மும்பை கேட்வே இலக்கிய விழா

 

1

லீனா மணிமேகலை

மும்பையில் சில மலையாள இதழாளர்களின் முன்னெடுப்பில் கேட்வே லிட் ஃபெஸ்ட் என்னும் இலக்கியவிழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. சென்ற ஆண்டே என்னை அழைத்திருந்தனர். நான் தவிர்த்துவிட்டேன். இந்த ஆண்டு அருண்மொழியை அழைத்துக்கொண்டு சும்மா ஒரு மும்பைப் பயணமாகச் சென்றுவரலாமே என எண்ணி ஒப்புக்கொண்டேன்

ஆனால் அதே நாளில் கோவை ரோட்டரி சங்க நிகழ்ச்சிக்கும் நாள் கொடுத்திருந்தேன். கடைசிநாளில் அது தெரியவர ஒரே திகைப்பு, குழப்பம். ஒருவழியாக பயணச்சீட்டை மாற்றிக்கொண்டு கோவை நிகழ்ச்சியை முடித்தபின் காரில் விரைந்து இரவு பத்துமணிக்கு விமானத்தில் ஏறி சென்னை விமானநிலையத்தில் இரவெல்லாம் தூங்காது இருந்து மறுநாள் காலை நான்கரை மணிக்குச் சென்று சேர்ந்தேன்.

வெள்ளையர் காலத்து ஸ்டார் ஓட்டலான கிராண்ட் ஓட்டலில் அறை. எனக்கு முன்னரே மதுபால், லீனா மணிமேகலை ஆகியோர் அங்கே வந்து தங்கியிருந்தனர். பழமையும் கம்பீரமும் கொண்ட அழகிய விடுதி. ஒன்பது மணிவரை தூங்கிவிட்டு கீழே வந்தேன். லீனாவைப் பார்த்தேன். காலையுணவு தீர்ந்திருந்தது. இன்னொரு இதழாளருடன் அருகே ஒரு சிறிய விடுதிக்குச் சென்று சான்விச் சாப்பிட்டுவிட்டு அரங்குக்குச் சென்றேன். டாடா கலையரங்கம்.

2

பொதுவாக இத்தகைய இலக்கியவிழாக்களை நான் தவிர்த்துவிடுவேன். இவற்றில் நான் செய்வதற்கொன்றும் இல்லை. இந்திய அளவில் பெரும்பாலும் முப்பதுக்கும் குறைவான அறிவுஜீவிகள் தான் திரும்பத்திரும்ப அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்வார்கள். அவர்கள் இருவகை, இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் இந்திய இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் பேராசிரியர்கள். வேறு எவர் குரலும் ஒலிக்காது, ஒலிக்க அங்குள்ள அமைப்பு இடம் அளிக்காது.

1993ல் நான் கடைசியாகப் பங்குகொண்ட இந்திய இலக்கிய விழா ஒன்றில் ஓங்கி ஒலித்த அத்தனைபேரும் அப்படியே வரிசை கூட மாறாமல் அதன்பின் வந்த அத்தனை விழாக்களிலும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.சீதாகாந்த் மகாபாத்ரா , கணேஷ் டெவி, மகரந்த் பரஞ்ச்பே, கெ.சச்சிதானந்தன் என்று போகும் இந்த வரிசை. அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நாமே சொல்லிவிடமுடியும்.

ஆங்கிலநாளிதழ்களின் ஞாயிறுமலர், இலக்கியமலர் பக்கங்களில் அரைப்பக்கக் கட்டுரைகளை இவர்களே எழுதுவார்கள். இலக்கிய உலகின் பெருவழியில் காணக்கிடைக்கும் பொதுவான கருத்துக்களை மிகத்தீவிரமான பாவனைகளுடன், உரிய தேய்வழக்குகளுடன், வேகமான பேராசிரிய ஆங்கிலத்தில் சொல்வார்கள். பேராசிரிய நகைச்சுவைகள். இந்திய உயர்குடி ஆங்கிலப்பேச்சுக் கனவான்களுக்கே உரிய நோகாத முற்போக்கு. அரசுக்கு அணுக்கமாக இருந்தபடியே அரசின்மைவாதமோ அதிமுற்போக்கோ பேசுவது. இந்தப்பாவனைகளெல்லாம் தொண்ணூறுகளிலேயே எனக்குச் சலித்துவிட்டன.

3

கேட்வே இலக்கியவிழாவை நான் ஒப்புக்கொள்ள இன்னொரு காரணம், இந்திய அளவில் பிராந்தியமொழி இலக்கியங்களுக்காக நிகழும் ஒரே இலக்கியவிழா இதுதான் என்பதே. பிற இலக்கியவிழாக்கள் அனைத்துமே உண்மையில் இந்திய ஆங்கிலத்துக்காக நிகழ்த்தப்படுபவை. நிதியாதாரம் அவற்றுக்கே. வாசகர் வரவேற்பும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கே. வட்டார இலக்கியமேதைகள் எல்லாம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குரிய பவ்யத்துடன் கூசிச்சிறுத்து ஓரமாக அமர்ந்து தலையாட்டி, புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

எந்த இந்திய இலக்கியமேதையும் இந்திய இலக்கிய அரங்குகளில் தனித்துக் கௌரவிக்கப்படுவதில்லை. ஆனால் இந்திய ஆங்கிலத்தில் ஒர் அசட்டுநாவல் எழுதியவர் வருகையில் அமைப்பாளர்களே வாசல்நோக்கிப் பாய்வார்கள். எந்த இந்திய இலக்கியமேதையின் பேச்சும் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை. ஆங்கிலம் பேசத்தெரிவது அன்றி வேறேதும் தகுதியாகக் கொள்ளப்படுவதில்லை. உண்மையான இந்திய இலக்கியமேதை இந்த மேலோட்டமான வரவேற்பறை ஆங்கிலத்திற்கு மிகமிகத்தொலைவானவராகவே இருப்பார்.

5

துரதிருஷ்டவசமாக கேட்வே இலக்கியவிழா நிகழ்ச்சியும் அப்படித்தான் இருந்தது. ஒருமணிநேரம் ஓரு மட்டுறுத்துநர் நடுவே அமர்ந்து வழிநடத்த ஒரு பொதுத்தலைப்பில் விவாதம். அமர்ந்திருப்பவரிடம் மைக்கை நீட்டி கருத்துக்களைக் கேட்பார். பதில் சொன்னதும் மைக் சென்றுவிடும். பெரும்பாலான நேரம் மட்டுறுத்துநரே பேசினார். கேள்விநேரத்தில் சீதாகாந்த் மகாபாத்ரா, பிரதிபா ராய் போன்ற வழக்கமான குரலோர் எழுந்து நீண்ட உரைகளை ஆற்றினர். பெரும்பாலும் தங்கள் சொந்தப்பங்களிப்புகளைப்பற்றி. எந்த அரங்கிலும் எந்த விவாதமும் எவ்வகையிலும் குறிப்பிடத்தக்கதாகப் படவில்லை.

நான் இரு அரங்குகளில் கலந்துகொள்வதாக இருந்தது. இரண்டையும் ஒரேநாளில் மாற்றினர். புராணங்களை மறுஆக்கம் செய்வதைப்பற்றிய அரங்கில் என் வழக்கமான கருத்துக்களைச் சொன்னேன். புராணங்களில் வில்லனை கதாநாயகனாக்குவது போன்றவை வெறும் உத்திகள். புராணங்களே அவற்றுக்கெல்லாம் முழுமையாக இடம் கொடுத்தே எழுதப்பட்டுள்ளன. புராணங்களை அரசியல்விளக்கமளித்து எழுதுவதும் என்னைப்பொறுத்தவரை மேலோட்டமானதுதான். அவை ஆழ்படிமங்களை சமூகமனதில் நிறுவுகின்றன. கவித்துவமான படிமங்களை ஒரு சமானமான மொழியாகவே ஆக்கித்தருகின்றன. அவற்றைக்கொண்டு ஆன்மிகமான, தத்துவார்த்தமான தேடல்களை அவை நிகழ்த்துகின்றன. அந்தத் தளத்திற்குச் சென்று அவ்வுரையாடலை முன்னெடுக்கவேண்டும் என்றேன்

என் கருத்து பெரும்பாலும் எவருக்கும் பெரிதாக புரியவில்லை, எவரும் ஆதரிக்கவும் இல்லை. நான் என் கருத்தை எழுதிக்கொண்டு சென்றிருந்தேன். வாசித்துவிடலாமென நினைத்தேன். அது நடக்கவில்லை. ஆகவே நேரடியாகவே பேசினேன். ஆங்கிலத்தில் பேசுவது மிகமிகக் கடினமாக இருந்தது. வாயில் ஆங்கிலம் வரும் வாழ்க்கையே எனக்கில்லை.

6[புகைப்படம் எடுத்த நண்பர் ஹரி ]

இன்னொரு எழுத்தாளரான ஆனந்த் நீலகண்டன் [அசுரா போன்ற நூல்களின் ஆசிரியர்] என்னை மறுத்து நாவல்களை எந்த அளவுக்கு மக்கள் வாசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் அதைக்கொண்டே அவற்றை மதிப்பிடவேண்டும் என்றும் வாதிட்டார். வழக்கமாகச் சொல்லப்படும் ஷேக்ஸ்பியரே வெகுஜன எழுத்தாளர்தான் காளிதாசனே பிரபலக்கவிஞர்தான் என்ற வாதங்களை விரிவாக முன்வைத்தார். நான் சுருக்கமாக அவற்றை மறுத்து எந்த வாசகருக்காக எழுதப்படுகிறது என்பது படைப்பின் தரத்துக்கான அளவுகோலாக இருக்கும்வரை வெகுஜன எழுத்துக்கு இலக்கியத்தரம் கைகூடாது என்றேன்.

பிரதிபா ராய் கேள்விநேரத்தில் அவர் எழுதிய திரௌபதி போன்ற நாவல்களை விரிவாக முன்வைத்துப்பேசினார். நான் அவரது நாவல்களை வாசித்திருக்கிறேன். மிக எளிய பெண்ணிய அரசியலை திரௌபதியின் வாயில் திணித்து எழுதப்பட்ட படைப்பு திரௌபதி. பிரதிபா ராய் ஞானபீடப்பரிசு பெற்றவர். ஒவ்வொருமுறையும் ‘அந்த விருது பெற்ற ஒரே பெண் நான். ஆனால் நான் என்னை பெண் என்று முன்வைப்பதில்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.நான் அவரது எழுத்தைத்தான் நிராகரித்தேன் என்றுகூட அவர் கவனிக்கவில்லை.

இன்னொரு அரங்கில் இந்திய இலக்கியம் வாழ என்ன செய்யவேண்டும் என்று விவாதம். நேரமில்லை. நான் சுருக்கமாக “ஆதான் பிரதான் போன்ற மொழியாக்க செயல்திட்டங்கள் அருகிவிட்டன. இந்திய மொழியிலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதற்கான நிதியையே மத்திய அரசு வெகுவாகக்குறைத்துவிட்டது. இந்தியாவின் தரமான இலக்கியங்கள் நிறுவன ஆதரவு இல்லாமல் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை” என்றேன். இந்தியமொழிகளில் மொழியாக்கம் மிக அதிகமாக நிகழ்கிறது, அமிஷ் திரிபாதியின் நாவல்கள் இந்தியா முழுக்கக்கிடைக்கின்றன என்றார் ஒருவர்.

1

அன்று மாலை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த குடிச்சந்திப்புக்கு நான் செல்லவில்லை. அமைப்பாளர் மோகன் காக்கநாடனுடன் பேசிக்கொண்டிருந்தபோது என் மனப்பதிவைச் சொன்னேன். நேற்று நான் வராத அரங்குகளில் இன்னின்னார் இன்னின்னதைத்தானே பேசினார்கள் என்று சொல்லி சச்சிதானந்தன் பேசிய குரலிலேயே பேசிக்காட்டினேன். சிரித்துவிட்டார்

“உண்மையிலேயே வட்டார இலக்கியங்களைப்பற்றி பேசவேண்டும் என்றால் அடுத்தமுறை மொழிக்கு ஒருவர் என வட்டார இலக்கியத்தில் சாதனை படைத்த பத்து பேரை அழையுங்கள், அவர்களை அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம்செய்யுங்கள் , ஒருவருக்கு ஒரு அமர்வு என பத்து அரங்குகளை நடத்துங்கள்” என்றேன். “அப்படி பத்துவருடங்களில் நூறு இந்திய எழுத்தாளர்களை இந்திய அளவில் அறிமுகம்செய்தால் அது ஒரு வரலாற்றுப்பங்களிப்பாக அமையும்”

IMG_1029

“இந்த ஆங்கிலம்பேசும் பேராசிரியர்களை அந்த இலக்கியப்படைப்பாளிகளைப்பற்றி பேசச்சொல்லுங்கள். உலகமெங்கும் பேராசிரியர்கள் செய்வது அதைத்தான். இங்கேதான் இவர்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இலக்கியவாதிகள் பேசுவதை இவர்கள் மொழியாக்கம் செய்யட்டும்” என்றேன். “முதல் அழைப்பாக தமிழில் இருந்து கி.ராஜநாராயணனை அழையுங்கள். ஒரு மலையாளியாக நீங்களே அறிவீர்கள். சச்சிதானந்தன் எவ்வளவு பெரிய சலிப்பு என்று. அக்கித்தம் நம்பூதிரிப்பாடோ ஆற்றூர் ரவிவர்மாவோ வந்து பேசவேண்டிய மேடையில் சச்சிதானந்தன் முப்பது வருடமாக அமர்ந்திருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். நூறு சச்சிதானந்தன்களால் ஆனதாக உள்ளது நம் இந்திய அளவிலான இலக்கிய மேடை. அதை மாற்றுங்கள்”

மோகன் காக்கநாடன் “முயல்கிறோம்” என்றார். அவரால் முடியுமா எனத்தெரியவில்லை. அறைக்குச் சென்று தூங்கிவிட்டேன். மறுநாள் காலை பத்துமணிக்கு எனக்குச் சென்னைக்கு விமானம். இருபத்துமூன்றாம்தேதி அங்கிருந்து சினிமாப்பயணம்.

 

மும்பையில் ஒரு சந்திப்பு – மோகன் ஜி

 

முந்தைய கட்டுரைசைவம், நல்லுச்சாமிப்பிள்ளை- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77