ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8

1

 

வணக்கம் ஜெமோ சார்,

உங்களுடனான ஊட்டி சந்திப்பு நிச்சயம் இந்த 30 வயதில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது என்பதிலும் , வரபோகும் நாட்களை எப்படி ஒரு தீர்க்கமான பார்வையுடனும் , தெளிவுடனும்  வாழவேண்டிய மனிதனாக இருப்பதற்கும் பெருமுதவி புரியும் என்பதில்  துளியும் சந்தேகம் இல்லை. வாழ்கையில் முதன்முதலாக எனக்கு மனம் என்ற ஓன்று இருப்பதை அறிந்த நாள்முதல் இந்த சந்திப்பு நாள் வரை நிச்சயம் சொல்லமுடியும் எனது மனம்,உடம்பு,கண்,காது என அனைத்து பாகமும் விழிப்பு நிலையில் தொடர்ந்து நாற்பது மணிநேரத்திற்கும் மேலாக  ஒரே சிந்தனையில் இருந்தது இப்போது தான் . எனக்கே ஒரு பேரதிர்ச்சி தான் இது.

இரண்டாவது நாள் கிளம்ப தயாராய் உங்களிடம் விடைப்பெற வந்தபோது நீங்கள் “ நீங்க நிறைய கேள்வி கேட்கவில்லையே” என்று என்னிடம் கேட்டபோது ஒரு நிமிடம் பரவசம் தான் வந்தது. முதல் காரணம் நான் உங்களுடன் இருந்த நீண்டநேரம் இந்த இரு  நாட்கள் தான். நான் வந்ததும் உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் உள்ளத்தில் பதித்து கொள்ளத்தான். நிச்சயம் எனது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை கேட்டு உங்களுக்கு தடங்கல் அல்லது கோபத்தை வரவழைக்க விரும்பவில்லை. இரண்டாவது காரணம் முதல் நாள் காலை சுவாமிஜியின் பேச்சு முடிந்த உடனே நீங்கள் பேச தொடங்கிய விஷயங்கள். நீங்கள் பேச நினைத்ததை எந்நிலையிலும் சீராக பேசிக்கொண்டே சென்றதோடு மட்டுமில்லாமல் கேள்விகள் இல்லாமலேயே நீங்கள் உங்கள் புதுவாசகனுக்கு எது தேவை என்பதை அறிந்து கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள்.

முதல் நாள் காலை நடையில் நீங்கள் பேச தொடங்கியது. நீங்கள் காண்டீபத்தை எப்போதும் வைக்கவே மாட்டீர்கள் என்பது இரண்டாம் நாள் விடைபெறும் போதும் உங்களிடம் இருந்த அதே சோர்வின்மை ஒரு வித பொறாமையுடன் அதேநேரம் ஒரு ஆதர்சமாகவும் மனதில் பதிந்தது. இதற்கிடையில் அதிக முட்டாள்தனமான கேள்விகள் கேட்காததையே மிக பெரிய செரி என நினைக்கிறன்.ஆனால் நீங்கள் வந்திருந்த 39-பேரையும் கவனித்துக்கொண்டே இருந்தீர்கள் என்பதே எங்கள் ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தை நல்கியது. ஒரு தாய் தன் குழந்தைக்கு எது தேவை , எவ்வளவு தேவை , அதை எப்படி எந்த வழியில் குழந்தைக்கு கொடுக்கவேண்டும் என்பதை அறிந்து செய்வதை போலவும் அதே நேரம் மிகவும் கறாராக சொல்ல வந்ததை எந்தவொரு சாய்வும் இல்லாமல் அள்ளிதந்தீர்கள் என்பது நூறு சதவீதம் உண்மை. நீங்கள் எந்த தலைப்பையும் விட்டு வைக்கவில்லை என்பது இப்போது யோசிக்கும்போது புரிகிறது. இலக்கிய நகைச்சுவை , புனைவு, சிறுகதை , மனித தருணங்களை பற்றி, ஆண்களின் உலகம், பெண்களின் உலகம், குரு-சிஷ்ய உறவு முறை, தர்க்கவாதம், கவிதைகளை வாசிக்க வேண்டிய முறை மற்றும் கண்டடைய வேண்டியது , புரிந்துகொள்ளும் முறை, சிறுகதையின் எழுத்துமுறை மற்றும் சப்-டெக்ஸ்ட் , கட்டுரை எப்படி தரவுகளின் அடிப்படையில் எப்படி சீர்தூக்கி அணுகி எழுதவேண்டும் என்பதும், தெரியாத புரியாத ஒன்றை எப்படி மீண்டும் மீண்டும் கவனித்து கண்டைய வேண்டும் என்பதையும் , எப்படி இன்றைய எங்களை போன்ற இளைஞர்கள் பேச தெரியாமல் அனைத்தையும் கமெண்ட் என்ற வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டு அலம்பி திரிவதையும் , எப்படி ஒரு விவாதத்தை முன்னெடுத்து செல்லவேண்டும் அல்லது எதை பேச கூடாது என்பதையும் , சென்டர் பாயிண்ட்டை விட்டு விலகாமல் அதேநேரம் தாவி தாவி தெரிந்ததெல்லாம் பேசுவதும் அல்ல  விவாதம் என்றதும்,மற்றவர்களின் அல்லது மாற்றுக்கருத்தை ஒருவர் கூறும்போது அல்லது அந்த தரப்பின் தர்க்க நியாயங்களையும் கருத்தில் கொண்டு நாம் சிந்தித்து பேசவேண்டும் என்பதும் தலைகனத்தை களைந்து பணிவுடன் எப்படி கற்க வேண்டும் என்றும்  ,சிறுகதை எழுத்தின் தீம்,பிளாட், போன்ற விஷயங்கள் மற்றும் omnipotent  கதை சொல்லிகள் , மற்றும் மதங்களின் இன்றைய நிலை மற்றும் அதிகாரத்தின் கைகள் நீளும் இடங்களையும் அதன் அமைப்பு முறைகளையும் , இன்றைய அரசியல் செயல்பாடுகளையும் , கொரியன் கல்விமுறையின் தாக்கம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த மோசமான கல்விமுறையினை மாற்றுகிற விதம், யூகலிப்டஸ் மரங்களின் இந்திய வரவும் , ஆஸ்திரேலியாவில் நீங்கள் கண்ட யூகலிப்டஸ் மரத்திற்கான அருங்காட்சியகம், ஈழவ சமுதாய மக்களின் குடியேற்றம் , ஸ்காட்லாந்தின் குதிரை பாதை தொழில்நுட்பம் மற்றும் உலகம் முழுவதும் அந்த முறை சென்று சேர்ந்தவிதம், மற்றும் இன்னும் பல தலைப்புகள் பற்றி நீங்கள் பேசிய அனைத்தும் நினைவில் அசைபோட்டபடியே தான் உள்ளேன் ஒரு வார காலமாக. நான் எப்படி புரிந்து கொண்டேன் அல்லது எவ்வளவு புரிந்துகொண்டேன் என்பதும் எவ்வளவு என் ஆழ்மனதில் பதிந்தது என்பதும் இப்போது தெரியவரும்போது பெரிய இன்பதிர்ச்சி ஏற்படுகிறது.

முதல் நாள் காலை இனிய நடைபயணம் ,பின்னர் மிகவும் ருசியான இட்லி,கேசரி அதோடு மதியம் சாப்பாடு, மாலை மீண்டும் நடைபயணம் . நீங்கள் சொன்ன சிவாலய ஓட்டம் , உங்களது சென்னை நடைப்பயண திட்டம் பின்னர் மெதுவாக மெயின் ரோடு சுற்றி குருகுலம் வந்தது இரவு குளிர் கொஞ்சம் அதிகமாய் இருந்ததும் ஜெயக்குமார்  நண்பரின் சங்கீத கச்சேரியும், அந்த சூடு சப்பாத்தியும் உச்சவிழிப்பில் இருந்த மனதுக்கும் , உடம்புக்கும் இதமாக இருந்தது. இரவுணவுக்கு  பின்னர் நெடுநேரம் மெத்தையின் மேல் உட்கார்ந்தும், நீங்கள் நின்றுகொண்டே சொன்ன உணவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் 11-மணிக்கு மேல் உறங்க சென்று கண்ணைமூடினால் நீங்கள் சொன்ன பலவிஷயங்கள் மறந்துபோனது போல இருந்தது.

மறுநாள் காலையில் நான் குளிர்ந்த நீரில் குளித்த போது சிலநண்பர்கள் ஒரு விதமாக தான் என்னை நோக்கினர். பின்னர் மீண்டும் நடைபயணம். ரெயில் தண்டவாளத்தில் நடந்து வந்ததும் , காலை பனி நீர்ந்து சூரியன் பொன்கரங்களை வீசி வந்ததும் நீங்கள் எங்களை நோக்கி இதே போல சூரியனை என்று பார்த்தீர்கள் என்று கேட்டபோது பலபேர் ஒரு நிமிடம் விசனப்பட்டது தெரிந்தது.  உங்களின் நீண்டகால நண்பர்கள் வந்ததும் அவர்கள் அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்துக்கொண்டே இருந்ததும் நிச்சயம் மறக்கவே முடியாத நிமிடங்கள். நீங்கள்  சொன்ன பல நகைச்சுவைகள் இப்போதும் நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டுள்ளேன். சிவகாமி என்ற வெளிநாட்டு அம்மையார் அங்கு அமர்ந்து புல்லை வெட்டிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. பூஜை முறைகளோ,வழிபாடோ இல்லாத ஆசிரமம்  மற்றும் அங்கு நிறைந்து இருந்த பல பெரிய தத்துவ ஆசான்மார்களின் பெயரே கண்களை விரிய வைத்தது. அதே போல் குருவின் உட்கார்ந்த நிலையில் உள்ள வெண்கல உருவம் நீங்கள் சொன்னதை போல் இரவுகளில் அதை பார்க்கும்போது உயிர் கொள்வதாகவே இருந்தது. நீங்கள் சொன்ன இன்னும் பல விஷயங்கள் நியாபகம் இருக்கிறது.ஆனால் இன்னும் சில பக்கங்கள் ஆகுமென்பதால் குறைக்கிறேன்.

மறக்கவே கூடாத மூன்று பேர் . நிர்மால்ய அவர்கள், விஜய் சூரியன் அவர்கள் மற்றும் மீனாம்பிகை அவர்கள். ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வது என்பது இன்றைக்கு ஒரு கூட்டம் தொடங்கும்போது இருப்பதும் நேரம் செல்ல செல்ல குறைவதையும் தான் அனேக இடங்களில் கண்டுள்ளேன். ஆனால் மூவரும் அதிலும்கூட வித்தியாசமான அணுகுமுறை. கடைசியில் கிளம்பும்போது கூட அவர்கள் எதையோ கூடி திட்டமிட்டு கொண்டிருப்பதை தான் கண்டேன். கூட்டு மனப்பான்மை மற்றும் மலர்ந்த முகத்துடன் ஒவ்வொரு நொடியும் போனது நிச்சயம் ஒரு புதுமை தான் என்னை போன்றவர்களுக்கு.. கூட்டத்துக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றியை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.

 

ராகேஷ்

கன்யாகுமரி

 

 

குருகுலம் புகுதல்

நானும் நண்பர்களும் 13 ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு குருகுலத்தில் இருந்தோம்.எல்லோருமே முதன் முறையாக குருகுலம் புகுகிறோம்.பத்து நிமிடத்தில் நீங்களும் முன்னரே வந்து சேர்ந்த நண்பர்கள் சில பேரும் நடைசென்று விட்டு வந்தீர்கள்.உங்களுடன் அறிமுகம் செய்துகொண்டோம்.முதலில் அமைப்பாளர்கள் அனைவரையும் நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்,விஜய்சூரியன்,மீனாம்பிகை,பரமேஷ் மற்றும் நாவல் மொழிபெயர்ப்புக்கு 2011  ஆம் வருடம் கேந்திரிய சாஹித்ய அகாடமி விருது வென்ற திரு.நிர்மால்யா அவர்கள்.        நிர்மால்யாவிற்கு நிறைய காதல் கடிதங்கள் வருவதாக ஒரு உபரித்தகவலும் பகிர்ந்தீர்கள்.புன்னகையுடன் நின்றிருத்த நிர்மால்யாவின் கனிவான காலையுணவு உபசரிப்பு ஆரம்பமானது.நண்பர்கள் மேலும் இணைந்துகொண்டே இருந்தனர்,அறிமுகங்கள் நிகழ்ந்துகொண்டேயிருந்தன.

காலை பத்து மணிக்கு ஸ்வாமி வியாசப்ப்ரசாத் அவர்கள் சிற்றுரையுடன் அமர்வு தொடங்கியது.நாம் அனைவரும் நின்று உணவருந்திய இடம் தான் குருகுலத்தின் முதல் கட்டிடம் என்றும்,அது நடராஜ குருவின் கைகளால் உருவம் பெற்றதையும்.குரு அவர்கள் தீயை கண்டால் அதன் கனப்பு தேடி சிறுத்தை வரும் என்றும்,ஒரு முறை அவர் கதவை திறந்தபோது சிறுத்தை நின்றிருத்த சம்பவத்தையும்,குடிநீரை கீழே முந்நூறு அடி பள்ளத்தில் உள்ள ரயில்பாதையருகே அருகே இருந்து சுமந்துவந்ததையும்,நீங்கள் சொல்லும்போதே குருகுலத்தின் ஆரம்ப காலம் என் மன கண் முன் விரிந்தது.நாராயண குருவின் சீடரான நடராஜ குருவும் நடராஜ குருவின் சீடரான நித்ய சைதன்ய யதியும் வாழ்ந்த அந்த குருகுலத்தில் பாடம் பயின்று சென்ற மாணவர்களில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கும்போது மிக பெரிய மனஎழுச்சி.மிக முக்கியமாக குருகுல சூழல்,அமைதி,முழு அமைதி.மெல்ல பேசினாலே உரக்க பேசியது போன்ற உணர்வு.இது முற்றிலும் நான் கண்டிராத சூழல்.இது புறம் என்றால்,உரையாடல்கள் நடந்த குருகுல நூலகம் அகம்.அறையை சுற்றிலும் நூலடுக்கம் அதற்குள் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தககங்கள்,நூல் அடுக்கத்திற்கு மேலாக நாலாபக்கமும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட ஒரே அளவுகளை உடைய மரச்சட்டம் கொண்ட உலகத்தின் முக்கிய சிந்தனையாளர்கள்,தத்துவ அறிஞர்கள் மற்றும் தலைவர்களை உள்ளடக்கிய ஓவியங்கள்.உள்ளே நுழைவின் வலதுபுறத்தில் கையில் புத்தகம் ஏந்திய குரு நித்யாவின் சிலை.அவரும் நம் உரையாடல்களை கேட்டு கொண்டிருந்தார் என்று நண்பர் கூறினார்.

தேநீர் இடைவேளையில் வருகை பதிவேட்டில் பெயர் எழுதாதவர்களை வெளியே உப்புக்கல் கொட்டி அதில் மண்டியிட செய்து விடுவதில் மீனாம்பிகை துடிப்புடன் இருந்தார்.

உதகையின் உயரமான இடம் நோக்கி மா(ம)லை நடை. செல்லும் வழியில் தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டெருதின் தரிசனம்.நடை முடித்து திரும்பவும் நூலகம்.நண்பர் ஜெயக்குமார் அவர்களின் பாட்டு.உங்களிடம் இருந்து தான் அதிகமான நேயர் விருப்ப கோரிக்கைகள்.இரவு உணவு முடிந்ததும் தொலைவில் இருந்து வந்த நண்பர்கள் முதலில் மெத்தையை விரித்தனர்.கதை,கவிதை,கட்டுரைகளை அனைவரிடமும் கொடுத்து படிக்கச் சொன்னிர்கள் காலையில் இது குறித்து விவாதிப்போம் என்று சொல்லி உறங்க சென்றீர்கள்.

உறக்கம் வராததன் காரணம் என் கால்மாட்டில் நின்றிருந்த அறிஞரோ என்று பார்த்தேன்.அவர் பெயர் Voltaire .இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன்.இவரை கூகிள் செய்து கண்டடைய வேண்டும்,படுத்த இரு நிமிடங்களில் தொட்டிலில் இட்டு தாலாட்டிய குழந்தையாய் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற நண்பர் பாலாவின் தலைமாட்டில் யார் என்று பார்த்தால் காந்தி.

ஞாயிறு காலையில் “குளிர் அதிகமா” என்று உங்கள் குரல் கேட்டு தான் விழித்தேன்.கம்பிளியை மடித்து கொண்டிருந்தபோதே விஜய்சூரியன் காட்டெருது கூட்டம் வந்திருப்பதை சொன்னார்.சில பேர் சென்று பார்த்தோம்.முக்கியமாக நீங்கள் சொன்னது “போட்டோ எடுங்க,செல்பி ட்ரை பண்ணவேண்டாம்” .பார்பதற்கு மிகவும் சாதுவாக இருந்தாலும் அதன் கொம்பு மெல்ல வருடி சென்றதற்கே மனிதர்களின் மார்புக்கூடு எழும்புகள் உடைந்த செய்தியையும் இங்கே இதை வேட்டையாடும் எந்த விலங்கினமும் இல்லை என்பதாலும் இவை அச்சப்படுவதில்லை என்ற தகவலும் பகிர்ந்தீர்கள்.காலையுணவு முடிந்தவுடன் முதலில் நண்பர் சுஷிலின் கவிதை விவாதம்,இரண்டாவதாக கமலகண்ணனின் சிறுகதை.”முடிவின் மிக பக்கத்திலிருந்து ஆரம்பம் அமையவேண்டும்” என்பதற்கு எடுத்துக்காட்டாய் நாஞ்சில்நாடன் அவர்களுடைய “வனம்” மற்றும் சுந்தர இராமசாமியின் “பிரசாதம்” கதைகள் சொல்லி புரிய வைத்தது.அதே போல கவிதையில் தேய்ந்த சொற்களை தவிர்க்க சொன்ன உதாரணம் “யாத்ரிகன்” இந்த சொல் பாஷோவின் ஜப்பானிய ஹைக்கூவில் இருந்து கையாளபட்ட விதமும் அதை சொல்லி சென்ற விதமும் மறக்கமுடியாத அனுபவம்.இறுதியாக என் கட்டுரையான “வரலாற்று ரயில்பாதை” விவாதம் நடைபெற்றது.யூகலிப்டஸ் மரங்கள் ஊட்டிக்கு ஆங்கிலேயர்களால் அறிமுக படுத்தப்பட்ட காரணங்கள்,வெல்லிங்டன் தான் ஊட்டியின் முதல் ஆங்கிலய குடியிருப்பு மற்றும் படைகள் நிலை கொண்ட பகுதி என்று பல புதிய தகவல்களை சொல்லி இன்னும் கட்டுரையை சுவை பட சொல்ல வலியுறித்தி சொன்னீர்கள்.கண்டிப்பாக செய்ய முயல்வேன்.

குருகுலத்தில் சந்தித்த ஒரெயொருவர் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வந்து செல்கிறார்.அவரை சொன்னால் தான் பதிவே நிறைவடையும்.வெண்பொங்கலை ருசித்து சாப்பிட்டு விட்டு தலையணை புத்தகத்துடன் தன் காலை சுற்றி வரும் செல்லப்பூனையை வருடி கொடுக்கும் “லண்டன் சிவகாமி பாட்டி”.

 

முந்தைய கட்டுரைசாகசம் எனும் தியானம்
அடுத்த கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)