நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

ஜெ

உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் அவரது முகநூல்பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்

நம்மாழ்வார் பற்றி ஜெயமோகன் அன்றும் இன்றும்:

“நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும் இல்லீங்களா? உயிரை வளக்கிறதுதானுங்களே மருந்து? அழிக்கிறது எப்டிய்யா மருந்தாகும்? எப்பவாச்சும் நாம விஷத்த மருந்துன்னு சொல்லியிருக்கோமா? இப்ப நம்ம மொழியிலே அப்டிச் சொல்லவச்சிருக்காங்க பாத்தீங்களா? நாம இப்ப போராடீட்டிருக்கிறது மண்ணோட இல்லீங்க, நம்ம வாயிலே இருக்கிற நம மொழியோடதானுங்க’ என்றார். பின்பு யோசித்துப்பார்த்தபோது அவரது வாழ்க்கையின் செய்தியையே அவர் சொல்லிவிட்டதாக உணர்ந்தேன்” —-http://www.jeyamohan.in/43916#.VtjzWUU8KJI ‘நம்மாழ்வார் அஞ்சலி’ December 30 2013

“கடைசியாக நான் நம்மாழ்வாரிடம் பேசியதை நினைவுகூர்கிறேன். பூச்சிமருந்துக்களைப்பற்றிய ஒர் எளிமையான கேள்விக்கு “ஐயா நல்லா கேளுங்க. ஐயா அத மருந்துன்னு சொல்றீங்க. மருந்துன்னா நோய் தீக்கணும் இல்லீங்களா? பூச்சிக்கொல்லி எல்லாம் விஷம் அய்யா. விஷம் எதுக்குக் கொடுக்கணும்? கொல்றதுக்குத்தானே அய்யா?. யாரைக்கொல்லறதுங்கய்யா? தமிழனைகொல்ல! எதுக்கு தமிழனைக் கொல்லணும்? ஏன்னா அவன்தான்யா உலகத்துக்கே தலைமகன். அவன் இருந்தா உண்மையை உலகத்துக்குச் சொல்வான் இல்லீங்களா?. யாருங்க கொல்றாங்க? நல்லா பாருங்கய்யா…” என்று ஆரம்பித்து நர்சரிப்பள்ளி ஆசிரியர் போல பேசினார். நான் எழுந்து வந்துவிட்டேன்..”——- ‘விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்’
http://www.jeyamohan.in/85164#.VtjzFEU8KJI

இந்த முரண்பாடு ஏன்?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

என்ன முரண்பாடு? நினைவுகூர்வது ஒரே உரையாடலைத்தான். அதில் அவர் சொன்ன செய்தி அவரது வாழ்க்கையின் செய்தியாக ஒருமுறை தோன்றியது. அவரது மறைவின் கணம் அது. உணர்ச்சிமிக்க தருணம். இப்போதும் அவரது செய்தி அதுவென்றே நினைக்கிறேன்

ஆனால் இந்த மூன்றாண்டுகளுக்குப்பின் அவரது வழிவந்தவர்களால் அச்செய்தி கொண்டுசெல்லப்படும் முறையைக் காணும்போது அச்செய்தியில் அல்ல அதை அவர் முன்வைத்த முறைமையில்தான் பிரச்சினை என்று தோன்றுகிறது. ஓர் அறிவியல் தரப்பாக அல்லாது ஒருவகை குறுங்குழு நம்பிக்கையாக அதை முன்வைத்தார் என தோன்றுகிறது. அவரது செயலின் விளைவுகளைக் கண்டபின்னரே இம்மனப்பதிவு வலுவாக உருவானது. அதிலும் சென்ற இரண்டாண்டுக்காலமாக

அவர் மேல் பெருமதிப்பு கொண்டவன், அவரை ஒரு முன்னோடி என நினைப்பவன் என்றாலும் அவரிலிருந்து நான் என்னை விலக்கிக் கொண்டமைக்கான காரணம் அந்த அணுமுறைதான் என்பதை இப்போது உணர்ந்து வகுத்துக்கொள்கிறேன். அந்த மொழியும் பாவனையும் என இந்த காலநீட்சி உருவாக்கிய மனவிலகலுக்குப்பின் புரிந்துகொள்கிறேன்.

அவரது தரப்பின் பொருத்தப்பாடு பற்றி எனக்கு இன்றும் ஐயமில்லை. அவர் எனக்கு இன்னும் வழிகாட்டிதான்.நானே இயற்கைவிவசாயம் செய்பவன், செய்யமுயல்பவன்தான். ஆனால் அது அறிவியலாக அல்லாமல் ஆகிவிட்டதோ, அதற்கு அவர்தான் முதற்காரணமோ என ஐயப்படுகிறேன். போதுமா? முன்பு அவர் கருத்தை சுட்டிக்காட்டினேன். இப்போது அந்த மொழியைச் சுட்டிக்காட்டுகிறேன் .

அன்புள்ள ஜெயராமன், நான் எவருடைய நீதிமன்றத்திலும் சாட்சி சொல்லவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவிமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்
அடுத்த கட்டுரைஇயற்கை வேளாண்மை, முரண்பாடுகள்