ஃபேஸ்புக்கில் கழகத்தின் போர்வெல் ஆன நெல்லைசெல்வன் என்னும் செல்வேந்திரன் இவ்வாறு எழுதியிருப்பதை நண்பர்கள் பொதுக்குழுவில் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள்
பழசுக கிளம்பட்டும்; புதுசுக நுழையட்டும் என ஜெயமோகன் நடத்தி வரும் விடியல் மீட்புப் பயணம் தமிழக கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கொங்கு முன்னேற்ற கழகத்தை விட விம்முரசர்களுக்கு வாக்குகள் அதிகம் இருப்பதை உணர்ந்த திமுக விக்டரி விஜயராகவன் மூலம் தூதனுப்பி கூட்டணியை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. விஜயசூரியனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும், விக்டரி விஜயராகவனுக்கு வாரிய தலைவர் பதவியும், அரங்கசாமி நாயக்கருக்கு குஷ்பூவுடன் ஒரு செல்ஃபியும் என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்து புர்ச்சி கவிதா சொர்ணவல்லியையும் கூட்டணிக்குள் இழுத்தால் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் வாக்குகளையும் அள்ள முடியுமே என அறிவாலய வட்டம் ஆலோசிப்பதாக சொல்கிறார்கள்.
இது கழகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல என்றாலும் இதில் தெரியும் ஏக்கம் அதிகாரபூர்வமானது என்பதை முறைப்படி அதிகாரபூர்வமற்ற வகையில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மூன்று வகையில் இதை அமைப்பு அணுகுகிறது. [மூன்று எங்கள் அதிர்ஷ்ட எண்] கூட்டணிக்கு அழைப்பு வந்தால் பரிசீலிப்போம் என்னும் அழைப்பை விடுத்துக்காத்திருப்பது. இதை கைக்கிளை என்று தொல்காப்பியம் சொல்கிறது. மடலேறுவேன் என்று கூறுதல், இளமை போய்விடும் என்று கூறுதல், தேற்றமுடியாத காம உணர்வு ஆகியவற்றுக்க்குப்பின் காம வெறிக் குறும்புகள் அமையும் என விக்கிப்பீடியர் குறிப்பிடுகிறார். இதில் கையின் இடம் செயலூக்கம் கொண்டதென்பதனால் இப்பெயர் அமைந்ததென்பர் அறிஞர். கையில் தாமரையுடன் தலைவி கண்கலங்கிக் காத்திருத்தல் இதன் அழகியலில் முக்கியமானது.
பொருந்தாமுறையில் பொருந்தமுயல்தல் இரண்டாம் முறை. இதை தொல்லார் பெருந்திணை என்கிறார். மடலேறுதல், இளமை மாறிய பருவத்து சேட்டிங், காம வெறி உரசல்கள், காம வெறி உடலுறவு மற்றும் புரட்சி, கலகம், ஓரிறைவாதம் போன்றவை இதன் கூறுகளென்கிறார் விக்கியார். இதை பெறுந்திணை என்று அவதூறு சொல்வதை ஏற்கமுடியாது. பெற்றபின் இது அமைவதில்லை. பெறும்பொருட்டே அமைகிறது என்பர்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நான்கு இருந்தாலும் அவை கூட்டணி நிகழ்ந்தபின் தொகுதிப்பிரிவினையில் செயல்படுபவை என்று இலக்கண அறிஞர் சொல்கிறார்கள். எஞ்சுவது பாலை. இதை ‘காட்டுவழிபோற புள்ள கவலப்படாதே. காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காதே. அம்மச்சியாள் பேரை சொன்னா புலி கொடுக்கும் பாதே” என்ற பாடலில் பண்ணைப்புரத்து இளையரசனார் அவர்கள் [கட்டைக்குரலில்] பாடியுள்ளார்
இம்மூன்றுவழிகளில் ஒன்றை ஈரட்டியில் கூடும் பொதுக்குழு செயற்குழு மற்றும் உள்ளே அமைந்துள்ள தனிக்குழுக்கள் இணைந்து முடிவெடுக்கும். கூட்டணி தகைந்தால் கழகக் கண்மணி செல்வா, மணவாளன், கதிர் திருப்பூர் ஆகியோருக்கு பழனியில் மொட்டை போட்டு வேண்டுதல் கழிக்கப்படும்