செட்டிநாட்டு மாமியார் மான்மியம்
செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?
செட்டிநாட்டு மருமகள் வாக்கு
கண்ணதாசன்
அவ கெடக்கா சூப்பனகை
அவ மொகத்தே யாரு பாத்தா?
அவுக மொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன் நான்
பத்து வராகன்
பணங்கொடுத்தார் எங்களய்யா
எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?
ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா
சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?
கப்பலிலே ஏத்திவச்சா
கப்பல் முழுகிவிடும்
அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை
மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு
ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணு விடாமவச்சு
நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு
பாயும் தலையணையும்
பலவகையா கட்டிவச்சு
ஆளு வீடடங்காத
அழகான பீரோவும்
கண்ணாடிச் சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்
அம்மிகுழவி
ஆட்டுக்கல் அத்தனையும்
கட்டிகொடுத்து
என்னை கட்டிக்கொடுத்தாக
வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்
சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக
தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு
முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல
எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக
ஒருவேளை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்
மாமியார் இண்ணு சொல்லி
மாரடிச்சு என்னபண்ண?
கல்யாணியாச்சியும்தான்
கட்டிவிட்டா தன் மகளை
ஒருபொட்டுதாலி
ஒருவேளைச் சாப்பாடு
அதுமாதிரி இவளும்
அடைஞ்சிருக்க வேணுமடி
சம்பந்தம் பண்ணவந்தா
சண்டாளி சூப்பநகை
வேறேவைக்க நாதியில்லை
வீடில்லை வாசலில்லை
சோறுவைக்க பானையில்லை
சொத்துமில்லை பத்துமில்லை
புள்ளைதான் பெத்துவச்சா
பெண்ணோடு சோறு வர
தலைகாணிமந்திரமாம்
சங்கதிய கேளுங்கடி
பெண்டாட்டி சொல்கேக்க
புத்தியில்லா ஆம்பிளையா?
வீட்டு மருமகளா
வெளக்கேத்த வந்தவளை
சக்களத்தி போல நெனைச்சு
சதிராடுகின்றாளே
எங்களுக்கும் அண்ணந்தம்பி
ஏழுபேரு இருக்காக
அவுகளுக்கு பெண்ணாட்டி
அணியணியா வந்தாக
எங்காத்தா ஒருவார்த்தை
எடுத்தெறிஞ்சு பேசவில்லை
என்னைப்போல் பெண்ணாக
எண்ணி நடந்தாக
சனியம் புடிச்ச
என் தலையில்வந்து உக்காந்தா
மாமியார்க்கரியின்னா
மனசிரக்கம் கூடாதா
சாமியாரா ஆக
தன்மகனை விட்டிருந்தா
நாம ஏன் இங்கவந்து
நாத்தசோறுங்கோணும்?
அவுகளுக்கு நாஞ்சொல்லி
அலுப்பா அலுத்துவிட்டேன்
செவிடா இருக்காக்
சேதிசொல்ல எண்ணமில்லே
பட்டதெல்லாம் போதும்
பகவானே இங்கவந்து!
சட்டியிலே பொட்டு
தாளிச்சு கொட்டிவிட்டா
வட்டியிலே போட்டு
ஒரு வாய்ச்சோறு வைக்கையிலே
கொட்டுகிறா கொட்டு
தேள்கூட கொட்டாது
அவளுக்கழுவேனா
அன்னாடம் புள்ளைகொண்ட
சீக்குக்கு அழுவேனா
தினமும் கவலையடி
கோட்டையூர் அம்மந்தான்
கூலிகொடுக்கோணும்
பொன்னரசி மலையரசி
பு த்தி புகட்டோணும்
எங்க சொகங்கண்டேன்
இங்குவந்த நாள்முதலா?
கடவுளுக்கு கண்ணிருந்தா
காட்டுவான் கண்ணெதிரே
வத்தக்குழம்பு
வறுத்துவச்ச மொளகாயும்
பத்தியம்போல் சாப்பிடத்தான்
பாவி இவ வீடுவந்தேன்
தம்பி மகளை எண்ணி
தாளமில்லே கொட்டுறா
நம்பி அவளும்வந்தா
நாயாப்போயிருப்பா
கும்பி கருகி
குடல்கருகி நின்னிருப்பா
வெம்பி வெதும்பி
வெளக்குமாறாயிருப்பா
தம்பி மகளாம்
தம்பிமக தெரியாதா?
நாமா இருந்தமட்டும்
நாலுழக்கு பாலூத்தி
தேனா கொடுத்து இவள
திமிர்புடிக்க வச்சிருக்கேன்
போனாபோகட்டுமிண்ணு
பொறுத்து கெடந்தாக்க
தானான கொட்டுகிறா
தடம்புரண்டு ஆடுகிறா
அவதலைய போட்டாத்தான்
ஆத்தா எனக்கு சொகம்
எப்பவருவானோ
எடுத்துக்கினு போவானோ
இப்பவா சாவா?
இழுத்து வலியெடுத்து
கெடையாகெடந்து
கிறுக்கு புடிக்காமே
சாகவே மட்டா
சத்தியமா நான் சொல்றேன்
எங்க கொலதெய்வம்
இருந்தா பழிவாங்கும்
பங்காளி மக்களெல்லாம்
பாக்க பழிவாங்கும்
படுத்துனா மருமகள
படுத்துட்டா இண்ணு சொல்லி
நடுத்தெருவில் நிண்ணு
நாலுபேர் சிரிப்பாக
பாக்கத்தான் போறேண்டி
பாக்கத்தான்போறேன்நான்
ஒருத்தனுக்கு முந்தானை
ஒழுங்காநான் போட்டிருந்தா
இருக்கிற தெய்வமெல்லாம்
எனக்காக கேக்கோணும்
அவகெடக்கா சூப்பநகை
அவமொகத்த யார்பாத்தா?
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Oct 9, 2010