’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79

பகுதி பத்து: நிழல்கவ்வும் ஒளி- 3

புரவி துணிகிழிபடும் ஓசையில் செருக்கடித்ததைக்கேட்டு கர்ணன் விழித்தெழுந்தான். அந்த உளஅசைவில் சற்றே இருக்கை நெகிழ்ந்து மீண்டான். கடிவாளத்தைப் பற்றியபடி விழிதூக்கி நோக்கினான். விண்ணில் ஒரு புள் முரசுத்தோல் வழிக்கப்படும் ஓசையுடன் கடந்துசென்றது. எதிரொலிபோல இன்னொரு பறவை ஓசையிட்டது. அடுத்த கணத்தில் பல்லாயிரம் பறவைக்குரல்கள் எழுந்து காற்றை சூழ்ந்தன.

கர்ணன் திரும்பி சூரியனை பார்த்தான். வானில் மிகமெலிதாக செந்நிற வளைகோடு ஒன்று தெரியத்தொடங்கியது. குருதிதொட்ட கிண்ணமொன்றை வைத்து எடுத்ததுபோல. பறவையொலிகள் பெருகியபடியே வந்தன. ஒவ்வொன்றும் மேலும் மேலும் களிவெறிகொண்டன. இருள்கரையத்தொடங்கிய வான்வெளியெங்கும் பல்லாயிரம் சிறகுகள் துடிப்பதை கண்டான்.

வளைகோடு ஒரு பெரும் நிலவாகியது. அவன் முன் மண்ணில் மூழ்கிக்கிடந்து மீண்டெழுவதுபோல அவன் நிழல் எழுந்து வந்தது. அப்பாலிருந்த கட்டடத்தின் நிழல்சுவரின் மடிப்பு கூர்மை கொண்டது. இலைகள் சதுப்பில் பதிந்த பல்லாயிரம் லாடக்குளம்புகளின் அரைவட்டங்கள் என தெரிந்தன. எங்கோ ஒரு பசு “அம்பா?” என்றது. அதன் கன்று “அம்பேய்!” என்றது. மிக அருகே ஒரு குதிரை கனைத்தது. நெருப்பு சருகுகளில் பற்றிப்பரவுவதுபோல அவ்வொலி பலநூறு குதிரைகளில் படர்ந்து சென்றது. முரசொலிபோல ஒரு களிற்றின் பிளிறல் எழுந்தது.

குதிரைகளும், பசுக்களும், யானைகளும், அத்திரிகளும், கழுதைகளும் சேர்ந்து எழுப்பிய ஓசை கொம்புகளும் முழவுகளும் முரசுகளுமென ஒலித்து மேலும் மேலுமென இணைந்து முழக்கமாக அதில் பறவைகளின் ஓசைக்கலைவு கரைந்து மறைந்தது. இடையில் கை வைத்தபடி அவன் அண்ணாந்து நோக்கி நின்றான். சூரியன் கருஞ்சிவப்புச் சேற்றில் பாதிபுதைந்த தங்கநாணயம் போல தெரிந்தது. வானத்தின் பல இடங்களில் மெல்லிய முகில்தீற்றல்கள் குருதியொற்றி வீசிய பஞ்சுப்பிசிறுகள் போல ஒளிகொள்ளத் தொடங்கின.

புலரி என்றே தோன்றியது. சுழற்றி வீசப்பட்ட படையாழி என மிக விரைவாக எழுந்த கதிரவனால் கண் நோக்கி இருக்கவே அது நிகழ்ந்தது. இமைப்புகளாக காலம் நகர்ந்தது. சூரியன் கைபட்டு ஓரம் கலைந்த நெற்றிப்பொட்டுவட்டமென வளர்ந்தது. முகில்கீற்றுக்கள் பற்றி எரியத்தொடங்கின. பட்டுத்துணிமேல் குருதி என வான்சரிவில் செந்நிறத்தோய்வுகள் நீண்டன.

கீழே தொடுவான்கோடு சற்றே திறக்கப்பட்ட வாயிலுக்கு அப்பால் ஒளி என தெரிந்தது. யமுனையின் கருநிற அலைகள் ஒளிகொள்ள பலநூறு கலங்கள் அப்போது பிறந்தவைபோல உருப்பெற்று வந்தன. யவனக்கலம் ஒன்று பெருங்குரலில் அமறியது. சூழலென வெளிநிறைந்திருந்த பொருட்கள் அனைத்தையும் போர்த்தியிருந்த செந்நிறப்படலம் வெளிறி மஞ்சள் வழிவென்றாகி மேலும் ஒளி கொண்டது. எதிரே தெரிந்த மாளிகைக்கதவின் தாழ்க்குமிழ்களில் வெள்ளிச்சுடர்கள் ஏறின. அனைத்து உலோகமுனைகளும் மடிப்புகளும் சுடர் ஏந்தின. அச்சுடர் வெள்ளிவிண்மீன் என ஆயிற்று. கண்களை குத்திச்சென்றது சாளரமொன்றின் முனை. மண்ணில்கிடந்த வேலின் இலைக்கூர் வெள்ளிச்சட்டமொன்றை காற்றில் சுழற்றிச் சென்றது.

வெள்ளிக்கலத்திலிருந்து செங்குருதித் துளிச்சரடு வழிந்து நிற்பது போல தெரிந்தது சூரியன். மஞ்சள் தீற்றலென்றாயிற்று அது. வெள்ளிவட்டமென மாறி அக்கணமே நீலப்பச்சைத் திகிரியென கதிர்சூடி சுழலத்தொடங்கியது வெய்யோன் வடிவம். அருகே ஓர் ஆலயத்தில் சங்கோசை மணிச்சிலம்பலுடன் கலந்தெழுந்தது. பேரிகை “ஓம் ஓம் ஓம்” என்றது. நகரெங்கும் நிறைந்திருந்த பலநூறு ஆலயங்களில் இருந்து கூறுசங்கும் கோட்டுமுரசும் நாமணியும் நீள்கொம்பும் கலந்த புலரிப்பேரிசை ஒலித்தது. கோட்டைகள் மேலமைந்த காவல்மாடங்களில் அரசப்பெருமுரசுகள் இடியோசை எழுப்பின.

இல்லங்கள் அனைத்தும் வாயில்திறக்க மக்கள் கைவீசிக் கூச்சலிட்டபடி தெருக்களிலிறங்கினர். மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் படைக்கலங்களையும் வானிலெறிந்து பிடித்து துள்ளிக்குதித்து தொண்டை கமற “வெய்யோனொளி எழுக! கோடிக்கரங்கள் அளிகொள்க! கதிரோன் தேர் விரைக! காய்வோன் கருணை நிறைக!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். மதகுகள் உடைபட எழுந்து அலைசூழ்ந்து கொப்பளிக்கும் வெள்ளம் என ஆடைவண்ணப்பெருக்கு அலையடிக்க ஊடே புரவி சிக்கிச் சுழன்று முட்டி ஒதுங்கி விலக்கி ஊடுருவி மீண்டும் தள்ளப்பட்டு அலைப்புற்று விலகி முன்னகர கர்ணன் சென்றான்.

ஒருவன் அவனை நோக்கி “வெய்யோனை நஞ்சுகவ்வ நோக்கி நின்றீர்! நான் கண்டேன். உங்கள் உடலே நஞ்சாகிவிட்டிருக்கும். கைநகங்கள் நாகப்பற்களென்றாகியிருக்கும்…” என்றான். இன்னொருவன் நகைத்தபடி “உங்கள் எதிரிகளை தேடிச்செல்லுங்கள் வீரரே. இனி உங்கள் நாநீர் தொட்ட ஈரம் கொண்ட அம்புகளே நாகங்கள்தான்” என்றான். கைவீசி “ஊ !ஊ!” என ஊளையிட்டுச் சிரித்து “அவர் வியர்வையை முகர்ந்தே நாம் கள்மயக்கு கொள்ளலாம்!” என்றான் ஒருவன். “கள்! இப்போது தேவை நுரையெழும் கள் மட்டுமே!” என்றான் பிறிதொருவன். “பிற சொற்களெல்லாம் வீணே! எழுக!” அக்கூட்டமே “கள்! கள்! கள்!” என்று கூவியபடி கடந்துசென்றது.

இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகைகளை அடைந்தபோது கர்ணன் வானிலும் காற்றிலும் முற்றாக நிறைந்திருந்த ஓசைகளால் சித்தம் திகைத்து சொல்லிழந்திருந்தான். அவனை நோக்கி ஓடிவந்த துச்சகனை அவன் கைவீசி பற்கள் ஒளிவிட ஏதோ கூவுவதைக் கண்டபின்னரே அடையாளம் கண்டுகொண்டான். துச்சகன் அவன் அருகே வந்து “எங்கு சென்றிருந்தீர்கள் மூத்தவரே? நாங்கள் அஞ்சிவிட்டோம்” என்றான். அவனுக்குப் பின்னால் ஓடிவந்த துர்மதன் “மூத்தவரே, கதிர்மறைவின்போது கூரைக்குக்கீழே நின்றீர்கள் அல்லவா?” என்றான்.

சுபாகு “இன்றைய கதிர்மறைவு பெரும் விந்தை நிகழ்வு என்கிறார்கள். இன்னும் பன்னிருநாட்களுக்குப்பின்னரே முழுக்கதிர்மறைவுநாள் என நிமித்திகர் அனைவரும் கணித்திருந்தார்களாம். இன்று இந்நகரின் அணையாப்பெருவிளக்கில் கதிர் ஏற்றப்படும் தருணத்தில் வானொளியனை நாகம் கவ்வியதாக சொல்கிறார்கள்” என்றான். பற்களைக் காட்டிச் சிரித்து “சுடரேற்றுக்கு நற்காலம் குறித்த அரச நிமித்திகர் எழுவர் தங்கள் குரல்வளைகளில் வேல்பாய்ச்சி இறந்தனராம். எஞ்சியோர் அனைவரும் அமர்ந்து இந்நாளின் தீக்குறிகள் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனையே துயர்நிறைந்து அமைதிகொண்டிருக்கிறது” என்றான்.

கர்ணன் ஒன்றும் சொல்லாமல் புரவியிலிருந்து இறங்கி முற்றத்தில் நடந்தான். அவனுடன் ஓடிவந்த துர்மதன் “இந்நகர் அழியும் என்கிறார்கள். இத்தீக்குறி காட்டுவது ஒன்றே. இந்நகர் குருதியாலும் எரியாலும் முழுக்காட்டப்படும். இங்கு எவரும் எஞ்சப்போவதில்லை. வெறும் நுரைக்குமிழி இது… ஆம், அதுவே உண்மை. அறியட்டும் தெய்வங்கள்!” என்றான். துச்சலன் “அவ்வழிவு நம் கைகளால் நிகழும்… தெய்வங்களின் ஆணை அதுவே!” என்றான்.

படிகளில் ஏறி மேலே சென்ற கர்ணனை நோக்கி துச்சாதனன் ஓடிவந்தான். அவனைக் கண்டதும் பிற தம்பியர் நின்றனர். “எங்கு சென்றீர்கள் மூத்தவரே? எண்ணியிராதபடி கதிர்மறைவு நிகழ்ந்தது. இருள்கவ்வக்கண்டு நான் விழியின்மை கொண்டேனோ என ஐயுற்று அலறிவிட்டேன்” என்றான். “தம்பியர் அனைவரும் அவ்வண்ணமே எண்ணினர். எங்கள் உள்ளங்களனைத்திலும் இருப்பது ஒற்றை அச்சம்தான் போலும்.”

“அரசர் எங்கே?” என்றான் கர்ணன். “துயில்கிறார். அவர் ஏதுமறியவில்லை” என்றபடி துச்சாதனன் உடன்வந்தான். “முழுக்கதிர்மறைவின்போது மரங்களிலிருந்து காகங்கள் விண்ணிலெழுந்து ஓசையிட்டதை கேட்டிருப்பீர்கள். சருகுப்புயல் வந்து இம்மாளிகைச்சுவர்களை மோதுவதை நான் கண்டேன். அஞ்சி ஓடி சாளரம் வழியாக நோக்கியபோது பல்லாயிரம் காகங்கள் அவை என்று கண்டேன். சாளரக்கதவை உடனே இழுத்து மூடினேன். அனைத்துச்சாளரங்களையும் அறைக்கதவையும் மூடினேன். அருவியென அவை வந்து மூத்தவரின் அறையின் அனைத்துக் கதவுகளையும் அறைந்தன. மூன்றாம் சாளரத்தை மூடுவதற்குள் உள்ளே நுழைந்த நான்கு காகங்கள் அறைக்குள் சிறகுகள் சுவர்களிலும் கூரையிலும் உரசி ஒலிக்க கூச்சலிட்டபடி சுற்றிவந்தன.”

“அவற்றை வெளியேற்ற நான் ஆடையாலும் படைக்கலங்களாலும் முயன்றேன். அவை கூச்சலிட்டபடியே சுழன்றன. பின்னர் மங்கலமுரசுகள் ஒலிக்கக்கேட்டதும் அவை விரைவழியக்கண்டேன். சாளரத்தை சற்றே திறந்து வெளியே காகக்கூட்டங்கள் இல்லை என்று கண்டபின் விரியத்திறந்தேன். அவை கூச்சலிட்டபடி வெளியே சென்றன” என்றான் துச்சாதனன். “நான் அஞ்சிவிட்டேன் மூத்தவரே. மூத்தவர் பிறந்தபோது இவ்வாறு காகங்கள் வந்ததாக சூதர்கதைகள் உள்ளன.”

“இன்னும் தம்பியரிடம் நான் எதையும் சொல்லவில்லை” என்றபடி துச்சாதனன் உடன் வந்தான். “கதிர் மீண்டும் எழுந்ததும் நான் உளம்கலங்கியவனாக வெளியே வந்து இடைநாழியில் ஓடி படிகளில் இறங்கி கீழே நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்த தம்பியரிடம் உடனே தங்களை அழைத்துவரும்படி சொன்னேன். மீண்டும் மூத்தவரின் அறைக்கு வந்தபோது உள்ளே ஒருவன் நின்றிருப்பதை கண்டேன்.” கர்ணன் நின்று மீசையை நீவியபடி நோக்கினான்.

“அது நிழலை என் விழி உருவென மயங்கியதாகவும் இருக்கலாம். என் வீண் அச்சம் உருவாக்கிய உருவெளியாக இருக்கலாம்” என்று துச்சாதனன் தயங்கியபடி சொன்னான். “ஏனென்றால் மயனீர் மாளிகையில் அவ்வுருவை நான் கண்டேன். அதை மீண்டும் நானே விழிமயக்கு என கொண்டிருக்கலாம்.” கர்ணன் விழிவிலக்கி சுவரிடமென “யார் அது?” என்றான்.

“அது ஒரு தெய்வம்” என்றான் துச்சாதனன். “உடலின் நேர்ப்பாதி பெண்ணுருவும் மறுபாதி ஆணுருவும் கொண்டது. ஆண் கை சூலமும் பெண் கை தாமரையும் ஏந்தியிருந்தது. பாதிமீசை. மீதி மூக்கில் புல்லாக்கு. ஒருசெவியில் குழை. பிறிதில் குண்டலம். விந்தையான உருவம்!” அவன் மூச்சிரைக்க நின்று “அத்தெய்வம் மூத்தவரின் அருகே நின்று அவரை நோக்கிக்கொண்டிருந்தது. துயிலில் மூடிய கண்கள் கொண்டிருந்தாலும் மூத்தவர் முகம்தூக்கி அதை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகம் புன்னகையில் மலர்ந்திருக்க தெய்வம் பெருங்கருணையுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தது” என்றான்.

கர்ணன் “அவன் பெயர் ஸ்தூனகர்ணன்” என்றான். “அல்லது ஸ்தூனகர்ணை.” துச்சாதனன் அச்சத்துடன் “அவ்வண்ணமென்றால் நான் அவனைப் பார்த்தது உண்மையா மூத்தவரே?” என்றான். “அது மயனீர் மாளிகையின் ஓவியம். இங்கு நீ கண்டது விழியில் எஞ்சிய அதன் உருவம்” என்றான் கர்ணன்.

ஆறுதலுடன் “நானும் அப்படியே எண்ணினேன்” என்றான் துச்சாதனன். “தம்பியரும் பலவகையான விழியெச்சங்களை கண்டிருக்கிறார்கள். இருள் பரவியதும் இங்கிருக்கும் அனைத்துப் பளிங்குமாளிகைகளும் முழுமையாக மறைய கருமுகில் அள்ளி கட்டப்பட்டவைபோன்ற கன்னங்கரிய மாளிகைகள் எழுந்து வந்தன என்று துர்மதன் சொன்னான். ஏழடுக்கும் ஒன்பதடுக்கும் கொண்டவை. அவற்றில் அனைத்திலும் நாகர்களின் கொடிகள் பறந்தனவாம். நாகமுடிசூடியவர்கள் அங்கே நுண்மையும் பருமையும் கொண்டு மாறிமாறி ஆடிய உடல்களுடன் நிறைந்திருக்கக் கண்டானாம்.”

“அவன் கண்டதையே சற்று மாறியவடிவில் அனைவரும் கண்டதாக சொல்கிறார்கள். இப்பருவடிவ நகருக்குள்ளேயே இதன் நிழலுருவென நுண்வடிவ நாகநகர் ஒன்றுள்ளது என்று சுபாகு சொன்னான்.” கர்ணன் “உளமயக்குகளை வெல்லும்படி அவர்களிடம் சொல்! நாம் இன்று கிளம்புகிறோம்” என்றான். துச்சாதனன் “எப்போது?” என்றான். “இப்போதே. இன்னும் சற்றுநேரத்திலேயே” என்றான் கர்ணன். “ஆணை… நான் அனைத்தும் இயற்றுகிறேன்” என்று துச்சாதனன் தலைவணங்கினான்.

துரியோதனனின் அறைக்குள் நுழைவதற்கு முன் ஒருகணம் கர்ணன் தயங்கினான். அதை துச்சாதனன் உணரக்கூடாதென்பதை உணர்ந்து நிமிர்ந்து திறந்து உள்ளே நுழைந்தான். அறையை பொறிவிழி தீண்டிய முதற்கணம் அவன் துரியோதனன் அருகே ஒரு பெரிய கதாயுதம் கிடப்பதை கண்டான். இரும்பாலானது. கரிய ஈரமினுப்பும் எடைமுழுப்பும் கொண்டது. மறுகணம் அது எதிர்த்தூணின் நிழல் என தெளிந்தது அறிவிழி.

79

துரியோதனன் ஆழ்ந்த மூச்சுடன் துயின்றுகொண்டிருந்தான். “மூத்தவரே!” என்று மூச்சாக அழைத்தபடி துச்சாதனன் கர்ணனின் கைகளை பற்றினான். “மூத்தவர் அந்தப் பேரழகுத்தோற்றத்தை மீண்டும் கொண்டுவிட்டார்.” கர்ணன் அதையே தானும் எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தான். துரியோதனன் பெருஞ்சிற்பி வார்த்த விழிதிறக்கா வெண்கலச்சிலை போலிருந்தான். “முற்றிலும் நிகர்நிலை கொண்டவர். மூத்தவரே, எந்தையிடம் அடிவாங்கி இறப்பைத் தொட்டு மீள்வது வரை அவர் இவ்வாறுதான் இருந்தார். அணுகமுடியாதவராக. மெல்லுணர்வுகள் அற்றவராக…”

கர்ணன் பெருமூச்சுடன் “நாம் கிளம்பவேண்டும். சென்று ஆவனசெய்!” என்றான்.

[வெய்யோன் நிறைவு]

முந்தைய கட்டுரைஈரட்டி சந்திப்பு
அடுத்த கட்டுரைகனவுகளின் அழிவில்…