காரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்

 

 

Picture+593

அன்புள்ள ஜெ,
காரைக்குடி புத்தக கண்காட்சியில் ‘மரப்பாச்சி’ எனும் பெயரில் ஓர் புத்தக அரங்கு எடுத்து நடத்தினேன். பத்து நாட்களும் கிளினிக்கும் அரங்குமாக மாறி மாறி சென்று கொண்டிருந்தேன். தமிழினி, வம்சி, எழுத்து, சொல்புதிது, சந்தியா, ஹிந்து, கிழக்கு, சர்வோதயா மற்றும் இயல்வாகை என அறிமுகமான பதிப்பகங்கள் விற்பனைக்கு அவர்கள் புத்தகங்களை எனக்களித்தார்கள்.

 

ஃபிப்ரவரி 19 – 28 முதல் பத்து நாட்கள் கம்பன் மணி மண்டபத்தில் நடந்தது. வெண் முரசு தொடர்பாக உங்களுக்கு கடிதம் எழுதிய மணியம்மா தன்னார்வலராக ஸ்டாலில் அமர்ந்தார். சீனு ஞாயிறன்று வந்ததால் அரங்கை காலி செய்வது சுலபமானது. முதல் நான்கு நாட்கள் ஓரளவு கவுரவமான விற்பனை நிகழ்ந்தது. அதன் பின்னர் வந்த வார நாட்கள் மிக சுமார். மீண்டும் சனி ஞாயிறு ஓரளவு நல்ல விற்பனை.

 

எனக்காகவும் நண்பர்களுக்காகவும் எடுத்து வைத்த புத்தகங்கள் போக சுமார் 56000 (mrp விலையில்) மதிப்பான புத்தகங்கள் விற்றுள்ளன. இதற்காக சுமார் 9500 ரூபாய் செலவானது. பெரிய லாபம் என ஏதுமில்லை, ஆயிரம் ரெண்டாயிரம் நட்டமிருக்கலாம்.. எனினும் காரைக்குடியில் இதை செய்தது மிகுந்த நிறைவளித்தது. நவீன இலக்கிய வாசிப்பு இங்கு மிக குறைவாகவே இருக்கிறது.

 

இது எவ்வகையிலும் பெரிய லாபம் ஈட்டி தராது என்றறிந்தே இதில் இறங்கினேன். வாசிக்க கூடிய சஹ்ருதயர்கள் எவரையும் கண்டுகொள்ள முடியுமா என்பதும், ஏதோ ஒரு கிறுக்குத்தனமும் தான் நோக்கம். ஒவ்வொருநாளும் இன்றைய எழுத்தாளர் இன்றைய புத்தகம் என தலைப்பிட்டு நூல்களை சலுகையில் அளிக்க முற்பட்டேன். (இ.பா, நீங்கள், யுவன், நாஞ்சில், சக்காரியா, சு,வேணு உட்பட நூல்களில் – உப்பு வேலி, ஹிமாலயம் போன்ற) ஆனால் பெரிதாக எடுபடவில்லை.

பிறிதொரு சமயம் புத்தக சந்தையில் அமர்ந்திருந்ததால் உருவான சில அவதானங்களை எழுத வேண்டும்.
அன்புடன்

சுனில்

 

அன்புள்ள சுனில்

 

நண்பர்கள் சொன்னார்கள். சிற்றூர்களில் புத்தகவாசிப்பு என்பதே அனேகமாக இல்லை. பல ஊர்களில் குமுதம் விகடனுக்குக்கூட வாசகர்கள் இல்லை என்பதே உண்மை. நம் மொழியின் பண்பாட்டின் நிலை அப்படி.

 

அந்நிலையில் நாம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பதொன்றே செய்யக்கூடுவது. உங்கள் முயற்சி மனநிறைவளிக்கிறது வாழ்த்துக்கள்

 

ஜெ

 

1

ஆசிரியருக்கு,

  வணக்கம்.  உங்கள் தளம் ஒரு என்சைக்ளோபீடியா வகையில் உதவியாக இருக்கிறது. தத்துவம் பற்றிய கீழை, மேலை கட்டுரைகளை மீண்டும், மீண்டும் படிப்பேன்.
இதில் கிரேக்க லாஜிக்கின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கும், இந்திய நியாய லாஜிக்கின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் இருக்குமென சொல்லியிருந்தீர்கள். யோசிப்பதன் ஓழுங்கமைவு மாறும் பொழுது வரும் பிரச்சனைகள் பற்றியெல்லாம் பெரிய அவேர்னஸ் இல்லாத பொழுது இந்த பிரச்சனை புரியவில்லை, உங்கள் பரிந்துரையின் பெயரில் படிக்க ஆரம்பித்த பிறகு இதெல்லாம் புரிகின்றது.
மெக்காலே ஆங்கில அறிவு வெறும் ரொமாண்டிக்காக இருந்த காலத்தில் பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் மீட்டெடுக்க உதவினார்கள் என்றே சொல்வார். அவருக்கு அன்றைய இந்தியா பழைய ஆங்கிலேய காலத்தினை ஓட்டிய காட்சி கோலத்தில் தெரிந்து இருக்கலாம். ஆனால் அவர் இந்திய கல்வியாளாரோ, இந்தியவில் அறிஞரோ அல்ல.
Inline image 1
SC Vidyabhushana எழுதிய நியாய சூத்திரா என்னும் புத்தகம் ஆர்க்கைவ் வலைத்தளத்தில் கிடைத்தது.  ஒரளவுக்கு படித்து பார்த்தேன்.அவர் புத்தகத்தில் 16  புத்தங்களை பற்றி குறிப்பிடுகின்றார். இதையெல்லாம் பற்றி கல்விக் கூடங்களில் கேள்வி கூட பட்டதில்லை. லாஜிக் என்பதை கருத்துகளை உருவாக்க பயன்படுத்தும் கருவி என்பதே கற்பிக்க பட்டதில்லை. கல்வி கூடங்கள் நிறைய தகல்வகளை அடுக்குகின்றன். ஆனால் அந்த தகவல்கள் எப்படி உண்டாக்கபடும் முறையோ, நெறிகளோ கற்பிக்கப்பட்டதில்லை. நியாயமோ கருத்தினை உருவாக்கும் முறைகளை பேசுகின்றது.
இதை இந்து மதத்துக்குரியது என  கூறுவதே சரியான என தெரியவில்லை. இந்திய மரபு தத்துவங்கள் ஆன்மிகத்தினையும் , மனித மீட்பினையுமே பேசுகின்றதாகவே தோன்றுகின்றது. இந்த லாஜிக் இந்திய தர்க்கவியல் தரப்பாகவே முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகின்றது.
அரவிந்தன் கன்னையன் பகவத் கீதை பற்றி பேசும் பொழுது சங்கரர்  உரையில் பழைய உரைகளை முறையாக அணுகி பேசுவதையும் சொல்லிக் கொண்டிருந்தார். அக்கடெமிக்காக எழுதும் முறையும், அக்கடெமிக்காக விவாதிக்கும் முறையும் செவ்வனே இருந்திருந்தால் மட்டுமே அவ்வாறு இருந்திருக்க முடியுமென தோன்றுகின்றது.
18ம் நூற்றாண்டில் கிடைத்த இந்தியவில் எழுச்சி, ஆரிய இனவாத சிந்தாந்த்தையும் தோற்றுவித்தது, ஓன்னாம் நம்பர், இரண்டாம் நம்பர் சாதி சிக்கலையும் பெரிதாக்கி சென்றது. ஆனால் ஐரோப்பா தனது ஆரிய இனவாத சித்தாந்த தரப்பை பிழையென உணர்ந்து அடுத்த கட்டம் சென்றது. ஆனால் கிழக்காசியாவோ தன்னை தொகுத்து கொண்டு தாண்ட முடியாமல் உள்ளது.
சமீபத்தில் கூட ராமாயணம் தினம் பாராயணம் செய்யும் ஓருவர் ராமானுஜத்தின் 300 ராமாயணங்களை கண்டித்து சமஸ்கிருத ராமாயணமே முதல் ராமாயணம் என வாதிட்டு கொண்டிருந்தார்.  முதல் ராமாயணம் இல்லையென நிறுவப்பட்டால் அவர் வாசிப்பதையே நிறுத்தி விடுவாரா என்ற அச்சம் உண்டானது. முதலாவதாக இருப்பதும், இரண்டாவதாக இருப்பதும் ஏன் இத்தனை நெருக்கடியை உண்டாக்க வேண்டும்?  ராமாயணத்தை பாராயணம் செய்வது ஓன்னாம் நம்பர் என்பதற்காகவா , ராம பக்தியின் காரணமாகவா என பல கேள்விகள் எழுகின்றன.
கிரேக்க என்லைட்டென்மெண்ட், ஸ்காட்டிஸ் என்லைட்டன்மெண்ட், இங்லீஸ் என்லைட்டெண்மெண்ட், ப்ரெஞ்ச் என்லைட்டெனண்மெண்ட்  என ஐரோப்பாவுக்குள் பல இருந்தாலும் அவர்கள் தங்களை தொகுத்துக் கொண்டு ஐரோப்பிய என்லைட்டெண்மெண்ட் எனவே பேசுகின்றார்கள். அமெரிக்க ஜனநாயக தோற்றத்துக்கு காரணமான பிதாமகர்கள் இந்த
ஓட்டு மொத்த சிந்தனையின் தொடர்ச்சியாகவே ஜனநாயக குடியரசினை நோக்கி செல்வதாக வரலாற்று புத்தகங்கள் சொல்கின்றன.  ஓன்றிலிருந்து ஓன்று விரிகின்றது.
ஆனால் கிழக்காசியாவில் இன்னமும் தங்களுக்குள் ஓன்னாம் நம்பர் எதுவெனவே பல இந்து சிந்தனையாளர்கள் விவாதித்து கொண்டு இருக்கின்றார்கள். அசோகரை பற்றியும், நாளந்தாவை பற்றியும் , புத்தரை பற்றியும் வரும் இணைய தள கட்டுரைகள் படிக்க சகிக்க முடியாமல் இருக்கின்றது.  அதை விட மகிஷனை வணங்கும் இந்தியர்கள் இருப்பதை தெரியாமல் இந்துத்துவர் என சொல்லும் தரப்பிருப்பது வியப்பையே தருகின்றது. நரசிம்மம், வராகம் போன்றவை பழங்குடி மரபுகள் பொது மரபுகளுக்குள் வரும் பொழுது வந்தவை எனவும் படித்தேன். எல்லாவற்றையும் உள்வாங்கி விரியும் தன்மை கவனிக்கதக்கது.
கிழக்காசிய அறிவின் பெரும் விரிபரப்பு வானமாகவே விரிந்தாலும் அதன் ஓட்டு மொத்தபரப்பை  நோக்கி நிற்காமல், தரையில் அதன் பிரதிபலிப்பில் தங்களுக்கு பிடித்த கூழாங்கல் பொறுக்கி கொண்டு இருக்கின்றர்கள்.
உங்கள் கட்டுரைகளுக்கு நன்றி. அவை ஓட்டு மொத்த வானத்தையும் நோக்கியே பேசுகின்றன.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
சிந்தனை என்பது மூன்று தளங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஒன்று,நடைமுறைத்தளம்.  அதுவே அரசியல் சமூகவியல் அடிப்படைகளை உருவாக்குகிறது. இன்னொன்று தத்துவத்தளம். அது தூயதர்க்கநோக்கு. சாராம்சம் நோக்கியபார்வை. மூன்றாவது ஆன்மீகம் என நான் சொல்வது. முழுமைநோக்கு. தரிசனம். இவை மூன்றும் முயங்கும் ஒருதளமே ஏற்புடையதாக இருக்கக்கூடும்
ஜெ
முந்தைய கட்டுரைபுதியவாசகர்கள் சந்திப்பு- கொல்லிமலை
அடுத்த கட்டுரைவிமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்