வெய்யோன், எண்ணை, மரபு

1

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன்.

பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன்

இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் எப்போதும் உள்ளவைதான். நான் வழக்கமாக இசைகேட்பேன். நீண்ட நடைசெல்வேன். அவை என்னை அமைதிப்படுத்தி துயிலச்செய்யும்.

ஆனால் வழக்கமாக நம் மரபிலுள்ள ஒருமுறையை நான் மிகுந்த ஐயத்துடன் பார்த்துவந்தேன். ஆயுர்வேதம் தலைக்கு எண்ணைதேய்ப்பதை சிறந்த துயில் மற்றும் நரம்பமைதிக்கான வழியாகச் சொல்கிறது. அறிவியல்ரீதியாக எண்ணை தேய்த்துக்கொள்வதனால் எப்பயனும் இல்லை என்று அலோபதி மருத்துவநிபுணரான  நண்பர் சொன்னதன்பேரில் நான் இருபதாண்டுக்காலமாக எண்ணை தேய்த்துக்கொள்வதில்லை. முடிக்கு மட்டும் மெல்லிய எண்ணைப் பூச்சு அளிப்பேன்

கர்ணன் திரௌபதியை எண்ணி மனமழியும் ஓரு பகுதியை கட்டற்ற மொழிப்பெருக்காக எழுதியபின் எண்ணை தேய்த்துக் குளித்துப்பார்த்தேன். வியப்புகள் இருந்தன. ஒன்று, என் தலையில் வழியவழிய நான் வைக்கும் எண்ணை பதினைந்து நிமிடங்களுக்குள் ஆவியாகிவிடும். இரண்டு, கண்களும் தலையும் குளிர்ந்து சிறப்பான துயிலை அளிக்கும். இந்நாவல் முழுக்க ஒவ்வொருநாளும் தலைக்கு வழியவழிய எண்ணை தேய்த்துக்கொண்டிருந்தேன்

உண்மையில் அலோபதியின் அறிவியல் ஆயுர்வேதத்தைச் சந்திப்பதில் இத்தனைபெரிய இடைவெளி இருக்கிறதா? அந்த இடைவெளி ஐரோப்பியபாணி  நவீனக்கல்வி பெற்ற இந்திய மனத்துக்கும் நம் மரபின்  மெய்மைக்கும் நடுவே உள்ளதா? அந்த மிகப்பெரிய இடைவெளியில்தான் வெண்முரசு நிகழ்துகொண்டிருக்கிறதா?

ஜெ

முந்தைய கட்டுரைஈரட்டி பொதுக்குழு
அடுத்த கட்டுரைஇலக்கிய அரங்குகளில் பெண்கள்