நம்மாழ்வார் – கடிதம் 2

 

 

அன்பு ஜெயமோகன்,

நம்மாழ்வாரைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எவ்விடத்தும் நீங்கள் அவரை வசைபாடவில்லை; வசைபாடியாக மட்டுமே இறுதிக்காலங்களில் நம்மாழ்வார் இருந்திருக்கிறார் எனும் உங்கள் கருத்தைத் தெளிவாகவே முன்வைத்திருந்தீர்கள். அக்கருத்தைப் பொதுவானதாக மாற்றி மலின  அரசியலாக்கும் விருப்பம் உங்களுக்குத் துளியும் இல்லை என்பதை நான் அறிவேன். இப்படி சொன்னதற்காகக் கூட என்னை ’ஜெயபுகழ்பாடிச்சித்தன்’ எனப் பலர் நக்கலடிக்கவும் செய்யலாம். அதற்காக நான் விசனப்படப் போவதில்லை. நானறிந்தவரை, நீங்கள் மட்டும்தான் கருத்துக்களை ’சார்புத்தனத்தோடு’ வெளிப்படுத்துவதில்லை. நிச்சயம் அது உங்களுக்குப் பாதுகாப்பின்மையே என்றாலும், துணிந்து நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களே என்னைப் போன்றோரின் தர்க்க அறிவை மேம்படுத்துகிறது. எம் செயல்பாடுகளில், எம்மையே சீர்திருத்திப் பார்க்க உதவவும் செய்கின்றன.

‘வசைபாடிச்சித்தர்’ எனும் உங்களின் சொல்லாட்சியை மேலோட்டமாக அணுகினால் நிச்சயம் கோபம் எழும்பவே செய்யும். உங்கள் விமர்சனத்தை யார்மீதும் நீங்கள் திணிக்க விரும்பாத போதும், அப்படியான கோணத்திலேயே உங்கள் விமர்சனம் புரிந்து கொள்ளப்படுகிறது. துவக்கத்தில் பலமுறை நானே அச்சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறேன். நான் இந்து என நீங்கள் சொன்னதை பா.ஜ.க முன்வைக்கும் இந்து எனும் சொல்லோடு இணைத்துப் புரிந்து கொண்டு அவதிப்பட்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. எங்களின் பொதுப்புத்தியில் ஒரு ஈனகுணம் ஊறி இருக்கிறது. அதாவது, ஒன்று நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்போம் அல்லது கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்போம். இரண்டு முனைகளில் இருந்து விலகி நின்று பார்த்துப் பேச நாங்கள் பழகியதே இல்லை. அதனால்தான் நம்மாழ்வாரைப் பற்றி நீங்கள் விமர்சித்ததும் நணபர்களுக்குக் கோபம் வருகிறது. அவர்களைப் பொறுத்தவரை, நம்மாழ்வாரை நீங்கள் பாராட்ட வேண்டும் அல்லது திட்ட வேண்டும்.

இன்றைய காலத்தில் நம்மாழ்வாரை ஒரு ‘இயற்கை வேளாண்’ புனிதப் பிம்பமாக மாற்றும் முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில, பல குழுக்கள் அதைச் சிரமேற்கொண்டு தொடர்ந்து செய்தும் வருகின்றன. அறிவுசார்தளத்தில் நின்று கொண்டு யோசிப்பதாகச் சொல்லும் அவர்கள் மார்க்சியத்தின் வரலாற்று இயக்கவியலைப் புரிந்து கொண்டவர்கள்தானா எனும் சந்தேகம் என்னுள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு நம்மாழ்வார்தான் மூலப்படிமம் என்பது போன்றான சித்தரிப்புக்களுக்கும், பா.ஜ.கவின் இராமஜென்ம பூமி குறித்த மலினக் கருத்தாடல்களுக்கும் சிறிதுகூட வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன். இப்படிச் சொன்னவுடனேயே என்னை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி, பன்னாட்டு உலகச் சதிக்கூட்டாளி என்று வசைபாடத் தொடங்கத் தயாராக இருக்கும் நண்பர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மாழ்வாரைப் போற்றுவதும், தூற்றுவதும் என்பதான களத்தில்தான் நாம் நின்றிருக்கிறோமே தவிர, அவரை இரு கோணங்களிலும் அலசி அதிலிருந்து ஒரு செயல்பாட்டுக்களத்தைக் கண்டறிய நாம் முய்ன்றதே இல்லை. நம்மாழ்வார் எனும் குறியீடு முக்கியம் அன்று. அக்குறியீட்டை ஒட்டி நாம் முன்னெடுத்துச் செல்லும் ஆக்கப்பணிகளே அவசியம். குறைந்தபட்சம் சிந்திப்பவர்கள் கூட இக்கருத்தை ஒப்புக்கொள்வர். இன்றைக்கு அவரை மையப்படுத்தி ஒரு மலினமான அரசியல் துவங்கி இருக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வாரை என் கல்லூரிக் காலத்தில் முதன்முதலாகச் சந்தித்தேன். கல்லூரிப் பேராசிரியர் ந.வெங்கடாசலமும், அண்ணன் மயிலேறும் சரவணனும் சொல்லித்தான் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இயற்கை வேளாண்மை குறித்த நடைபயணத்தை மேற்கொண்டிருந்த அவரிடம் பேசும் அளவிற்கான புரிதல் என்னிடம் அப்போது இல்லை. அவரின் எளிமையால் ஏனோ நான் கவரப்பட்டிருந்தேன். வேகமாக நடக்கும் அவர் ஆங்காங்கே மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று பேசுவார். கோவில் மண்டபங்களிலோ அல்லது நண்பர்கள் வீடுகளிலோ மதிய நேரத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்வார். மாலை நான்கு மணி அளவில் நடைபயணத்தைத் துவங்குவார். அந்நடைப்பயணத்தில் என் பங்கும் இருக்க வேண்டி, அவருக்கு முன்பு ஆட்டோவில் அவர் வருகையைச் சொல்லிக் கொண்டே சென்றிருக்கிறேன். இன்றைக்கும் அக்காட்சிகள் என் மனதில் பசுமையாய் இருக்கின்றன. அதற்குப் பிறகு நண்பர் சிவராஜ்(குக்கூ குழஎதைகள் அறிவியக்கம்) சொல்லித்தான் ஓரளவு அவரை விளங்கிக் கொண்டேன்.

Nammazhvaar

எனினும், காலம் செல்லச் செல்ல நம்மாழ்வாரின் பேச்சில் ஒருவித வசைபாடும் தன்மை மட்டுமே மேலோங்கி இருப்பதைக் கண்டு கொள்ள நேர்ந்தது. தமிழர்களுக்கே உண்டான வசைபாடும் குணத்திலிருந்து அவரால் துவக்கத்தில் விலகி இருக்க முடிந்தது. பிற்காலத்தில், முற்போக்கு அமைப்புக்களின் தொடர்பால் அக்குணம் அவரிடம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். ஏகாதிபத்தியமும், உலகமயமாக்கலும் தமிழரை மட்டுமே குறிவைக்கின்றன என்பது போன்ற கருத்துக்கள் என்னைத் திடுக்கிட வைத்தன. தமிழையும், தமிழரையும் அவரைக் காட்டிலும் தீவிரமாக நேசிப்பவன் நான். என்றாலும், வரலாற்றுணர்வு இல்லாமல் அவர் தொடர்ந்து அவ்வாறு பேசியபடி இருக்க அவரின் மீதிருந்த ஈர்ப்பு தானாகவே குறையத் துவங்கியது. இன்றைக்கும் நம்மாழ்வாரின் துவக்கச் செயல்பாடுகளுக்காக அவரைப் போற்றத்தயங்காதவன்தான் நான். எனினும், அவரின் இறுதிக்காலப் பரப்புரைகளில் மேலோங்கி இருந்த ’வசைபாடலு’க்காக அவரைக் கண்டிக்கவும் தயங்கவில்லை. அவ்வகையிலேயே நம்மாழ்வாரை நான் அணுகுகிறேன். ஜெயமோகனான உங்களையும் அவ்விதத்திலேயே அணுகிக்கொண்டும் இருக்கிறேன்.

நம்மாழ்வாரைப் பேட்டி எடுக்க வேண்டும் என என் நண்பர் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்னால் கேட்டார். அச்சமயத்தில், நம்மாழ்வார் கோபியில்தான் அண்ணன் கெஞ்சனூர் குமார் வீட்டில் தங்கி இருந்தார். அவரிடம் அனுமதி பெற்று நண்பரை அங்கு அனுப்பி வைத்தேன். அவர் போன நேரம் அய்யா நம்மாழ்வார் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். பேட்டி எடுக்கச் சென்ற நண்பர் அதையே பலமுறை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நம்மாழ்வாரை ஒரு புனிதப்பிம்பமாகக் கருதிக் கொண்டு சென்றதாலேயே அப்படி புலம்ப நேர்ந்தது என நினைக்கிறேன். நாம்தான் அவரைப் புனிதப்பிம்பமாக்கவும், நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவரைப் பொறுத்தவரை தன்னை இயல்பான மனிதனாகவே காட்டிக் கொண்டார். அதனால்தான் அவரின் செயல்பாடுகளை ஆதரவு, எதிர்ப்பு தளத்தில் மட்டும் பார்க்காமல் தள்ளி நின்று பார்க்க நம்மால் முடிகிறது. அத்தோடு, அவரின் இன்றியமையாமையைப் பலருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது.

நண்பர்களிடம் வெளிப்படையாகவே ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகன் சொல்லிவிட்டார் என்பதற்காகவே ஒன்றை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காதீர் அல்லது எதிர்க்காதீர். நவீனகால எதார்த்தத்தை மனதில் கொண்டும், தருக்க அறிவைப் பயன்படுத்தியும் அக்கருத்தை மேலும் வளர்த்தெடுக்கப் பார்ப்போம். அதுதான் நாம் செய்ய வேண்டியதும். அதைவிடுத்து, ஜெயமோகன் சொல்ல வருவதை விடுத்து அவரை முன்னிறுத்தும் போக்கு மலின அரசியலாகவே சுருங்கிவிடும்.  சுருக்கமாகச் சொல்வதானால், ஜெயமோகனைப் புனிதப்பிம்பமாக ஒருபோதும் கருதிவிடத் துணியாதீர். அப்படி ஆகிவிட்டால், அவரின் கருத்துக்கள் எதுவாயினும் அதற்கு ஜால்ரா அடிக்க மட்டுமே நம்மால் முடியும்.

நம்மாழ்வாரை முன்னிறுத்தும் அமைப்புக்கள் பலவற்றில் இருப்பவர்கள் என் நண்பர்களே. அவர்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம்,  தயைகூர்ந்து நம்மாழ்வாரின் ரசிகர்களாகி விடாதீர்கள் என்பதே. இப்படி சொன்னதற்காகவே அவர்கள் என்னைத் திட்டக்கூடும்; உதாசீனப்படுத்தக்கூடும். எனினும், அவர்களின் மீது எப்போதும் அக்கறை உள்ளவன் என்பதால் அதைத் துணிச்சலுடன் சொல்லும் உரிமையும் எனக்கிருக்கிறது என்றே நம்புகிறேன்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

 

முந்தைய கட்டுரைநம்மாழ்வார் -கடிதம் 1
அடுத்த கட்டுரைகனக செல்வநாயகம் நினைவுப்பேருரை