நம்மாழ்வார் -கடிதம் 1

1

அன்புள்ள ஜெயமோகன்,

நம்மாழ்வார் பற்றிய கட்டுரை மிகமிகக் கச்சிதமானது. முக்கியமான கட்டுரை. காலத்துக்கு உகந்த ஒரு பெரிய திறப்பு அது. அதை சல்லிசாக்கி அற்ப்பத்தனமாகச் சிலர் எழுத அதை நீங்கள் விளக்கம் அளித்து முன்னால்கொண்டு சென்றிருக்கக் கூடாது. அந்த மையவிஷயம் பேச்சுக்கே வராமல் ஆகிவிட்டது. தயவுசெய்து இதைக்கொஞ்சம் கவனியுங்கள்

நம்மாழ்வார் மிகப்பெரிய ஆளுமை. முக்கியமான விஷயங்களைச் சொன்னவர். முக்கியமான முன்னோடி. அதெல்லாம் உண்மை. ஆனால் அவரை நாம் விமர்சனரீதியாக புரிந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவரது தவறுகள் அவரது சிக்கல்கள் எல்லாமே விவாதிக்கப்படவேண்டும்

கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் சொன்னதுபோல இயற்கைவாதம் என்பதே ஒருவகை குறுங்குழுத்தன்மையாக ஆகிவிட்டது. அதற்குக்காரணம் நம்மாழ்வார்தான். அவரது மிகப்பெரிய தப்பு என்பது தமிழ்த்தேசியத்தையும் இயற்கைச்சூழலியலையும் கலந்து வைத்ததுதான் ஏனென்றால் எங்கே சென்றாலும் அவருக்குக் கொஞ்சம் ஆதரவாளர்கள் தேவைப்பட்டார்கள். தமிழ்த்தேசியர்களின் மேலோட்டமான தீவிரம் அவரைக் கவர்ந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார்

தமிழ்த்தேசியத்துக்கும் சூழியலுக்கும் என்ன சம்பந்தம்? தமிழகத்தின் இயற்கைவளங்களைச் சுரண்டித்தின்னும் பெருமுதலாளிகளிடம் காசுவாங்கி அரசியல்செய்பவர்களின் கோஷமே இங்கே தமிழ்த்தேசியம். அதையும் பலவகையான சில்லறை மருத்துவமுறைகளைப்பற்றிப் பேசுபவர்களையும் எல்லாம் இணைத்துக்கொண்டு சூழியல் பேச ஆரம்பித்தார் நம்மாழ்வார்

தப்பான அரசியலும் தப்பான அறிவியலும் அவரை நீங்கள் சொல்வதுபோல வெறும் வசைபாடிச்சித்தராக ஆக்கின. அவர் இருக்கும்போது நமக்கெல்லாம் அவரது கரிஷ்மாவை கடந்து அதை பார்க்க தோன்றவில்லை. இப்பொது தெளிவாகத்தெரிகிறது. நீங்களேகூட தயங்கித்தயங்கித்தான் அதைச் சொல்லத்தொடங்கியிருக்கிறீர்கள்

இன்றைக்கு இயற்கைவிவசாயத்திலே என்ன நடக்க்கிறது? உண்மையில் இங்கே அதைச்செய்வதற்கான சிக்கல்கள் என்ன? இயற்கைவிவசாயம் என்றால் ஒரு மண்ணிலே இயற்கையாக விளையும் பயிர்களை மட்டும் வளர்ப்பது. தமிழ்நாட்டில் அப்படியென்றால் பனையையும் உடைமுள்ளையும்தானே வளர்க்கமுடியும்?

இயற்கைவிவசாயம் செய்பவர்கள் தங்கள் சிக்கல்களைப்பற்றி எங்காவது பேசிக்கொள்கிறார்களா? கூட்டாக கூடி பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாகத் தீர்க்கிறார்களா? கொஞ்சம் கொஞ்ச்மாக இந்த புதிய வழிமுறையை அறிவியலாக வளர்க்க முயல்கிறார்களா? எங்கும் இல்லை. எந்த விவாதத்திற்கும் இடமில்லை.

ஒரு சாதாரண சந்தேகத்தைச் சொன்னாலே உடனே தமிழர் எதிரி, ஏகாதிபத்தியக்கைக்கூலி என வசைபாடத்தொடங்கிவிடுவார்கள். அதைப்பயந்து வாயே திறப்பதில்லை எவரும். இயற்கைவேளாண்மையை தமிழர்வேளாண்மை என்றுகூட நம்மாழ்வார் சொல்லத்தொடங்கினார். என்ன அபத்தம் இது என்று நாம் அப்போது கேட்கவில்லை

இயற்கைவிவசாயம் பற்றிப்பேசும்போது தமிழ்தான் விவசாயத்தின் ஆணிவேர். தமிழை அயலார் அழிக்கிறார்கள். தமிழை நாம் காப்பாற்றினால் இயற்கைவிவசாயம் வளரும் என்றெல்லாம் நம்மாழ்வார் பேசியபோது நீங்கள் இருந்தீர்கள். அன்று நாம் இதைப்பற்றிப்பேசினோம். இதெல்லாம் நம்மாழ்வார் கடைசிக்காலத்திலே நம்பிப்பேசியவை. ஆனால் அவர் அதை அறிவியல் அடித்தளமில்லாத மூடநம்பிக்கையாக ஆக்கிவிட்டார்

அதைச் சரியாகவே சுட்டிக்காட்டிவிட்டீர்கள். ஒரு சங்கடமான வேலை. குருவாக நாம் நினைப்பவரை விமர்சிப்பது. எனக்கும் கஷ்டம் தான். இன்றைக்கு சூழியல் எங்கே இருக்கிறது? நம்மாழ்வாரை எல்லாம் நமக்கு அறிமுகம்செய்த ஈரோடு ஜீவானந்தம் சாரெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? அவர்களிடமிருந்து இது எப்படி எப்போது மொழியடிப்படைவாதமும். பிரிவினைவாதமும் வன்முறையும் மூடமருத்துவமும் பேசும் கும்பலிடம் சென்று சேர்ந்தது?

நாம் யோசிக்கவேண்டியது. தைரியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வசைபாடுவார்கள். தந்திரமாகத் திசைதிருப்புவார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் இதெல்லாம் பேச்சுக்குவந்துதான் தீரும்

என் பெயர் வேண்டாம்

எம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78
அடுத்த கட்டுரைநம்மாழ்வார் – கடிதம் 2