இயற்கை வேளாண்மை, முரண்பாடுகள்

wa

ஜெ
நம்மாழ்வார் பற்றிய பார்வையின் முரண்பாட்டை அல்லது சுயக்குழப்பத்தை பதிவுசெய்திருந்தீர்கள். அதே சுயக்குழப்பம் உங்களுக்கு இயற்கைவேளாண்மை பற்றியும் இருப்பதைக் காணமுடிகிறது. மிகுந்த ஊக்கத்துடன் இயற்கைவேளாண்மை பற்றி எழுதிவந்தீர்கள். திடீரென்று அது நடைமுறைச்சாத்தியமானதா என்ற சந்தேகம் இருக்கிறது என எழுதினீர்கள். இப்போது மீண்டும் நம்பிக்கை இருக்கிறது என எழுதியிருக்கிறீர்கள். முரண்பாடா குழப்பமா?

எஸ். ஜார்ஜ்

அன்புள்ள ஜார்ஜ்,

சங்கீதா ஸ்ரீராம்கூட கேட்டார்கள். இதை அவருக்கும் எழுதியிருந்தேன் என நினைவு.

குழப்பம்தான். அதிலிருந்து முரண்பாடு. கொள்கை அடிப்படையில் எனக்கு இயற்கைவேளாண்மையின் தேவை குறித்து ஐயமில்லை. அது வெற்றிகரமாக நடக்கமுடியும் என்று முன்பு தோன்றியது. ஆகவே அதைப்பிரச்சாரம் செய்தேன். நான் சொல்வதை நானே செய்து பணம் இழந்துகொண்டிருக்கிறேன்.

என்ன சிக்கல் என்றால் இயற்கைவேளாண்மையை இன்றைய உலக ஒழுங்குடன் இணைக்கமுடியவில்லை. விவசாயத்தொழிலாளர் இன்றைய வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் ஓரளவு ஊதியம் அளிக்கப்படவேண்டும்.அந்த ஊதியத்தை அளித்து வேளாண்மைசெய்ய முடியாது. நஷ்டம் வரும். ஆகவே கூடுமான வரை தொழிலாளர்களை வெளியே எடுத்தாகவேண்டும். நவீனப்பொருளியலில் வளர்ச்சி என்பதே விவசாயத்திலிருந்து உழைப்பாளர் வெளியேறும் விகிதம்தான் என்பார்கள். ஆகவே இயந்திரங்கள் தேவை. அத்துடன் தமிழகம்போன்றசூழலில் மின்பாசனம் இன்றி வேளாண்மை செய்யமுடியாது இன்று. இயற்கைவேளாண்மையோ மானுட உழைப்பை நம்பியிருக்கிறது. இப்படிச் சிக்கல்கள் பல.

சிலமாதங்கள் முன்புகூட இயற்கைவேளாண்மைப் பண்ணை ஒன்றுக்குச் சென்றேன். அங்கும்நஷ்டம்தான். ஆனால் அதைக் கொள்கை அடிப்படையில் தாங்குகிறார்கள். அதை எப்படி வெற்றிகரமானது எனச் சொல்லமுடியும்? இதில் பற்று இருக்கும் அளவுக்கு வேகம் இருக்கும் அளவுக்கு அறிவியல் இல்லை என்று தோன்றுகிறது. ஆனாலும் அதைவிட்டு விலகவோ நிராகரிக்கவோ தோன்றவில்லை. இதுதான் விஷயம்

ஜெ

 

முந்தைய கட்டுரைநம்மாழ்வார் ஒரு முரண்பாடு
அடுத்த கட்டுரைஇயற்கைவேளாண்மை முன்பும் பின்பும்