சைவம், நல்லுச்சாமிப்பிள்ளை- கடிதம்

 

1

 

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்களுடன் அ மலைச்சாமி எழுதுகிறேன்.

உறவுக்காரர் மரணம், உடல்நலக்குறைவு என்று சென்ற இரு வாரங்கள் போனதில் தங்கள் இணைய தளத்தை சரியாக வாசிக்க முடியவில்லை. இன்றுதான் சற்று இயல்புக்கு வந்துள்ளேன். நாஞ்சில் நாடன் குறித்த கட்டுரை மிக அருமையாக இருந்தது. தனக்கு வலி ஏற்படுத்தும் சிகிச்சைகளை வலிகளை மறந்து ரசிக்க எவ்வளவு பெரிய கனிவு வேண்டும்? எனக்கு அவரை பார்க்க வேண்டும் பேரவா பிறந்துவிட்டது.

தாங்கள் தங்களின் கட்டுரைகளில் பெரும்பாலும் தொல் இலக்கிய மேற்கோள்களை நீங்கள் அதிகமாக சுட்டுவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். மேற்கோள்கள் எதுவும் தேவைப்படாத அளவுக்கு செறிவாகவும் விரிவாகவுமெ தங்கள் கட்டுரைகள் இருக்கின்றன.

அதற்கான காரணத்தை நீங்கள் ஊட்டி சந்திப்பில் சொன்னது ஞாபகம் இருக்கிறது. மேடைப்பேச்சை கேட்கும் ஒருவன் இலக்கிய வாசிப்புக்குள் வரவிடாமல் செய்வதே மேடைப்பேச்சாளர்கள் காட்டும் மேற்கோள்கள்தான். ஒரு பாட்டின் ஒரு வரி, இரண்டு வரிகளை எடுத்து சொல்லிவிட்டு, தங்களின் சொத்தைக் கருத்துக்கு அந்த மொத்தப்பாட்டையும் பலியாக்கி, அந்த பாட்டை எழுதிய கவிஞனைசிறுமைப்படுத்தும் போக்கைத்தான் மேடைப்பேச்சாளர்கள் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

நேற்று வெளிவந்த நல்லுசாமி பிள்ளை அவர்கள் குறித்த கட்டுரை பல சிந்தனைகளை என்னுள் கிளர்த்தியது. அக்கட்டுரையில் மாயை குறித்து வாசித்த போது எனக்கு பாரதியின் நிற்பதுவே பாடல் ஞாபகம் வந்தது. பிறகு பாரதியின் பரசிவ வெள்ளம் என்ற பாடலை வாசித்தேன். அந்த முண்டாசுக்காரன் எவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் மிக ஆழமாக (என்னறிவுக்கு) பாடியிருக்கிறான்.

அந்த பாட்டில் “கற்றை சடை வேண்டா காவியுடை வேண்டா பாவித்தல் போதும் பர நிலை எய்துதற்கே” என்ற வரிகளை நான் பல பாரதி பக்தர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த பாட்டை வாசித்த பின் அவர்கள் மீதெல்லாம் எனக்கு கோபம் வந்தது.

ஆனால் எந்த பாட்டையும் மேற்கோள் காட்டாமல் தாங்கள் எழுதியிருந்த நல்லுசாமிபிள்ளை அவர்கள் குறித்த கட்டுரை என்னை பாரதியிலிருந்து சித்தர் பாடல்கள் வரை கூட்டிசென்றது. சைவ ஞான உலகை சிறிய அளவில் எனக்கு அந்த கட்டுரை அறிமுகம் செய்தது. இப்போது திருமந்திரம் சிறிது சிறிதாக புரிகிறது. அந்த புரிதல் தங்கள் அனுக்கத்தாலும், வழி காட்டுதல்களாலுமே நிகழ்வதால் நான் தங்களுக்கு நன்றிக்குரியவன்.

அன்பன்

அ மலைச்சாமி

 

அன்புள்ள ஜெ

ஜெ எம் நல்லுச்சாமிப்பிள்ளை உரை எழுதிய சிவஞானபோதம் இணையத்தில் கிடைத்தது

http://www.saivasiddhanta.in/book/English/SivaGnanaBotham_Eng.pdf

இதைவிடச் சிறந்த உரைகள் இன்று கிடைக்கக்கூடும். ஆனால் அக்காலத்தைய உரை என்பது சைவத்தை நவீன நோக்கில் அவர்கள் எப்படி புரிந்துகொண்டனர், எப்படி படிப்படியாக அதை ஒரு நவீனசிந்தனையாக உருவாக்கிக்கொண்டுவந்தனர் என்பதைக் காட்டுவது

ஜெ எம் மீது ஒரு கவனத்தைக்கொண்டுவந்தமைக்கு நன்றி. பொதுவாக இணையத்தில் இன்று இப்படி பரந்துபட்ட தளத்தைக் கொண்டதாக உங்கள் இணையப்பக்கம் மட்டுமே உள்ளது

சிவஞானம்

ஜெ எம் நல்லுசாமிப்பிள்ளை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
அடுத்த கட்டுரைமும்பை கேட்வே இலக்கிய விழா