கோவை ரோட்டரி விருது விழா

 

1

என் நண்பரும் விஷ்ணுபுரம் அமைப்பின் நலம்நாடிகளில் ஒருவருமான திரு.நடராஜன் அவர்கள் கோவை ரோட்டரி அமைப்பு வழங்கும் துறைமேன்மைக்கான விருதை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார். ஒரு அறிவிப்பும் கௌரவமும் மட்டும்தான். நான் பொதுவாக இத்தகைய மன்றங்களில் ஆர்வமில்லாதவன். இதுவரை எந்த மன்றத்தின் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்ததில்லை, இனி பங்கெடுப்பதாகவும் இல்லை.

ஆனால் இவ்வமைப்பின் முன்னணிப்பொறுப்பாளர்கள் வெண்முரசின் தீவிர வாசகர்கள். அவர்களைச் சந்தித்தபோது அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு அவர்களால் கௌரவிக்கப்படுவது மதிப்புக்குரியது என்னும் எண்ணம் ஏற்பட்டது

2

சென்ற பெப்ருவரி 20 அன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். அங்கே கோவையின் பழமையான காஸ்மாபாலிட்டன் கிளப்பில் எனக்கு அறைபோடப்பட்டிருந்தது. நண்பர்கள் அங்கே வந்தனர். இருபதுபேர் அமர்ந்து பேசவும், மதியம் சாப்பிடவும் ஏற்பாடு செய்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தோம். வழக்கம்போல இலக்கியம் அரசியல் வேடிக்கைகள். கோவையின் அவை ஒருவகை நிரந்தர அமைப்பாகவே ஆகிக்கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியை ஒட்டி என்னைப்பற்றி ஓர் ஆவணப்படம் தயாரிக்கவேண்டும் என ரோட்டரி அமைப்பு கேட்டுக்கொண்டது. நண்பர்கள் எடுப்பதாகத் திட்டமிட்டு தள்ளிப்போக கடைசியில் அஜிதனே ஒன்றை எடுத்தான். அவனுடைய காமிரா மட்டுமே கருவி. இயற்கை ஒளி. பிரதிபலிப்பான் கூட இல்லை. ஒலிப்பதிவுக் கருவிகள் இல்லை. உதவியாளர்களும் இல்லை. அவனே எடிட் செய்தான். நிறைய எடுத்து எடிட் செய்து உருவாக்கும் பாணி அவனுடையது

3

அதனால் ஒரு நன்மை, நான் படப்பிடிப்பை உணரவில்லை. நிறைய இடங்கள் என்னையறியாமல் படம்பிடிக்கப்பட்டவை. இன்னொருவர் இருந்தால் வரக்கூடிய தயக்கம், கவனம் இல்லாமல் உணர்ச்சிகள் நேரடியாக இருந்தன. 40 நிமிட ஆவணப்படத்தில் 15 நிமிடம் வெட்டிச்சுருக்கப்பட்டு அன்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட்டது. ‘ஜெயமோகன்- நீர் நிலம் நெருப்பு’ பரவலாக நண்பர்களால் விரும்பப்பட்ட படமாக அமைந்தது.

மருத்துவர் கு.சிவராமன் சென்னையிலிருந்து வந்தார். அவர்தான் தலைமை விருந்தினர். நான் அவரது கட்டுரைகளை வாசித்ததுண்டு. நேரில் சந்தித்தது அப்போதுதான். நடராஜனுக்கு அவர் நல்ல நண்பர். தொடர்ச்சியாக அவரைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டே இருப்பவர் நடராஜன்தான்

5

சிவராமன் சித்தமருத்துவத்தில் ஆய்வுசெய்கிறார். இயற்கை உணவு, இயற்கை வாழ்க்கை குறித்த பிரக்ஞையை உருவாக்கும்பொருட்டு களப்பணியாற்றுகிறார். இன்று தமிழகத்தில் அதிகமாக அறியப்படும் ஆளுமையாக அந்தத்தளத்தில் திகழ்கிறார்

அவரிடம் தனியாகப்பேசிக்கொண்டிருந்தேன். சூழியல் செயல்பாடுகள் தமிழகத்தில் தொடங்கிய எண்பதுகள் முதல் அதில் ஈடுபாடும் சிறுபங்களிப்பும் எனக்குண்டு. என் அவதானிப்பு ஒன்றைச் சொன்னேன். அதை நம்மாழ்வாரை முன்வைத்தே பேசமுடிந்தது. ஓர் அறிவியலாளராக மாற்று அறிவியலை முன்வைத்துப் பேச ஆரம்பித்த நம்மாழ்வார் எளிய வசைபாடிச்சித்தராக தன்னை எப்படி மாற்றிக்கொண்டார் என்று

1

சூழியல், இயற்கைவாழ்க்கை சார்ந்த கருத்துக்களை உள்ளிருந்தே தோற்கடிப்பதற்கான வழி என்பது எதிர்தரப்பை ஒருவகை உலகளாவிய சதி என்று சித்தரிப்பது. முதலாளித்துவச் சமூகத்தை, நுகர்வுப்பொருளியலை, அலோபதி மருத்துவத்தை எல்லாம் வெறும் சதிகள் என்று சொல்வது பாமரர் மத்தியில் தற்காலிகப்பரபரப்பை அளிக்கும். ஆனால் அதை இளையோர் நம்பமாட்டார்கள். அந்த முக்கியமான தரப்பு அர்த்தமிழந்து அழியும்.

சூழியல் போராட்டங்களுக்கு தெருமுனை அரசியலில் இருந்து ஆட்கள் வரத்தொடங்கியதும் இங்கு நிகழ்ந்தது அதுதான். அவர்கள் வெறுப்பின், கசப்பின் மொழியை மட்டுமே அறிந்தவர்கள். வசைபாடிகள். அவர்கள் சூழியலை , இயற்கைவாழ்க்கைக்கான அழைப்பை ஒரு வசையாடலாக இங்கே மாற்றியிருக்கிறார்கள். அதிலிருந்த நேர்நிலை எண்ணத்தை, உயர்வுதேடும் மனநிலையை அழித்து மனச்சோர்வளிக்கும் காழ்ப்புவெளியாக அதை மாற்றினார்கள். அவர்களுக்கு வசைபாட ஏதேனும் ஒரு காரணம் வேண்டும், அவ்வளவுதான்

DSC_0095(1)

முதலாளித்துவமும், நுகர்வியமும், அலோபதியும் எல்லாம் இந்த மூன்று நூற்றாண்டுகள் மெல்லமெல்ல உருவாக்கி எடுத்த அமைப்புகள். பலநூறு ஞானியரின் மேதையரின் பங்களிப்புள்ளவை. மானுடத்திற்கு பெரும்சேவை செய்தவை. அவற்றிலிருக்கும் குறைகளை களைந்து மேலே செல்லலாம். மாற்றுவழிகளை முன்வைக்கலாம். முழுமையாகவே மாற்று வாழ்க்கையைக்கூட முன்வைக்கலாம். அதற்குரிய வழி என்பது அந்த மாற்றுவழியை அதேயளவுக்கு அறிவுபூர்வமாக முன்வைப்பது. அதைவிட அறிவியல்ரீதியானது என நிறுவுவது. எளியசதிக்கோட்பாடுகள் அதற்கு உதவாது.

மாலையில் நாஞ்சில்நாடன் வந்திருந்தார். அனைவருமாக நிகழ்ச்சி நடந்த இந்திய வர்த்தக சபைக்குச் சென்றோம். நிகழ்ச்சி ஆறுமணிக்குத் தொடங்கியது. முதலில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.சௌந்தர ராஜன் வரவேற்புரை வழங்கினார்.தலைவர் ஆர். செல்வராஜ் விருது குறித்த அறிமுகத்தை வழங்கினார். செயலாளர் பாலசுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். கு.சிவராமன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். சூழியல் சார்ந்த வாழ்க்கை குறித்த பார்வையுடன் என் எழுத்துக்களை நோக்கி வந்ததை விவரித்தார்.

நான் ஏற்புரை வழங்கினேன். மகாபாரதத்தில் இருந்து தொடங்கி ‘ஷாத்ரகுணம்’ என்னும் ‘பிறிதொன்று எண்ணாத தீவிரம்’ எப்படி எல்லா படைப்பூக்கநிலைகளுக்கும் ஆதாரமானதாக விளங்குகிறது என்று சொன்னேன். எட்டரை மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது. அதன்பின் சிற்றுண்டி

அரங்கில் வானவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் போன்று நான் மதிக்கும் பலர் இருந்தனர். நான் அவசரமாக மும்பை கிளம்பவேண்டியிருந்தமையால் உடனே விமான நிலையத்திற்கு ஓடினேன். அனைவரிடமும் தனித்தனியாக விடைபெறவும் முடியவில்லை. நிறைவான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. கோவையை மேலும் அணுக்கமானதாக ஆக்கும் பிறிதொருநாள்

 

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76