வெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்

DSC03323

ஜெ,

வேளாண்மை குறித்து உங்களது வலைப்பதிவுகளை வாசித்தேன். இரண்டு விஷயங்கள்.
ஒன்று,  நம்மாழ்வார் ஐயாவின் வசைபாடுதலால் அவரை விட்டு விலகியவர்களுள் நானும் ஒருவர். மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் சேர்ந்து பணி செய்ய முடியவில்லை. பெயர் குறிப்பிடாமல் நூலின் முன்னுரையில் இதைப்பற்றிய எனது கருத்தையும் எழுதியுள்ளேன். இதே காரணத்தால் கடந்த இருபதாண்டுகளில் பல களப்பணியாளர்களிடமிருந்து விலக நேரிட்டுள்ளது.
இரண்டு. நீங்கள் எவ்வகையான இயற்கை வேளாண்மை மேற்கொள்கிறீர்கள் என்று அறியலாமா? என்ன விளைவிக்கிறீர்கள்? ஒரு ஏக்கருக்கு என்ன செலவாகிறது? என்ன வருமானம் கிடைக்கிறது? இயற்கை வேளாண்மையில் பல அணுகுமுறைகள் உண்டு. நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் லாபகரமான பல பண்ணைகளைப் பார்த்த பிறகுதான் நான் இந்தத் துறையில் ஈடுபடவே தொடங்கினேன். நீங்கள் எந்தெந்த பண்ணைகளை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்? இந்த தகவல்கள் கிடைத்தால் ஒரு நீண்ட பதில் / கட்டுரை எழுத முயற்சிப்பேன்.
பிறகு, நான் தற்போது கல்வி குறித்த ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறேன். பண்டைய குருகுல முறையை / அமைப்பைப் பற்றி உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். நாகர்கோவிலில் எப்பொழுதாவது சந்திக்க முடியுமா? இதைப்பற்றிய கட்டுரைகள், நூல்கள் ஏதாவது நீங்கள் பரிந்துரைக்க முடியுமா? உங்களை அண்மையில் ஈரோட்டில் சந்தித்த இளைஞர் சக்திவேலுடன் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
அன்புடன்,
சங்கீதா
அன்புள்ள சங்கீதா
ஒருமுறை திருவண்ணாமலையில் சந்திப்போம். தகவல்களை அளிக்கிகிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெ
நம்மாழ்வார் குறித்த உங்களது கட்டுரை குறிப்பிடத்தக்கது .அது நம்மாழ்வார் என்னும்  ஆளுமையை குறித்து அல்ல ,சிந்தனை மரபுகளையும் ,சிந்தனையாளர்களையும் குறித்து என்றே புரிந்து கொள்கிறேன்.பல சிந்தனையாளர்களும் கடைசியில் வெறுப்பு அரசியல் பேசுபவர்களாக ,சதி கோட்பாடுகளை பரப்புபபவர்களாக ஏன் மாறுகிறார்கள் என்று அடிக்கடி எண்ணிப் பார்ப்பதுண்டு .எனது சமீபஅனுபவங்கள் :
1.குடி எதிர்ப்பு கூட்டம் ஒன்றிற்கு சென்றேன் .தனிப்பட்ட அனுபவங்கள் காரணமாகவும் ,எனது மத நம்பிக்கை அடிப்படையிலும் குடியை வெறுப்பவன் நான் .ஆனால் ,கூட்டத்தில் உடனே TASMAC ஐ மூடு என்ற பாணியிலான பேச்சு எரிச்சல் அடைய வைத்தது .குடி நோயாளிகளை குறித்தான சிந்தனை கூட இல்லை .தலைமை தாங்கியது ஒரு அறிவு ஜீவி .அந்த கூட்டத்தில் நான் மிகவும் மதிக்கும்(நீங்களும் மதிக்கும்) பேராசிரியர் ஒருவர் ,சதி கோட்பாடு ஒன்றை உரத்து கூறினார் .குடும்ப பெண்களை குடிக்க வைத்து தமிழ் நாட்டை அழிக்க பெரும் சதி நடப்பதை விவரித்தார் .அனைத்து இலக்கிய /கள செயல்பாட்டாளர்களும் கையடித்து வரவேற்று அதை குறித்து பேச தொடங்கினர் .மறுத்து பேச முயன்ற என்னை சாராயம் வடித்து பிழைக்க கூறினார் பேராசிரியர் .(எங்கே ?இன்னும் சமையலே சரியாக வருவதில்லை …)
2.சூழல் செயல் வீரர் ஒருவரோடு ஒரு விவாதம் .அவரையும் நான் மிகவும் மதிக்கிறேன் .விவாத பொருள் ஹிந்து மதம் .அவர் மூன்றாவது வரியில் மனுவை இழுத்து ஆறாவது வரியில் மனுவின் ஆட்சியை யாரும் கொண்டு வருவதை தாம் உயிரை கொடுத்தாவது எதிர்ப்பேன் என சன்னத த்தோடு எழுதினார் .நான் தெறித்து விட்டேன்
  இது தவிர விஷய ஞானத்தோடு தெளிவாக பேசி வந்த பல பேச்சாளர்களுக்கும் காலம் ,கோமாளி வேஷத்தை அணிவித்து அரங்கேற்றுவதை காண்கிறேன் .Noam Chomsky கூட ஒரு வித சதி கோட்பாளராக ஆகி விட்டார் .தங்களது கருத்துக்கள் மீது இவர்களுக்கு தோன்றும் அவநம்பிக்கையா ?அல்லது மக்களை மனம் மகிழ செய்ய வேண்டும் என்ற எண்ணமா ?எது இவர்களை இப்படி மாற்றுகிறது என்று தெரியவில்லை .ஒரு ஆராய்ச்சியில் பிரபல மனோதத்துவ பேராசிரியர் ஒருவரை ,தங்களது உடல் மொழி வழியாக ,அவரது மாணவர்கள் அவருக்கு தெரியாமலேயே அவரை வகுப்பறையின் ஒரு மூலையில் மட்டும்  நின்று உரையாற்றுமாறு செய்தனர் என்று வாசித்த நினைவு .Behavior Reinforcement .அது தான்,இரு தரப்பினருக்கும் தெரியாமல் , இங்கு பெரிய அளவில் நடக்கிறதோ ?
இந்த இடத்தில் மேடை பேச்சை குறித்த உங்களது கறாரான அணுகு முறை நினைவில் வருகிறது .எங்கு பேசினாலும் ,நான் பேச விரும்புவதை ,பேச விரும்பும்  பாணியில் தான் பேசுவேன் என்று நீங்கள் உறுதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமோ ?
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன்
அன்புள்ள அனீஷ்,
பலசமயம் இத்தகைய பேச்சுக்களை அரங்குகள்தான் தீர்மானிக்கின்றன. ஓர் அவையில் நமது பேச்சு சோடைபோகக்கூடாது என்று நினைக்கும்போதே நாம் விழ ஆரம்பிக்கிறோம்.
நம் பேச்சு எவருக்கும் புரியாமல்போனாலும் சரி என நினைத்தால் பிரச்சினை இல்லை
ஜெ
முந்தைய கட்டுரைவல்லவன் கை வில்
அடுத்த கட்டுரைமணி-1