ஈரட்டிச் சிரிப்பு…

DSC_1866

 

ஈரோட்டுக்கு செல்வது என்பது மனுஷ்யபுத்திரன் பாணியில் சொல்லப்போனால் ஒரு கொடுங்கனவு.விடியற்காலையில் எழுவதென்பது என்னால் எளிதில் செய்யக்கூடியதல்ல. அதிலும் ரயிலில் விடியற்காலையில் எழுவதென்பது மிகக் கடினம். செல்பேசிக்கு காலையில் என்னை எழுப்பும்படி ஆணையிட்டுவிட்டு படுத்தால் அது என்னை அழைத்துக்கொண்டே இருப்பதுபோல பிரமை. எவர் மணி எங்கே அடித்தாலும் எழுந்து அமர்வேன். ஏன் எந்தப்பெண்ணாவது வளையலையோ கொலுசையோ அசைத்தாலும் எழுந்து அமர்ந்து மணிபார்ப்பேன்.

மொத்தத்தில் ‘எப்படிப்பட்ட ரயிலில் இருக்கிறோம் நாம்?” என்னும் வகையான பதைப்புதான் எப்போதும். ஆகவே போதிய முன்னெச்சரிக்கைகள் எடுத்து அதன் விளைவான பதற்றத்தில் விழித்து கடைசியில் சலித்து தூங்கி திருப்பூரில் கண்விழிப்பேன்

DSC_1834

ஈரோட்டில் நண்பர்கள் என்னை அவர்களே அழைப்பதாகச் சொன்னார்கள். ஆகவே எல்லா செல்பேசி ஒலிகளுக்கும் திகைத்து எழுந்துகொண்டிருந்தேன். காலை நான்குமணிக்கு எழுந்தமர்ந்து ஐந்தரைமணிவரைக்கும் இருட்டையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ரயில்நிலையத்துக்குச் சந்திரசேகரும் திருப்பூர் கதிரும் கிருஷ்ணனும் வந்திருந்தனர். சிங்கிள் டீ குடித்துவிட்டு நேராகவே ஈரட்டிக்குக் கிளம்பினோம். சென்னை அருணாச்சலம் மகராஜன், மருத்துவர் தங்கவேல், வெண்ணிமாலை, கே.பி.வினோத் , பெங்களூர் மணிகண்டன் ஆகியோர் வந்து விஜயராகவன் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் இன்னொரு காரில் தொடர்ந்து வந்தனர்

 

DSC_1828

காலைபத்துமணிக்கு ஈரட்டி பங்களாவுக்குச் சென்றோம். ஈரட்டியில் இது கோடைகாலம்.எங்களூர் போல பசுமைமாறாக்காடு அல்ல. ஆகவே முக்கால்வாசி காய்ந்திருந்தது. ஆயினும் மிதமான குளிரும் , இதமான காற்றும் இருந்தது. ஈரட்டி பங்களா இப்போதுதான் விஜயராகவன் முயற்சியால் பணிமுடிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் தோட்டவேலை மிச்சமிருக்கிறது. கட்டுமானவேலை விஜயராகவன் பொறுப்பு

முற்றத்து மரநிழலில் அமர்ந்து பேசத்தொடங்கினோம். அதுவரை பேசிக்கொண்டு வந்த அதே மனநிலை நீடித்தது. வேடிக்கைக்கதைகளாக கொட்டிக்கொண்டிருந்தது. இலக்கியச்செய்திகளைக்கூட நகைச்சுவையாக மட்டுமே பேசினோம்.சிரிப்புமட்டும்தான். கண்ணீர் வரும்வரை சிரிப்பு. நல்லவேளை இச்சந்திப்பில் பெண்கள் இல்லை

 

DSC_1823

கோவையிலிருந்து அரங்கசாமி, ஸ்டீல்சிவா, குயிஸ் செந்தில், விஜய்சூரியன்,செல்வேந்திரன் ஆகியோர் வந்தார்கள். முதல் சிரிப்பு இருநாட்களையும் வகுத்துவிட்டது. அன்று பகலிலும் இரவிலும் மறுநாள் மாலைவரைக்கும் சிரிப்பே மையமாக இருந்தது, நடுவே தீவிரமான உரையாடல்கள் வந்தன.பொதுவாக இந்திய வரலாற்றை, தமிழ் வரலாற்றை இதுவரை எழுதியதன் முறைமை மற்றும் அதன் விடுபடல்கள் குறித்த உரையாடலே பெரும்பாலும்

வெண்முரசு குறித்து ஓர் அமர்வு முழுக்கப்பேசினோம். வெண்முரசின் திருப்புமுனைத் தருணங்கள், அல்லது கதாபாத்திரங்களின் முறிவுத்தருணங்கள் பற்றி. ஆனால் அவையனைத்துமே சிரிப்புக்குள்தான்.

DSC_1813

மதியம் மட்டன் குழம்புடன் சாப்பாடு. ஒரு மாலைநடை, அருகே இருந்த மலைப்பாறைவரை நான்கு கிமீ ஏறிச்சென்றோம்.  வெயில் மங்கத்தொடங்கிய வேளை. ஈரட்டியின் நிலம் அலையலையாக இருக்கும். நடுவே ஆழமான நீரோடை. ஏறிச்செல்லும் மண்ணில் மலையுச்சிவிளிம்புவரை மரங்கள்.இருட்டத்தொடங்கியதும் மீண்டு வந்தோம்.

இரவில் ஈரட்டியில் விண்மீன்கள் மிகத்தெளிவாக இருக்கும். ஏனென்றால் தூசு, புகை இல்லாத மலைப்பகுதி. ஆனால் ஊட்டி கொடைக்கானல்போல மேகங்களும் இருப்பதில்லை. இரவில் குயிஸ் செந்தில் விண்மீன்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் பெயர்களையும் தனித்தன்மைகளையும் விளக்கினார்

DSC_1787

மறுநாள் காலை ஆறுமணிக்கே கிளம்பி காட்டுக்குள் சென்றோம். முட்புதருக்குள் விலங்குகள் உருவாக்கிய வழி ஒரு முட்குகைபோலிருந்தது. கீழிறங்கிவிட்டு நா தள்ள மேலே ஏறிவந்தோம்.

காலைச்சாப்பாட்டுக்குப்பின் பன்னிரண்டு மணிவரை உரையாடல். எங்கள் மாளிகை ஈரட்டி அருவிக்கு மேலே அமைந்துள்ளது. ஒருகீமீ ஆழத்திற்கு இறங்கிச்சென்றோம். அருவியில் நீர் குறைவுதான். ஆனால் அருவிவிழும் குளம் தெளிந்த நீருடன் இருந்தது. இரண்டு மணிநேரம் திளைத்து நீராடினோம்.

 

DSC_1761

மதியம் கோழிக்குழம்புடன் சாப்பாடு. ஐந்துமணிக்கு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். எனக்கு இரவு பத்து மணிக்கு ஈரோட்டிலிருந்து ஊருக்கு ரயில். இரவு படுத்ததுமே நல்ல தூக்கம். காலையில் எழுந்தபோதும் முகம் மலர்ந்தபடியே இருந்தது. நம்முடைய முகம் மலர்ந்திருப்பதை நாமே அறியும் தருணம் அழகான ஒன்று.

 

DSC_1744வெண்முரசின் வெய்யோன் சிலநாட்களுக்கு முன்புதான் முடித்திருந்தேன். என் வாழ்க்கையின் துயரமான நாட்கள். சொந்தவாழ்க்கையில் அனைத்தும் மகிழ்ச்சிகரமான தருணங்கள். ஆனால் புனைவுக்கும் சொந்தவாழ்க்கைக்குமான இடைவெளி பலசமயம் அழிந்துவிடுகிறது

அத்துடன் நெருக்கமான ஒருவருக்குச் சில பிரச்சினைகள். அதில் நான் ஈடுபட்டேன். அந்தச்சோர்விலிருந்து இந்நாட்கள் முழுமையாக வெளிக்கொண்டுவந்தன. ஒரு உற்சாகமான அருவிக்குளியல் போல. இது சிரிப்புக்குளியல்

DSC_1731உண்மையில் சிரிப்பு ரயிலில் நான் கிளம்பும்போதே ஆரம்பமாகிவிட்டதென இப்போது தோன்றுகிறது.நெல்லையில் ஒரு ஜோடி ஏறி என் பெட்டிக்குள் படுத்தது. நாற்பது, முப்பத்தைந்து வயதுகள் இருக்கும். சீட்டுப்பரிசோதகர் வந்து சோதனையிட்டார். அவர் சென்றதும் கீழ்க்கண்ட உரையாடல்

DSC_1985DSC_1986

கணவன்: நல்லா தூங்கி வந்தேன். காலைத்தட்டி எளுப்பிப்போட்டான். இனிம எங்க ஒறக்கம்?

மனைவி: ஆமா நானும் உறங்கினேன். காலத்தட்டி விளிக்கான் பாத்தேளா?

கணவன் : டிக்கெட் கேக்கணுமானா காலத்தட்டி விளிக்கான். உறக்கம் போச்சுல்லா?

மனைவி: இனிமே எங்க உறக்கம்? இப்பிடி விளிச்சு எளுப்புதான்?

கணவன்: பின்ன ? ஒரு இது இல்ல… நான் நல்லா உறங்கி வந்ததாக்கும்

மனைவி: நானும் நல்லா ஒருமாதிரி உறங்கிட்டு வந்தேன்

கணவன்: எளவு காலத்தட்டீல்லாட்டி விளிச்சு எளுப்புதான்?

மனைவி: ஒரு இது இல்ல… நான் ஒருமாதிரி உறங்கி வந்தப்ப வந்து காலைத்தட்டுதான்

கணவன்: இனிமே எங்க ஒறங்க?

மனைவி: ஆமா உறக்கம் போனா போனதுதான்

கணவன்: நல்லா உறக்கம் வந்தது கேட்டியா?

மனைவி: எனக்கும் உறக்கம் வந்தது. அப்பம் வந்து விளிச்சுப்போட்டான்

கணவன்: காலத்தட்டீல்லா விளிக்கான்?

DSC_2000

இப்படியே… அந்த அளவுக்கு கருத்தொருமித்த தம்பதியை நான் பார்த்ததே இல்லை..எனக்கு கடவுள்மேல்தான் கோபம். காதைமட்டும் மூடவழி செய்யாத அவனை எல்லாம்… சரி, இதோ முடிப்பார்கள் என காத்திருப்பேன். ஒரு கோட்டுவாய். முனகல். சோம்பல் முறித்தல் . சலிப்பான குரலில் மீண்டும் “உறங்கி வாறப்பல்லா வந்து தட்டுதான்” “ஆமா, நானும் ஒருமாதிரி உறங்கி வந்தேன் கேட்டியளா?”

இப்படியே மதுரை வரை. ஒருகட்டத்தில் நான் போர்வைக்குள் வெடித்துச்சிரித்துவிட்டேன். இருவரும் என்னை கவனித்தனர். ஏப்பம் விட்டதாக நினைத்திருக்கலாம். “என்னண்ணு வந்து எளுப்புதான்” என்று கணவன் சொல்ல “நான் நல்லா உறங்கினப்பதான் வந்து காலை பிடிக்கான்” என்று மனைவி ஆமோதித்தாள்

DSC_2138

கடலூர் சீனு வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ஊருக்கு வந்து நினைவுகளை எழுத அமர்ந்தால் சீனு வந்து கதவைத்தட்டினார். சாத்தானுக்கு நாம் நினைப்பது தெரியும்.

DSC_1694

புகைப்பட தொகுப்பு இங்கே

புகைப்படங்கள் டாக்டர் தங்கவேல்

முந்தைய கட்டுரைஇலக்கிய அரங்குகளில் பெண்கள்
அடுத்த கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9