நகைச்சுவை பற்றி-கடிதங்கள்

IMG_8575

 

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் என் அம்மாவுக்கு நாஞ்சில் அவர்களின் கும்பமுனி கதைத் தொகுப்பைப் படிக்கக் கொடுத்தேன். உடல்நிலை மற்றும் சில கருத்து வேறுபாடுகளாலும் வேறு முகமாக மாறியிருந்த அவள் –  என் இளவயதில் நான் கண்ட –  எத்தனையோ குடும்பக்குழப்பங்களுக்கு இடையிலும் மனம் விட்டு சிரிக்கும் என் தாயை நான் மீண்டும் பெற்றுக்கொண்டேன்.

“இந்த மாதிரி வேற ஏதாவது புத்தகம் இருந்தா குடுடா” என்றவளிடம், உங்களின்
ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு கொடுத்தேன். அவளுக்குப் பிடித்திருந்தது.

அடுத்ததாகக் கொடுக்க “தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்”  மற்றும் உங்களின் சில நகைச்சுவைப் பதிவுகளைத் எடுத்து வைத்திருக்கிறேன்.

நம் இணையப்பக்கத்திலுள்ள நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன? துணுக்குத் தோரணங்களும் வார்த்தை விளையாட்டுகளும் நகைச்சுவை என்ற பெயரில் சாவடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இது ஒரு மாற்றாகவும் இருக்கும். என்னைப்போல மேலும் பலருக்கு அம்மாவும் திரும்பக் கிடைப்பார்கள்…. யோசிக்கணும்.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு

அன்புள்ள மூர்த்தி

நகைச்சுவைக்கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறது. பொதுத்தலைப்புகளாக ஆக்கவேண்டும். சிலகட்டுரைகளை எழுதிச்சேர்த்தே நூல்வடிவம் கொண்டுவரமுடியும். பார்ப்போம்

ஜெ

அன்புள்ள ஜெ

நகைச்சுவைக்கட்டுரைகள் அவ்வப்போது வரும்போதுதான் ஜெயமோகன் தளமே உயிர்கொள்வதுபோல எனக்குப்படும். இங்கே நகைச்சுவை என்றாலே மூளைக்கு வேலை இல்லாத அரட்டை. அதாவது ஜோக் மட்டுமே நகைச்சுவை. சினிமா அரசியல் சம்பந்தமான ஒரு தரைமட்டப் பகடியைத்தான் ஜோக் என்று சிரிக்கிறார்கள்

உங்கள் தளத்தின் அபாரமான நகைச்சுவைக்கட்டுரைகளைத்தான் நான் சமீபகாலத் தமிழில் மிகவும் ரசித்தேன். பத்தி எழுத்துக்களுக்கே உரிய சில க்ளீஷேக்கள் இங்கே உண்டு. மனைவியை கலாய்ப்பது ஓர் உதாரணம். அந்த வகையான எந்த க்ளீஷேக்களும் இல்லாமல் எப்போதும் புதுப்புது மனிதர்களை சித்தரிப்பதுவழியாகவே உங்கள் நகைச்சுவைக்கட்டுரைகள் அமைகின்றன

எழுத்தாளர்களின் சித்தரிப்புகளும் அபாரம். யுவன் சந்திரசேகர் பற்றிய பிரியமான பகடி. நாஞ்சில்நாடன் பற்றிய கட்டுரை இரண்டும் அப்படி சிரித்துப்படித்தவை. எல்லாருக்கும் புரியும் சிரிப்பு அல்ல. பகடி செய்யப்படும் விஷயம்பற்றி முன்னமே கொஞ்சம் அறிந்திருக்கவேண்டியிருக்கிறது. இதுவே தரமான நகைச்சுவைக்கு முன்னுதாரணம்

இவற்றை நூல்வடிவில் எதிர்பார்க்கிரேன்

ஜெயக்குமார் மணிவாசகம்

 

அன்புள்ள ஜெயக்குமார்

அபிப்பிராயசிந்தாமணி என்றபேரில் ஒரு நகைச்சுவைநூலாக இதைத் தொகுக்க எண்ணியிருக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’
அடுத்த கட்டுரைஅலகிலாதவை அனைத்தும்