அலகிலாதவை அனைத்தும்

1

விஷ்ணுபுரம் நாவலின் மீண்டுமொரு பதிப்பு வெளிவரும் இத்தருணத்தில் அந்நாவலை எழுதநேர்ந்த உளஎழுச்சிகளை நினைத்துக்கொள்கிறேன். நெடுநாட்களுக்கு முன் நண்பர்களுடன் திருவட்டார் ஆதிகேசவன் பேராலயத்திற்குச் சென்று அங்கே அக்கரு என்னில் விழுந்த அன்று நான் படுத்திருந்த அந்த மண்டபத்தை நோக்கினேன். அங்கிருந்த சிலைகள் அனைத்தும் என்னை விழிதொட்டு பேசமுற்படுவதுபோலத் தோன்றியது. அவை நம்முடன் பேசும் என்பதை அங்கே படுத்திருக்கையில் கண்ட கனவுகளில் அறிந்திருக்கிறேன். அச்சொற்களால் ஆனது விஷ்ணுபுரம்

அந்த மொழிநடையில், கூறுமுறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அது என் தத்தளிப்புகளின் நாவல். கண்டடைதலின் நாவல். தனிமையின் நாவல். இன்று என்னைச்சூழ்ந்து வெண்முரசின் மாந்தர்திரள் அலையடிக்கிறது. முடிவின்மையை என்னில் கண்டுகொண்ட நாவல் விஷ்ணுபுரம். முடிவின்மையில் என்னைக் கண்டுகொண்ட நாவல் வெண்முரசு.

விஷ்ணுபுரத்தை நான் அலகின்மைகளை அள்ள முயன்றமையின் வெளிப்பாடு என்பேன். அந்த வயதில் எழுந்த உளஎழுச்சி அது. பின்னர் அறிந்தேன், அலகின்மை என்றால் அதை அள்ளமுடியாது என்று. அதன்பின்னர் அறிந்தேன், அள்ளமுயல்வதும் அலகில்லாததே. மொழியும் கனவும். காலவெளிக்கும் ஞானவெளிக்கும் முன்னால் மொழிவெளியை கனவுவெளியை ஆடியைநோக்கி ஆடியை என வைத்து ஒரு அலகின்மையை உருவாக்கியிருக்கிறேன்

1991 ல் எழுதத்தொடங்கிய நாவல் விஷ்ணுபுரம். 1997 ல் வெளிவந்தது. எழுதத்தொடங்கிக் கால்நூற்றாண்டு. வெளிவந்து இருபதாண்டுக்காலம். வாசிப்பின் அடுத்த தலைமுறை வந்துவிட்டிருக்கிறது. முற்றிலும் வேறுகாலம். முற்றிலும் வேறு உலகம். ஆனால் இன்று இந்நாவல் மேலும் வாசிக்கப்படுகிறது. பதிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நேற்றைய வாசகர்களைவிட இன்றைய வாசகர்களுக்கு இது மேலும் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது

விஷ்ணுபுரம் வாசிப்புக்கு ஓர் அறைகூவலை விடுப்பது. அந்த அறைகூவலைச் சந்திக்கும் வாசகன் அதை உள்வாங்கும்பொருட்டு தன்னை விரிக்கிறான். நெகிழ்த்திக்கொள்கிறான். மாற்றியமைக்கிறான். அதன்வழியாகவே அவனுடன் நாவல் உரையாடுகிறது. நாவலின் ஓட்டம் அல்ல, அது அளிக்கும் தடையே வாசகனைக் கட்டமைக்கிறதென்பதை விஷ்ணுபுரத்தை வாசிப்பவர்கள் உணரக்கூடும். அது நான் அறிந்த தடை, இன்னமும் முழுக்கக் கடக்காத தடை

இந்நாவலை முதலில் வெளியிட்ட அகரம்பதிப்பகம் கதிர், பின்னர் வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், நற்றிணை யுகன் ஆகியோருக்கு நன்றி. இப்போது மறுபதிப்பாக வெளியிடும் கிழக்குப்பிரசுரத்திற்கும், மெய்ப்புநோக்கி சீரமைத்த ஹரன்பிரசன்னாவுக்கும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி

ஜெயமோகன்

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் விஷ்ணுபுரம் மறுபதிப்புக்கான முன்னுரை ]

முந்தைய கட்டுரைநகைச்சுவை பற்றி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணாச்சி – 1