு என்சைக்ளோபீடியாதான். யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவில் தான் உள்ளது. தான் பெற்றதை மற்றோருக்கு கடத்தி விட முயலும் உங்களின் ஆர்வத்தை தங்களின் தளம் வாயிலாக அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். நேரிடையான சந்திப்பு இலக்கியத்தின் மீதான தணியாத ஆர்வத்தை ஈடுகட்ட ஏதுவாகும் என்று எண்ணினேன். பிறந்து இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்று தோன்றுகிறது எனக்கு… ஆணாக பிறந்திருக்காலாமோ.. என்று.

வருத்தத்துடனும் நன்றியுடனும்

கலைச்செல்வி.

 

unspecified
அன்புள்ள கலைச்செல்வி,

கொல்லிமலை நிகழ்ச்சியின் அமைப்பாளர்களான கிருஷ்ணன், மீனாம்பிகை இருவரிடமும் கேட்டேன். நீங்கள் ஊட்டி நிகழ்ச்சிக்கு வரவிருந்ததாகவும் அங்குள்ள தட்பவெப்பநிலை உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

கொல்லிமலைக்கு வரவிரும்பி பேசியதாகவும் ஆனால் அங்கு நடப்பதற்கு சற்றுதொலைவு இருப்பதனால் சற்று கடினமாக உணர்வதாகவும் சொன்னீர்கள் என்றும், ஆகவே காத்திருந்ததாகவும், மேலும் தொடர்பு இல்லாததனால் இன்னொருவருக்கு அவ்வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள்

கொல்லிமலையில் 20 பேர் மட்டுமே தங்கமுடியும். அதற்குமேல் அங்கே தங்கினால் நடை போன்றவை சிறப்பாக அமையாது. நாற்பதுபேருக்குமேல் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆகவே வேறுவழியே இல்லாமல் ஒரேநாளில் விண்ணப்பத்தை மூடினோம். மேலும் பலர் மின்னஞ்சல் செய்திருக்கிறார்கள்.

2

இச்சந்திப்புகளின் சிக்கல்கள் இவை. கொஞ்சம் அழகியல் தேவை என்பதனால் மலைப்பகுதிகளைத் தேர்வுசெய்கிறோம். அங்கே இடவசதி குறைவு.கொஞ்சம் ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களுக்கான இடங்கள் அவை. பெண்களுக்கு இது ஒரு சிக்கலாகவே இருக்கிறது

மீண்டும் ஒரு சந்திப்பை ஏற்பாடுசெய்துதான் ஆகவேண்டுமென்னும் நிலை. அனேகமாக நகர்களில் ஏற்பாடுசெய்யப்படும். உங்களுக்கு முன்னரே நானே தனிப்பட்டமுறையில் தகவல்தெரிவிக்கிறேன்

ஜெ

 

unspecified

அன்புள்ள ஜெ

ஈரட்டி சந்திப்பில் ‘நல்லவேளை பெண்கள் இல்லை’ என்று எழுதியிருந்தீர்கள். பெண்கள் வராதது அந்த அளவுக்குக் கொண்டாட்டமா என்ன?

பிருந்தா

 

DSC_2135

அன்புள்ள பிருந்தா,

இதில் பாவனைகள் ஏதும் இல்லை. பெண்கள் இல்லையேல் அந்த அவை ‘ஆண்கள் அவை’தான் அதில் கண்டிப்பாக  ‘மேற்படி’ நகைச்சுவைகள் ஏராளமாகவே இடம்பெறும். ஈரட்டிசந்திப்பில் வரவிருந்த இரு பெண்களும் கடைசிநேரத்தில் வரமுடியவில்லை. ஆகவே அது அப்படி நிகழ்ந்தது.அது அப்படித்தான் நிகழுமென அறியாத பெண்கள் உண்டா என்ன?

DSC_1915

மிகத்தீவிரமான இலக்கிய, வரலாற்றுச் செய்திகளைத்தான் பேசினோம். மேற்கோளாக அந்த நகைச்சுவைகள். ஆனால் அதெல்லாம் பெண்களுக்கு எதிரானவையோ, பெண்களுக்கு அவமதிப்பானவையோ ஒன்றும் அல்ல. எங்கள் சந்திப்புகளில் கிசுகிசுக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வம்புகளுக்கும் இடமில்லை.

பெண்கள் வந்திருந்தால் அதெல்லாம் இருந்திருக்காது. கண்டிப்பாக நகைச்சுவை இருந்திருக்கும். பெண்கள் சங்கடமாக உணராத நகைச்சுவைகள். ஈரட்டி சந்திப்பில் நான் நண்பர்களுடன் படுத்துக்கொண்டே பேசுகிறேன். அங்கே நல்ல குளிர்ந்த இதமான காற்று. ஆகவே சட்டையில்லாமல் அமர்ந்திருக்கிறேன். நடனம்கூட ஆடியிருப்பேன். அதெல்லாம் பெண்கள் இல்லை என்பதனால்தான். அது ஒரு சின்ன விடுதலைதான். அதில் என்ன தவறு?

DSC_1802

 

பெண்கள் மட்டும் கூடும் ஒரு சந்திப்பு என்றால் அவையும் இப்படித்தான்  அவர்களுக்குரிய  ‘தனி’ நகைச்சுவைகளுடன்  ஆட்டம் பாட்டத்துடன் நடந்திருக்கும் இல்லையா? [இல்லை என்று சொல்லவேண்டாம். எனக்கு அதையெல்லாம் சுடச்சுடச் சொல்லிவிடும் வாசகத்தோழிகள் கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கிறார்கள் ] இதில் என்ன சிக்கல் இருக்கிறது?

 

ஜெ

 

முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல்- சென்னை
அடுத்த கட்டுரைமணி-3