திரிச்சூரில்

எனக்கு திரிச்சூரில் அலைவதுபிடிக்கும். தெருவில் அழகான பெண்கள் அதிகம் நடமாடும் ஊர் அதுதான். அடுத்த இடம்தான் மங்களூருக்கு. ஆனால் மதுரை எர்ணாகுளம் வழியாக 20 ம் தேதி இரவு எட்டரை மணிக்குத்தான் வந்துசேர்ந்தேன். எலைட் ஓட்டலில் அறை எடுத்து அறையில் அமர்ந்திருக்கப்பிடிக்காமல் வெளியே வந்தேன்.

திரிச்சூர் ஒரு ‘குடியிருப்புநகரம்’. அங்கே தொழில்கள் வணிகம் எதுவுமே கிடையாது. குடியிருப்புப்பகுதிகள், கலாச்சார நிறுவனங்கள், கோயில்கள் மட்டும்தான். ஊர் நடுவே வடக்கும்நாதர் கோயில் உள்ளது. கேரளத்தின் பெரிய மூன்று சிவன்கோயில்களில் ஒன்று. ஏற்றுமானூர், வைக்கம் கியவை பிற இரண்டு கோயில்கள். கோயிலைச்சுற்றி முன்பு அப்பகுதியை ஆண்ட சக்தன் தம்புரான் என்ற கேரள மன்னர் உருவாக்கிய மிகப்பெரிய மைதானம். அதற்கு தேக்குக்காடு மைதானம் என்று பெயர். அதைச்சுற்றி வட்டமாக ஒரு பெரிய சாலை. அதை ‘திரிச்சூர் ரவுண்ட்’ என்பார்கள். அந்த வட்டமான சாலைதான் திரிச்சூரின் கடைவீதி. அதிலிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலைகள் முழுக்க குடியிருப்புகளுக்குச் செல்கின்றன.

ரவுண்டில் மெல்ல நடந்தேன். மழை மெல்ல தூறிக்கொண்டிருந்ததனால் கூட்டமே இல்லை. சரசரவென கடைகளை மூடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே ஜோஸ் திரையரங்குக்குச் சென்று ‘டுவெண்டி டுவெண்டி’ என்ற படத்தைப்பார்த்தேன். கேரள நடிகர்- இயக்குநர் சங்கமான ‘அம்மா’ வுக்காக நடிகர் திலீப் தயாரித்த இந்த படத்தில் கேரளத்தின் முக்கியமான நடிகர்கள் அனைவருமே நடித்திருந்தார்கள். வழக்கமாக ஒரு கேலிக்கூத்தாக முடியக்கூடிய இந்த முயற்சி வலுவான திரைக்கதையின் விளைவாக ஒரு மாபெரும் வெற்றிப்படமாக ஆகிவிட்டது என்றார்கள்.

திரையரங்கில் நல்ல கூட்டம். நிறைய அழகிகள் என்று கண்டு மன ஆறுதல் அடைந்தேன். திரிச்சூர் பயணம் வீண் அல்ல. ‘டுவெண்டி டுவெண்டி’ஒரு வழக்கமான கேரள குற்றம்-போலீஸ்- நீதிமன்ற கதை. ஆனால் எல்லா நடிகர்களுக்கும் திரைக்கதையில் சரியான இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் அதிகமாகச் செய்யக்கூடிய வெற்றிகரமான கதாபாத்திரங்களின் சாயல்கள் அளிக்கப்பட்டிருந்தன.மம்மூட்டி கெத்தான கிரிமினல் லாயர், சுரேஷ் கோபி கொந்தளிப்பான போலீஸ் ஆபீஸர், மோகன்லால் நிழல் உலக தாதா, திலீப் அப்பாவியான இளைஞன்,ஜெயராம் உற்சாகமான டாக்டர்.

ஒரு கொலை நடக்கிறது. அதை ஒட்டி அடுக்கடுக்காக சம்பவங்கள். எல்லா கதாபாத்திரங்களும் ஒரு திருப்பத்துடன் அறிமுகமாகின்றன. பொதுவாக எந்த நடிகர் எப்போது அறிமுகமாகப்போகிறார் என்றெல்லாம் எழும் பரபரப்புகளை மறக்கச்செய்தது வேகமான திரைக்கதை. ஒருகணம் கூட தொய்வடையாமல் சென்று அடிதடி கிளைமாக்ஸில் முடிவுபெற்ற படம் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்தான்.

இடைவேளையில் ஆற்றூர் ரவி வர்மாவுக்கு ஃபோன்செய்தேன். அவர் கோபித்துக்கொண்டார். நேராக வீட்டுக்கு வரவேண்டியதுதானே என்றார். நான் அவரது வீட்டில் பலநாட்கள் தங்கியவன். ஆனால் இப்போது அவரது குடும்பம் பெரிது, மகனுக்கு மணமாகிவிட்டது.மருமகள் வீட்டிலேயே இருக்கிறாள். அவர்களின் வசதி எப்படி என்று தெரியவில்லை. ‘நாளைக்கே ஓட்டலைக் காலிசெய்துவிட்டு வா’ என்றார் ஆற்றூர். ‘சரி’ என்றேன்

மறுநாள் காலையில் ஓட்டலைக் காலிசெய்துவிட்டு ஆற்றூர் ரவிவர்மா வீட்டுக்குச் சென்றேன். பிரபல கட்டிடநிபுணர் லாரி பேக்கர் வடிவமைத்த வீடு. செங்கல் வெளியே தெரியும் அடர்சிவப்புநிறச் சுவர்கள். அந்த வீடு எனக்கு ஏராளமான நினைவுகள் அளிப்பது. நான் முதலில் செல்லும்போது அந்த வீட்டை ஆற்றூர் கட்டி முடிக்கவில்லை. கீழ்த்தட்டு மட்டும் வேலைமுடிந்து குடியேறிவிட்டிருந்தார். அவரது வீட்டைச்சுற்றி விரிந்த பச்சை வயல் வெளி. அங்குமிங்குமாக சில வீடுகள். ஆற்றூர் தான் அதற்கு ராகமாலிகாபுரம் என்று பெயரிட்டார். அவரது வீட்டுபெயர் சஹானா. பிற வீடுகளுக்கு ஒவ்வொரு ராகங்களின் பெயர் போட்டார்.

ஆனால் இப்போது ராகமாலிகாபுரம் என்ற பெயர் மட்டும் இருக்கிறது. வீடுகள் அடர்ந்து செறிந்துவிட்டன. சூழ பிரம்மாண்டமான மாளிகைகள். பெயர்களை ளாளுக்கு இஷ்டம்போல சம்ஸ்கிருதத்தில் தீட்டிவிட்டிருக்கிறார்கள். எல்லா வீடுகளிலும் கார்கள். ஆனால் ஒரு கார் போனாலே நெரிசல் ஏற்படுமளவுக்கு குறுகலான தெருக்கள்.

ஆற்றூரிடம் பழைய விஷயங்கள் புதிய கவிதைகள் பற்றி பேசிக்கொண்டு பகல் போயிற்று. மாலையில் டாக்டர் எம்.கங்காதரன் வந்தார். அவர் கோழிக்கோடு அருகே பரப்பனங்காடியில் குடியிருக்கிறார். கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலை கழகத்தில் வரலாற்றுப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மாப்ளா கலவரங்களைப்பற்றி முனைவர் பட்ட ஆய்வேடு வெளியிட்டிருக்கிறார். இலக்கிய விமரிசகர். எட்டு நூல்கள். ஆற்றூரும் அவரும் கல்லூரிக்காலம் முதலே நண்பர்கள். ஐம்பத்தைந்து வருடங்களாக அந்நட்பு நீள்கிறது.

எம்.கங்காதரன் ஆற்றூர்ரின் முதல் கவிதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதியவர். ஆற்றூர் ஒரு இடதுசாரிப்புரட்சியாளராக வெடிகுண்டுடன் அலைந்த காலங்களில் அவரது தோழர். ஆற்றூர் காதல் திருமணம் செய்த நாட்களில் மாப்பிள்ளைத்தோழர். இலக்கியத்திலும் சகபயணி. அன்று மாலை ஆற்றூர்ருக்கு பிரேம்ஜி நினைவுப்பரிசு வழங்கப்படுவதனால் கிளம்பி வந்திருந்தார். நான் சந்தித்த நாட்களில் மனித உரிமை, சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கான போராட்டத்தில் களப்பணியாளராக தோளில் பையுடன் அலைந்துகொண்டிருந்தவர். இப்போது பயணங்கள் குறைவு என்றார். மூப்பு. அவருக்கும் ஆற்றூர்ருக்கு எழுபத்தேழு வயதாகிவிட்டது.

ஆனால் ஆற்றூர் இன்னும் உற்சாகமாகத்தான் இருக்கிறார். நான் ஆற்றூரை முதலில்  சந்திக்கும்போது அவ்வருடம்தான் அவர் கல்லூரி ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்றபின் ஆற்றூரின் வாழ்க்கை பத்துமடங்கு வேகம் கொண்டது. ‘ஜ.ஜே.சிலகுறிப்புகளை’மொழிமாற்றம்செய்தார். பின்பு ‘ஒரு புளியமரத்தின் கதை’ ‘நாளைமற்றும் ஒரு நாளே’ போன்ற நாவல்கள். ஒரு பெரும் முயற்சியாக நவீன தமிழ்புதுக்கவிதைகளின் தொகையான ‘புதுநாநூறு’.

நவீனகவிதை மலையாளத்த்தில் ‘கத்ய கவிதா’ [வசன கவிதை] என்றே அழைக்கப்பட்டது. அதை புதுக்கவிதை என்ற தமிழ்ச்சொல்லாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தார் ஆற்றூர். விவர்த்தனம் என்பதை இன்று மொழிமாற்றம் என்கிறார்கள், அதுவும் ஆற்றூர் உருவாக்கிய சொல்லாட்சியே. மலையாளத்தில் சம்ஸ்கிருதத்தைக் குறைத்து தமிழை அதிகரிக்கவேண்டும் என்று வாதிட்ட எம்.கோவிந்தனின் மானவர்கள் ஆற்றூர் எம்.கங்காதரன் இருவருமே. ஆற்றூரின் மலையாள நடை அதற்குச் சிறந்த உதாரணம்

ஆற்றூர் தமிழ் சைவத் திருமுறையின் தேர்வுசெய்யபப்ட்ட கவிதைகளை ஒரு பெரிய நூலாக மொழிமாற்றம் செய்தார். அதன்பின்னர் இப்போது கம்பராமாயணத்தை மொழியாக்கம் செய்யும் பெருமுயற்சியில் இருக்கிறார். நடுவே தீவிர இசைகேட்டல். பூனா இந்துஸ்தானி இசைவிழாவுக்கும் சென்னை தமிழ்மரபிசைத் திருவிழாவுக்கும் திருவையாறு தியாகராஜ உற்சவத்துக்கும் இருபதுவருடங்களாக வருடம்தோறும் செல்கிறார். அனேகமாக வருடத்தில் ஒருமுறை இமயமலைக்குச் செல்வார். மலையேற்றம் அவருக்கு பிடிக்கும். அதற்கெனவே அவரை தலைமையாக்கிய நண்பர்குழாம் உள்ளது. இவ்வருடம் பிரம்மபுத்ரா கரையோரமாக ஒரு பயணம் செய்து திரும்பியிருக்கிறார்கள்.

மாலையில் பிரேம்ஜி விருதுவிழா. அதற்கு மலையாளக் கவிஞர்கள் பலர் வந்திருந்தார்கள். கே.ஜி.சங்கரப்பிள்ளையை நான்குவருட இடைவேளைக்குப்பின் சந்தித்தேன். கேரள சாகித்ய அக்காடமி திரிச்சூரில் இருக்கிறது. அதன் மையக்கூடம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும். அச்சுவர்களில் மறைந்த இலக்கியவாதிகளின் படங்கள் வரிசையாக உள்ளன [‘அந்தச் சுவரில் தொங்கத்தானே இவ்ளவு போட்டியும் அடிதடியும் எல்லாம்’– ஆற்றூர்] அப்படங்களில் வள்ளத்தோள் நாராயணமேனன் முதல் நான்கு தலைமுறைக்கால இலக்கியவாதிகளின் பெரிய வண்ணப் படங்களைப் பார்த்தபடி நடந்தபோது எனக்குப் பரவசமாக இருந்தது. இலக்கிய வரலாற்றையே பார்ப்பதுபோல.

கேரள சாகித்ய அக்காதமி ஒரு தன்னாட்சி நிறுவனம். இப்போது அதன் தலைவர் பிரபல நாவலாசிரியர் எம்.முகுந்தன். ஆய்வுக்கூடம் ,நூலகம் இலக்கியக்கூட்டங்கள், வருடம்தோறும் இலக்கிய விருதுகள் என அரை நூற்றாண்டாகச் செயல்பட்டுவரும் அதன் பங்களிப்பு முக்கியமானது. வணிக வாய்ப்பு குறைந்த தரமான பெரிய இலக்கிய நூல்களையும் கேரள சாகித்ய அக்காதமி வெளியிடுகிறது. தமிழ் புதுக்கவிதைத்தொகுதியான புதுநாநூறு, சைவ திருமுறை முதலிவரை சாகித்ய அக்காதமி வெளியீடுகளே. முற்றிலும் சுதந்திரமான, ஆனால் அரசு நிதி பெறக்கூடிய, ஓர் அமைப்பு அது.

அத்தகைய ஓர் அமைப்பு தமிழகத்தில் இல்லை. அப்படி ஒன்று தமிழுக்கும் தேவை என்ற கோரிக்கையை ஒருமுறை தோப்பில் முகமது மீரான் கோரினார். அதை ஏற்று உடனே முதல்வர் கருணாநிதி ஓர் அமைப்பை உருவாக்கினார். அதற்கு அவரே நான்குபேரை நிர்வாகிகளாக நியமித்தார்.உடனே அந்த நான்குபேரும் ஒரே குரலாக அவரே அதற்கு தலைமை ஏற்று வழிகாட்டவேண்டும் என்று நெக்குருகி வேண்டிக்கொண்டார்கள். அவரும் பெரியமனது பண்ணி தலைமை ஏற்றார். நிதி ஒதுக்கப்பட்டது. இப்போதும் ஒதுக்கப்படுகிறதென தெரிகிறது, அமைப்பு செயல்படுகிறதா என்று தகவல் இல்லை.

விழாவுக்கு மலையாளத் திரைக்கதையாசிரியர்- இயக்குநர் லோகிததாஸ் வந்திருந்தார். ஓர் ஆயுர்வேத சிகிழ்ச்சை எல்லாம் முடிந்து சிக்கென்று இளமையாக இருந்தார். என் பெட்டியை எடுத்துக்கொண்டு அவருடன் சென்றேன். மோகன்லால் நடிக்கவிருக்கும் பீஷ்மர் என்ற படத்துக்காக திரைக்கதை எழுத ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். லோகிததாஸ் வீட்டில் தங்கினேன். இரவெல்லாம் சினிமாக்கள், புதிய நாவல்கள், கவிதைகள் என்று பேசிக்கொண்டிருந்தோம்

மறுநாள் காலை கொடுங்கல்லூரில் இருந்து கவிஞர் செபாஸ்டின் வந்து என்னைச் சந்தித்தார். புதிய கவிதைகள் பிரசுரமாகியிருந்ததைக் கொடுத்தார். லுவா சந்தையில் காய்கறி வணிகம்செய்யும் செபாஸ்டின் மலையாளத்தின் முக்கியமான கவிஞர். அவரது கவிதைகளை நான் மொழியாக்கம்செய்திருக்கிறேன். லோகித் தாஸ¤க்கும் முன்னரே தெரிந்தவர்தான்.

அன்று லோகிததாஸ் மலையாள மனோரமா இதழ் இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும்பொருட்டு வருடம்தோறும் நடத்திவரக்கூடிய இலக்கியப்பட்டறையில் உரையாற்ற போனார். அவரது காரில் நானும் கூடவே சென்றேன். குற்றிப்புறம் என்ற ஊரில் பாரதப்புழை அல்லது நிளா நதி ஓரமாக ஒரு ஓய்வுவிடுதியில் நடந்தது அந்த முகாம். குற்றிப்புறம் எம்.கோவிந்தனின் சொந்த ஊர். அங்கே நான் பலமுறை வந்திருக்கிரேன். பள்ளி-கல்லூரிகளில் இருந்து போட்டிமூலம் தேர்வுசெய்யப்பட்ட 30 மாணவர்கள் அதில் பங்கெடுத்தார்கள். தினமும் இரண்டு பிரபல எழுத்தாளர்கள் அவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

லோகிததாஸ் திரைகதைக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றிப் பேசினார். அங்கே இருந்த மலையாள இளம் நிருபர்கள் என்னைச்சூழந்துகொண்டு உற்சாகமாக உரையாடினார்கள். இளம் வாசகர்களிலும் பலர் என் மலையாள எழுத்துக்களைப் படித்திருந்தார்கள். மகிழ்ச்சியான உரையாடலாக இருந்தது. ஆனால் அம்முகாமுக்குப் பொறுப்பாக இருந்த மலையாள இதழாளர் ஜோஸ் பனச்சிப்புறம் என்னைக்கண்டதுமே உம்மென்று இருந்தார். நான்குவருடம் முன்பு மலையாளக் கவிதைகளின் மிதமிஞ்சிய கற்பனாவாதத்தன்மை, கவிதைகளை பாடுவது பற்றி நான் கடுமையான ஒரு கருத்தைச்சொல்லி கேரளத்தில் பெரும் சர்ச்சை எழுந்தபோது ஜோஸ் என்னைப்பற்றி மிகக்கடுமையான ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அப்போது ஐம்பது எதிர்ப்புக் கட்டுரைகளுக்கு மேலாக வந்தன. பத்து வசைக்கவிதைகளும் பிரசுரமாயின. ஆகவே பெரும்பாலானவற்றை நான் மறந்துவிட்டேன். ஆனால் ஜோஸ் மறக்கவில்லை. அதை ஒரு நிருபர் சொன்னார். ‘ என்னை அவர் திட்டியதனால் நானல்லாவா கோபமாக இருக்கவேண்டும்? இதென்ன நேர் மாறாக இருக்கிறதே?’ என்றேன். .

இன்றைய மலையாளக்கவிதை நேர் தலைகீழாக மாறிவிட்டது. தமிழ்க்கவிதைகளைப்போலவே உட்குறிப்பும் வடிவச்செறிவும் கொண்டதாக அது உள்ளது. அதற்கு என்னுடைய தாக்குதல்களும், ஆற்றூர் ரவிவர்மாவின் தமிழ்க்கவிதை மொழியாக்கமும், நான் நடத்திய தமிழ்-மலையாளக் கவிதையரங்குகளும் பெரும்பங்கு ஆற்றின.

ஆனால் சில முக்கியமான நவீனக்கவிஞர்கள் அல்லாமல் பிறர் நேரடியாக அதை ஒத்துக்கொள்வதில்லை. காரணம், மலையாளிகளுக்கு தமிழர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அதிலும் அதிகம் படிக்காத ‘புரட்டிப்பார்க்கும்’ மலையாள வாசகர்கள் மலையாளத்தில் மட்டுமே நவீன இலக்கியம் இருக்கமுடியும், ‘பாண்டித்’ தமிழர்கள் இலக்கியம் அறியாதவர்கள் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். [அவர்களே அங்கே எண்ணிக்கையில் பெரும்பகுதி. ]அந்த எண்ணத்தை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள், வரவேற்பார்கள்.

குறிப்பாக கேரள இதழாளர்கள்,பேராசிரியர்கள் நடுவே இந்த எண்ணம் இன்னும் அதிகம். நம்முடைய அசட்டுப்பேராசிரியர்களும் தினத்தந்தி இதழாளர்களும் அங்கேபோய் அந்த எண்ணத்துக்கு உரம்போட்டு நீரூற்றி வருவார்கள். வெளிப்படையாகவே மேடைகளில் தமிழ்ப்பேராசிரியர்கள் தங்களை மலையாளிகள் அளவுக்கு விஷயமறியாதவர்கள் என்று சொன்னதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்குக் காரணம் செல்லும் இடங்களில் அங்கிருப்பவர்களை புகழ்ந்து தம்மை குறைத்துப்பேசிக் கைதட்டல் வாங்கும் தமிழ் மேடை உத்தி. சிங்கப்பூர் சென்றாலும், கனடா சென்றாலும் அங்குள்ளவர்களைத் தூக்கி இங்குள்ளவர்களை இகழ்ந்துதான் நம்மவர்கள் பேசுவார்கள்.

இச்சூழலில் மலையாள இலக்கியம் அதன் பரப்பு காரணமாகவே ஆழமில்லாததாகவும் கற்பனாவாதம் மிஞ்சிப்போனதாகவும் இருக்கிறது என்றும், தமிழிலக்கியம் சாரத்தில் மிக வலிமையானது என்றும் நான் சாதாரணமாகச் சொன்ன கருத்து பெரும் அதிர்ச்சியையும் கசப்பையும் உருவாக்கியது. அதிலும் நான் மலையாளத்தில் என் இலக்கிய இடத்தை தெளிவாக நிறுவிய பின்னர், எவராலும் என் தரத்தை மறுக்க முடியாதென ஆன பின்னர்தான் அதைச் சொன்னேன். நான் மலையாளியும்கூட. விழுங்க முடியாத அக்கசப்பை கடும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எதிர்கொண்டார்கள். இன்றும் மூத்த தலைமுறைநடுவே அக்கசப்பு அப்படியே நீடிக்கிறது.

மலையாளத்தில் தொடர்ச்சியாக தமிழ்ப்பண்பாட்டையும் தமிழிலக்கியவாதிகளையும் மட்டம்தட்டி இழிவுபடுத்தியும், அவற்றுடன் ஒப்பிடும்போது மலையாளிகளும் மலையாள இலக்கியமும் எவ்வளவோ உயர்ந்தவை என்று கூசாமல் புகழ்ந்தும் எழுதிவரும் சாரு நிவேதிதாவை மலையாள ஊடகங்களும் இதழாளர்களும் இதற்காக மட்டும்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவரும் அந்த தேவையை நுட்பமாக உணர்ந்து அதற்கு தீனி போடுகிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி முதல் இன்றுவரையிலான எல்லா தமிழ் எழுத்தாளர்களும் நவீன உலக இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத அசடுகள் என எழுதி , கேரளத்தில் தெருவெல்லாம் உலக இலக்கியம் விளைவதாக புளகாங்கிதம் அடைகிறார். அதை அவர்கள் முன்னிலைச் செய்தியாக ஆக்குகிறார்கள்.

ஆனால் உள்ளூர அவரை அவர்கள் மதிப்பிட்டிருக்கும் விதம் மிக இளப்பமானது என்பதை அவர் அறியாமலிருக்கமாட்டார். ஏனென்றால் நானறிந்த சாரு நிவேதிதா மிக மிகக் கூர்மையான நடைமுறை அறிவு கொண்டவர். நேர்ப்பேச்சில் இதழாளர்கள் அவரைப்பற்றிச் சொன்னவற்றை இங்கே பதிவுசெய்ய முடியாது. ஒரு வகையான இலக்கியக் கோமாளி என்று அவரை மதிப்பிடும் அவர்கள் அவரைப்போன்றவர்களால் ஆனது என்று தமிழிலக்கியத்தையும் மதிப்பிட்டு கேலியான சித்திரம் ஒன்றையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது பொதுவாகவே பிறமொழியினரில் உள்ள வழக்கம். டெல்லி சாகித்ய அக்காதமி அரங்கில் சுந்தர ராமசாமி அல்லது அசோகமித்திரன் பேசினால் எவருமே அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். சு.சமுத்திரம் அல்லது கோவி .மணிசேகரன் மேடையேறினால் அவர்களை தமிழிலக்கியத்தின் பிரதிநிதிகளாக முன்வைத்துப் புகழ்ந்து தள்ளுவார்கள். அவர்களும் அதை நம்பி கண்ணீர் மல்கி உளறும்போது அதை கொட்டை எழுத்துச் செய்தியாக ஆக்கி தமிழிலக்கியமே அப்படிப்பட்டது என்று காட்ட முயல்வார்கள். வெங்கட் சாமிநாதன் டெல்லி சாகித்ய அக்காடமி அரங்கிலேயே இதைத் தட்டிக்கேட்டிருக்கிறார். நானே சமுத்திரம் வழியாக தமிழிலக்கியம் மேடையில் நுட்பமாகக் கிண்டலடிக்கப்பட்டதைக் கண்டு கொதித்திருக்கிறேன். வைரமுத்து கிண்டல் செய்யப்பட்டதைக் கண்டு சுந்தர ராமசாமி மனம் வெதும்பியிருக்கிறார்.

நம் அரசியல் காரணமாகவோ என்னவோ நம் மீது இந்தியா முழுக்கவே ஒரு ஏளனம் உள்ளது. அகிலன் படைப்புகள் போன்று நம்முடைய தரமில்லாத எழுத்துக்கள் நம் பிரதிநிதியாக மொழியாக்கம் செய்யப்பட்டு அங்கெல்லாம் செல்வதே இன்னொரு முக்கியமான காரணம் என்று படுகிறது. எப்போதும் நமது பிரதிநிதிகளாகச் செல்பவர்கள் ஒன்று அசட்டுக் கல்வியாளர்கள், அல்லது கேளிக்கை எழுத்தாளர்கள். நம்முடைய தரமான எழுத்துக்கள் வெளிமொழிகளில் கவனிக்கப்பட்டதே இல்லை. அதற்கான கலாச்சார உரையாடலை உருவாக்கவும் நமக்கு ஆள் இல்லை. கன்னடத்தை பி.வி.காரந்த், டி.ர்.நாகராஜ் போன்று ஆங்கிலத்தில் எழுதிய விமரிசகர்கள் இந்தியாவெங்கும் கொண்டுசென்றார்கள். நமக்கு அப்படி ஒருவர் கூட இல்லை — ஓரளவு வெங்கட் சாமிநாதன் மட்டுமே முயன்றிருக்கிறார்.

மலையாளிகள் சாரு நிவேதிதாபற்றியும் அவரது இலக்கியமெய்ஞான வெளிப்பாடுகள் பற்றியும் அதன் வழியாக தமிழிலக்கியம் பற்றியும் என்னிடம் வேடிக்கையும் சிரிப்புமாகச் சொல்லும்போது என்னை அவர்களைச் சேர்ந்த ஒரு மலையாளி என்றே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. என்னையும் சுகுமாரனையும் மலையாளிகள் என்றும், மக்குத்தமிழர்கள் நடுவே இருக்கும் இரு அறிவாளிகள் என்றும்தான் அவர்கள் கொள்கிறார்கள். அதற்கேற்ப சாரு நிவேதிதாவும் மேடை தோறும் எதையாவது உளறி மானத்தை வாங்குகிறார். எத்தனை வேடிக்கைக் கதைகள், அவரைப்பற்றி ! சும்மா கொண்டடுகிறார்கள். அந்த நக்கல் என்பது நான் ஓர் அங்கமாக இருக்கும் தமிழ்ச்சூழல் சார்ந்தது என்பதனால் நான் ஆழமாகவே புண்பட்டேன். ஆனால் நம்பிக்கைகளுடன் விவாதிக்கவே முடியாது என்பது என் அனுபவம்.

மறுநாள் கடவல்லூர் அன்யோன்ய பரிஷத் என்ற அமைப்பு நடத்திய இலக்கியக்கூட்டத்துக்கு தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதியாகச் சென்றிருந்தேன். தெலுங்குக் கவிஞர்கள் முகமது யாக்கூப், சீதாராமையா கியோர் வந்திருந்தார்கள். அன்று மாலையே திரும்பும் திட்டம் இருந்தது. இரவு மலையாள நடிகர் முரளி கூப்பிட்டார். தற்செயலாக லோகிததாஸ¤டன் பேசியபோது நான் அங்கே இருப்பதாகத் தெரிந்து என்னிடமும் பேசினார். அவர் இப்போது கேரள சங்கீத நாடக அக்காடமி தலைவர் பொறுப்பில் இருக்கிறார். அதுவும் கேரள சாகித்ய அக்காடமி போலவே ஓர் தன்னாட்சி அமைப்பு. ‘கேளி’ என்ற முக்கியமான நிகழ்கலை மாத இதழை வெளியிடுகிறார்கள். நாடகப்பட்டறைகள் நடத்துகிறார்கள். நாடக அரங்கேற்றம் நடக்கிறது

கேரள சங்கீத நாடக அக்காடமி சார்பில் இந்த டிசம்பர் 22 முதல் பத்துநாட்களுக்கு ஒரு சிய நாடகவிழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. சீனா,பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், இலங்கை, பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து நாடகக் குழுக்கள் வந்து நாடகம் போடவிருகின்றன. தமிழில் இருந்து பிரளயன் கலந்துகொள்கிறார். அந்த நாடகவிழாவை தொடக்கிவைக்கும் முதல் அறிவிப்பு நாளை பிரஸ் கிளப்பில் நடக்கவிருக்கிறது, அதன் சின்ன [லோகோ] த்தை நான் வெளியிடவேண்டும் என்று முரளி என்னிடம் கோரினார். நான் நாடகத்துடன் தொடர்பில்லாதவன் என்றேன்.’நாடகம் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா? அது போதும்’ என்றார் முரளி. ‘இங்கே வந்திருக்கும் தகவல் தெரிந்தபின் எப்படி விடமுடியும், வாருங்கள்’ என்றார்.

மறுநாள் காலையில் கேரள சங்கீத நாடக அக்காடமி அலுவலகம் சென்றோம். அமைதியான மரங்கள் அடர்ந்த சூழலில் இருக்கிறது. முரளி நிறைய பணிகள் செய்துகொண்டிருக்கிறார். புதிதாக ஒரு கூத்தம்பலம் கட்டப்படுகிறது. சர்வதேசத்தரமுள்ள ஒரு நாடக அரங்கு உருவாகியிருக்கிறது. குடியை எல்லாம் விட்டுவிட்டு உற்சாகமாக இருக்கிறார். நான் அவரிடம் இருமுறை தொலைபேசியில் பேசியதல்லாமல் நேரில் பார்த்ததில்லை. அருமையான குரல். லோகிததாஸ் குரலும் கார்வையானது. அவர்கள் பேசுவதைக் கேட்டபோது எனக்கு கொஞ்சம் தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது.

திரிச்சூர் பிரஸ் கிளப்பில் நிகழ்ச்சி. நான் லோகோவை வெளியிட்டு நாலைந்து சொற்றொடர்கள் மட்டும் சொன்னேன். நாடகம் பற்றி எதையாவது உளறிவிடுவேனோ என்று உதைப்பாக இருந்தது. அது ஒரு ஓவியம். லோகோ இனிமேல்தான் உலோகத்தில் வார்க்கப்படுமாம். ஆசிய நாடக விழா பற்றி முரளியும் ஒருங்கிணைப்பாளரான சைலஜாவும் விளக்கிச் சொன்னார்கள். நிதியாதாரங்களைப்பற்றியே அதிகம் கேள்விகள் இருந்தன. கேரள டூரிசம் துறை போன்றவை பல செயல்பாடுகளை பகிர்ந்துகொள்வதனால் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். பாதித்தொகை கேரள அரசால் அளிக்கப்படும். மீதியை நன்கொடை மூலம் திரட்டுவோம் என்றார் முரளி.

அன்றுமாலை லோஹியின் நண்பர் முகமது ஷெரீஃப் என்பவருக்குச் சொந்தமான கடற்கரை வீட்டுக்குச் சென்றோம். வாடானப்பள்ளி என்ற அந்தக்கடற்கரைக்கு ஒரு சிறப்பு உண்டு. அங்கேதான் செம்மீன் படம் எடுக்கப்பட்டது. அழகான கடற்கரை. அருகிலேயெ காயல். முகமது ஷெரீஃப் ஒரு ஏற்றுமதிவணிகர். கடலோரமாக நாற்காலிகள் போட்டு அமர்ந்துகொண்டோம். அமைதியான கடல். அப்பகுதிக்கு உரிய சிறிய கருப்பு டால்பின்களின் ஒரு குடும்பம் கடலுக்குள் துள்ளிக்கொண்டிருந்தது. லட்சதீவு பகுதிகளில் இந்த மீன் நிறையவே இருக்கும்.

கரையோரமாக அமர்ந்து பொரித்த கரிமீன் சாப்பிட்டோம். கரிமீன் கேரளத்துக்கே உரிய ஒரு சிறப்பு. பிற பகுதிகளில் கிடைக்காது. ஆலிலை வடிவில் சப்பையாக இருக்கும். காயலில் நல்ல நீரில் வளரும். கருகப்பொரித்தால் மிகச்சுவையானது. முகமது ஷெரீஃப் கலையிலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். அந்த பண்ணைவீட்டிலேயே ஓவியரான இஸ்மாயீல் தங்கியிருந்தார். மீன்களை அவர்தான் பொரித்தார். கரிமீனை கத்திரி வைத்துத்தான் வெட்டுவார்கள். அவ்வளவு சப்பையானது.

நிறையவே மீன் சாப்பிட்டேன். கிட்டத்தட்ட சிற்றுண்டி அளவுக்கு. மிகமிகச்சுவையாக இருந்தது. லோஹியும் முகமது ஷெரீஃப்பும் ‘கோன்யாக்’ குடித்தார்கள். கிளம்பும்போது எட்டரை மணி. ஒன்பதரைக்கு எனக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். காரில் தென்னைமரங்கள் அடர்ந்த சாலைகளில் சுற்றிச் சுற்றீ வந்தோம். லோஹி இரண்டுமுறை இருட்டில் வழி தவறினார். கிட்டத்தட்ட ஒரு கிளைமாக்ஸ் அளவுக்குப் பதற்றம். கடைசியில் நகர்ந்துகொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸைப் பிடித்துவிட்டேன்.

முந்தைய கட்டுரைதமிழ் எழுத்துக்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் அறுபது