தொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இச்சந்திப்புகளால் என்ன பயன்? இவற்றைக்கொண்டு நீங்கள் என்ன நன்மை அடைகிறீர்கள் என்று கேட்கவிரும்புகிறேன். எழுத்தாளர்கள் இவ்வகையான சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கமில்லை அல்லவா? நீங்கள் உங்களை ஓர் அமைப்பாக ஆக்கிக்கொள்ளவும் நிலைநிறுத்தவும்தான் இதைச்செய்கிறீர்கள் என்று என் நண்பன் சொல்கிறான்.
மகேந்திரன்
அன்புள்ள மகேந்திரன்
நண்பன் என்பவன் நம் ஆழ்மனம், இல்லையா?
ஒன்று, தமிழில் இதுவரை எழுதிய முக்கியமான அத்தனை எழுத்தாளர்களும் அமைப்புக்களை உருவாக்கி நடத்த முயன்றிருக்கிறார்கள். அமைப்புக்களும் எழுத்தாளர்களும் என்னும் கட்டுரையில் இதைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறேன். பாருங்கள்
இரண்டு. உலக அளவில் எல்லா நாட்டிலும் நிலை ஒன்றல்ல. அமெரிக்கா போன்றநாடுகளில் வாசிப்பு ஓர் இயக்கமாக ஏற்கனவே இருக்கிறது. அங்கு வணிகம் மேலும் முக்கியம். ஆகவே எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை வணிகரீதியாகப் பரப்ப ஊர் ஊராகச் சென்று வாசிப்பு –விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
சிங்கப்பூர் போன்றநாடுகளில் அரசே வாசிப்பை மேம்படுத்த முயற்சி எடுக்கிறது. அத்தகைய சூழல்களில் அரசுடன் ஒத்துழைத்து வாசிப்பு – எழுத்தை முன்னெடுக்க எழுத்தாளர்கள் முயல்கிறார்கள்.
ஒட்டுமொத்த எழுத்தாளர்களும் ஒன்றும்செய்யாமல் எழுதிக்கொண்டு மட்டும் இருக்கும் நாடு என ஏதும் இல்லை. சில எழுத்தாளர்களுக்கு எழுதமட்டுமே முடியும். சிலர் எழுத்தையும் வாசிப்பையும் முடிந்தவரை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுக்கமுயல்வார்கள்
நான் எழுதவந்தகாலகட்டத்தில் எழுத்தாளர்களுடனான நேரடி உறவே முக்கியமான வழிகாட்டியாகவும் ஊக்கமூட்டியாகவும் இருந்தது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோவை ஞானி, பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எனக்களித்த தூண்டுதலை தொடர்ந்து பதிவுசெய்துவருகிறேன். எவருக்கேனும் அப்படி உதவுமென்றால் இச்சந்திப்புகள் உதவட்டுமே என்பதே என் நோக்கம். உதவுகின்றனவா, உதவுமளவுக்கு நான் முக்கியமானவனா என்பதெல்லாம் அடுத்த கேள்விகள், ‘காலம் பதில்சொல்லட்டும்’ என்ற தேய்வழக்கே அதற்கான பதில்
புதியவாசகர்களைச் சந்திப்பது எனக்கு என்ன அளிக்கிறது என்றால் ஆழமான ஓர் மனஎழுச்சியை. இன்றைய சூழலில் இலக்கியத்திற்குரிய எதிர்விசைகள் வலுவானவை. ஃபேஸ்புக்கின் வம்புச்சூழல். அதில் மாட்டிக்கொண்டால் மீட்பில்லை. அந்த நடையே புனைவுநடையை சாகடித்துவிடும். தீவிரமாகத் தொடர்ந்துசெயல்படுவதற்கு எதிரான பரபரப்பான வாழ்க்கைச்சூழல். இறுதியாக, அனுபவக்குறைவுள்ள நகர்சார் வாழ்க்கைமுறை இன்னொருதடை.
இவற்றை மீறி இத்தனைபேர் வாசிக்கவும் எழுதவும் வருவது அளிக்கும் நம்பிக்கை மேலும் ஊக்கமாக எழுதத் தூண்டுகிறது. இலக்கியம் ஒருபோதும் வெகுஜன இயக்கம் ஆகாது. அது அழியாது முன்னெடுக்கப்படுவது இத்தகைய சிறிய இயக்கங்கள் வழியாகவே.
ஜெ