ஏழாம் உலகம்- கடிதங்கள்

4

அன்புடன் ஆசிரியருக்கு

விடுப்பு முடிந்து செவ்வாய்க்கிழமை அலுவலகம் சென்றேன். அன்றிரவு ஏழாம் உலகம் படித்து முடித்திருந்தேன். முதன்முறையாக  பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்ததால் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கிறதென்றே நினைத்திருந்தேன். ஆனால் அது அப்படியல்ல என இப்போது புரிகிறது.

ஏழாம் உலகத்தை மிக விரைவாக படிக்க முடிந்தது. ‘நாரோயிலு’ மொழியும் நன்றாக பழகிவிட்டது. முத்தம்மை அறிமுகமாகும் இடமே மனதை அறைந்துவிட்டது. அப்போதே ஏழாம் உலகம் என்னை வெளியே தூக்கி எறிந்துவிட்டதோ எனப் பயந்தேன். ஆனால் மெல்ல மெல்ல என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

பின்பு படிக்கட்டுகளில் உட்கார்ந்து ராமப்பனுடனும் குய்யனுடனும் எருக்குவுடனும் ரஜனிகாந்துடனும் நானும் சிரித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு குற்றவுணர்வு அல்லது ஆறுதல் அவர்களின் வலி எதுவும் எனக்கு கிடையாது என்பதே.

குருவி ராமப்பனை கட்டிக் கொண்டு அழுகையில் விக்கித்துப் போய்விட்டேன். குழந்தையை தொடாமலேயே பிரியும் தொரப்பன், ‘ஒத்த வெரலு’ எனக் கதறும் முத்தம்மை, மலவண்டியில் முறிந்து கிடக்கும் எருக்கு என நெஞ்சை அடைக்க வைத்துவிட்டது ஏழாம் உலகம்.

போத்திவேலுவுக்கு பனிவிழும் மலர் வனம் நினைவிலெழுவது முதல் ஒரு சித்தரிப்பு கூட அடர்வு குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் இந்த ஏழாம் உலகம் தான் உறைந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஒவ்வொரு அத்தியாயமும் நுணுக்கமாக விதைத்துவிட்டு முன் சென்று விடுகிறது. இப்போது பகிர்ந்ததனால் சற்று ஆறுதலடைகிறேன்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள ஜெ

ஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். மனிதவாழ்க்கையின் கீழ்மையின் எல்லையைச் சொல்லும் நாவல் என்ற மனச்சித்திரம் எனக்கு அதை வாசிக்கும் முன்னால் இருந்தது. வாசித்து முடித்தபோது அது பேசுவதெல்லாம் மனித மகத்துவத்தைத்தான் என்று தோன்றத்தொடங்கியது

எப்படி இருந்தாலும் மனிதன் மிருகமாக ஆவதில்லை என்பதைத்தான் ஏழாம் உலகம் காட்டுகிறது. கருணை, அறம் எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. மிருகங்களாக நடத்தும் சமூகத்திற்கு எதிராக தங்கள் அன்பாலும் கருணையாலும் அவர்கள் கலகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

போத்திவேலுப்பண்டாரம் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதை உணர்ந்து அந்த உருப்படிகள் கொள்ளும் மௌனம் மனதை தாக்கியது. அது அவர்களை மிருகங்களாக நினைக்கும் சமூகத்தை அவர்கள் மிக அருகே காணும் காட்சி, அந்த அவமதிப்புக்கு அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். குய்யனுக்கு விருந்து கொடுப்பதன் வழியாக

குய்யன் புன்னகைத்தான் என்று முடியும் ஏழாம் உலகம் நாவல் சொல்லும் தரிசனமே இதுதான்

சிவராஜ் எஸ்

***

ஏழாம் உலகம் அனைத்து விமர்சனங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75
அடுத்த கட்டுரைகோவை ரோட்டரி விருது விழா