‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76

பகுதி ஒன்பது – மயனீர் மாளிகை –  13

இரு தாமிரக்கதவுகள் உள்ளங்கைக்குடுமிக்குழிகளில் உருளைகள் வழுக்கிச்சுழன்று ஓசையின்றி விரியத்திறக்க பேரமைச்சர் சௌனகரும் மறுபக்கம் அமைச்சர் சித்ரகரும் நின்று அனைவரையும் உண்டாட்டு அறைக்கு வரவேற்றனர். “வருக! பருவடிவ உணவு அனல்வடிவம் கொள்ளட்டும்! உண்பதை அமுதாக்கும் அழிவற்ற தேவர்கள் வந்து அவை நிறைக்கட்டும்!” என்று தருமன் கைகூப்பி சொன்னான். ஒவ்வொருவரையும் வரவேற்று தலைவணங்கி புன்னகைத்து ஓரிரு சொல் முகமன் சொல்லி வருகைப்படுத்தினான். “உண்டாட்டறையிலும் மஞ்சத்தறையிலும் பகைமைகள் இல்லை” என்றார் தமகோஷர். “உண்டாட்டு நல்ல இடம். அங்கு மூத்த யாதவரின் ஆட்சியே நடைபெறும்” என்றான் சகதேவன். “மணமாக எழுந்த நுண்வடிவ உணவை ஏற்கெனவே உண்டுவிட்டோம். கன்னியின் காதல்கடிதத்தை பெறுவதைப்போன்றது அது” என்றார் சல்யர்.

ஜராசந்தன் துரியோதனன் தோளைத் தொட்டு “நமது போட்டியை இங்கு வைத்துக் கொள்ளலாமா அரசே?” என்றான். புன்னகைத்தபடி துரியோதனன் “இல்லை, நான் முன்னரே தோற்றுவிட்டேன். பாரதவர்ஷத்தின் அனைத்து உணவு வகைகளும் பரப்பப்பட்ட உண்டாட்டறையில் புலனடக்கம் பழகும் அளவுக்கு பேதை அல்ல நான்” என்றான். ஜராசந்தன் உரக்க நகைத்து “ஆம், நானும் அதையே எண்ணினேன். ஆனால் இதை நீங்கள் சொன்னபின்பு நான் சொன்னால் நான் வென்றவன் ஆவேனல்லவா?” என்றான். பொருளற்ற விடம்பனங்கள் வழியாக அந்தத்தருணத்தை அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். உவகையும் துயரும் மொழியை பொருளிழக்கச்செய்கின்றன என்று கர்ணன் எண்ணிக்கொண்டான்.

துரியோதனன் துச்சாதனனிடம் “தம்பியர் எங்கே?” என மெல்லியகுரலில் கேட்டான். “பின்னால் வருகிறார்கள்” என்றான் துச்சாதனன். “அவர்களிடம் சொல்! அவர்கள் எதைக் கண்டிருந்தாலும் அது மாயை என.” துச்சாதனன் பெருமூச்சுடன் தலையசைத்தான். கர்ணன் துரியோதனனை ஓரக்கண்ணால் பார்த்தான். அவன் முகம் ஏன் நீர்நிறைந்த தோற்கலம்போல எடைகொண்டிருக்கிறது என எண்ணினான். துச்சாதனன் திரும்பி துச்சலனையும் துர்முகனையும் நோக்கிவிட்டு “அவர்கள் அஞ்சியிருப்பதுபோல தெரிகிறது மூத்தவரே” என்றான். துரியோதனன் விழிகள் அரைக்கணம் வந்து தன்னை தொட்டுச்செல்வதை கண்ட கர்ணன் பின்னால் தங்கினான். துரியோதனன் அதை உணர்ந்ததை அவன் உடல்கொண்ட தளர்வு காட்டியது. அவன் மெல்லிய குரலில் துச்சாதனனிடம் ஏதோ பேசத்தொடங்கினான்.

“அரசர் எதைக்கண்டோ அமைதியிழந்துவிட்டார்” என்றபடி ஜயத்ரதன் கர்ணனின் அருகே வந்தான். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கர்ணனின் தோளைத்தொட்டபடி கேட்டான். “வெறும் பாவைவடிவுகள்” என்றான் கர்ணன். “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். ஆனால் அவற்றை பொருட்கோள் செய்யாமலிருக்க என் உள்ளத்தை பழக்க முடியவில்லை” என்றான் ஜயத்ரதன். “நான் மிக விந்தையான ஒன்றை கண்டேன். ஒரு நாகன்!” கர்ணன் மீசையை நீவியபடி விழிசரித்து நோக்கினான். “குள்ளமானவன். உங்களருகே அவன் நின்றிருந்தான். முதியவன். அவன் உங்களிடம் ஓர் அம்பை அளித்தான். அது அம்பல்ல நாகம் என உடனே கண்டேன். நாகமாகவும் அம்பாகவும் ஒரேசமயம் தோற்றமளித்தது. அதன் கூர்நுனி நாவாகத் துடித்தது. வால் நெளிந்தது. ஆனால் உலோகமாகவும் இருந்தது.”

“ம்…” என்றான் கர்ணன் விழிதிருப்பி மீசையை சுருட்டியபடி. “நீங்கள் அதை பெற்றுக்கொண்ட போதிருந்த விழிக்குறியை இப்போது நினைவுகூர்கிறேன். உச்சகட்ட சினம் கொதித்தது உங்களில். உச்சிவெய்யோன் என எண்ணிக்கொண்டேன். இதெல்லாமே ஒரு கணத்துக்கும் குறைவான நேரத்தில் முடிந்த காட்சியும் எண்ணங்களும்.” ஜராசந்தன் அவர்களின் அருகே வந்து “கனவுகளை எண்ணிக்கொள்கிறீர்கள் அல்லவா?” என்றான். சிசுபாலன் ஜராசந்தனின் தோள்களில் கையை வைத்தபடி “நீங்கள் கண்டதென்ன?” என்றான். “ஆடையற்ற முழுதுடல் மகளிர். பின்பு குருதி” என்றான் ஜராசந்தன். உரக்க நகைத்து “அவை என் அனைத்துக்கனவுகளிலும் வருபவைதான்” என்றான். ஜயத்ரதன் “அனைவருமே குருதியை கண்டிருப்போம். நாகங்களையும்” என்றான்.

“ஆம்” என்றான் சிசுபாலன். “இவையனைத்துமே நாகங்களின் வஞ்சம்தானா என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.” ஜயத்ரதன் “எவ்வகை குருதி மகதரே?” என்றான். “இங்கிருந்த அத்தனை அரசரும் வெட்டுண்டு கிடப்பதை கண்டேன். ஓர் உண்டாட்டில் என அவர்களின் குருதியை அள்ளி உண்ணும் மாயத்தெய்வங்களின் களிகொண்ட விழிகள். சுவை திளைக்கும் வாய்கள். உவகை ததும்பும் கையசைவுகள்” என்றான் ஜராசந்தன். “ஊடே நெளிந்து படமெடுக்கும் பாதாளநாகங்கள்” என்றான் சிசுபாலன். “மகதரே, இங்கு தோள்கோத்து நகைகொண்டாடி உண்டாடும் நாமனைவருமே ஒருவரை ஒருவர் கொன்று குருதியாடத்தான் உள்ளூர விழைகிறோமா? அவ்விழைவைத்தான் நம் உளமயக்கென இங்கு கண்டோமா?” என்றான் ஜயத்ரதன். “யாருடைய விழைவு அது என நாம் எங்ஙனம் அறிவோம்? ஷத்ரியர் எப்போதும் ஊழின் களிப்பாவைகள் என்று காவியச்சொல் உள்ளது” என்றான் ஜராசந்தன்.

“நான் கண்டது ஒரு விந்தைதேவனை” என்றான் சிசுபாலன். “கையில் படையாழி ஏந்தி நின்றிருந்தான். அவன் கைகளும் கால்களும் செந்தழல்நிறம் கொண்ட சிம்மம். தலை மானுடனுக்குரியது. பேரருள் கொண்ட விழிகள். மயக்கும் புன்னகை. ஆனால் கைநகங்களில் குருதி. காலடிகள் குருதிமுத்திரைகளென நீண்டு சென்றன. என்னை நோக்கி வந்து என் வழியாக கடந்துசென்றான். நான் அவனுடன் நடந்துசெல்வதை கீழே விழுந்துகிடந்த நான் கண்டேன்.” ஜயத்ரதன் “நான் கண்டது ஒரு பெண்ணை. கரியவள். எரியும் நுதல்விழிகொண்டவள். பிறைசூடியவள். ஒளிரும் வெள்ளிநகங்கள் கொண்ட கைகளில் கடிவாளமேந்தி ஒரு தேர்த்தட்டில் அமர்ந்திருந்தாள். அத்தேரில் வஜ்ராயுதமேந்தி நின்றிருந்தான் இந்திரன். அவள் திரும்பி கைவிரல்கள் நடமிட்டு முத்திரையாட அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்” என்றான்.

“ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பார்த்திருக்கிறார்கள் அங்கரே” என்றான் ருக்மி. நீள்மூச்சுடன் அருகே வந்த பூரிசிரவஸ் “நான் பார்த்தது விழியின்மைகள்” என்றான். “எப்படி அவ்வுளமயக்கு எனக்கு ஏற்பட்டது என்று எண்ணி எண்ணி எட்டவில்லை. நான் பார்த்த அத்தனை விழிகளிலும் ஒளி இருக்கவில்லை. நோக்கின்மை பல்லாயிரம் முகங்களென என்னை சூழ்ந்திருந்தது. திகைத்து அலறி நான் சென்றபோது என் முகத்தை பார்த்தேன். அங்கும் விழிகளென இரு தசைத்துளிகள். அஞ்சி நான் நோக்கு திருப்பியபோது என் முகமே பெருகி என்னைச் சூழ்ந்தது” என்றான்.

சௌனகர் துரியோதனனிடம் “இவ்வழி அரசே” என்றார். அவன் மெல்லிய புன்னகை காட்டி தலைவணங்கி உள்ளே சென்று சால்வையை சீரமைத்தபடி திரும்பி கர்ணனை நோக்கினான். கர்ணன் அவனருகே சென்றான். “அங்கரே, என்னருகே இருங்கள்” என்றான் துரியோதனன். கர்ணன் “நான் அருகேதான் இருக்கிறேன்” என்றான். அவன் மேலே ஏதோ சொல்லப்போகிறவன் போல மெல்ல உதடசைத்தபின் திரும்பிக்கொண்டான். கர்ணன் திரும்பி துச்சாதனனை நோக்கினான். துச்சாதனன் ஒளியற்ற புன்னகை ஒன்றை காட்டினான். அவனருகே வந்துசேர்ந்த துச்சலன் “நான் கண்டவை என்னவென்றால்… மூத்தவரே…” எனத் தொடங்க துச்சாதனன் அவன் தோளைத் தொட்டு அடக்கினான். அவனுக்குப்பின்னால் வந்த துர்முகன் “நான் கண்டது மூத்தவர் பீமனை. அவர்…” என்றான். விழிகளால் அவனை அமைதியாக்கினான் துச்சலன்.

உண்டாட்டுக்கூடம் திறந்த முத்துச்சிப்பி போன்று நீள்வட்டவடிவில் விரிந்திருந்தது. ஒருகணத்திற்குப் பின்னர்தான் அங்கே தூண்களே இல்லை என்பதை கர்ணன் உணர்ந்தான். அக்கூடத்தின் சிப்பியமைப்பே கூரைவளைவை தாங்கும் வகையிலிருந்தது. பீமன் பெருந்தோள்களில் தசை அசைய கைவீசி அடுமனைப் பணியாளர்களுக்கு ஆணைகளிட்டுக் கொண்டிருந்தான். அர்ஜுனன் சல்யரை அணுகி தலைதாழ்த்தி ஏதோ சொல்ல அவர் தமகோஷரிடம் திரும்பி ஏதோ சொல்லிச் சிரித்தார். கர்ணன் விழிகளால் தேடி இளைய யாதவரை கண்டான். அவர் கைகளைக் கட்டியபடி பௌண்டரிக வாசுதேவனிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் சால்வை அருவியென வழிந்து நிலத்தில் கிடந்தது. பலராமர் சென்று பீமனிடம் ஏதோ கேட்க அவன் பணிவுடன் ஓரிரு சொற்களை சொன்னபின்னர் உள்ளே ஓடினான். தருமன் சென்று இளைய யாதவரிடம் ஒரு சொல் சொல்லிவிட்டு மூத்த யாதவரை நோக்கி சென்றான்.

அடுமனையாளர்கள் உணவுக்கலங்களை ஒருக்கும் ஓசைகள் ஏதும் கேட்கவில்லை. ஒலிகள் கட்டுப்படுத்தப்பட்டதனாலேயே அந்தக் கூடம் அச்சமூட்டும் பிறிதியல்பு ஒன்றை கொண்டிருந்தது. ஓளியும் அதேபோல கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை கர்ணன் உணர்ந்த கணமே ஜராசந்தன் “பந்தங்களே இல்லாது ஒளி. நிழல்களுமில்லை” என்றான். அறையின் விளிம்புகளுக்கு அப்பால் எங்கோ இருந்து வந்த சூரியஒளி வெண்பரப்புகள் வழியாகவே வழிந்து வந்து விழிகளை மட்டும் தெளியச்செய்தது. “பொருட்களின் அனைத்துப் பக்கங்களையும் சீராக ஒளிகொள்ளச் செய்துள்ளனர். எனவே எப்பொருளும் முழுப்புடன் இல்லை…” என்றான் ஜராசந்தன்.

“நிழல்கள் இல்லையேல் பொருட்கள் முழுப்பை இழந்துவிடும்” என்றான் பூரிசிரவஸ். “பொருளிழந்த சொற்களைப்போல” என்று ஜராசந்தன் சொன்னான். “பொருள் இருக்கிறதே” என்றான் ஜயத்ரதன். “பொருள் என்பது நாம் சிலவற்றை மறைப்பதன்மூலம் உருவாவது சைந்தவரே” என்றான் ஜராசந்தன். பேசிப்பேசி அவர்கள் அதை வகுத்துக்கொண்டிருந்தார்கள் என்று கர்ணன் நினைத்தான். அங்கிருந்த பொருட்கள் அனைத்துமே அந்த ஒளிப்பரப்பை திரையெனக்கொண்டு வரையப்பட்டவை போல தெரிவதை கர்ணன் உணர்ந்தான்.

மறுபக்கம் இருசேடியர் தொடர திரௌபதி உள்ளே வந்தாள். பாண்டவர்களின் அரசியரான சுபத்திரையும், பலந்தரையும், தேவிகையும், விஜயையும் அவளை நோக்கி சென்று முகமன் உரைத்தனர். அவளைத் தொடர்ந்து அவைக்கு வந்த துச்சளையுடன் கரேணுமதியும் திரௌபதியின் அணுக்கத்தோழியான மாயையும் வந்தனர். பேரரசி குந்தி அப்பால் நான்கு சேடியர் சூழ நின்றிருந்தாள். குருகுலத்து அரசி பானுமதியும் அசலையும் உள்ளே வந்தபோது குந்தி அருகே சென்று அவர்களை வரவேற்று கைகளைப்பற்றிக்கொண்டு முகமன் உரைத்தாள்.

மேலும் மேலுமென அரண்மனைப்பெண்கள் உள்ளே வந்துகொண்டிருந்தனர். துருபதனின் இளைய அரசி பிருஷதி வந்தாள். திருஷ்டத்யும்னன் எரியும் தழல்களால் சூழப்பட்டவனாக வாளுடன் பாய்ந்து செல்ல தலையற்ற உடல் ஒன்று அவனைத் தொடர்வதை மாயக்கூடத்தில் கண்டதை கர்ணன் நினைவுகூர்ந்தான். பெண்கள் அவைக்கூடத்தில் இருந்த ஒதுக்கம் இல்லாமல் இயல்பான விடுதலையுணர்வுடன் இருந்தனர். அங்கே ஆண்கள் கண்டு திகைக்கும் எவற்றையும் அவர்கள் அறியவே இல்லை என்பதைப்போல. அல்லது அந்த மாயத்தில் அவர்களும் கலந்து திளைப்பதுபோல.

நகுலன் துரியோதனனிடம் வந்து “உண்டாட்டு தொடங்கவுள்ளது அரசே” என்றான். “இக்கூடத்தின் பன்னிரு வாயில்களும் பன்னிரு உணவறைகளுக்கு திறக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருநாட்டு உணவு அமைக்கப்பட்டுள்ளது. விரும்பியவர்களுடன் விரும்பிய அறைக்குச் சென்று உணவுகொள்ளலாம்.” துரியோதனன் “நன்று” என்று சொன்னான். அவன் மேலுமொரு சொல்லைச் சொன்னதுபோல நகுலன் நோக்கியபின் கர்ணனை நோக்கி விழிதிருப்பி “நல்லுணவுகொள்க அங்கரே” என்றான். “ஆம், இது உணவுக்குரிய தருணம்” என்று கர்ணன் முகமன் உரைத்தான். துரியோதனன் மீசையை முறுக்கியபடி கூடத்தை சுற்றிநோக்கிவிட்டு நோக்கை விலக்கினான்.

அமைச்சர்கள் சௌனகரும் பிரமோதரும் கைகளை கூப்பி ஒவ்வொருவரையும் அணுகி அங்குள்ள உணவாடல்முறையை சொல்லிக்கொண்டிருந்தனர். ஓரமாக அமைந்த பீடங்களில் முதியவர்களை அமரச்செய்தனர். துரியோதனன் ஒருகணம் தயங்கி பின் கர்ணனை நோக்கி “இதை நான் கடந்துசெல்லவேண்டும் அங்கரே” என்றான். கர்ணன் எதை என்பதைப்போல நோக்கினான். “இத்தருணத்தை…” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “நான் என் அனைத்து உளவமுதையும் திரட்டிக்கொண்டு முன்னகர வேண்டும். இத்தருணத்தை கடந்துசென்றேன் என்றால் போதும்…”

கர்ணன் “அதன்மேல் அத்தனை எடையை ஏற்றவேண்டியதில்லை” என்றான். “இயல்பாக அது நிகழட்டும். அதைநோக்கி உங்களை உந்தாதீர்கள்.” துரியோதனன் “அங்கரே, நான் என்ன கண்டேன் என்று அறிவீர்களா?” என்றான். “அதை சொல்லவேண்டியதில்லை” என்றான் கர்ணன். “ஆம், சொல்லக்கூடாது. சொல்லவும் முடியாது” என்றான் துரியோதனன். மீண்டும் பெருமூச்சுவிட்டான். “அங்கரே, இத்தனை செறிவை நமக்குள் நிறைக்கும் தெய்வங்கள் எவை?” கர்ணன் புன்னகைத்தான். துரியோதனன் “ஆனால் அங்கே அவன் இல்லை. அதை நோக்கினீரா?” என்றான் துரியோதனன் மீண்டும். அச்சொல் கர்ணனை திடுக்கிடச்செய்தது. “அத்தனைபேரும் இருந்தனர். அனைவரும் உருகிக்கலந்த படிமச்சுழி. அங்கே அவன் இல்லை என்றால் எங்கிருந்தான்?” கர்ணன் “அவனுக்கு இந்த ஆடிமையத்தின் மாயம் தெரியும். கலிங்கச்சிற்பிகளை அமர்த்தியவனே அவன்தான். ஆடிகளின் முன்னாலிருந்து விலகியிருப்பான்” என்றான்.

திகைப்புடன் நோக்கி “எவரை சொல்கிறீர்?” என்றான் துரியோதனன். “இளைய யாதவனை” என்றான் கர்ணன். “நான் தருமனை சொன்னேன். ஆம், இளைய யாதவனும் படிமப்பெருக்கில் இல்லை. விந்தைதான்” என்றான் துரியோதனன். தரையை கூர்ந்து நோக்கி “இந்தத்தரை என்ன நீரால் ஆனது போல் தெரிகிறது?” என்றான். கர்ணன் குனிந்து நோக்கியபோது அவர்களின் நீர்ப்பாவைகள் தலைகீழாக நெளிந்தன. “ஆம், நீர்தான்” என்றான். அவர்கள் நோக்குவதைக் கண்ட ஜராசந்தன் சிரித்து “நானும் அவ்வண்ணமே எண்ணினேன் அங்கரே. இது நீரல்ல. மெருகேற்றப்பட்ட பளிங்குதான். நம் மேல் படும் ஒளியை நெளியச்செய்கிறார்கள். ஆகவே பாவைகளும் நெளிந்து நீரென காட்டுகின்றன” என்றான். ஜயத்ரதன் நோக்கியபின் “ஆம்” என்றான். மெல்ல காலெடுத்து வைத்து நடந்து சிரித்தபடி திரும்பி “அப்படியென்றால் நீரென்பது என்ன? ஒருவகை ஒளிமட்டும்தானா?” என்றான்.

ஜராசந்தன் “மெய்ப்பொருள் தேடுகிறீரா? நன்று. சொல்மயக்கால் விழிமயக்கை அள்ளுவது அது” என்றான். “எப்போதும் உங்களுக்கு மெய்ப்பொருள் மேல் ஓர் இளக்காரம்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான் அரசனானதும் முதலில் அஞ்சியது மெய்ப்பொருள்சூழ்கையைத்தான். அறிஞரவைகூட்டி அதை அமர்ந்து கற்றதும் அதை கடந்துசென்றேன். அது கான்களிறு, வென்று மத்தகத்தில் அமரவேண்டுமென எண்ணியிருந்தேன். அது நிழல்குவை என்று கண்டேன். விரல்களால் அதை அமைக்கும் கலையை நானும் கற்றேன்…” என்றபின் நகைத்து “மெய்ப்பொருள் என்பது அறத்தைச் சமைப்பதற்கான கலம். கலம் கைக்குவந்தபின் விரும்புவதை சமைக்கமுடியும்” என்றான்.

சூழ்ந்திருந்த சுவர்கள் எவற்றையும் எதிரொளிக்கவில்லை என்பதை கர்ணன் கண்டான். அங்கிருந்த நிழலின்மையே மேலும் மேலும் அமைதியிழக்கச் செய்கிறது என்று புரிந்தது. நிழல்கள் மறையவில்லை. ஒளிந்துகொண்டிருக்கின்றன. தொடுவானம் போல வளைந்த கூடத்தின் விளிம்புகளில் கொலைவாளின் கூர்மை. “இதற்குள் ஒரு போர் நடந்தால் நம்மையே நாம் அம்பு செலுத்தி கொன்றுவிடக்கூடும்” என்றான் ஜயத்ரதன். பீமன் வந்து ஜராசந்தனை வணங்கி “மகதரே, தங்களுக்கான உண்டாட்டுப் பீடம் அங்கே உள்ளது, வருக!” என்று அழைத்தான். ஜராசந்தன் “நான் இன்னும் உணவை தேர்ந்தெடுக்கவில்லையே” என்றான். “என் சுவையே உங்களுக்கும் இருக்கும் என நானே உய்த்துக்கொண்டேன்…” ஜராசந்தன் சிரித்து “ஆம், உண்மைதான்” என்றான். “அது தென்னகத்து நாகர்களின் சமையல். தீ தொட்ட வெற்று ஊன்… பசுங்குருதிச்சுவை கொண்டது.” ஜராசந்தன் பீமனின் தோளைத் தொட்டு “நன்று… நன்று” என்றான்.

துரியோதனன் அத்தருணத்தை பயன்படுத்திக் கொள்ளப்போகிறான் என கர்ணன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் அவர்களை நோக்கவில்லை. மகளிர்பகுதியை நோக்கி கைசுட்டி “அங்கரே, அவள் அணிந்திருப்பது தேவயானியின் மணிமுடி!” என்றான். அவன் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்து “ஆம்” என்றான் கர்ணன். “நான் சொன்னேனல்லவா? அரசர்களின் குடியவையில் அவள் அம்மணிமுடியை அணிந்துதான் வருவாள் என்று” என்றான். கர்ணன் தலையசைத்தான். அவள் அந்த மணிமுடியை எப்போது அணிந்தாள் என்று அவன் எண்ணம் ஓடியது. ஜராசந்தன் துரியோதனனிடம் “கௌரவரே, நாங்கள் பசுங்குருதிச் சுவைகொண்ட உணவை அருந்தப்போகிறோம். வருகிறீர்களா?” என்றான். “மல்லர்களுக்குரிய உணவு… திமிலெழுந்த வேசரநாட்டுக் காளை.”

துரியோதனன் “வந்துவிடுகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னபின் கர்ணன் கைகளைப்பற்றி “முறைப்படி அவளிடம் ஒரு முகமன் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றான். கர்ணனின் உள்ளம் ஏனோ படபடக்கத் தொடங்கியது. “அவளிடம் அம்மணிமுடி தனக்குரியவளை கண்டுகொண்டது என்று சொல்லப்போகிறேன். நான் அவளுக்கு அதை அளித்தேன் எனச் சொல்வதுதான் அது. அதை நான் சொல்லியாகவேண்டும்… இல்லையேல்…” என்று தயங்கினான். கர்ணன் “அரசியரிடம் நேரில் முகமன் சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றான். “நான் அவளுக்கு அயலோன் அல்ல. அவள் என் குலமகள்” என்றான் துரியோதனன்.

கர்ணன் மெல்லிய எரிச்சலுடன் “தாங்கள் அஸ்தினபுரியின் அரசர், இவர்களால் உபசரிக்கப்படவேண்டியவர்” என்றான். “இல்லை அங்கரே, அக்கணக்குகளுக்கு அப்பால் நான் சென்றுவிட்டேன். இன்று இது ஒரு குடிவிழாவாக ஆகிவிட்டது. மூத்தவனாக நான் நின்றிருக்க வேண்டிய இடம் பாண்டவர்களின் நடுவேதான்” என்றான் துரியோதனன். “இக்கணம், இதை நான் கடந்தாகவேண்டும்…”

கர்ணன் “அரசே…” என்று சொல்லவர அவனை கேளாதவன் போல “அவளிடம் என் அன்னையின் வாழ்த்தை தெரிவித்துவிட்டு வருகிறேன். யாதவப் பேரரசியையும் நான் வணங்கியாக வேண்டும்” என்றபடி அரசர்களின் நிரையிலிருந்து அரசியரின் நிரையை நோக்கி வெண்பளிங்குத் தரையில் காலெடுத்து வைத்து நடந்தான். இரண்டாவது காலடியில் அது நீர்ப்பரப்பென மாறி அவனை உள்ளிழுத்து சரித்தது. திகைப்பொலியுடன் அவன் நீரில் விழுந்து எழமுயல கால்சறுக்கி மீண்டும் விழுந்தான். மொத்த அவையும் அவ்வொலி கேட்டு திரும்பி நோக்கியது. தனித்தனியாக என்றில்லாமல் அக்கூடமே மெல்ல நகைத்தது. தன்னையறியாமல் “மூத்தவரே” என்றபடி பிடிக்கப்போன துச்சாதனன் கால்வைத்த நீர்ப்பரப்பு பளிங்கென இருக்க அவன் தடுமாறி துரியோதனன் மேலேயே விழுந்தான்.

அக்கணத்தில் உண்டாட்டுக்கூடமே பெருங்குரலில் சிரித்தது. துரியோதனனின் முகம் எதிர்பாராதபடி மூத்தவரால் அடிக்கப்பட்ட கைக்குழந்தையினுடையதுபோல கணக்காலத்தில் உறைந்து கர்ணனின் விழிகளில் நின்றது. அவன் நீரில் இறங்கி வெண்பளிங்கில் கால்வைத்து மீண்டும் நீரில் நடந்து துரியோதனனை தோள்பற்றி தூக்கினான். அவ்விசையில் திரும்பி அவன் திரௌபதியை விழிதொட்ட அதே கணத்தில் துரியோதனனும் அவளை பார்த்தான். விழிகள் நகைக்க இதழ்கள் ஏளனத்துடன் மெல்ல வளைய அவர்களை ஒருகணம் விழிதொட்டுவிட்டு அவள் திரும்பி விஜயையிடம் சொல்லிக்கொண்டிருந்த மொழியாடலை தொடர்ந்தாள்.

துச்சாதனனை பிறிதொரு கையால் தூக்கி இருவரையும் இரு கைகளில் ஏந்தியபடி நீரிலிருந்து மேலேற்றினான் கர்ணன். இருவரும் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட விலங்குகள்போல வெறும் எடைமட்டுமாக இருந்தனர். அந்த ஒற்றைக்கணம் அப்படியே நீடிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு விழியொளி அம்புமுனை போல. ஒரு சிரிப்பு அணையாத தீ போல. ஒரு காலத்துளி மலையுச்சிக்கூர் போல. சுருளவிழ்ந்து எழும் நாகம். கோட்டெயிற்று அம்பு கரந்த நச்சுத்துளி. இக்கணம். இக்கணம். இக்கணம்.

துரியோதனன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கால்கள் தரையில் இழுபட்டவை போல தளர்ந்து அடிவைத்தன. சிசுபாலன் கைதட்டி உரத்த குரலில் “அரசே, எண்ணி கால்வையுங்கள். அது தரையல்ல வானம்” என்றான். அறியாது துரியோதனன் தயங்க மீண்டும் உண்டாட்டவை வெடித்து நகைத்தது. துச்சாதனன் இடறிய குரலில் “நாம் சென்று விடுவோம் மூத்தவரே. இனி இங்கிருக்க என்னால் இயலாது” என்றான். “ஆம், சென்று விடுவோம்” என்றான் கர்ணன். துரியோதனன் சிறுவனைப்போல முனகினான். கர்ணன் விழிதிருப்பி நோக்க கனகர் அவர்களை நோக்கி ஓடி வந்தார். “அரசர்கள் ஆடை மாற்ற வேண்டும்” என்றான். “ஆம், ஆவன செய்கிறேன்” என்றார் கனகர்.

துச்சாதனன் தளர்ந்த குரலில் “என்ன இது மூத்தவரே?” என்றான். கர்ணன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவள் சுபத்திரையிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பெண்கள் எவரும் அவர்களை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் உடல் பார்த்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. “என்ன இது மூத்தவரே?” என்றான் துச்சாதனன் மீண்டும். அவையிலிருந்து விலகிய கௌரவர்கள் நிழல்களைப்போல அவர்களை நோக்கி வந்தனர். கர்ணன் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் விலக்கினான். அவர்கள் அனைவருமே திகைத்தவர்கள் போலிருந்தனர். மீண்டும் திரும்பி கர்ணன் விழிதுழாவி பீமனின் கண்களை கண்டடைந்தான். மறுகணம் அப்பால் அர்ஜுனனின் கண்களை சந்தித்தான். இரு நோக்குகளில் இருந்த பகைமையைக் கண்டு நெஞ்சதிர விழிவாங்கினான்.

துரியோதனன் “செல்வோம்” என முனகினான். கர்ணன் அவர்களை இரு தோள்களிலும் தாங்கியபடி கூடத்தைவிட்டு வெளியே செல்ல கனகர் முன்னால் ஓடினார். மூவர் ஆடைகளும் நீர் சொட்டி உடலில் ஒட்டி இழுபட்டு ஓசையிட்டன. துரியோதனன் தலைகுனிந்து முகத்தில் விழுந்து மறைத்த குழலுடன் நடந்தான். கூடத்தின் பக்கவாட்டு வாயிலை அவர்கள் கடந்ததும் குளிர்ந்த காற்று வந்து முகத்தை அறைந்ததுபோல் உணர்ந்தான். நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கினான். கனகர் ஓடிவந்து “தேர்கள் சித்தமாக உள்ளன அரசே” என்றார். “நாம் அரண்மனைக்குச் செல்கிறோம்” என்றான் கர்ணன்.

இடைநாழியை அடைந்ததும் துரியோதனன் விழப்போகிறவன் போல கால் தளர கதவை பற்றிக்கொண்டான். அவன் எதையும் நோக்கவில்லை என்று கர்ணன் எண்ணிய கணமே “அவர்களின் விழிகள்!” என்றான் துரியோதனன். நடுநடுங்கும் கைகளால் கர்ணனின் கைகளை பிடித்தபடி “என் அறை வரை என்னை தாங்கிச் செல்லுங்கள் அங்கரே. என்னால் நடக்க முடியாது, மீண்டும் விழுந்துவிடுவேன்” என்றான்.

முந்தைய கட்டுரைகோவை ரோட்டரி விருது விழா
அடுத்த கட்டுரைசைவம், நல்லுச்சாமிப்பிள்ளை- கடிதம்