‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78

பகுதி பத்து   : நிழல்கவ்வும் ஒளி- 2

இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும் சதுக்கங்களிலும் நிரம்பி அலையடித்த மக்களின் தலைப்பெருக்குகளினூடாக வகுந்து சென்றது. எதிரே வந்த களிறுகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் பல்லக்குகளையும் இயல்பாக விலக்கி வளைந்தது. அந்நகரை நூல்முனை ஊசி என அது தைத்துக்கோப்பதாக தோன்றியது.

நெடுநேரம் கழித்தே தான் எங்கிருக்கிறோம் என்பதை கர்ணன் உணர்ந்தான். கடிவாளத்தை மெல்ல இழுத்து புரவியை நிறுத்தி நீள்மூச்சு விட்டு உடல் இளக்கினான். முன்னும் பின்னும் இரண்டு அடிகள் வைத்து தலை தூக்கி மூச்சேறி அவிந்து உடல் சிலிர்த்து அமைந்தது புரவி. அந்த இடம் எது என அவனால் எண்ணக்கூடவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். கீழே நெடுந்தொலைவில் என கருநீர் யமுனைப்பெருக்கு தெரிந்தது. அதன் மேல் கட்டப்பட்ட படகுப் பாலத்தினூடாக அப்போதும் வண்ண ஒழுக்கென மக்கள் இந்திரப்பிரஸ்தத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

தலையைத் திருப்பி மறுபக்கம் ஆற்றுவளைவை நோக்கியபோது விரித்த செங்கழுகுச்சிறகின் இறகுநிரை போல இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகள் யமுனைக்குள் நீட்டி நிற்பதை காணமுடிந்தது. அங்கு அசைந்த பெரும்படகின் பிளிறல் ஓசை மெல்ல காதை வந்தடைந்தது. அது பாய்களை விரித்து மெதுவாக பின்னடைந்து யமுனையின் அலைகள் மேல் ஏறி அப்பால் செல்ல அவ்விடத்தை நோக்கி பாய்சுருக்கி உள்ளே வந்தது பிறிதொரு பெரும்படகு. கீழே காகங்கள் படகுகளைச் சூழ்ந்து கரும்புகைப்பிசிறுகள் போல பறக்க மேலே அவனுக்கு நிகரான உயரத்தில் பருந்துகள் வட்டமிட்டன.

கர்ணன் புரவியை இழுத்துத் திருப்பி மையச்சாலையை நோக்கி செலுத்தினான். அவனை அங்கு எவரும் அடையாளம் காணவில்லை. ஒவ்வொருவரும் களிவெறிக்குள் தங்கள் உள்ளத்தை ஒப்படைத்திருந்தனர். ஒற்றைப் பேரலையாக அவ்வெறி அவர்களை சருகுகளை காற்றென அள்ளிச் சுழற்றிக் கொண்டு சென்றது. அத்தனை விழிகளும் ஒன்றாகியிருந்தன. அத்தனை முகங்களும் ஒற்றை உணர்வு கொண்டிருந்தன. நகரமே குரல் பெருக்கிணைந்து ஒற்றைச்சொல்லை மீளமீள சொல்லிக் கொண்டிருந்தது. சிலகணங்களில் அது ‘செல்வோம் செல்வோம்‘ என ஒலிப்பதாக உணர்ந்தான். நகரங்கள் கட்டிப்போடப்பட்டு சிறகடிக்கும் பறவைகள். அவற்றின் கட்டு தளர்ந்து கயிறு நீளும் தருணமே விழவுகள். விண்ணிலெழுந்து அவை மண்ணில் விழுகின்றன.

‘செல்வோம் செல்வோம்.’ அவன் அச்சொல்லை தன் சித்தத்தால் கலைத்து வெற்றொலியென்றாக்க முயன்றான். ஒற்றைச் சொல் மட்டுமே மொழியென்று இருக்குமா என்ன? யானையும், காகமும், சீவிடும் எல்லாம் ஒற்றைச்சொல்லை சொல்வதாகவே தோன்றுகிறது. அனைத்துயிர்களுக்கும் ஒற்றைச் சொல்லே அளிக்கப்பட்டுள்ளது. மானுடர் சொல்வதும் ஒற்றைச்சொல்தான் போலும். பல்லாயிரம் நுண்ணிய ஒலிமாறுபாடுகளால் அதை பெருக்கி மொழியென்றாக்கிக் கொள்கிறார்கள். காவியங்கள். கதைகள். பாடல்கள். எண்ணங்கள். கனவுகள்… என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணி அவன் கடிவாளத்தை தளர்த்தி புரவியை தட்டினான். அது செல்லும் பெருநடையின் தாளத்தில் உள்ளம் மேலும் ஒழுங்கு கொள்வதுபோல் இருந்தது.

எதை அஞ்சி இவ்வெண்ணங்களில் சென்று புதைந்து கொள்கிறேன்? எதை? ‘கொல்வோம் கொல்வோம் கொல்வோம்.’ திகைத்து அவன் கடிவாளத்தை இழுத்தான். அதை தெளிவாக கேட்டான். ஆம், அதுதான். கொல்வோம். அவன் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். கொலையாட்டுக் களி. இறப்புக்களி. அதுவன்றி பிறிதேதும் அளிக்கவியலாது இப்பேருவகையை. அவன் புரவியை உதைத்துக்கிளப்பி தன்னை அப்புள்ளியிலிருந்து பிடுங்கி விலக்கிக்கொண்டான். இத்தெரு, இம்மாளிகைகள், கொடிநிழல்கள், குவைமாடங்களுக்கு மேலெழுந்த ஒளிவானம். இதுவன்றி எதுவும் இப்போதில்லை. முந்தைய கணம் என்பது இறந்துவிட்ட ஒன்று. இக்கணம் இங்கிருக்கிறேன்.

மெல்லிய சிலிர்ப்பொன்று தன் உடலில் பரவிய பின்னரே அது ஏன் என உணர்ந்தான். என்ன கண்டேன்? எதையோ கண்டேன். எதை? உடனே அதை உணர்ந்தான். விழிதூக்கி சூரியனை பார்த்தான். கீழ்ச்சரிவில் நன்கு மேலேறி இருந்த கதிர்வட்டத்தின் கீழ்முனை சற்று தேய்ந்திருந்தது. அதற்குள் அவன் கண்கள் நிரம்பி நீர்வடிந்தது. மேலாடையால் கண்களைத் துடைத்தபடி ஐயம் கொண்டு மீண்டும் பார்த்தான். அத்தேய்வை நன்கு பார்க்க முடிந்தது. விழிமயக்கா என்று தன்னை கேட்டுக்கொண்டான். அல்லது கதிரோன் எப்போதும் இப்படித்தான் இருப்பானா? முழுவட்டம் என்பது உள்ளத்தால் உருவாக்கிக் கொள்ளப்படுவதா? இல்லை முகில் மறைக்கிறதா?

இந்திரப்பிரஸ்தம் கார் சூழும் குன்று. ஆனால் விண்ணில் அன்று முகில்களில்லை. கழுவி துடைத்துக் கவிழ்த்த நீலப்பளிங்கு யானம் போல் இருந்தது. ஐயம் கொண்டு அவன் மீண்டும் நோக்கினான். சூரியன் மேலும் தேய்ந்துவிட்டிருந்தது. இப்போது அக்குறையை நன்கு பார்க்க முடிந்தது. அவன் நெஞ்சு படபடக்க திரும்பி விழிமீள்வதற்கென்று நிலத்தை பார்த்தான். எரிந்தது கூழாங்கற்கள் நிழல்சூடி அமைந்திருந்த மண். அப்பால் விழுந்து கிடந்த நிழல்களை நோக்கினான். அவையனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றெனப்படிந்த இருநிழல்கள்போல இரண்டு விளிம்புகளுடன் மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தன.

என்ன ஆகிறது எனக்கு? யவன மதுவை நேற்றிரவு மட்டுமீறி அருந்தினேன். அதற்குமுன் நாக நஞ்சு உண்டேன். ஆம், விழி பழுதாகிவிட்டது. திரும்பிச் செல்கிறேன். என் மஞ்சத்தில் குப்புறப்படுத்து புதைத்துக் கொள்கிறேன். எண்ணங்களை மேலும் மதுவூற்றி ஊறவைக்கிறேன். துயின்று துயின்றே இந்நாளை கடந்துசென்றால் போதும். விழித்தெழுகையில் இவை அனைத்தும் இறந்த காலம் ஆகிவிட்டிருக்கும். இறந்த காலம் செயலற்றது. இறந்த அன்னையின் கருவிலிருக்கும் இறந்த மகவு. இறந்த நினைவுகள், செயலற்ற வஞ்சங்கள், வெற்றுக்கதையென்றான சிறுமைப்பாடுகள். கடந்து செல்ல சிறந்த வழி மிதித்து மிதித்து ஒவ்வொன்றையும் இறந்த காலமென ஆக்குவது மட்டுமே.

எத்தனை இனியது காலம்! ஒன்றும் செய்யாமலே ஒவ்வொன்றையும் கொன்று உறையச்செய்து நினைவுகளில் புதைத்து கோட்டைச் சுவரென்று வளைத்து பாதுகாப்பது. காலமென்று ஒன்று இல்லையேல் இங்கு மானுடர் வாழமுடியாது. இதோ காலத்தில் திளைக்கின்றன உயிர்கள். ஒவ்வொரு நெளிவாலும் காலத்தை பின்செலுத்துகின்றன புழுக்கள். காலத்தை மிதித்து விலக்குகின்றன விலங்குகள். சிறகுகளால் காலத்தை தள்ளுகின்றன பறவைகள். உதிர்வேன் உதிர்வேன் என காலத்தில் அசைகின்றன இலைகள். காலத்தில் அதிர்கின்றன நிழல்கள். சாலையோரத்து நிழல்களை நோக்கியவன் மீண்டும் திகைத்து நின்றான். அனைத்து நிழல்வட்டங்களும் பிறைவடிவிலிருந்தன.

புரவியைத் திருப்பி வானை பார்த்தபோது சூரியன் நேர்பாதியாக குறைந்திருப்பதை கண்டான். சாலையெங்கும் எழுந்த கூச்சல்களும், ஒலிமாறுபாடுகளும், அலறல்களும் அது தன் விழிமயக்கு அல்ல என்று காட்டின. அரண்மனைக்காவல் மாடங்களின் பெருமுரசுகள் இமிழத்தொடங்கின. கொம்புகள் பிளிறின. மக்கள் ஒருவரையொருவர் கூவி அழைத்தபடி அருகிருந்த மாளிகைகளின் வளைவுகளுக்குள் நுழைந்து மறைந்தனர். அவன் முன் ஓடி வந்த இருவர் “சூரிய கிரகணம் வீரரே! நஞ்சு கவ்வுகிறது கதிரவனை! ராகுவின் உடலை வெய்யோன் கிழித்து வெளிவருகையில் விண்ணிலிருந்து நச்சுமழை பொழியும்… வெட்ட வெளியில் நிற்கலாகாது. ஓடுங்கள்! கூரையொன்று தேடிக்கொள்ளுங்கள்!” என்றபடி விரைந்தனர்.

கர்ணன் இடையில் கைவைத்து தலைதூக்கி சூரியனை நோக்கி நின்றான். கதிர்மையம் மெல்ல தேய்ந்து கொண்டிருப்பதை நன்கு பார்க்க முடிந்தது. ராகு பல்லாயிரம் யோசனைக்கு அப்பால் குடி கொள்ளும் இளம்பிறை சூடிய கருநாகத்தான். அமுதுண்ண விழைந்து விண்ணளந்தோன் பெண்ணுருக்கொண்ட அவையில் அமர்ந்து இழிவுபட்டவன். இன்று அவன் நாள். அவன் உட்கரந்த வஞ்சம் எழும் தருணம். கதிரவனைக் கவ்வி விழுங்கி தன் வஞ்சம் நிறைக்கிறான்.

கர்ணன் மையச்சாலைக்கு வந்தபோது சற்றுமுன் வண்ணங்களாலும் ஓசைகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அப்பெரும்பரப்பு முற்றிலும் ஒழிந்து கிடப்பதை கண்டான். சில புரவிகள் மட்டும் ஆளில்லாது ஒதுங்கி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. நிழலற்ற நாய் ஒன்று சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. கண் இருட்டி வருவதுபோல் உணர்ந்தான். மரங்களின் நிழல்கள் மெலிந்து கருவளைக்கீற்றுகளென்றாகி மேலும் அழிந்து வடிவிழந்து கரைந்து மறைந்தன. மாளிகை முகடுகளுக்கு மேல் வானம் சாம்பல் நிறம் கொண்டது. அனைத்து வண்ணங்களும் அடர்ந்து பின் இருண்டு கருநீர் பரப்பில் என மூழ்கிக்கொண்டிருந்தன.

தன் நிழலை நோக்கிக்கொண்டு வந்த அவன் அது முற்றிலும் மறைந்திருப்பதை கண்டான். எதிரே இருந்த மாளிகையின் பளிங்குச் சுவர்ப்பரப்பில் சூரியவடிவம் தெரிந்தது. குருதியில் முக்கி எடுத்த மெல்லிய கோட்டுவாள் போல. கர்ணன் திரும்பி நோக்கினான். செந்நிற வளைகோடு இருளில் மூழ்கி மறைந்தது. ஒளியெச்சம் மட்டும் நீருள் மூழ்கிய செம்புக்கலத்தின் அலையாடல்வடிவம் என எஞ்சியது. பின்பு அதுவும் மறைந்தது. வான்வெளி முற்றிலும் கருமை கொண்டதை தன் பார்வை மறைந்ததென்றே எண்ணினான். ஒருகணம் எழுந்தது மானுடர் அனைவரிலும் உள்ளுறையும் முதலச்சம். விழிகளல்ல, இருண்டது உலகே என்றுணர்ந்து நெஞ்சு சுருளிறுக்கம் அவிழ்ந்தது.

78

நள்ளிரவு என இருட்டு. அவன் தன்னை மட்டும் அறிந்தபடி அதற்குள் நின்றிருந்தான். அனைத்து மாளிகைகளும் மரங்களும் சாலைகளும் மறைந்துவிட்டிருந்தன. இருளுக்குள் மானுடப்பெருக்கின் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரம் மட்டும் எஞ்சியிருந்தது. பறவைகளும் பூச்சிகளும்கூட முற்றிலும் ஒலியடக்கி அமர்ந்திருப்பதை உணர்ந்தான். மேலும் சற்று நேரத்தில் அவ்வொலியின்மை செவிகளை குத்தத் தொடங்கியது. ‘ஆம் ஆம் ஆம்’ எனும் ஒற்றைச்சொல். அதுமட்டுமே உயிர்களுக்குரிய பொதுமொழியா என்ன? இருளுக்குள் புரவியை செலுத்த விழைந்தான். ஆனால் மும்முறை குதிமுள்ளால் குத்தியும் அது அஞ்சி தயங்கியே காலடி எடுத்து வைத்தது.

தொலைவில் விரைந்து வரும் புரவிக்குளம்படிகளை கேட்டான். அவ்விருளுக்குள் அத்தனை விரைவாக வருவது எவர் என்று விழிகூர்ந்தான். நோக்கை தீட்டத்தீட்ட அக்காட்சி மேலும் மங்கலாகியது. இருளுக்குள் இருளசைவென கரியபுரவி ஒன்றை கண்டான். அதன் மேல் கரிய மானுடன் ஒருவன் அமர்ந்திருந்தான். கரிய ஆடை. பற்களும் விழிகளும்கூட கருமை. விழியீரத்தின் ஒளியொன்றே அவனை இருப்புணர்த்தியது. அவன் புரவியின் மூச்சு சினம்கொண்ட நாகமென சீறியது. மேலும் விழிகூர்கையில் அவன் மேலும் புகை ஓவியமென மறைந்தான். விழிமீள்கையில் உருக்கொண்டான். நெஞ்சு அறைபட “யார் நீ?” என்றான் கர்ணன். அக்குரலை அவனே கேட்கவில்லை.

“வருக!” என்று அவன் சொன்னான். “யார்?” என்றான். “வருக மைந்தா!” என்றான் கரியோன். பின்பு புரவியைத்திருப்பி பக்கவாட்டுப்பாதையில் பிரிந்தான். கர்ணன் நான் ஏன் அவனை தொடரவேண்டும் என எண்ணினான். ஆனால் அவன் புரவி தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. நில் நில் என அவன் உள்ளம் கூவியது. கடிவாளத்தை கைகள் இழுத்தன. புரவி அதை அறியவில்லை. இழுத்துச்செல்லப்படுவதுபோல அது சீரான காலடிகளுடன் சென்றது. முன்னால் செல்பவனின் புரவியின் கரியவால் சுழல்வது மட்டும் இருளுக்குள் இருளென தெரிந்தது. அக்குளம்படியோசை இரு பக்கங்களிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பு விலகி நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கே துடித்தது.

இருளுக்குள் ஒன்பது அடுக்குகளுடன் எழுந்து நின்றிருந்த கோபுரமுகப்பு கொண்ட பேராலயம் ஒன்றை கர்ணன் கண்டான். அதன் வாயில்கள் திறந்திருந்தன. உள்ளே கருமணியொளி என இருள்மின்னியது. விழிகள் தெளிந்த கணத்தில் அவ்வாலயத்தின் உச்சிக்கலங்களாக அமைந்திருந்த ஒன்பது நாகபடங்களை கண்டான். அவற்றின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன. கோபுரத்தின் ஒன்பது அடுக்குகளிலும் பல்லாயிரம் நாகர்களின் சிலைகள் உடல்பின்னி படமெழுந்து நாபறக்க விழியுறுத்துச் செறிந்திருந்தன.

கீழே முதலடுக்கில் நடுவே அமைந்த கோட்டத்தில் வாசுகியையும் இருபுறங்களிலும் அகம்படிநாகங்களையும் அவனால் அடையாளம் காணமுடிந்தது. இரண்டாவது அடுக்கில் கார்க்கோடகனின் எரிவிழிகள் ஒருகணம் மின்னிச்சென்றன. மூன்றாமடுக்கில் தட்சன். நான்காம் அடுக்கில் குளிகன். ஐந்தாம் அடுக்கில் சங்குபாலன். ஆறாம் அடுக்கில் மகாபத்மன். ஏழாம் அடுக்கில் பத்மன். எட்டாம் அடுக்கில் கேசன். உச்சியடுக்கின் மையத்தில் அனந்தன். குதிரைவீரன் இறங்கி திரும்பி “வருக!” என்றான். கர்ணன் இறங்கி விழிகளை அவனை நோக்கி நிலைக்கவைத்தபடி நடந்தான். இமைக்கணத்தில் அனைத்தும் இன்மையென்றாகி மீளுருக்கொள்வதை கண்டான்.

மழையிலூறிய பாறைகள்போல குளிர்ந்திருந்தன படிகள். ஆலயச்சுவர்களும் நீர்வழியும் தொல்குகைகள் போல கைகளை சிலிர்க்கச்செய்யும் தண்மை கொண்டிருந்தன. உள்ளே எவருமில்லை. முன்சென்றவன் திரும்பி “வருக!” என்றான். கர்ணன் தொடர்ந்து சென்றான். ஓசையற்ற வழிவுகளை தன்னைச்சூழ்ந்திருந்த இருளுக்குள் கண்டான். நாகங்களென நெளிந்து மானுட உருக்கொண்டன அவை. “நாகர்கள்” என்றான் அவன். அவர்களில் அறிந்த முகங்களை அவன் தேடினான். அவர்கள் அனைவரும் நாகபடமுடிகளை அணிந்திருந்தனர். அவையெல்லாம் உயிருள்ள நாகங்கள் என அறிந்தான். ஐந்துதலை, மூன்றுதலை நாகங்கள். பெருந்தலை நாகங்கள். விழிமணிகள். நாபறத்தல்கள். வளையெயிற்று வெறிப்புகள்.

“யார் நீங்கள்?” என்றான் கர்ணன். “என்றும் உன் பின்னால் இருந்தவன்” என்றான் அவன். “நீ பிறப்பதற்கு முன், உன்னை அன்னை கருவுறுவதற்கு முன், இப்புடவியில் நீ ஒரு நிகழ்தகவென எழுவதற்கும் முன்பு உன்னை அறிந்து காத்திருந்தேன். அங்கனே, என்றுமே நீ என் கையில்தான் இருந்தாய். எனது படைக்கலம் நீ!” கர்ணன் நெஞ்சுக்குள் சிக்கிய மூச்சை ஒலியென்றாக்கினான். “உங்கள் பெயர் என்ன?” என்றான். மேலும் உரக்க “நான் உங்களை உணர்ந்துள்ளேன். அறிந்ததில்லை” என்றான்.

“பிரம்மனின் சொல்லில் இருந்து நான் தோன்றி நெடுங்காலமாகிறது. என் பெயர் நாகபாசன்” என்றான் அவன். “இப்புவியை நாகங்கள் மட்டுமே ஆண்டிருந்த யுகத்தில் இங்கு நாகாசுரன் என்று ஒருவன் பிறந்தான். நாகத்தின் குருதியில் எழுந்த அசுரன் அவன். நான் நான் என தருக்கி தன்னைமுடிச்சிட்டுக்கொண்டு இறுகிய காளநாகினி என்னும் நாகப்பெண்ணின் ஆணவமே நாகாசுரனென்று பிறந்தது. ஆணவம் அளிக்கும் பெருவல்லமையால் அவன் நாகங்களுக்கு அரசனென்றானான். விண்ணகத்தை வென்று இந்திரனென்றாவதற்காக அவன் ஆற்றிய பெருவேள்வியில் நாளொன்றுக்கு பன்னிரண்டாயிரம் நாகங்களை அவியாக்கினான். நாகங்களின் ஊனுண்ட அனலோன் பெருந்தூண் என எழுந்து விண்ணோர் செல்லும் பாதையில் இதழ்விரித்து நின்றிருந்தான்.”

“நாகாசுரனின் கோல்கீழ் நாகங்கள் உயிரஞ்சி கதறின. நாகங்களை உண்டு அனலோன் நின்றாடினான். அக்குரல் கேட்டு அறிவுத்தவம் விட்டு எழுந்த பிரம்மன் அனைத்தையும் அறிந்தார். பிரம்மன் தன் அனல்கொண்ட சொற்களால் ஆற்றிய வேள்வியில் அவர் உதிர்த்த சினம்கொண்ட வசைச்சொல் ஒன்று பல்லாயிரம் யோசனை நீளமும் பன்னிரண்டு தலைகளும் கொண்ட நாகமென பிறந்தது. அதுவே நான். நாகபூதமென்று உருவெடுத்து நான் மண்ணிறங்கினேன். என் உடலால் நாகாசுரனின் நகராகிய நாகவதியை மும்முறை சூழ்ந்து சுற்றி இறுக்கி நொறுக்கினேன். என் மூச்சொலியில் அந்நகரின் கட்டடங்கள் விரிசலிட்டன. என் அதிர்வில் மாளிகைகள் இடிந்து சரிந்தன.”

“நாகாசுரன் தன் படைத்தலைவன் வீரசேனனை என்னை வெல்ல அனுப்பினான். அவனை நான் விழுங்கி உடலால் நெரித்து உடைத்து உண்டேன். இறுதியில் நாகனே நூற்றெட்டு பெருங்கைகள் நாகங்களென நெளிய பதினெட்டு நெளிநாகத்தலைகளை முடியெனச் சூடி யானைக்கூட்டங்களெனப் பிளிறியபடி என்னை வெல்லும்பொருட்டு வந்தான். நான் அவனை சூழ்ந்து பற்றி இறுக்கினேன். அவன் உடலை நொறுக்கி குருதிக்கட்டியென உடைத்து பின் விழுங்கினேன். எழுந்து பறந்து எந்தையிடம் சென்றேன்.”

“விண்ணகத்து தெய்வங்கள் என்னை தழுவினர். அனல்விழியன் என்னை குழையென்றணிந்தான். விண்ணளந்தோன் என்னை கணையாழியென்றாக்கிக் கொண்டான். படைப்போன் என்னை எழுத்தாணியென கொண்டான். சொல்லோள் காலில் கழலானேன். மலரோள் கையில் வளையானேன். கொலைத்தொழில் அன்னை இடையணியும் கச்சையானேன். யானைமுகன் மார்பில் வடமென்றானேன். ஆறுமுகன் மயிலுக்கு துணையானேன். தெய்வங்கள் அனைத்துக்கும் அணி நானே.”

“மண்வாழும் நாகங்களுக்கு விண்ணமைந்த காவல் நான். இங்கு அவர்கள் அடைக்கலக் குரலெழுப்புகையில் விண்ணில் என் செவிகள் அதை அறியும். இங்கு அவர்கள் கொண்ட பெருந்துயர் பொறாது என் நச்சுநாவிலிருந்து ஒரு துளி என உதிர்ந்து விண்ணிழிந்தேன். என்னை ஏந்தும் பெருந்திறல்தோளோன் மண்நிகழக் காத்திருந்தேன். இனி உன் கையில் அமர்ந்து பழிகொள்வேன்.”

கர்ணன் “நானா?” என்றான். “நான் ஷத்ரியன் அல்லவா?” என்றான். “ஆம், இது ஷத்ரியர்களின் யுகம். ஷத்ரியர்களை ஷத்ரியர்களன்றி பிறர் வெல்லமுடியாது” என்றான் நாகபாசன். “நீங்கள் விண்வாழும் தெய்வம்… முடிவிலா பேராற்றல்கொண்டவர். எளிய மானுடருடன் போரிட உங்களுக்கு வில்லும் வேலும் எதற்கு?” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் இது மானுடரின் ஆடல். தெய்வமே மானுடனாகி மானுடனில் சொல்கூடித்தான் இங்கு விளையாடமுடியும்” என்றான் நாகபாசன். “பெறுக என் கை வில்லை!”

“இல்லை” என்றான் கர்ணன். “என்னில் வஞ்சம் நிறைய நான் ஒப்பமாட்டேன்.” திரும்பி வானை நோக்கி “சூரியத்தேய்வு இத்தனை நேரம் நீடிக்காது. இது என் கனவு” என்றான். “பெருங்கருணையும் வஞ்சமென திரளமுடியும் மைந்தா” என்றான் நாகபாசன். “வென்றொழிக்கப்பட்டு சிறுமைக்காளாகி நின்றிருக்கும் இச்சிறுகுடியினர் மேல் உள்ளம் கரைய இன்று பாரதவர்ஷத்தில் நீயன்றி பிறிதெவருமில்லை. இன்று இக்குடியினர் ஐவரும் உன்னை தங்கள் தெய்வமென, மூதாதை வடிவென எண்ணி அடிசூழ்கின்றனர்.” சீறும் மூச்சொலிகள் தன்னை சூழ்ந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான்.

தேன்தட்டுக்குழிகளென நிறைந்த விழிகள் மின்னும் முகங்களுடன் நாகர்கள் உடலொட்டி நெருங்கி அவனை வளைத்தனர். முதுநாகன் ஒருவன் “எங்கள் தந்தையே! எங்கள் தேவனே!” என்றான். முதுகுமுண்டுகள் புடைக்க குனிந்து கர்ணனின் கால்களை தொட்டான். மீன்களைப்போல குளிர்ந்த விரல்கள். அலைவளைவதுபோல நாகர்கள் அவன்முன் பணிந்தனர். மண்புழுக்களைப்போல மெல்விரல்கள் அவன் கால்களை பொதிந்தன.

“வஞ்சத்தை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை மைந்தா, அது நெய்யும்திரியுமென காத்திருந்த அகல். நீ சுடர்” என்றான் நாகபாசன். “இது உன் கணம். உன் வாழ்வு இங்கு முடிவாகிறது. இதோ உள்ளது என் வில். இதை நீ தோள் சூடலாம். அன்றி துறந்துசென்று உன் அரசகுடிவாழ்க்கையை கொள்ளலாம்.” கர்ணனின் தோளைத்தொட்டு “மைந்தா, நீ என் நாணின் அம்பு. நீ இதை தெரிவுசெய்யாது உன் வாழ்வை நாடிச் செல்வாய் என்றால் நீ விழைவதை அளிப்பது என் கடமை. உன் அன்னை உன்னை ஷத்ரியன் என அவையறிவிப்பாள். குருவின் கொடிவழிக்கு நீயே மூத்தவனாவாய். இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் நீயே அரசனும் ஆவாய். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென நீ அமர்வாய்” என்றான்.

நாகபாசனின் குரல் கூர்கொண்டு தாழ்ந்தது. “அத்துடன் உன்னுள் உறையும் ஆண்மகன் விழையும் மங்கையையும் நீ அடைவாய்!” கர்ணன் தன் உடல் நடுங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தான். “ஆம், இது உன் போர் அல்ல. இதில் நீ அடைவதற்கொன்றும் இல்லை. இழப்பதற்கோ அனைத்துமே உள்ளது. மைந்தா, உயிரை இழப்பது ஷத்ரியர்க்கு உகந்ததே. நீ புகழை இழக்கலாகும். மூதாதையர் உலகையும் இழக்கலாகும். ஆயினும் நீ வெய்யோன் மைந்தன் என்பதனால், மண்வந்த பேரறத்தான் என்பதனால் இதை கோருகிறேன். இக்கண்ணீரின் பொருட்டு.” நாகபாசன் அருகே முகம் கொண்டுவந்து “ஏனென்றால் மண்ணில் எக்கண்ணீரும் மறுநிகர் வைக்கப்படாது போகலாகாது. அதன்பின் அறமென்பதில்லை” என்றான்.

கர்ணன் தன் கால்களில் விழுந்த சிற்றுடலை குனிந்து நோக்கி அதிர்ந்தான். தோலுரிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போன்ற செந்நிறத் தோல் கொண்ட ஒரு சிறுவன். தோலின்மேல் சிவந்த வரிகளாக புண்கள். வளர்ச்சிகுன்றி பெரிய கைக்குழந்தை போலிருந்தான். சூம்பிய கைகால்கள், உப்பிய வயிறு. பெரிய சப்பிய மண்டையில் விழிகள் வெளியே விழுந்துவிடுபவைபோல பிதுங்கியிருந்தன. அவனை அவன் கால்களின் மேல் போட்ட நாகமுதுமகள் “வெய்யோனே, இவன் எஞ்சியிருக்கும் தட்சன். அஸ்வசேனன் என்பது இவன் பெயர். இவன் உங்களிடம் அடைக்கலம்” என்றாள்.

“முதிராக்கருவென அன்னையால் வயிறு கிழித்து போடப்பட்டவன். தோல் வளரவில்லை. சித்தம் உருவாகவில்லை” என்றான் நாகபாசன். கர்ணன் தன்னைச்சூழ்ந்து நின்ற கூப்புகைகளை நோக்கி சித்தமழிந்து நின்றான். “உன் சொல் முடிவானது அங்கனே” என்றான் நாகபாசன். “இங்குள்ள ஒவ்வொருவரும் இழந்தவர்கள். எரிந்தவர்கள். இவர்களின் கண்ணீர் உன்னிடம் கோருவது ஒன்றையே.”

கர்ணன் குனிந்து அஸ்வசேனனை தன் கையில் மெல்ல எடுத்தான். உருவழிந்த இளம்தட்சனின் முகத்தில் இதழ்கள் மட்டும் முலையருந்தும் மகவுக்குரியதாக இருந்தன. வாய்க்குள் எழுந்த நான்கு வெண்ணிறப்பால்பற்கள் தெரிய இமைதாழ்த்தி அவன் சிரித்தபோது குழந்தைமையின் பேரழகு மலர்ந்தது. “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக! இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்றான்.

“என் தெய்வமே! என் மூதாதையே” என்று அழுகையொலியுடன் நாகமுதுமகள் அவன் கால்களில் சரிந்தாள். நாகர்கள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் கைவிரித்தும் கதறியபடி ஒருவர் மேல் ஒருவரென விழுந்து அவன் முன் உடற்குவியலென ஆயினர். அவர்களின் அழுகையொலிகள் எழுந்து இருளை நிறைத்தன.

முந்தைய கட்டுரைஇயற்கைவேளாண்மை முன்பும் பின்பும்
அடுத்த கட்டுரைநம்மாழ்வார் -கடிதம் 1